Search This Blog

7.11.09

சிவசேனா பால்தாக்கரே நாத்திகர் ஆகிவிட்டாராம்!

நாத்திகர் ஆனாரா தாக்கரே?

மும்பை சிவசேனா வீரர் பால்தாக்கரே நாத்திகர் ஆகிவிட்டாராம்! ஆச்சரியமாக இருக்கிறதா?

தம் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான “சமானா" வில் எழுத்து வடிவத்தில் இதனைத் தெரிவித்துள்ளார் என்பதால் இதனை அலட்சியப்படுத்தவும் முடியாது.

பொதுவாக சங்பரிவார்க் கூட்டம் ஒன்றை முதலில் சொல்லும்; அது குறித்து பிரச்சினை வெடித்தால் “அய்யய்யோ நான் அப்படி சொல்லவேயில்லையே!” என்று சத்தியம் செய்யும்.

ஆனால் பால்தாக்கரே இப்பொழுது தன் கட்சியின் ஏட்டிலேயே வெளிப்படையாக எழுதி விட்டாரே!

பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படையிலா? பொருள் முதல்வாதம், எண்ண முதல்வாதம் என்ற அடிப்படையில் ஆழச் சிந்தித்து ஆத்திகத்தை ஆயிரம் அடியின் கீழ் புதைந்து விட்டு, நாத்திகராகக் கம்பீரமாக வெளிவந்துள்ளாரா என்ற கேள்விக்கு விடை கூறுதல் கடினம்தான்.

நடைபெற்ற மராட்டிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மண் கவ்வியதால் ஏற்பட்ட தோல்வியின் சம்மட்டி அடியால் துவண்டு போன மனிதன், தோல்வி ஜன்னியில் இப்படி உளறுகிறாரா என்ற கேள்வியிலும் அர்த்தம் உண்டு.

“மராட்டியர்கள்தான் என் முதுகில் குத்தி விட்டனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு தீய சக்தியானது மராத்தி மக்களிடம் இருந்து என்னைப் பிரித்து விட்டது. எனக்கு மராட்டியர்கள் மீதும், கடவுள் மீதும், ஏன் எல்லா வற்றிலுமே நம்பிக்கை போய்விட்டது. இதைச் சொல்வதற்காக மிகுந்த வேதனைப்படுகிறேன். அதே சமயம் உண்மையை மறைக்கவோ, அல்லது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதையோ நான் விரும்பவில்லை’’ என்று மாரடித்து ஒப்பாரி வைத்துள்ளார்.

அடேயப்பா! எவ்வளவு பெரிய “வீராதி வீரர்” “சூராதி சூரர்!’’ அவர் வாய் திறந்தால் மராட்டிய மண்டலமே ஒடுங்கி நடுங்குமே வெளி மாநிலத்தவர்கள் வெலவெலத்துப் போய் விடுவார்களே, தமிழர்களை என்ன பாடுபடுத்தினார்?

அந்த சூரர்தான் இப்பொழுது சுருங்கிப் போய் சோணகிரியாகி விட்டார். உருட்டல், மிரட்டலால் ஓங்கி வளர்ந்து பெரிய மனுஷனாகப் பவனி வந்தவர் படுக்கையில் வீழ்ந்த நோயாளியாகி விட்டாரே!

மும்பை தொலைப்பேசி முகவரி புத்தகத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்களைக் கணக்கெடுத்தார். இனி மும்பைக்கு வர வேண்டுமானால் “விசா” வாங்கிக் கொண்டுதான் வர வேண்டும் என்று வீராவேசம் பேசிய “வேங்கைப்புலி” இப்பொழுது விலா ஒடிந்து போன பூனையாக “மியாவ் மியாவ்” என்று ஈனக் குரலில் கத்துகிறதே! இப்பொழுது மட்டுமல்ல; 1995 இல் அவரின் மனைவி மரணம் அடைந்தபோதுகூட மனுஷன் மாரடித்துப் புலம்பியவர் தான்.

1993 செப்டம்பர் 6 அந்த நாளை தாக்கரேயால் மறக்கவே முடியாது. அந்த நிலைப்பற்றி ‘வீக்’ (The Week November 19-1995) இதழ் வெளிப்படுத்துகிறது.

I don’t know if death had arranged the trap, “Says thackeray. ‘That night the lights went out, the hotline was gone, the telephone was dead and the medicine could not be found. she was breathing with great difficulty and I watched helplessly as she died gasping. I lost her on Ganesh Chaturthi. And she had been so religious and had done puja for your siddhi vinayaka.’’

Your Siddhi Vinayaka! These words of the champion of Hindutva are soaked in bitterness and tears, tears that he tries to hide behind his new dark glasses, a bitterness that has turned him into a blasphemer. Thackeray, 68, is like a rebelious boy who has lost his favourite little treasure. “I don’t believe in God any longer,” he says in deliance.

அந்த இரவில் மின்சாரம் இல்லை, விளக்குகள் இல்லை; தொலைப்பேசி வேலை செய்யவில்லை; என் மனைவி மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஏதும் செய்ய முடியாதவனாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் அன்று விநாயகர் சதுர்த்தி. அவள் மத ஆச்சாரங்களில், ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவள். சித்தி வினாயகனை அவள் தொழுது கொண்டிருந்தார். ஆனாலும் அவளை எந்தக் கடவுளும் காப்பாற்றவில்லை.

கடவுள்மீது இனி நம்பிக்கை வைக்க மாட்டேன் ஒரு போதும் இனியில்லை’’ - என்று அன்றும்கூட இப்படித்தான் எகிறிக் குதித்தார்.

மாதுங்காவில் அவர் பங்களாவில் இருந்த கடவுள் படங்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டன. கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த உத்திராட்ச மாலைகளை எல்லாம் உருவி எறிந்தார். கையில் எப்பொழுதும் இருக்கும் ஜெபமாலைக்குக் கல்தா கொடுக்கப்பட்டது. இப்பொழுது 14 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மனநிலையில் மனிதன் சித்தப்பிரமை பிடித்து செதிர் காயாக உடைந்து கிடக்கிறார்.

கடவுள் நம்பிக்கை போய் விட்டது என்று தாக்கரே கூறியுள்ளாரே - சங்பரிவார் வட்டாரம் மூச்சு விடவில்லையே - ஏன் முணுமுணுப்பைக்கூட வெளிப்படுத்தவில்லையே! இந்தச் செய்தி வெளியில் பரவிவிடக் கூடாது என்பதில் தான் அவர்கள் அக்கறை செதுத்துபவர்கள் என்பது நமக்குத் தெரியும்.

பால்தாக்கரேயே பாதை மாறி விட்டாரா? - ‘பகவான் மீது அவர் வைத்திருந்த அபார நம்பிக்கை நாசமாயிற்றா?’ என்று பாமர மக்களும் பேச ஆரம்பித்து விடுவார்களேவிளைவு என்ன? சாதாரணமாக மிக பக்திக்கு ஹானி விளைந்தால் பார்ப்பனியத்தின் பல் பிடுங்கப்பட்டு விடுமே, ஆரியத்தின் அஸ்திவாரம் நொறுங்கிப் போய் விடுமே. அதன்பின் பிழைப்பு என்னாவது, ஆதிக்கம்தான் என்னாவது என்ற பயத்தில் தாக்கரே விஷயத்தை மூடி மறைத்து விட்டார்கள்.

ஒன்று மட்டும் உண்மை. ஏதோ ஒரு பிரச்சனையில் தோல்வி ஏற்பட்டு விட்டதாலோ, இழப்பு ஏற்பட்டு விட்டதாலோ அந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பில் “கடவுள் நம்பிக்கை எனக்கு போய் விட்டது’ என்று கூறுவதையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது.

பகுத்தறிவுவாதியாக நாத்திகராக மலர்வதற்கு ஆழ்ந்த சிந்தனையும், துணிவும் தேவைப்படும்.

தன் மனைவி இறந்த போது (1995இல்) தனக்குக் கடவுள் நம்பிக்கை போய்விட்டது என்று சொன்னது உண்மையாக இருந்திருக்குமேயானால், 2009இல் ஒரு தேர்தல் முடிவை முன் வைத்து இப்படி ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே!

ஒரு கருத்தை வேண்டுமானால் முன் வைக்கலாம் - கடவுள் நம்பிக்கை என்பது ஒரு சந்தர்ப்பவாதம் என்பதுதான் அது!

------------------மின்சாரம் அவர்கள் 7-11-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: