Search This Blog

6.11.09

பகுத்தறிவாளர்களுக்கான வழிகாட்டும் நெறிகள்


பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவாளர்கள் மானுட சமூகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவர்கள்; மக்களை அறியாமை இருளிலிருந்து மீட்டெடுக்கும் கடப்பாடு உடையவர்கள் அவர்கள்.

கடவுள், மதம், வேதம், சாத்திரம், புராணங்கள் இவற்றின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் சமூகத்தில் பிளவுக்குக் காரணமானவற்றை அடையாளம் காட்டும் மகத்தான பொறுப்பு பகுத்தறிவாளர்களைச் சார்ந்ததாகும்.

மக்களைச் சுரண்டுவது முதலாளிகள் மட்டுமல்லர்; வருணாசிரம தர்மத்தின் பிறவி முதலாளிகள், பிறவித் தொழிலாளர்களாக ஆக்கப்பட்ட மக்களின் வாழ்நாளில் மட்டுமல்ல; அவர்கள் மரணத்திற்குப் பிறகும்கூட திதி, திவசம் என்ற பெயராலே அவர்களின் மரபினர்களைச் சுரண்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இந்தப் பிறவிச் சுரண்டல் என்கிற முதலைப் பிடியிலிருந்து மக்களை மீட்கும் பொறுப்பும் பகுத்தறிவாளர்களுக்கு மிக்குண்டு.

மக்களை எந்த வழியிலும் சிந்திக்கவிடக் கூடாது என்று பந்தயம் கட்டிக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் முகத்திரைகளைக் கிழிக்கும் முக்கியமான பணியும் இவர்களுக்கு இருக்கிறது.

மூளைக்கு விலங்கு மாட்டும் ஆன்மிகத்தனமான அத்தனை சங்கதிகளிலிருந்தும் மக்களை விடுவிக்கவேண்டிய விவேகம் பகுத்தறிவாதிகளிடம்தான் உண்டு.

விஞ்ஞானக் கருவிகளின்மூலம் அஞ்ஞானக் குப்பைகளை மக்கள் மூளைக்குள் திணிக்கும் மோசடிகளையும் முச்சந்திக்குக் கொண்டுவரும் பகுத்தறிவுப் பணி என்பது மிகமிக முக்கியமானதாகும்.

தந்தை பெரியார் அவர்கள் தமது இயக்கத்திற்குப் பகுத்தறிவையே அடிப்படையாக வைத்தார். கருப்புச் சட்டை அணிந்து நேரடியாக திராவிடர் கழகத்தில் சேர வாய்ப்பில்லாதவர்களுக்குப் பகுத்தறிவாளர் கழகம் என்னும் ஓர் அமைப்பினை உருவாக்கிக் கொடுத்தார்.

அது அரசியல் சார்பற்றது; அரசு அலுவலர்கள் பங்குகொண்டு சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாத பகுத்தறிவுப் பணியைச் செய்யலாம்.

அரசு அதிகாரிகள் சத்சங்கங்களை வைத்துக்கொள்வதில்லையா? அது மக்களை மடமையில் மூழ்கடிக்கக் கூடியது; பகுத்தறிவாளர் கழகமோ மக்களை வளர்ச்சிப் போக்குக்குக் கைலாகு கொடுத்துத் தூக்கக் கூடியதாகும்.

மாநிலம் தழுவிய அளவில் ஒரு மாபெரும் அமைப்பாக உருவாயிற்று. பல மாநாடுகள், அறிவியல் கண்காட்சிகள் எல்லாம் நடத்தப்பட்டன.

அதுகண்டு மருண்டுபோன சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அரசு அதிகாரிகள் துவேஷப் பிரச்சாரம் செய்ய வகை செய்யப்பட்டது என்று கூறினார் என்றால், பகுத்தறிவாளர் கழகத்தின் தோற்றம் எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதை அறியலாம்.

சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தில் பகுத்தறிவாளர்களுக்காக அளிக்கப்பட்ட வழிகாட்டும் நெறிகள் மிகவும் தேவையானவையாகும்.

1. பகுத்தறிவாளர்களுக்குள் ஒரு இணைப்புத் தேவை

2. ஆண்டுக்கு இருமுறை பகுத்தறிவாளர்கள் குடும்பங்களின் சந்திப்பும், விருந்தும்

3. பகுத்தறிவாளர்கள் சமூகத் தொண்டாற்றுவதோடு அல்லாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்தல்

4. குடும்ப சந்திப்புகள் காரணமாக பகுத்தறிவாளர்களிடையே திருமண உறவுகள் உள்பட பல முடிவுகளுக்கான வாய்ப்புகள்

5. பகுத்தறிவு முதலில் குடும்பத்திலிருந்து தொடங்கப்படவேண்டும். பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து, வளர்க்கும் முறைகள் ஒவ்வொன்றும் அவசியம். பிள்ளைகளை அடிக்கவோ, துன்புறுத்தவோ, அவர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வார்த்தைகளையோ பயன்படுத்தக் கூடாது.

எடுத்துக்காட்டாக ‘முட்டாள்’, ‘நீ உருப்பட மாட்டாய்!’ என்பது போன்ற வகையில் நடந்துகொள்ளக் கூடாது. குழந்தைகளின் உடல்நலம், மனநலம் பேணுதல் மிகவும் அவசியமாகும்.

6. இனி கற்றவர் என்பதற்கு அடையாளம் கணினியை இயக்கத் தெரிந்திருப்பதுதான். 2010 ஆம் ஆண்டில் பகுத்தறிவாளர் ஒவ்வொருவரும் அந்தப் பயிற்சி பெற்றவராக இருக்கவேண்டும். பெரியார் திடலில் அதற்கான ஏற்பாடுகள் உண்டு. அறிவியல் கருவிகள்மூலம் பகுத்தறிவு பரப்புதல் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

சென்னை கொடுத்த இந்த வெளிச்சத்தை பகுத்தறிவாளர்களே உள்வாங்கிக் கொண்டு செயல்படுவீர்களாக!

--------------------"விடுதலை" தலையங்கம் 6-11-2009

0 comments: