Search This Blog

24.11.09

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்கள்


பத்திரிகைகள்

நாள்தோறும் நாட்டில் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஏடும், இதழும், பக்திச் செய்திகளைப் பரமார்த்தமாக வெளியிடுகின்றன. ராசி பலன்களும் இடம்பெறும். மக்களை முட்டாள்களாகக் கட்டிப் போட்டால்தான் அவர்களைச் சுரண்டிக் கொழுக்க முடியும் என்கிற பரந்த மனப்பான்மை பத்திரிகை முதலாளிகளுக்கு!

ஒரு இதழில் சிம்மராசிக்குப் பலன் இலாபம் என்றிருக்கும்; அதே நாளில் அதே ராசிக்கு இன்னொரு பத்திரிகையில் பெருத்த நஷ்டம் என்றிருக்கும்.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்குப் புத்திசாலித்தனமோ, பொறுமையோ யாருக்கு இருக்கிறது? இந்த மெத்தனம்தான் பத்திரிகை முதலாளிகளுக்குப் பெருத்த இலாபகரமான ஒன்றாகும்.

இவற்றையும் தாண்டி வேறு விதமான தகவல்களும் வந்துகொண்டுதானிருக்கின்றன. அய்ம்பொன் சாமி சிலைகள் எனக் கூறி பித்தளை சிலைகளை விற்க முயன்ற பூசாரி உள்பட நான்கு பேர் கைது! (தேனி மாவட்டம்). அடுத்தடுத்து 6 குழந்தைகள் கொலை; பெண் சாமியார் மற்றும் அவரது கணவர் மீது 200 பக்க குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்; 47 பேர் சாட்சிகள் (சேலம் ஆத்தூர் அருகே).

இவை வெறும் செய்திகள் மட்டுமல்ல; மதம், பக்தியின் பெயரால் நாட்டில் நடக்கும் கீழ்த்தரமான செயல்பாடுகள் . இவற்றின்மூலம் பக்தர்களாக இருப்பவர்கள்கூட சிந்திக்கவேண்டிய கட்டாயம் . எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.

காஞ்சிபுரம் கோயிலில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள்ளேயே பெண்களிடம் நடத்திய காம விளையாட்டுகள் இவற்றிற்குப் பிறகும் கோயில், பக்தி சமாச்சாரங்கள்பற்றி மக்கள் மறுபரிசீலனை செய்யாவிட்டால் அவர்களின் அறிவுச் சாளரங்கள் எந்த அளவுக்கு அடைபட்டுப் போயிருக்கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும்.

ஒவ்வொரு கோயிலுக்கும் தலப்புரணாங்களை எழுதி வைத்திருப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை. அந்தக் கோயில்களில்தான் இவ்வளவுக் கேவலங்களும் அரங்கேறுகின்றன. அப்படியானால் அந்தத் தலப் புராணங்களின் மகிமை எல்லாம் வெறும் வெத்து வேட்டுதானே. பொய்யில் புழுத்த புழுக்கள்தானே!

பத்திரிகைக்காரர்கள் இந்தக் கண்ணோட்டத்தில் எல்லாம் எழுதமாட்டார்கள், எழுதினால் பிழைப்புப் போய்விடுமே!

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்கள் என்று ஒரு பட்டியலிட்டார் தந்தை பெரியார். பார்ப்பான், பத்திரிகை, அரசியல் கட்சிகள், தேர்தல், சினிமா என்பவைதான் அந்த அய்ந்தும். பொறுமையாகப் பொருத்திப் பாருங்கள், உண்மை புரியும்!

---------------- மயிலாடன் அவர்கள் 24-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: