Search This Blog

16.11.09

ஈழத் தமிழர்ப் பிரச்சினை - நிரந்தரத் தீர்வு தேவை



இலங்கையில் கொழும்பு மகிசின் சிறைச்சாலையில் மூன்று தமிழர்கள் சிங்கள விசாரணைக் கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல தமிழர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அச்சிறையில் முந்நூறுக்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் உள்ளனர் என்றும், அதில் 92 பேர் தமிழர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கிறது.

1983 இல் குட்டிமணி, தங்கதுரை போன்ற போராளிகளின் கண்கள் சிறையில் பிடுங்கப்பட்டு, அந்தக் கண்களை சிறை அதிகாரிகள் பூட்சு காலால் இடறினார்கள். இந்தக் கண்களால்தானே தமிழ் ஈழத்தைப் பார்க்கப் போவதாகக் கனவு கண்டீர்கள் என்று கூறி நகைத்தனர்.

இன்றைக்கு 26 ஆண்டுகளுக்குப் பிறகு ‘அதே கறுப்பு ஜூலை’ அதே இலங்கைச் சிறையிலே இந்தக் கொடுமை அரங்கேறி இருக்கிறது.

இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்று சிறை அதிகாரிகள் கூறுவதெல்லாம், சிங்களர்களுக்கே உரித்தான ‘ராஜ தந்திர’ வார்த்தைக் குப்பைகள்தான்.

இலங்கைவாழ் தமிழகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கொடுஞ்செயலைக் கண்டித்துள்ளனர்.

இது திட்டமிட்ட தாக்குதல்தான். இதற்கு மாறாக அதிகாரிகள் சொல்லியிருப்பது உண்மைக்கு உண்மைக்கு மாறானது என்று கூறியுள்ளனர்.

சிறை அதிகாரிகள் மாற்றப்பட்டு, புதியவர்கள் பொறுப்புக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர். இவர்கள் முன்னிலையில்தான் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தமிழ்க் கைதிகள் அச்சிறைச் சாலையில் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனை அவர்கள் எதிர்க்க முனைந்தபோது அதிகாரிகளின் துணையுடன் சிங்களக் கைதிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பெரியளவு இன அழிப்பு நடந்துவிட்ட நிலையில், இலட்சக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு காலகட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனக் குரல்களை எழுப்பும் தருணத்திலும், ராஜபக்சே வகையறாக்கள் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவேண்டும் என்ற உரத்த குரல் ஓங்கி நிற்கும் சூழ்நிலையில்கூட, பாதுகாப்புக்குரிய இடம் என்று கருதப்படும் சிறைச்சாலையிலேயே, அதிகாரிகளின் தூண்டுதலோடு, சிங்கள இனக் கைதிகளால் தமிழ்க் கைதிகள் தாக்கப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர் என்றால், இதன் பொருள் இலங்கை அரசு எந்தச் சூழலிலும் தன் பாசிச நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதே!

பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்று தமிழ் மாணவி ஒருவரை இலங்கைக் காவல்துறை இழுத்துச் சென்றது என்று இன்னொரு செய்தியும் இதே நேரத்தில் வெளிவந்துள்ளது.

தமிழர்களுக்கு ஏற்படும் இந்தத் தரத்திலான கொடுமையும், அநீதியும் உலகில் வேறு எந்த இனத்திற்குமே ஏற்பட்டிருக்கவே முடியாது.

இந்தியாவும், வேறு பல நாடுகளும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குப் பல்வகைப் பொருள்களைக் கொடுத்து உதவக் கூடும். ஆனால், சிங்கள இனத்தின் வெறி பிடித்த போக்கினை அப்படியே அனுமதித்துக் கொண்டு இந்தத் தர்மகர்த்தா போஷணை மூலம் சாதிக்கப்படவிருப்பது வெறும் சொற்பமே!

ஏதோ ஒரு வகையில் உலக நாடுகள் தங்கள் அளவிலோ, அய்.நா மூலமோ கண்டிக்காமல், தண்டிக்காமல், அந்நாட்டை வழிக்குக் கொண்டுவருவது குதிரைக் கொம்பே!

தமிழர்கள், தனியினம், தனி மொழி, தனிப் பண்பாடு என்பதை சட்ட ரீதியாக அங்கீகரிக்கச் செய்வதே சரியான தீர்வாகவும் இருக்க முடியும். மற்றவற்றையெல்லாம்கூட சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த ஒன்றிற்காக மட்டுமே தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டிய முக்கிய நேரம் இது!


-------------------"விடுதலை" தலையங்கம் 16-11-2009

0 comments: