Search This Blog

4.11.09

தலித் விடுதலை முன்னோடி – பெரியார் -5
இதுதான் யானை என்று உருவகப்படுத்திக் கொண்ட விழி இழந்த அய்வர் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.பகுத்தறிவு ஒளி மூலம் நமது விழிகளைத் திறந்த சமுதாய மருத்துவராம் தந்தைபெரியாரைப் பற்றி அந்த விழி இழந்தோர் உருவகப்படுத்தியதை விடவும் அதிகமான அளவில் பொய்யும், புனைவுமாக பல உருவகங்களை உலவவிட்டுள்ளனர் பார்ப்பனர்களும் ,பார்ப்பன அடிவருடிகளும்.

எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.

இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை இப்போதும் சொல்லிவருகிறார்கள். அந்த வகையில் http://www.tamilhindu.com தளத்தில் பெரியாரின் மறுபக்கம் என்ற பெயரில் ஏற்கனவே புத்தகமாக வந்ததை பதிவு செய்து வருகின்றனர். அந்த தளத்தில் வரும் செய்திகளையொட்டி நாம் மறுமொழி அளித்தால் பதிவு செய்யப்படுவதில்லை. அதோடு நாம் பதில் அளிக்கவில்லை. நழுவி விடுகிறோம் என்ற மாய்மாலப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் ஏற்கனவே நாம் http://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக இந்தப் பார்ப்பனக்கும்பலுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.
சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
****************************************************************************
"பெரியாரை அவருக்கு வழங்கப்பட்ட பட்டத்தாலும் அம்பேத்கரை அவரது பெயராலும் அழைக்கும் ஒரு சில தலித் பத்திரிக்கைகள் மீது எனக்கு கடுமையான கோபமும் வருத்தமும் உண்டு. பெரியார் என்பது அவரது இயற்பெயர் இல்லை, அது ஈ.வெ.ராமசாமி அல்லது சுருக்கமாக ஈ.வெ.ரா. ஈ.வெ.ராவுக்கு பெரியார் என்பது போல டாக்டர் அம்பேத்கருக்கு பாபாசாகேப் என்ற பட்டம் உண்டு. ஈ.வெ.ராவை பெரியார் என்றும் அம்பேத்கரை அம்பேத்கர் என்றும் எப்படி கூப்பிடமுடியும்? கொஞ்சம் நம் மூளையை உபயோகித்து நமது தலைசிறந்த தலைவரை இழிவுபடுத்தாமல் இருக்க முடியாதா? ஈ.வெ.ராவை பெரியார் என்றால் டாக்டர் அம்பேத்கரை பாபாசாகேப் என்றழையுங்கள். டாக்டர் அம்பேத்கரை டாக்டர் அம்பேத்கர் என்று அழைத்தால் மி்ஸ்டர் ஈ.வெ.ராமசாமியை, ஈ.வெ.ரா என்று அழையுங்கள். “தென்னிந்திய அம்பேத்கரும், வட இந்திய பெரியாரும்” என்றழைக்கப்பட்ட ஒரு புத்தகத்தை நான் பார்க்க நேர்ந்தது. வெட்க்ககேடு பெயருக்கும் பட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நாம்?" என்கிறார் டாக்டர் வேலு அண்ணாமலை.

உலகில் உள்ள உயர்ந்த சோப்பு போட்டுக் குளிப்பாட்டினாலும் தாழ்த்தப்பட்டோர் மீதுள்ள அழுக்கைப் போக்க முடியாது என்று சொல்லும் சங்கராச்சாரிகள், அவரின் சீடர்களான “சுந்தர ராமசாமிகளின் செயல்பாடுகள் டாக்டா வேலு அண்ணாமலை குழுவினருக்கு இனிக்கும்போது அனைத்து மக்களும் சமத்துவமாக வாழப் பாடுபட்ட பெரியாரைப் பற்றிய நூலைப் பார்த்தால் வெட்கக் கேடாய்த்தான் தெரியும்.

அருண்ஷோரி என்ற பஞ்சாப் பார்ப்பனரால் எழுதப்பட்ட (“Worshipping False Gods-Ambedkar and the facts which have been erased) “மக்கள் பின்பற்றுவதற்கு தகுதி இல்லாத ஒருவரைக் கடவுளாகக் கருதி எப்படி பின்பற்றுகிறார்கள்” என்ற தொனியில் எழுதப்பட்ட நூலைப் பார்த்து வெட்கப்படாதவர்கள் பெரியார் பெயரில் உள்ள நூலைக் கண்டு வெட்கப்படுவதுதான் வேடிக்கையானது. (அம்பேத்கர் பற்றி, அருண்ஷோரியால் எழுதப்பட்ட அவதூறு நூலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 30.07.1997 மற்றும் 05.08.1997 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழத்தி மக்களை தெளிவடையச் செய்ததோடு , அச்சொற்பொழிவை நூலாகவும் வெளியிட்டவர் பெரியான் சீடர் தி.க. தலைவர் கி.வீரமணி என்பதை நாடறியும், நியாயமாக செயல்பட்டு வரும் தாழ்த்ததப்பட்ட தோழர்கள் நன்கு அறிவார்கள்)

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களே அம்பேத்கரை எதிர்த்து செயல்பட்டபோது செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களை கண்டு வராத வெட்கம் அம்பேத்கரின் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதரவு தெரிவித்து செயல்பட்ட பெரியாரின் நூலைக் கண்டால் வெட்கக் கேடாய்தான் டாக்டர் வேலு அண்ணாமலைக்கு தெரியும்.

பெரியார் பற்றியும் அம்பேத்கர் பற்றியும் எதுவுமே தெரியாத வேலு அண்ணாமலைகள் எல்லாம் கட்டுரை எழுத நேர்ந்தது தான் உண்மையிலேயே வெட்கக்கேடு.

டாக்டர் வேலு அண்ணாமலை வெட்கப்படத்தக்க அளவுக்கு உள்ள நூல் எது தெரியுமா? “தலித்முரசு” இதழில் தொடர்ந்து வெளிவந்த பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை தொகுத்து “வடநாட்டு பெரியார் தென்னாட்டு அம்பேத்கர்” என்ற பெயரில் முதல் பதிப்பாக சூன் 2000 இல் வெளியிட்டுள்ளார்கள். அந்நூலைப் பார்த்துதான் டாக்டர் வேலு அண்ணாமலைக்கு வெட்கக்கேடாம்.

மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் டாக்டா பத்மநாபன் அய்யா அவர்கள் அம்பேத்கரிடம் அறிவுரை கேட்டதற்கு , ‘தொலைவிலிருந்து வந்த என்னிடம் அறிவுரை கேட்பதற்கு பதிலாக உங்கள் ஊரிலே உள்ள சிறந்த தலைவராம் பெரியாரை பின்பற்றுங்கள்’ என்று சொன்ன தகவலை அந்நூலில் கண்டவுடன், ஒரு வேளை டாக்டர் வேலு அண்ணாமலைக்கு வெட்ககேடு வந்திருக்குமோ?

இப்போது டாக்டர் அண்ணாமலை எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டிற்கு திரு.புனிதபாண்டியன் அளித்திருக்கும் பதிலைக் கண்டு வேட்ககேடு வந்திருக்குமோ? திரு.புனிதபாண்டியன் அளித்திருக்கும் விளக்கம் இதோ:-

“தலித்முரசில் அண்ணல் அம்பேத்கர் பற்றிக் குறிப்பிடப்படும் இடங்களில் எல்லாம் - நாம் அண்ணலை மரியாதையுடனேயே குறிப்பிடுகின்றோம். தலித்முரசை தொடர்ந்து படிப்படிவர்களுக்கு இது தெரியும். ‘அம்பேத்கர் பேசுகின்றார்’ பகுதியில் மட்டும் அப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம் - அது தனித்தன்மையான ஒரு பகுதி என்பதால்தான். இது மரியாதைக் குறைவானது அல்ல. அம்பேத்கரிசத்தை – “டாக்டர் அம்பேத்கரிசம்” என்று கூற முடியுமா? அப்படிக் கூறினால்தான், அது மரியாதை என்று எவராவது சொன்னால் எப்படியிருக்குமோ அது போன்றதுதான் இதுவும். மேலும் பெரியார் இங்கு ஈ.வெ.ரா வாக தமிழ் மக்களிடையே அறிமுகமாகவில்லை. இது போன்றதொரு ஒப்பீடே நமக்கு வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கின்றது. இது போன்றதொரு பார்வை முதிர்ச்சியற்றத் தன்மையின் வெளிப்பாடேயன்றி வேறில்லை. பாபாசாகேப் அம்பேத்கரும் - தந்தை பெரியாரும் சமகாலப் புரட்சியாளர்கள். சீரிய சிந்தனையாளர்கள்; ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஒத்த கருத்துடையவர்களாகத் திகழ்ந்தவர்கள், அதற்கும் மேலாக அவர்கள் மக்களின் விடுதலைக்கு ஒத்த கருத்துடையவர்களாகத் திகழ்ந்தவர்கள். அதற்கும் மேலாக அவர்கள் வாழ்ந்த காலத்தில் தோழமை உணர்வோடு விளங்கிய பண்பாளர்கள். சுருக்கமாக சொன்னால், டாக்டர் அம்பேத்கர்- தென்னாட்டுப் பெரியாராகவும், தந்தை பெரியார் - வடநாட்டு அம்பேத்கராகவுமே இன்றளவும் எண்ணிப் போற்றப்படுகின்றனர். இத்துணைக் கண்டத்தின் கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களால். ஆனால் இம்மாபெரும் தலைவர்களை ஜாதி பிரித்து ஒருவரை தலித் மக்களின் தலைவர் என்பதும் மற்றொருவரை பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர் என்பதும் இவர்களின் புகழுக்கு மாசு விளைவிக்கும் செயலாகும். இதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. “பாபாசாகேப்” என்று கூறிக் கொண்டு – பா.ஜ.க வில் இருப்பவர்கள், பாஜக அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள், ‘ஜெய்பீம்’ என்று சொல்லிக் கொண்டு இறக்கும் வரை இந்து மத்தில் இருப்பவர்கள். டாக்டர் என்று பெயரளவில் புகழாரம் சூட்டி விட்டு, அண்ணல் கொள்கைகளைப்ப பரப்பாமல் குழி தோண்டிப் புதைப்பவர்கள்தான், அம்பேத்கர் என்ற உயிர் மூச்சை உள்வாங்கிக் கொண்டு அவரின் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் - இயன்றவரை பரப்பிவரும் நம்மைக் குற்றவாளிகள் என்கின்றனர்’

----------- (நூல்: வடநாட்டுப் பெரியார் - தென்னாட்டு அம்பேத்கர் - ப.88)

இப்படி தெளிவாக விளக்கம் அளித்தபிறகும் தொடர்ந்து டாக்டர் வேலு அண்ணாமலை போன்றவர்கள் திரும்ப திரும்ப எடுத்த வாந்தியையே மென்று கொண்டிருக்கும் இவர்களை என்னவென்று சொல்வது,? ஒடுக்கப்பட்டட மக்கள் இவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்பதுதான் நமது பணிவான வேண்டுகோள்.

பெற்றோர்கள் வைத்த பெயரை விட மக்களுக்கு அறிமுகமான பெயரால் பல தலைவர்கள் அழைக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் பெரியார் என்பது ஈ.வெ.ரா - வுக்கு எப்படி இயற்பெயர் இல்லையோ அதோபோல் அம்பேத்கர் என்பதும் ‘பீமாராவ் ராம்ஜி’க்கு இயற்பெயர் இல்லை.

மற்றவர்கள்போல் பெயரின் மூலம் அறிமுகமானவர் அல்ல பெரியார். கொள்கையின் மூலமே மக்களுக்கு அறிமுகமான பெருமை பெரியாரை மட்டுமே சாரும். உதாரணமாக ‘கடவுள் இல்லை’ என்று சொன்னவுடனே உடனடியாக ஞாபகத்திற்கு வரும் பெயர் ‘பெரியார்’. அப்படிப்பட்ட பெரியாரே ஒரு முறை சொன்னார் “என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்” (மயிறு என்று கூட கூப்பிட்டுக் கொள் என்று கூறியுள்ளார்) ஆனால் நான் சொல்லும் கருத்து சரியா? தவறா? என யோசித்து அதன்படி நட என்ற பெருந்தகையாளர் அவர். ‘பட்டமே’ ஒரு சிலரால் மட்டுமே பெருமையடையும், பெரியார் என்ற பட்டம் கூட ‘ஈ.வெ.ரா’வால் பெருமையடைந்தது என்பதுதான் உண்மையான யதார்த்தமான நிலை.

----------------------------- தொடரும்

0 comments: