வழிகாட்டுகிறார் குடியாத்தம் சடகோபன்
வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வி.சடகோபன் எம்.ஏ., வழி காட்டும் ஒரு பணியைச் செய்துள்ளார்.
தம் சொந்த செலவில் ரூ 4 லட்சம் மதிப்புள்ள பகுத்தறிவுப் புத்தக விற்பனைக்காக ஒரு வாகனத்தை தமது நோக்கில் உருவாக்கியுள்ளார்.
இந்த வாகனத்தில் ஒலி பெருக்கி வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் சுற்றுப் புறக் கதவுகளும் திறந்து மூடும் வகையில் கலை வண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் இந்த நடமாடும் புத்தக விற்பனை மற்றும் பகுத்தறிவுப் பிரச்சார வாகனம் வலம் வரவிருக்கிறது.
இயக்க வரலாற்றில் தனி மனிதர் ஒருவர் மேற்கொண்ட மகத்தான, பாராட்டத்தக்க பணி இது என்பதில் அய்யமில்லை.
இவ்வளவுக்கும் அவர் பெரிய செல்வந்தர் அல்லர். உழைப்பால் உயர்ந்த பெரியாரின் கொள்கைவாதி, கருஞ்சட்டைத் தோழர் - மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்.
பெரியார் நெறியைச் செம்மையாகப் பின்பற்றும் எவரும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் மதிப்பு ஒளியோடு மின்னுவர், - எடுத்துக் காட்டுக் காட்சியாகத் தோன்றுவர் என்பதற்கு, தோழர் சடகோபன் ஒரு முன்னோடி.
இயக்கத்தில் வசதி வாய்ப்புள்ள பெரு மக்கள் இந்தத் திகட்டாத் திருப்பணியைச் செய்ய முன்வரலாமே! அதன் மூலம் ஒரு தலை சிறந்த பெரும் பணியைச் செய்தோம் என்ற மன நிறைவையும் அடையலாமே!
சமுதாயத்தில் மிகப் பெரிய பணி, அறிவு நாசப்படுவதிலிருந்து தடுப்பதே. அறிவை நாசப் படுத்துபவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும்.
அந்த அளவுக்கு அறிவின் மீது அசையா நாட்டம் கொண்டவர் தந்தை பெரியார்.
அதற்காகத்தான் அறிவுப் பிரச்சாரத்தை முதன்மையாகக் கொண்டு வயது தொண்ணூற்றைந்திலும் நாட்டை சுற்றிச் சுற்றி வலம் வந்தார்; பிரச்சாரப் பீரங்கியாய் முழங்கினார். விஷயங்களால்தான் மனிதன் அறிவு பெற முடியுமே தவிர, விஷயங்களை காதிற்கு எட்டாமல் செய்து விட்டால் எப்படிமனிதன்அறிவாளியாக முடியும்? அதைத்தான் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்து வருகின்றன (விடுதலை 14.7.1970) என்று கூறினார் கொள்கைப் பழமான பெரியார்.
விஷயங்களால்தான் மனிதன் அறிவு பெறமுடியும் என்று கருதிய அவர் பொதுக் கூட்டங்களாலும், பிரச்சார வெளியீடுகளாலும் அதனை மேற்கொண்டார்.
மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் நாலரை மணி நேரம் சொற்பொழிவாற்றினார் (8.9.1956) என்றால், கற்பனை கூட செய்து பார்க்க முடியாததாக இல்லையா?
வார்த்தை வண்ணத்தால் மக்களை வளைத்தார் என்று சொல்ல முடியாது - கருத்து வளத்தால் மக்களின் சிந்தனைப் புலத்தைத் தூண்டி சுறுசுறுப்படையச் செய்தவர் என்பதுதான் உண்மை.
ஏதோ ஒரு வழியில் நாம் மக்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்கி விட்டோமேயானால், பிறகு அவர்கள் எல்லாவற்றையும் ஒரே கண்ணாடி கொண்டு பார்த்து உண்மையை உணரக் கூடியவர்களாக ஆகி விடுவார்கள் என்றும் கூறினார்.
ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்குச் சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலை அடைந்துதான் ஆகவேண்டும். அதுதான் எனது கொள்கை (குடிஅரசு 10.5.1936) என்று உலக மக்களின் சுகத்துக்காகவே குரல் கொடுத்தார்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தந்தை பெரியார் அவர்களின் மண்டைச் சுரப்பு (சிந்தனை) உலகுக்குத் தேவைப்படும் காலகட்டம் இது.
முதலில் தருமத்தை வீட்டிலிருந்தே துவக்க வேண்டும் என்பார்கள். அறிவுப்பணியைக் கழகம் இங்கு செய்து வருகிறது.
டில்லி பெரியார் மய்யம் உலகம் முழுவதும் பகுத்தறிவுப் பகலவனின் ஒளிக் கதிர்களைக் கொண்டு செலுத்தும்.
அதற்கு முன் நம் பகுதியில், நம் உள்ளூரில், நமது தெருவில், நம்மால் இயன்றவரை கொள்கைப் பிரச்சாரப் பணியைச் செய்ய வேண்டாமா?
ஒரு நிறுவனம் மட்டுமல்ல; தனி மனிதரும் கூட இந்தப் பரப்பும் பணியில் ஈடுபடலாம்.
இந்த வகையில் நமது அருமைத் தோழர் குடியாத்தம் சடகோபன் வழி காட்டியுள்ளார். அவரை வாழ்த்துவோம், போற்றுவோம்; நாமும் அதனைப் பின்பற்றுவோம்.
பெரியார் கொள்கைகளை நாம் பின்பற்றி பெருமை மிகு வாழ்வை மேற்கொண்டால் மட்டும் போதுமா? பிறரும் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்களாக ஆகவேண்டாமா? அதற்கு அடித்தளப் பணிதான்
பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!!
0 comments:
Post a Comment