Search This Blog

1.11.09

தமிழன் என்ற உணர்வு ஏற்படாமைக்கு முக்கிய காரணம் ஜாதியே!


ஜாதி ஒழிப்பும்,
முதலமைச்சர் கருத்தும்!

கூட்டமாக இருக்கும்போது நாம் தமிழர்களாக இருக்கிறோம். இந்த மணவிழா நிறைவுற்று இங்கிருந்து கலைந்து, அண்ணா அறிவாலயத்தி லிருந்து நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது இந்த வாசலைக் கடந்தவுடனேயே நாமெல்லோரும் தமிழர்கள் என்று இங்கு மொத்தமாகக் குறிப்பிட்ட அந்தக் குறியீடு மறைந்துபோய் நாம் செட்டியார், நாம் முதலியார், நாம் தேவர், நாம் ஆதிதிராவிடர் என்கிற இந்தப் பேதங்கள் நாம் கூட்டாக இருந்த நேரத்தில் அல்ல; தனித்தனியாக இருந்த நேரத்தில், அய்ந்து பேராக, பத்து பேராக ஆகிற நேரத்தில், சிறுசிறு குழுவாக அமைகிற நேரத்தில் ஜாதியின் பெயரால் அழைக்கப்படுகிறோம் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முகில் _ இளவரசி திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் உரையாற்றுகையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார் (28.10.2009).

தமிழன் தான் ஓர் இனம் என்கிற எண்ணத்தை மறந்து ஜாதிக் குழுக்களாகப் பிரிந்ததன் காரணமாக தமிழர் தம் இனத்தின் உரிமைகளை இழந்தது அனந்தம்! அனந்தம்!!

தமிழன் என்ற உணர்வு ஏற்படாமைக்கு முக்கிய காரணம் ஜாதியே! ஜாதிக்கட்டை உடைத்து வெளியில் வரும்போதுதான் தமிழன் என்ற உணர்வு ஏற்படும்.

அந்த உணர்வு ஏற்படும்பொழுதுதான் தாய்மொழி காப்பாற்றப்படும்; தமிழர்கள் பண்பாடு உருக்குலையாது தடுக்கப்படும். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுப்பதில் வெற்றி பெறவும் முடியும்.

ஜாதி தமிழர்க்கு உரியதல்ல; அந்தச் சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. ஆரிய சமஸ்கிருத சொல்லாகும். இதிலிருந்தே இதன் மூலம் எது என்பது எளிதில் விளங்கக்கூடியதாகும்.

அதனால்தான் தன்மான இயக்கத்தின் தந்தையான பெரியார் அவர்கள் ஜாதி ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். ஜாதிக்குக் காரணமாக இருக்கக்கூடிய, அதனைக் கட்டிக் காக்கக்கூடிய கடவுள், மதம், சுருதிகள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் அனைத்திலும் கைவைத்து, அவற்றின் ஆணிவேர்களையே நாசம் செய்யும் அரும்பணியைத் தன் தோளில் போட்டுக்கொண்டு சாகும்வரை உழைத்தார்.

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தினார்; பத்தாயிரம் திராவிடர் கழகக் கருஞ்சட்டைக்காரர்கள் அப்போராட்டத்தில் ஈடுபட்டு, மூன்று மாதங்கள் முதல் மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையைப் பெற்றார்கள். பலர் சிறையில் செத்தனர் மற்றும் பலர் சிறையிலிருந்து நோய்வாய்ப்பட்டு விடுதலை பெற்று வெளியில் வந்து குறுகிய காலத்திலேயே மரணத்தைத் தழுவினார்கள்.

தந்தை பெரியார் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் (1973 டிசம்பர் 8 மற்றும் 9) கூட, அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்ற திருத்தத்தைக் கொண்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்டம்கூட ஜாதி ஒழிப்புத் திசையில் தீர்மானிக்கப்பட்டதுதான்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி பாதுகாக்கப்படுகிறது. நம்முன் எழும் கேள்வி, ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா? என்பதுதான்.

இருட்டறையில் உள்ளதடா உலகம், ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே என்று சின நெருப்புக் கொப்பளிக்கக் கவிதை வடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

ஜாதி ஒழிப்புக்குப் பல்வேறு நடவடிக்கைகள் தேவை என்றாலும், ஜாதி ஒழிப்பு இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தனி சலுகைகள் குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்புகளில் அளிக்கப்படவேண்டும்; இதனை நீண்ட காலமாகவே திராவிடர் கழகம் வலியுறுத்தியும் வருகிறது.

இதில் சட்டப் பிரச்சினைகள் உண்டு என்றாலும், திராவிட இயக்க வழிவந்த மூத்த தலைவரான கலைஞர் அவர்கள், இதில் இந்தியாவுக்கே கண் திறக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தம் கோரி வற்புறுத்தலாம்.

கடைசிக் கட்டமாக தந்தை பெரியார் 1973 டிசம்பர் மாநாட்டில் நிறைவேற்றிய ஜாதி ஒழிப்புத் தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கவேண்டும்.

ஜாதியை மறந்து அனைவரும் தமிழர்களாக ஒன்றுபடுவோம்! என்ற கலைஞரின் குரலும், தமிழா இனவுணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு! என்ற தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் குரலும் வெற்றி பெற மக்கள் மத்தியில் தீவிரக் கருத்துப் பிரச்சாரம் மேற்கொள்வோம்!.

---------------------"விடுதலை" தலையங்கம் 30-10-2009

4 comments:

டவுசர் பாண்டி said...

மிக அழகான பதிவு , தொடருங்கள் , வாழ்த்துக்கள் , நன்றி ,

ஒரு சிறு சேதி , வலைப் பூவின் தொடக்கத்தில் நீங்கள் கவனிக்காமல் விட்ட எழுத்துப் பிழை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.

//தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன்.//

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தமிழ் ஓவியா said...

எழுத்துப் பிழையை சரி செய்து விட்டேன் டவுசர் பாண்டி. சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி

Jawahar said...

தமிழன் என்கிற உணர்வு தமிழின் மேல் இருக்கும் காதலால் வருவதே ஆரோக்யமானது, நிலையானது.ஜாதியை முன் வைத்து வருகிற எந்த உணர்வுமே ஆரோக்யமானதல்ல. ஜாதி என்பது களை. உயர்ந்த களை, தாழ்ந்த களை என்று எங்காவது கேள்விப் பட்டிருக்கிறோமா?

http://kgjawarlal.wordpress.com