Search This Blog

18.11.09

பெரியாரின் சிலை இந்து நாளிதழின் வெகு அருகில் !

எங்க ஊரு அய்யா சிலை
தந்தை பெரியார் சிலை - அண்ணாசாலை


அமைவிடம்: சிம்சன் எதிரில் _ அண்ணாசாலை
நாள்: 17.09.1974
தலைமை: டாக்டர் நாவலர்
திறப்பாளர்: முதல்வர் கலைஞர்

எண்ணிய எண்ணியாங்கு எய்துபஎண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.

-இது வினைத்திட்ப அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லும் இலக்கணம்.

நல்ல எண்ணம் வேண்டும். எண்ணிய எண்ணத்தை எண்ணியபடி எய்த வேண்டும். அதற்கு கொண்ட கொள்கையில் உறுதியான மனநிலை வேண்டும். அப்படி இருந்தால் தனிமனித வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தையே தலைகீழாக புரட்டிப் போடலாம். இதைத்தான் செய்தார் பெரியார். பார்ப்பனர் அல்லாதாரின் எதிர்காலம் என்பது மூழ்கிப்போன கப்பல், இனி என்ன செய்தும் அதை கரையேற்ற முடியாது என்று முயன்று பார்த்தவர்கள் சுணங்கி நிற்கையில் அந்த முயற்சிக்கே முற்று முழுதாக இணங்கி நான் (ஒற்றை நபராக) என்று தொடங்கி நாம் என்றாகி மூழ்கியதை மீட்டதோடு மட்டுமல்லாமல் இந்த மண்ணுக்குரியவர்களை அதில் ஏற்றி வைத்து நெஞ்சு விம்ம அந்தக் கப்பலில் பவனி வந்தவர்தான் தந்தை பெரியார்.

இப்படி ஒருவர் வரமாட்டாரா என்று ஏங்கியிருப்பாரோ வள்ளுவர், அந்த ஏக்கத்தைத்தான் எண்ணமாக வடித்தாரோ. யாரறிவார்?

அப்படிப்பட்ட பெரியார் தான் செய்த தொண்டுக்கு சிறிதளவுகூட நன்றியை எதிர்பாராதவர். ஆனால், அவரின் உண்மையான தொண்டர்கள் ஊன் மறந்து, உறக்கம் மறந்து, தான் மறந்து, தன் உற்றார் மறந்து தம் நன்றியை அவரின் காலடியில் கொட்டிக்கிடந்தனர். அப்படி ஒரு வரவு பெரியாருக்கும் அவரின் தொண்டர்களுக்கும்.

அவரின் தலைமைத் தொண்டர் ஆசிரியர் கி. வீரமணி கூறுவதைக் கேளுங்கள்

‘என்னைப் பொறுத்தவரை நான் எந்தச் செயலுக்காகவும் தந்தை பெரியார் அவர்களின் கடுஞ்சொல்லுக்கோ, கண்டனத்திற்கோ, கோபத்திற்கோ, தவறுக்கான தண்டனைக்கோ ஆட்பட்டவனாக பொதுவாழ்வில் இல்லை என்ற மனநிறைவுதான் நான் எனது ஆசான் அய்யாவிடம் பெற்ற “பெரு ஊதியம்’’ ஆகும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று பழமொழி உண்டல்லவா! அதைத்தான் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது. பெரியாரின் உண்மையான தொண்டர்களின் ஒவ்வொருவரின் மனநிலையும் இதுதான்.

அப்படிப்பட்ட நிலையில் பெரியாரின் தலைமைத் தொண்டருக்கே (தமிழர் தலைவர் கி. வீரமணி) ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. அது என்ன? கலைஞருக்கு சிலை வைக்கவேண்டும் என்று பெரியார் வலியுறுத்துகிறார். ஆனால் கலைஞரோ பெரியாரின் சிலையை அமைத்த பிறகுதான் தனக்கு சிலை என்று அறிவித்துவிடுகிறார். இருவருக்கும் இடையில் ஆசிரியர் வீரமணி விரும்பி சிக்கிக் கொள்கிறார். அதுதான் அவருக்கு ஏற்பட்ட இக்கட்டு.

அதன்பிறகு, பெரியார் “தனக்கு சிலையை சென்னையில் வைக்க கலைஞரை வற்புறுத்துங்கள் என்று கூறுகிறார். ஏன்? அதற்குப்பிறகுதானே ஒப்பந்தப்படி கலைஞர் சிலையை திறக்கமுடியும் என்பதால் அடடா.... எப்படிப்பட்ட உறவு பாருங்கள் தலைவருக்கும், தொண்டருக்கும்.

அய்யாவின் நோக்கம் எல்லாம் தனக்கோ, வீரமணிக்கோ, கலைஞருக்கோ சிலைவைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் வைக்க வேண்டும் என்பதுதான். அதில் கலைஞர் என்பதில் கூடுதல் அக்கறை அவ்வளவுதான்.

ஏனென்றால், இல்லாத கடவுள்களை சிலைகளாக வைத்துத்தானே மக்களை மாக்களாக்கியிருந்தனர். அதை மாற்றி மாக்களை மனிதர்களாக்கத்தான் பகுத்தறிவாளர்களின் சிலையை வைக்கவேண்டும் என்கின்ற கருத்தில்தான் கலைஞர் சிலையை வைக்க அய்யா அவசரப்பட்டார்.

ஆனால், ஒப்பந்தப்படி அய்யா சிலைதான் முதலில் வைக்கப்பட்டது. அந்த சிலை... ஆம்! இந்த வாரம் இடம் பெறப்போகும் சிலை சிம்சன் அருகில் இருக்கும் தந்தை பெரியார் சிலையாகும்.

ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும், மவுண்ட் ரோடு மகாவிக்ஷ்ணு என்று பார்ப்பனரல்லாதாரால் குறிப்பிடப்படும் ‘இந்து’ நாளிதழ் அலுவலகத்திற்கு அருகில் அமைந்திருப்பதுதான் இதற்கான சிறப்பு. லட்சக்கணக்கான மக்கள் இன்று அய்யா சிலையை பார்வையிட்டபடிதான் போகவேண்டும், வரவேண்டும். அப்படிப்பட்ட அருமையான இடம் அது. இப்பொழுது இன்னுமொரு கூடுதல் சிறப்பு, சட்டமன்றமே அய்யாவின் முன்னிலையில் எழும்பிக் கொண்டு இருக்கிறது. இந்தப் பக்கம் “அய்யா’’ (அண்ணா சாலை), அந்தப்பக்கம் “அண்ணா’’ (ராஜாஜி சாலை) இடையில் சட்டமன்ற வளாகம். அடடா... என்ன பொருத்தம். சட்டமன்றமே அய்யாவின் கருத்துப்படி, அண்ணாவின் வழிகாட்டுதல்படி கலைஞரின் நிருவாகம் செல்லுகிறது எனபதை சொல்லாமல் சொல்வதைப் போல இருக்கிறது அல்லவா.

அண்ணா சாலையில் சிம்சன் அருகில் வைக்கப்பட்டிருக்கும் அய்யா சிலை தி.மு.க.வின் சார்பில் வைக்கப்பட்ட சிலையாகும். நின்ற நிலையில் இருக்கும் சிலையானாலும் சரி, சிம்சனில் அமைந்துள்ளது போன்று உட்கார்ந்த நிலையில் அமைந்திருந்தாலும். அந்த வெண்தாடி வேங்கையின் கம்பீரம் அப்படியேதான் இருக்கிறது.

கல்வி அமைச்சர் நாவலர் தலைமைதாங்க, தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் வீராசாமி எம்.எல்.ஏ. வரவேற்க, தொடர்ந்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் நீலநாராயணன், மாவட்ட செயலாளர் சீதாபதி ஆகியோர் வழி மொழிந்து பேசினர். நாவலரின் தலைமை உரைக்குப்பின் லட்சசோபலட்சம் மக்களின் உணர்ச்சி வெள்ளத்திடையே தந்தை பெரியாரின் சிலையை 17.09.1974அன்று முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார். பெரியார் இயற்கை அடைந்த பிறகு நடந்த சிலை திறப்பு என்பதால் மக்களின் உணர்ச்சி கட்டுக்கடங்காததாக இருந்தது.

அன்றைய நிகழ்வை “விடுதலை’’ படம் பிடித்துக் காட்டுகிறது பாருங்கள்.

“சென்னை மாநகர் மக்கள் கடலில் தத்தளித்தது. கடல் அலைகள் போல, கணக்கிலடங்கா லட்சோப லட்சம் தமிழர் கூட்டம் திரண்டு சென்னை நகரையே திணறச் செய்துவிட்டது. ஆமைகளாய், ஊமைகளாய் அடங்கிக்கிடந்த தமிழர்களின் சுவாசக் காற்றாய் தந்தை பெரியார் அவர்களின் சிலை திறப்பு சென்னை நகரின் வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டது. நிகழ்ச்சி 7_மணி அளவிலே துவங்கியது. அண்ணா சாலை முழுவதுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிந்தையை மயக்கியது. சிலையைத் திறந்து வைத்தபோது “தந்தை பெரியார் வாழ்க’’ வெண்தாடி வேந்தர் வாழ்க!’’ என்ற முழக்கங்கள் விண்ணையே எட்டிவிடும் போல இருந்தது. மக்களின் உணர்ச்சி வேகம் தணிய வெகு நேரம் பிடித்தது.

தொடர்ந்து, சிலையை உருவாக்கிய சிற்பி கோவிந்தசாமியின் மகன் பழனிக்கு கலைஞர் கேடயம் கொடுத்து சிறப்புச் செய்தார்.

பிறகு, அமைச்சர் என்.வி. நடராசன், மேலவைத்தலைவர் சி.பி. சிற்றரசு, திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, அமைச்சர் அன்பழகன் ஆகியோரின் உரைக்குப்பின் கலைஞர் உரையாற்றினார்.

அதற்குப் பிறகு அண்ணாசாலையில் ஸ்பென்சர்அருகில் அன்னை மணியம்மையார் அவர்களால் கலைஞருக்கும் சிலை வைக்கப்பட்டது.

பார்ப்பனியம் யார் யாரையோ செரித்து ஏப்பம் விட்டிருக்கிறது. ஆனால், பெரியாரை மட்டும் செரிக்க இயலாமல் வயற்றெரிச்சலோடு பொருமிக்கொண்டிருக்கிறது. அதுவும் அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியாரின் சிலை ‘‘இந்து’’ நாளிதழின் வெகு அருகில் ! கேட்கவா வேண்டும். திருடனுக்கு தேள் கொட்டியது போல்தான் இருக்கும்.

-------------- உடுமலை வடிவேல் அவர்கள் எழுதிய கட்டுரை -"விடுதலை" ஞாயிறுமலர் 14-11-2009

1 comments:

Unknown said...

அய்யா திராவிட கழகங்களே

தமிழ் மக்களுக்கு ஒரு சந்தேகம்.

தங்கள் திராவிட கழகம் என்பது

இந்து மதத்தை எதிர்கின்றதா ? அல்லது கடவுள் என்று ஒன்றை வணங்கும் எல்லா மதங்களையும் எதிர்கின்றதா ?

இந்து மதத்தை மட்டும் என்றால்

வருகின்ற தேர்தலில் தங்களால் இந்துக்கள் யாவரும் எங்களுக்கு ஒட்டு போட வேண்டாம் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

ஏனெனில் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் உங்களுக்கு ஆகாதே. அவர்கள் ஓட்டும் மட்டும் ஆகுமோ ?

கடவுள் என்று ஒன்றை வணங்கும் எல்லா மதங்களையும் என்றால்

தயவு செய்து உங்களால்

ஏதேனும் ஒரு பள்ளிவாசலின் முன்போ அல்லது ஒரு சர்ச்சின் முன்போ உங்கள் பெரியார் சிலை வைக்க முடியுமா ?