Search This Blog

6.11.09

வைதீகக் கோட்டையில் கம்பீரமாய் நிற்கிறார் பெரியார்

எங்க ஊரு அய்யா சிலை


தந்தை பெரியார் சிலை - காரைக்குடி
அமைவிடம்: காரைக்குடி | நாள் : 13.03.1975
தலைமை : அன்னை மணியம்மையார்
முன்னிலை : கி.வீரமணி
திறப்பாளர் : முதலமைச்சர் கலைஞர்

அன்னை முகம் பார்க்காமல் அவர் (பெரியார்) பின்னே அலைந்தவர்கள். ஊர் ஊராய் தொடர்ந்ததனால் ஊருக்குத் தொலைந்தவர்கள். மனைவி பெயர், மக்கள் பெயர் மனசறிய மறந்தவர்கள். சொத்து சுகம் அத்தனையும் தூசாகத் துறந்தவர்கள், கருப்புச் சட்டைகளை மட்டுமல்ல, கருத்துக் கிழவனின் மீதான காதலையும் கடைசி வரை கழற்றாமல் வாழ்ந்து செத்த அந்தக் கிழட்டுப் பயல்களது முரட்டுக் கொள்கை மட்டும் மோதாமல் இருந்திருந்தால் முற்றிலும் சாய்ந்திருக்குமோடா இந்த மூடநம்பிக்கைகளின் கோட்டை என்று காரைக்குடி என்.ஆர். சாமி நூற்றாண்டு விழா மலரில் பாவலர் அறிவுமதி எழுதிய வரிகள் அத்தனை முதல் தலைமுறை பெரியார் தொண்டர்களுக்கும் எப்படிப் பொருந்துகிறது பாருங்கள்.

ஆம். இந்த வாரம் இடம் பெறுவது காரைக்குடியில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலையாகும்.

முதலில் காரைக்குடி எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவுக்கு இடம்கொடாத, கோயில்களுக்கு வேண்டுமளவுக்கு கொட்டிக் கொடுக்கின்ற வைதீகக் கோட்டையாம். காரைக்குடியில்தான் தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை. எஃகு போன்ற உறுதியுடன் இருந்த வைதீகக் கோட்டையில் ஈரோட்டுப் பூகம்பத்தால் விரிசல் விடத் தொடங்கி விட்டது. அந்த விரிசலை மேலும் விரிய வைத்தவர்தான் என். ஆர்.சாமி அவர்கள்.

காரைக்குடியில் அமைந்த பெரியார் சிலை, பெரியார் மறைவுக்குப் பிறகு திறந்து வைக்கப்பட்ட முதல் சிலை. கேட்க வேண்டுமா? காரைக்குடி தோழர்கள் மட்டுமல்ல, அக்கம் பக்கத்து மாவட்டங் களில் இருந்த அத்துணை தோழர்களும் தங்கள் பகுதியில் விழா நடப்பது போன்ற உணர்வுடன் ஒத்துழைத்து அந்த நிகழ்வை வரலாற்றின் பொன் னேடுகளில் பதிந்து வைத்துவிட்டனர்.

அன்றைக்கு கழகத் தலைவராக இருந்த அன்னை மணியம்மையார் காரைக்குடி மாநகரிலே மறக்க முடியாத ஒரு சரித்திர சிறப்பு நாளாக இன்று (13.03.1975) அமைந்துவிட்டது என்று தனது தலைமை உரையில் கருஞ்சட்டை தோழர்களின், உணர்வாளர்களின் உழைப்புக்கு வரலாற்று அங்கீகாரம் வழங்கினார். பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்தவர் அன்றைக்கும் முதல்வ ராக இருந்த கலைஞர் அவர்கள் காரைக்குடியில் பெரியார் சிலை தேவை தானா என்று கேட்பார்களேயானால் அவர்களுக்குத் தருகின்ற பதிலாக செட்டி நாட்ட ரசர் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள் கிறோம் என்று கூறியதுடன், தமிழகம் முழுவதும் தந்தையின் சிலை அமைய வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டார். இன்றோ கலைஞர் நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை பெரியார் சிலைகளுடன் திறந்து வைத்து, காரைக்குடியில் தான் கண்ட கனவை நனவாக்கிக் கொண்டிருக் கிறார். அதுமட்டுமா? வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் இல்லாவிட்டால் தமிழினம் இன்று தலை நிமிர்ந்திருக்க முடியுமா? தகுதி, திறமை ஒரு சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தம் என்று கூறும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு தமிழகத்திலே வேலை கிடையாது என்று தந்தை பெரியார் சிலை முன்பு உறுதி ஏற்போம் என்று உணர்ச்சிப் பிரகடனம் செய்தார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. செட்டிநாடே வியக்க நடந்த ஊர்வலத்தை கழகத்தலைவர் அன்னையார் அவர்கள் பார்வையிட்டார்.

வியப்பான தகவல் ஒன்று, அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் காரைக்குடியில் ஒரு மாதத்திற்கு முன்பு கலந்து கொண்ட பொதுக்கூட்டம் கலைந்து செல்வதற்கு 26 நிமிடங்கள் தேவைபட்டதாம். அதற்குப் பிறகு நடந்த தந்தை பெரியார் சிலை திறப்பு விழா கூட்டம் கலைய 45 நிமிடங்கள் ஆனதாம். அந்தளவு மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு மேடைக்குப் பின் இருந்த தடுப்புகளும் கூட அகற்றப்பட்டு அந்த மேடை மக்கள் கடலில் சின்னஞ் சிறு தீவாகவே காட்சி அளித்ததாம். சிலை அமைக்க தேர்ந்தெடுத்த இடமும் கூட ஒரு செய்தியை நமக்குச் சொல்கிறது. அன்றைக்கு இருந்த காரைக்குடியின் மய்யத்தில் இரண்டு இடங்களும், நகரின் ஒதுக்குப்புறத்தில் என்.ஆர். சாமி அவர்கள் தேர்ந்தெடுத்த ஓரிடமும் பரிசீலனையில் இருந்தது. இதை இடத்தை முடிவுசெய்ய வந்த ஆசிரியர் வீரமணி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்ற உடன் வருங்காலத்தில் இவ்விடம்தான் நகரின் மய்யமாக இருக்கும். இங்கு அமைவதே சரியானது என்று என்.ஆர். சாமி தேர்வு செய்த இடத்தையே ஆசிரியர் ஒப்புக்கொண்டார். பிறகு அங்குதான் சிலை வைக்கப்பட்டது. அன்றைய நிலையில் மற்றவர்கள் பெரியார் சிலையை மக்கள் நடமாட்டமே அற்ற வெட்டவெளியில் வைப்பதா என்று தோன்றியிருக்கக் கூடும். தோன்றியது. ஆனால், இன்றைக்கு பெரியார் சிலை இருக்கும் இடம்தான் ஆசிரியர் கூறியது போலவே நகரின் மய்யம். இன்னும் சொல்லப்போனால் பெரியார் சிலைதான் அங்கு ‘Land mark’_ ஆறு வழி சந்திப்பு அது. நமது இன எதிரியான பார்ப்பான் கூட பெரியாரை உச்சரிக்காமல் இருக்க முடியாது. எவ்வளவு தொலை நோக்குப் பார்வை பாருங்கள் ஆசிரியர் அவர்களுக்கு! புத்துலகின் தொலை நோக்காளர் பெரியாரின் அடிச்சுவட்டை பின்பற்றுகிறவரல்லவா! அன்றைக்கு இந்த இடத்திலா என்று குமுறியவர்கள், மறுகியவர்கள் இன்றைக்கு நினைத்து நினைத்து இன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

விழா முடிந்த பிறகும், அம்மா, புலவர் இமயவரம்பன், ஆசிரியர் கி.வீரமணி மூவரும் மீண்டும் ஒரு முறை வந்து அய்யாவின் சிலையைப் பார்த்து ரசித்து விட்டுச் சென்றனர். முதல்வர் கலைஞர் அவர்களோ, தமிழகத்திலேயே காரைக்குடி சிலைக்குத் தான் முதல் பரிசு என்று பாராட்டி, முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அதுமட்டுமல்ல, பெரியார் தொண்டர்களுக்கே உரிய சிக்கனத்தன்மையால் வசூலில் மிச்சப்படுத்தப்பட்ட தொகை வங்கியில் சேமிக்கப்பட்டு பின்னர் அதைக் கொண்டு கழகத்திற்கென மனையிடம் வாங்கப்பட்டது. இன்று காரைக்குடியில் எழுந்திருக்கும் என்.ஆர்.சாமி மாளிகை எனும் கழகக் கட்டடத்திற்கு இதுவே அடித்தளமாக அமைந்தது.

இவ்வளவு சிறப்பு கொண்ட காரைக்குடியில் இருக்கும் நெடிதுயர்ந்த தந்தை பெரியாரின் சிலை எத்தனை எத்தனை பெரியார் பற்றாளர்களை உருவாக்கி விட்டிருக்கிறதோ! ஒருவேளை அந்தப் பகுதியில் கருப்புச் சட்டை அணிந்திருக்கும் தோழர்களை விசாரித்தால் அதுவும் சிலை பேசிய ஒரு வரலாறாக விரியக்கூடும்.

வைதீகக் கோட்டையில் கடவுள் இல்லை;கடவுள் இல்லை;கடவுள் இல்லவே இல்லை; என்ற வாசகத்தோடு கம்பீரமாய் நிற்கிறார் தந்தை பெரியார்.

- உடுமலை வடிவேல்
தகவல்: சாமி. சமதர்மம்,
மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், காரைக்குடி

சிலை அமைக்க பாடுபட்டவர்கள்

என்.ஆர்.சாமி, புலவர் ராமநாதன், சாமி சமதர்மம், மு. அரங்கநாதன், அரியக்குடி பழ. சுப்பையா, வெ. இலக்குவன், சாமி. திராவிடமணி, சாமி. திராவிடச்செல்வம் மற்றும் தோழர்கள்.

சிலை அமைப்புக் குழு தலைவர் & பொருளாளர்: என்.ஆர்.சாமி செயலாளர்கள்: சாமி.சமதர்மம், இரா.சுப்பிரமணியம்; புரவலர்கள்: இரா.சண்முகநாதன், இராம.சுப்பையா

ஒத்துழைத்த பிற மாவட்ட இயக்கத்தினர்

இராம.கல்யாணசுந்தரம் (புதுக்கோட்டை), கே.டி.ஓ.எஸ்.முத்துக்கருப்பன் (திண்டுக்கல்), மதுரை சா.பழனிவேலு. எம்.எஸ்.ராமசாமி, மு.அங்கப்பன், தீச்சட்டி திருப்பதி, முத்துக் கிருஷ்ணன், அம்சவல்லி கோபால்சாமி, பி.கே.பி. பூமண்டலம், சிவகங்கை எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர்.

---------------------"விடுதலை" ஞாயிறுமலர் 31-10-2009

1 comments:

Anonymous said...

Great name's in TK. "என்.ஆர்.சாமி, புலவர் ராமநாதன், சாமி சமதர்மம், மு. அரங்கநாதன், அரியக்குடி பழ. சுப்பையா, வெ. இலக்குவன், சாமி. திராவிடமணி, சாமி. திராவிடச்செல்வம் மற்றும் தோழர்கள். There are so many "சாமி"s, great enemy for TK c also with you.

Is there any moment to remove god’s name in TK because people believe that when we say ராம, they get gods pleasing. That why I am asking. I know you not give answer to me, anyway I send the message.

We are appreciating your article.

Thanks