Search This Blog

5.11.09

இயக்கத்தை பாதுகாக்கும் முறை எனக்குத் தெரியாதா? பெரியார் விளக்கம் 
பேரன்புமிக்க தலைவர் அவர்களே! கமிட்டிக்கு வந்துள்ள தோழர்களே! இந்த கமிட்டியில் சில விஷயங்களை விளக்க வேண்டியவர்களாக இருக்கின்றேன். இப்படி கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்றால் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய கமிட்டியையும் மாகாணக் கமிட்டியையும் கலைக்கப்பட்டது என்று தீர்மானம் போட்டுக் கலைத்தேன். இப்படி கமிட்டிகளைக் கலைத்தது பற்றி பலர் பலவிதமாக தப்புப் பிரச்சாரம் செய்தார்கள்.
 
கமிட்டிகள் கலைக்கப்பட்டதன் காரணம்

இப்படி கமிட்டிகளைக் கலைக்க என்ன அவசியம் என்றால் நம் கழகத்திலேயே கமிட்டியில் உள்ள சிலர் துரோகத்தனமான எண்ணத்துடன் ஆங்காங்கு கழகத் தோழர்களிடம் விஷமப் பிரச்சாரம் செய்து கொண்டே வருவதைக் கண்டேன்!
 
திரு.குருசாமி மீது புகார்

அரசியல் சட்ட எரிப்பு சிறைவாசத்துக்குப் பின்பு கழகத்தில் இருந்து தங்களுக்கு என்று இவர்கள் கட்சி சேர்ப்பதாக உணர்ந்தேன்; எனக்கு விரோதமாக கட்சி சேர்ப்பது பற்றி கத்தை கத்தையாய் கையெழுத்துப் போட்டு திரு. குருசாமி மீது புகார்கள் வந்தன.
 
இந்த சதிக்கு சம்பந்தப்பட்ட திரு.குருசாமி அவர்களை கூப்பிட்டுக் கேட்டபோது ஒரே அழுகையாக மறுத்து தம்மீது வீண் பொறாமைக் காரணமாக இப்படிக் கூறப்படுகின்றது என்று கூறினார். குஞ்சிதம் அம்மையாருக்கு அவைகளைப் படித்துக் காட்டினேன். அவரும் அப்படியே கூறினார். இந்த சதிக்கூட்டம் சிறையில் இருந்து விடுதலையான பிறகு திரு. குருசாமியைச் சேர்ந்த சிலர் பலக்குறைவான ஊர்களுக்குச் சென்று பலரை "நீங்கள் எல்லாம் ஆசிரியர் கட்சியா, அய்யா கட்சியா?" என்று கேட்டு இருக்கிறார்கள். இந்த சங்கதி தக்க ஆதாரத்தோடு கிடைத்த பிறகும் திரு.குருசாமியைக் கூப்பிட்டுக் கேட்டேன், அப்பவும் நான் ஒன்றும் அறியேன்; வீண் பொறாமையால் இப்படிச் சொல்லுகின்றார்கள் என்ற பதிலே சொன்னார்.
 
நானும் சரிதான் என்று விட்டுவிட்டேன். இவர்களின் விஷமத்தனமானது தாங்கமுடியாத அளவுக்கு வளர்ந்ததும் அல்லாமல் கழக ஏடான 'விடுதலை' பத்திரிகையிலும் தலைகாட்டுவதைக் கண்டேன்.
 
இந்த குருசாமி யாரைக் கேவலமாக பத்திரிக்கையில் திட்டி நேரிடையாகவும் ஜாடைமாடையாகவும் எழுதினாரோ அவர்களே திருப்பி இவரைக் கடினமாகத் திட்டிப் பேச ஆரம்பித்தார்கள்.
 
இந்த சங்கதியும் என் காதுக்கு வந்தது. இரண்டையும் கண்ட நான் இது அவர்கள் சொந்த சங்கதி என்று கருதி தலையிடாமல் விட்டுவிட்டேன்.
 
மறுபடியும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு, மீண்டும் சதி உருவாகின்றது; கட்சி சேர்க்கின்றார்கள் என்று என் காதுக்கு வந்தது. அப்பவும் நேரில் கூப்பிட்டு இப்படி ஒரு கும்பலை வைத்துக் கொண்டு அவர்களிடம் நேசம் வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே என்று கேட்டேன். கேலி சிரிப்பு சிரித்தார். ஜாடை ஜாடையாகப் பேசியும் எழுதியும் வரவும் தொடங்கினார்.
 
துரோகக் கூட்டம் குழி பறித்தது
 
தோழர்களே! துரோகக் கூட்டம் அண்ணாதுரையுடன் மட்டும் நிற்கவில்லை. கூடவே இருந்து குழி பறிக்கும் ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து தெரிந்து இருந்தும்தான் அனுமதித்து வந்தேன்.

அப்போது இவர்தான் சென்னை மாவட்டத்துக்குத் தலைவர். இவர் மீது இம்மாதிரி செய்கையைக் கண்டு இவரை விலகிக் கொள்ளும்படிக் கூறி வேறு ஆளைப் போட்டேன்.
 
இந்த திரு.குருசாமி பிறகும்கூட வெளியே கூட்டத்துக்கு போகின்ற இடங்களில் எல்லாம் கூட்டத்துக்கு இன்ன இன்னாரைக் கூப்பிடு; இன்ன இன்னாரைக் கூப்பிடாதே என்று கழகத் தோழர்களிடம் சொல்லுவதோடு விஷமப் பிரச்சாரத்தையும் ஆங்கு ஆங்கு பற்றவைத்து விட்டு வந்து கொண்டு இருந்தார். இது எனக்குப் பட்டாங்கமாகத் தெரியவந்தது.
 
உடனே திரு.குருசாமியை கூப்பிட்டு என் மறு உத்தரவு வருகின்ற வரை தாங்கள் வெளியே எந்த கூட்டத்துக்கும் போகக்கூடாது என்று உத்தரவு போட்டேன். மற்றும் சில ஆட்களுக்கும் கூட்டங்களுக்குப் போகக்கூடாது என்று உத்தரவு போட்டேன். மற்றும் சில ஆட்களுக்கும் கூட்டங்களுக்குப் போகக்கூடாது என்று கூறி சென்னைக் கழகத்தைக் கலைத்துப் போட்டு நண்பர் ஜக்கிரியாவையும் மற்றொருவர் முனிசாமி என்பவரையும் தற்காலிகமாக கழகப் பொறுப்பைப் பார்த்துக் கொள்ள வேண்டியது என்று நியமித்தேன். நான் வட நாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வந்த பிறகு இவர்களுக்கு விதித்து இருந்த தடையை நீக்கினேன்.
 
கீழ்த்தரமான பிரச்சாரங்கள்
 
இதற்கு மத்தியில் என்னைப் பற்றியும் மணியம்மையாரைப் பற்றியும் ரொம்ப காலித்தனமாகவும் கீழ்த்தரமாகவும் அதாவது நான் பணம் சம்பாதித்து பெண்டாட்டிக்கு கொடுத்து விட்டேன் அந்தம்மையாரிடம் பணம் சேருகிறது; சுற்றத்தார்களுக்குக் கொடுத்துவிடுகின்றேன் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.
 
'விடுதலை' பத்திரிக்கையிலேயே நான் ஏராளமாக பணம் சம்பாதிக்கின்றேன், இன்கம் டாக்ஸ் போட வேண்டும் என்பது போன்ற பொருள்பட எழுதினார்.
 
நிலைமை இந்த அளவுக்கு ஆகியும்கூட நான் வெளிக்குக் காட்டிக் கொள்ளவே இல்லை. யார் முக்கியப் பொறுப்புக்கு வருவார்களோ அவர்களை ஒழிப்பதுதான் இந்த திரு.குருசாமியுடைய வேலையாக இருந்து வருகிறது. மணியம்மையைப்பற்றி கன்னாபின்னா என்று விடுதலை பத்திரிகையிலேயே எழுதி வர ஆரம்பித்தார்.
 
கடைசியில் அவர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது சம்பத்து கண்ணீர்த் துளிக்கட்சியை விட்டு வந்தவுடன் எங்கே நம்மோடு வந்து சேர்ந்து விடுவானோ என்று எண்ணி அவனைப்பற்றியும் மணியம்மையைப் பற்றியும் எவ்வளவு கேவலமாக எழுத முடியுமோ அவ்வளவு கேவலமாக காலிகளை விட்டுப் பேசவும் செய்தார். இவர்கள் எண்ணம் அடுத்து சம்பத்து நம் கட்சிக்கு வந்து 'விடுதலை'க்கும் வந்து விடுவான். அவனை ஒழிக்கணும் அந்த அம்மாள் பதவிக்கு வந்து விடுவாள் எப்படியாவது இவர்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் இவர் குறிக்கோள்.
 
சம்பத் எலெக்க்ஷன் வந்தது நான் அவனுக்கும் வேலை செய்யவில்லை; அந்தத் தொகுதியில் காங்கிரசுக்கும் வேலை செய்யவில்லை. இப்படி இருக்க இவர் கிருஷ்ணமாச்சாரியை அதிகமாகப் புகழ்ந்து சம்பத்தை இகழ்வது போல் எழுதி தலையங்கம் அனுப்பினார். இந்த தலையங்கத்தை ஆஃபீசில் என் பெயருக்கு அனுப்பி இருந்தார்கள். நான் பார்த்துவிட்டு போட வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
 
நான் அனுப்பிய தலையங்கம் பிரசுரிக்கப்படாததனால் தாம் இனி எழுத முடியாது என்று கூறிவிட்டார். நானும் இதுபற்றிக் கவலைப்படவே இல்லை. அந்த மாத சம்பளத்தை மட்டும் பெற்றுக் கொண்டார். அடுத்த மாதத்துக்கு ஆள் அனுப்பவும் இல்லை; கொடுக்கவும் இல்லை.
 
விஷமத்தனமான கட்டுரைகள்
 
இந்த நிலையில் 'நாத்திகம்' என்ற பத்திரிக்கையில் விஷமத்தனமாக எழுதத் தொடங்கினார். சம்பத்துக்குப் புத்தி சொல்லுகின்ற மாதிரி திராவிடர் கழகம் நாசமாய்ப் போய் விட்டது. நானும் விலகிக் கொண்டேன். இடமும் காலி நீ போய் சேர்ந்து கொள் என்று கிண்டலாக எழுதினார். மற்றும் ஏதேதோ எழுதினார்.
 
பிறகு தான் கேள்விப்பட்டேன். கழகத் தோழர்களிலேயே சிலர் இவர்களுக்கு அனுசரணையாக இருப்பதாக பிறகுதான் கண்டித்தேன்.
 
கழகத்தில் இருந்து கொண்டே சில ஆட்கள் அவரது பத்திரிகைக்கு சந்தா, நிதி சேர்ப்பது முதலான காரியங்களையும் காண்கின்றேன். இப்படிப்பட்டவர்களை கழித்துப் போட்டே கணக்குப் பார்க்க வேண்டும்.
 
நெல்லையில் மாவட்டக் கழகம் துவக்கப்படுகிறது
 
எனவே கலைக்கப்பட்ட கழகங்களை மீண்டும் அமைக்கத் தொடங்குகின்றேன். முதலில் இந்த திருநெல்வேலி மாவட்டத்தின் கழகம் இன்று அமைக்கப்படுகின்றது பிறகு ஆங்கு ஆங்கு சுற்றுப்பயணத்தின் போது அந்த அந்த மாவட்டங்களுக்குக் கழகம் அமைக்க முயற்சிக்கின்றேன்.

நான் சம்பத்துக்கும் மணி அம்மாளுக்கும் பணத்தைக் கொடுத்து விடப் போகின்றேனாம். இப்படி கூறுவது கண்டு நான் அஞ்சப் போவது இல்லை. ஆமாம் கொடுக்கத் தான் போகின்றேன் என் பணம் ஏராளமாக இருக்கிறது. மக்களும் என்னை நம்பிக் கொடுத்தார்கள். நான் எனக்கு சரியென்று பட்டதை செய்வேன். உன் போன்றவர்களுக்கு கேட்க என்ன யோக்கியதை உள்ளது என்று கூறிவிட்டேன்.
 
"பெரியாருக்குப் பிறகு யார்?" என்று மக்களிடம் கூறிக்கொண்டு வருகின்றாயே எனக்குப் பிறகு நீயா வர முடியும். நீ வந்தாலும் என்னை மதிக்கின்றது போல் உன்னையும் மதிப்பார்களா?
 
இது என்ன முனிசிபாலிட்டியா? ஒரு தலைவனுக்குப் பிறகு இன்னொரு தலைவன் வர; அதற்காக காசு கொடுத்து மற்றவனை தலைவன் என்று கூப்பிடச் சொல்ல.
 
எனக்குப்பின் என் நூல்களும் கொள்கைகளுமே வழிகாட்டி
 
நான் கூட்டங்களில் எல்லாம் சொல்லிக் கொண்டுதான் வருகிறேன். எனக்குப்பிறகு எனது புத்தகங்கள் தான் உங்களுக்கு வழிகாட்டி என்று. நான் கஷ்டப்பட்டு சொத்து சேர்ப்பது உங்களுக்கு எல்லாம் தெரியாதா?
 
அதைப் பாதுகாக்க வேண்டியதும் எனக்குத் தெரியாமலா போய் விடும்? சந்தேகப்பட்டார்களே; ஆனால் மக்களின் யோக்கியதை அவ்வளவுதான் என்று கருதவேண்டியவன் ஆவேன்.
 
அடங்கி நடப்பவரே கழகத்துக்கு வேண்டும்
 
மாவட்டக் கழகங்கள் எல்லாம் அமைந்தபின்பு மத்திய கழகத்துக்கு அங்கத்தினர்கள் எடுக்க வேண்டும். அதற்கு கெட்டிக்காரர்களாக இல்லாவிட்டாலும் பாதகம் இல்லை; அடங்கி நடக்கின்றவர்களாகத்தான் பார்த்து எடுக்க வேண்டும்.
 
கருரிலும், கும்பக்கோணத்திலும் கழகத்திலிருந்த இரண்டொருவர்களே இவர்களுக்கு மேடை அமைத்துப் பேச வகை செய்து கொடுத்து இருக்கின்றார்கள்; இவற்றை எதிர்பார்த்து இருந்தனேயாவேன்.
 
என் கொள்கைக்கு கட்டுப்பட்டவரே இருக்க முடியும்
  
இன்று நம் கழகத்துக்கு நல்ல மரியாதை வந்து உள்ளது; மற்ற எந்தக் கட்சிகளும் சாதிக்காத சாதனைகளை எல்லாம் சாதித்துக் கொண்டு வருகின்றது. இதில் உள்ள மற்றவர்களாவது யோக்கியப் பொறுப்புடனும் கவலையுடனும் நடக்க வேண்டும்.
 
என்னுடையக் கொள்கைக்குப், பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்க எண்ணுபவர்கள் யார் யாரோ அவர்கள் இருக்கட்டும். இரண்டு பேருக்கு நல்லவர்களாகக் காட்டிக் கொள்ளபவர்கள் மரியாதையாக விலகிக் கொள்ளலாம்.
 
பிளவுக்கு வித்திட்டவர் குருசாமிதான்
 
தோழர்களே! அண்ணாதுரைக்குக் கோஷ்டி ஏற்பாடு பண்ணி முன் நின்று பிரியச் செய்தது இந்த குருசாமிதான். அவர்களை எல்லாம் தள்ளிவிட்டு விட்டு இவர் மட்டும் தந்திரமாக இங்கு இருந்து கொண்டது கண்டு அண்ணாத்துரையின் ஆட்கள் பச்சையாகவே பேப்பரில் ஆதாரத்தோடு எழுதினார்களே. இவர் ஒரு வார்த்தையைக் கூட மறுக்கவில்லையே. இவரே என்னிடம் ஒத்துக் கொண்டாரே, அவர்கள் இவ்வளவு தூரம் போவார்கள் என்று எண்ணி நான் செய்யவில்லை என்று; நானும் தொலையுது இனியாகிலும் யோக்கியமாக இரு என்றுதான் எண்ணி இருந்தேன்.
 
 
அன்று கழகத்தில் யார் மோசமாக நடக்கின்றார்கள் என்று கருதி நடவடிக்கை எடுத்து விலக்க முற்பட்டாலும் இவர் வந்து குறுக்கே படுத்துக் காப்பாற்றுவார். அண்ணாதுரை, சின்னராஜ், கருணாநிதி போன்றவர்களை எல்லாம் காப்பாற்றி விட்டு இருக்கின்றார். அண்ணாத்துரை பேரில் அறிக்கை எழுதி பேப்பருக்குப் போன் செய்து அவரையும் கூட்டிக் கொண்டு நான் சுற்றுப்பயணத்தில் இருந்த பண்ருட்டிக்கு வந்து விட்டார். இவரே அவர் இனி அப்படியெல்லாம் நடக் மாட்டாருங்க; ரொம்ப வருத்தப்படுகின்றார் என்று கூறி ஒப்புவித்துவிட்டார். இவரின் தலையீடு இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் இல்லாது இருந்து இருக்குமானால் கண்ணீர்த்துளியே முளைக்க வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும்.
 
அடுத்து நான் திருமணம் செய்து கொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது போல எவனோ எழுதிய கற்பனையான கடிதத்தை 'விடுதலை'ப் பத்திரிகையிலேயே துணிந்து வெளியிட்டார். இப்படிப் பல சந்தர்ப்பங்களில் இவர் செய்த தவறுகளை எல்லாம் கூட பொறுத்துக் கொண்டே வந்து இருக்கின்றேன்.
 
இப்போது தனக்கு வேண்டிய காரியங்கள் நிறைவேற்றிக் கொண்டதற்கு பெரிய எதிரி ஆகிவிட்டார்.
 
 
தோழர்களே! நான் எந்த மந்திரிகளையோ, அதிகாரிகளையோ, எந்தக் காரியத்துக்காகவும் சந்திக்கின்றதே கிடையாது. எந்தக் காரியத்துக்கும் இவர் தான் போய் வருவார். இதுதான் இவரை இந்த நிலைக்குப் பேசச் செய்துவிட்டது. மந்திரிகளோ, அதிகாரிகளோ மரியாதை பண்ணுவது தனக்கே வந்ததாக எண்ணி இறுமாப்பு அடைந்து விட்டார்.
 
இப்படிப்பட்டவர்கள் தொல்லை ஒரு வருஷம்வரை இருக்கக் கூடும் பிறகு ஒழிந்தே போகும். கண்ணீர்த்துளி பிரிந்தான்; கொஞ்ச நாள் கத்தினான். இன்று அவனுக்கும் நமக்கும் என்ன தகராறு? அவன் அவன் பிழைப்பைப் பார்த்துக் கொண்டு விலகிவிட்டான்.
 
உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்
 
நம் கழகத் தலைவர்கள் உண்மையாக நடக்க வேண்டும். வாலும், தலையும் காட்டுபவர்களாக இருக்கக்கூடாது.
 
இன்று முளைத்திருக்கும் எதிரிகள் பலமான அளவு திட்டம் போட்டுக் கொண்டு உள்ளார்கள்.
 
என் தகுதிக்கு இதுகளை எல்லாம் பற்றிக் கூறக்கூடாது என்று கருதினேன். கழக சம்பந்தமாக கொள்கை சம்பந்தமாகத்தான் நமக்கு ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமே ஒழிய வேறு என்ன உறவு உள்ளது?
 
பொய்ப் பிரச்சாரமும் ஆள் சேர்த்தலும்
 
எதிரிகள் என் மீது முக்கியமாகக் கூறும் பிரச்சனை என்னவென்றால் எனக்கு வயதாகி விட்டதாம்! "அவருக்குப் பிறகு நான் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டாமா?" என்று ஒன்றும் அறியாத கழகத் தோழர்களிடம் கூறுவது. "பெரியாருக்குப் பிறகு சொத்துக்களை எல்லாம் மீட்டு கைப்பற்ற கோர்ட்டில் வழக்குப் போட வேண்டி இருக்கும். அதற்கு நிதி தேவைப்படும்" இப்படியே பிரச்சாரம் செய்கிறார்கள்.
 
எதிரிகளுடன் உறவு கூடாது

கழகத்தவர்கள் என்பவர்கள் கழக சம்பந்தமாக பற்று வைத்துக் கொண்டு கழகத்துக்கு கேடு செய்பவர்களுடன் உறவு கொண்டு இருந்தால் அவர்கள் எப்படி கழகத்தவர்கள் ஆவார்கள்? நீங்கள் சிந்திக்க வேண்டும். நாம் பதவிக்கோ வாழ்க்கையைப் பெருக்கிக் கொள்ளவோ கழகத்தில் இல்லை. அவர் அவர் வீட்டுச் சோற்றைத் தின்று கொண்டு உழைப்பவர்கள்தான்.
 
எதிரிகளுக்கு உங்களிடம் பற்று என்றால் எதற்கு? உங்களைக் கொண்டு ஏதாவது முன்னேறத் தானே?
 
நீங்கள் அவர்களிடம் பற்று வைக்கின்றீர்கள் என்றால் நீங்களும் அவர்களிடம் ஏதோ எதிர்பார்க்கின்றீர்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரியம் இருக்க முடியும்? எதிரிகளிடம் இருந்து கழகத்தில் இல்லாத என்ன அதிசயமான கொள்கையினைக் கற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்?
 
துரோகிகள் முளைத்தவண்ணம் உள்ளனர்
 
எனது பொது வாழ்கை காலத்தில் துரோகிகள் முளைப்பது என்பது புதிதல்ல. 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை முளைத்துக் கொண்டேதான் வருகின்றார்கள். நானும் வெட்டிக் கொண்டேதான் வருகின்றேன்.

விட்டு விலகுவது ஏன்?
 
என்ன கேடு வந்தது விலகுகின்றார்கள்? நான் சம்பாதிக்க விடமாட்டேன் என்கின்றேன், தங்கள் எண்ணப்படி நடக்க விட மாட்டேன் என்கின்றேன் என்பதுதானே? நான்தான் கூறுகின்றேனே கழகத்தில் பேரால் எவனையும் காசு பணம் சம்பாதிக்கவும், வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் அனுமதிப்பது கிடையாது என்று.
 
அண்ணாதுரை ஏன் போனார்? திராவிடர் கழகத்தில் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது; பெரிய நிலைக்கு வர முடியாது என்று கருதினார். வெளியேறினார். சவுகரியமான பணம் சம்பாதித்துக் கொண்டு வாழ்கின்றார்.
 
அதை பார்த்து ஆத்திரப்பட்டுத்தானே நாமும் பணம் சம்பாதிக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது என்று கருதித்தானே இன்றைய துரோகிகளும் வெளியேறுகின்றார்கள்? போகிறவர்கள் மரியாதையாகப் போகலாம்.
 
நான் பணம் சம்பாதிக்கின்றேன் தகாத வழிகளில் என்கின்றார்கள். நான் என்ன, இவர்கள் பணம் சம்பாதிப்பது போலவா பிள்ளைகுட்டிகளுக்கு என்று சம்பாதிக்கின்றேன்? இப்படிப்பட்ட விஷமப் பிரச்சாரங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
 
பணம் எல்லாம் கழகத்துக்குத்தானே?
 
நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் நானா எடுத்துக் கொள்ளுகிறேன்? எல்லாம் கழகத்துக்குத் தானே ஒப்படைத்துப் போட்டு எளிய வாழ்வு வாழ்கின்றேன்? கலியாணம் என்று கூப்பிட்டால் 150 கொடு என்று வாங்குகின்றேன். பொதுக்கூட்டம் என்று கூப்பிட்டால் 100 விருந்துக்குப் பணம் கொடு; கையெழுத்து, ஃபோட்டோ இதுகளுக்கும் பணம் கொடு என்று வாங்குகின்றேன். மாநாடு கூட்டினால் 1000, 2000 மிச்சம் வருகின்றாற்போல் செய்கின்றேன். இதுகள் எல்லாம் சேர்ந்தால் எங்கே போய் விடப்போகின்றது? இன்று கழகத்துக்கு உள்ள பணத்தில் பகுதிக்கு மேல் என்னுடைய சொந்தப்பணத்தைத்தான் சேர்த்து இருப்பேன்.
 
சொத்துக்கள் வாங்கி சேர்க்கப்படுகிறது
 
தோழர்களே! இந்த வருஷத்தில் திருச்சியில் கழகத்துக்கு 3 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள், கட்டிடங்கள் வாங்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 50 ஏக்கரா நஞ்சை தஞ்சை மாவட்டத்தில் வாங்கப்பட்டு உள்ளது. மாதம் 1,200 ரூபாய் வாடகை வருகின்றாற்போல திருச்சியில் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடம் சம்பந்தமாக ஆஸ்டல் கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளது. யார் திருடிக் கொண்டார்கள்? இந்த சுமார் 5, 6 ஆண்டில் மட்டும் கழகத்துக்கு 30, 40 சொத்துக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டு உள்ளது!
 
விஷமத்தனமான புகார்கள்!

பெண்டாட்டிக்குக் கொடுத்து விடுவேன் என்கின்றனர். எதற்காக கொடுக்கப் போகின்றேன். இந்தக் கழக சொத்து தவிர வேறு எனக்கு சொந்தத்தில் சொத்து கிடையாதா? நான் செத்தாலும் மாதம் ரூ.500, ரூ.1000 வருமானம் வரும்படியான சொத்து அந்த அம்மாளுக்கு இருக்குமே!
 
அடுத்து சம்பத்துக்குக் கொடுத்து விடப் போகின்றேன் என்று சொல்லித் திரிகின்றார்கள். அவன் முட்டாள்தனத்தினால் கேட்பார் பேச்சைக் கேட்டதனால் அவனுக்கு என் சொத்து கிடைக்க வழி இல்லாமற் போயிற்று. இல்லையானால் அவனுக்குத் தானே என் சொத்து சேர்ந்து இருக்கும்? நான் சம்பத்தை தத்து எடுத்துக் கொள்ளுவது என்று குடும்பத்தில் முடிவு செய்து அன்று பத்திரம் முதலியன வாங்கியது யாருக்குத் தெரியாது? இன்னும் அந்தப் பத்திரம் என்னிடத்திலேயே இருக்கின்றதே! தத்து செல்லும்படியாக சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ரிஜிஸ்டிரார் சொன்னதனால் ரிஜிஸ்டர் ஆகவில்லை.
 
சம்பத் நடவடிக்கையால் டிரஸ்ட் ஏற்படுத்தலானேன்
 
அவனும் சதிகாரர் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு நமக்கு விரோதமாக நடக்க ஆரம்பித்ததன் காரணமாக நான் அந்த முயற்சியைக் கைவிட்டு டிரஸ்ட் ஏற்படுத்தி கழகத்துக்குச் சேரும்படி செய்துவிட்டேன்.
  
விலகுவோர் நீலிக்கண்ணீர் வடிப்பதேன்?
 
அண்ணாதுரை கோஷ்டி பிரிந்து போகும்போது 5 லட்சம் ரூபாயை பெரியாரிடம் விட்டு விட்டுப் போகின்றோமே என்று தாங்கள் பணம் சம்பாதித்துக் கொடுத்து விட்டுப் போனவர்கள் மாதிரி நீலிக் கண்ணீர் வடித்துச் சென்றார்கள்.
 
இன்றைக்கு விலகிய பிரபுக்கள் கூறுகின்றார்கள் "அய்யோ 30 லட்சத்தை விட்டுப் போகின்றோமே" என்று ஓலம் இடுகின்றார்கள்.
  
என் சொத்து சேர்ந்துதானே பெருகியது?
 
தோழர்களே! 1949-ல் 5 லட்சமாக இருந்தது எப்படி 63 க்குள் 30 லட்சம் ஆகும்? ஏதோ பணம் தாராளமாகப் பெருகிவந்து இருக்கலாம். அது எப்படி 30 லட்சமாகும்? உள்ளதில் பகுதிக்கு மேல் எனது சொந்தப் பணமும் சேர்ந்து இருக்கின்றது. 1 லட்சம், முக்கால் லட்சம் என்று பல சொத்துக்களை விற்று விட்டேன். அதுதான் எனக்குத் தெரியுமே இவர்களிடம் ஒப்படைத்த பணத்தை வாயில் போட்டுக் கொண்டார்கள் என்பது. சமயம் வருகின்றபோது ஆதாரத்தோடு வெளியிடத்தான் போகின்றேன்.
 
இவர்கள் இருவரும் கையெழுத்திட்டு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறுகின்றார்கள், என்னிடம் கட்டாயமாக ராஜிநாமா செய்து கொடுக்கும்படி எழுதி வாங்கிக் கொண்டேன் என்று. ஆமாம்; இருவரிடமும் மோசடி, தப்புக் கண்டு பிடித்தேன். மரியாதையாக எழுதிக் கொடுத்து விட்டு வெளியே போங்கள் என்று எழுதி வாங்கிக் கொண்டேன்.
 
வேதாசலம் செய்த துரோகம்
 
இந்த வேதாசலம் பெரிய துரோகம் செய்ததை கைப்பிடியாகப் பிடித்தேன். உட்கார வைத்து ராஜிநாமா எழுதிக் கொடுக்கும்படி எழுதி வாங்கிக் கொண்டுதான் போகச் சொன்னேன். கட்டாயப்படுத்தி வாங்கினேன் என்கின்றார்கள். நீ யோக்கியமாக நடந்து இருந்தால் நான் எப்படி கட்டாயப்படுத்தி இருக்க முடியும்?

துரோகப் பிரச்சாரம்
 
இந்த துரோகக்கூட்டத்தின் பிரச்சாரம் என்ன தெரியுமா? எனக்கு முதுமையாகிவிட்டதாம். கால், கைகள் விளங்கவில்லையாம். பெரியாருக்குப் பின் கழகத்துக்கு யார்? சொத்துக்கள் எல்லாம் என்னவாகின்றது? கொள்ளை போகப் போகின்றது என்று தூற்றித் திரிகின்றார்கள்.
 
எனக்குப்பின் நீ தலைவனாக முடியுமா?

எனக்குப் பிறகு நீயா தலைவனாக, வாரிசாக வரமுடியும்? உன்னைத்தான் ஜனங்கள் மதிப்பார்களா? நினைக்கத்தான் உனக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? கழகம் மணியம்மையார் கைக்கு மாறிவிட்டது என்று கூறி அந்த அம்மா மீது ஆத்திரப்படுகின்றார்கள்.

என்னைச் சாகாமல் காப்பது குற்றமா?
மணியம்மை மீது என்ன குற்றம் காண முடிந்தது?

 
இந்த மணியம்மை என்ன செய்கின்றார்கள்? உங்கள் சங்கதியில் எதிலாவது தலையிட்டார்களா? இந்த 84 வயது வரை என்னை சாகாமல் பிடித்து வைத்திருக்கின்றார்கள். சீக்கிரம் சாகவேண்டிய இவனை இந்த அம்மாள் அல்லவா சாகாமல் பிடித்து வைத்துக் கொண்டு உள்ளார்கள் என்றுதானே ஆத்திரப்படுகின்றார்கள்! எனது உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கிறது என்றால் இந்த அம்மாவால் தான் என்பது நாட்டில் யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, என்னைக் குளிக்க வைப்பது, உடை மாற்றுவது எல்லாம் அந்த அம்மாதானே? ஏதுடா இன்னும் சாகமாட்டேன் என்கின்றானே என்ற வயிற்றெரிச்சல்தானே உங்களுக்கு? என்னை நேரடியாக எதிர்க்கத் துணிவு இல்லாத இவர்கள் அந்த அம்மா மீது குறை கூறுகிறார்கள்.
 
துரோகிகள் இல்லாமல் எதுவும் நடவாதா?
 
தாங்கள் இல்லாமல் காரியம் ஒன்றும் நடக்காது என்று இந்த இருவரும் எண்ணிக் கொண்டு இருந்தார்கள். தாங்களும் இல்லாமல் காரியம் நடப்பதுகண்டு ஆத்திரப்படுகின்றார்கள்.
 
இவர்கள் இல்லாமல் பள்ளிக்கூடமும், பத்திரிகையும் நன்றாக நடக்கின்றதே என்று வயிற்றெரிச்சல் அடைகின்றார்கள்! விஷமத்தனமாக எனக்குக் கால் விளங்கவில்லை, கை விலங்கவில்லை, என்று பிரச்சாரம் செய்கின்றார்கள்.
 
தோழர்களே! போன மாதம் 10 நாள் நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை மாவட்டம் முதலிய பகுதிகளுக்குப் பிரச்சாரத்துக்குப் போய்தான் வந்தேன். இந்த மாதமும் இந்த மாவட்டத்தில் 10 நாள் பேசுகின்றேன். 20 ம் தேதிக்கு மேல் மேற்கொண்டும் 10 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்று பயணம் செய்ய இருக்கிறேன். இப்போது கொஞ்ச நாளாக அதிகமாகக் கூட்த்திற்கு போகாமல் இருக்கின்றேன் என்றால் கட்டிடங்கள் ஏராளமாகக் கட்டப்படுகின்றன.
 
எதிர்க்க ஆண்மையில்லை தூற்றுவது ஏன்?
 
என்னை எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள் என்னைச் சார்ந்து இருப்பவர்களைக் குறை கூறுகின்றார்கள். மணியம்மையும், சுப்பையா, வீரமணி, இமயவரம்பன் இவர்கள் ஆட்டுகின்றார்களாம். நானும் அவர்கள் ஆட்கின்றபடி ஆடுகின்றேனாம். இப்படி எல்லாம் போக்கிரித்தனமாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

இயக்கத்தை பாதுகாக்கும் முறை எனக்குத் தெரியாதா?
 
இத்தனை நாள் பாடுபட்டு இயக்கத்தை உருவாக்கிய எனக்குத் தெரியாதா இதனை பாதுகாக்க வேண்டிய சங்கதி. நீங்கள் இந்த துரோகப் பிரச்சாரம் கண்டு கவலைப்பட வேண்டாம்.

கழகத் தோழர்கள் கட்டுப்பாடுடன் நாணயத்துடன் நடவுங்கள்!

எனவே கழகத் தோழர்கள் என்பவர்கள் துரோகிகளுக்கு இடமளிக்காமல் கட்டுப்பாடுடனும், நாயணத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்; எனக்கு எண்ணிக்கை முக்கியம் அல்ல; இருக்கின்றவர்கள் கொஞ்சம் பேரானாலும் யோக்கியப் பொறுப்புள்ளவர்களாகவும் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் அவ்வளவேதான் - என்று எடுத்துரைத்தார்கள்.


-------------------------தந்தைபெரியார் அவர்கள் திருநெல்வேலியில் 29.01.1963-அன்றும், பண்ருட்டியில் 13.02.1963-அன்றும் திராவிடர் கழகம் பற்றி, கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆற்றிய தெளிவுரையின் தொகுப்பு-நூல்:-"கழகமும்-துரோகமும்" பக்கம் 3 -15
 

3 comments:

அசுரன் திராவிடன் said...

மிகவும் பயனுள்ள தகவல் ..துரோகம் என்பது...அய்யா காலத்திலிருந்தே ஆரம்பம் ஆகியுள்ளது...

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ssk said...

சிறப்பான கட்டுரை. நீங்கள் இதனை முழுமையாக எழுதினால் முழு விவரமும் தெரிந்து கொள்ள முடியும். பெரியார் பார்பனர் கூட்டத்தை எதிர்க்கும் மலையை பிடுங்கி தூர எரியும் வேளையில், இனத்தை காக்கும் முயற்சியில் இருந்த போதும், காலடியில் குழி பறிக்கும் தமிழர் கூட்டமும் இருந்தது என்பதை கேட்கும் போது இன்றும் தமிழர் பல வழிகளில் கீழே செல்வது வியப்பளிக்கவில்லை.