Search This Blog

25.11.09

லிபரான் அறிக்கையும் பா.ஜ.க.வின் ரகளையும் - 2பாபர் மசூதி இடிக்கப்பட்டு 17 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அதன் உண்மைக் குற்றவாளிகள், லிபரான் ஆணையத்தின்மூலம் வெளிப்படையாய்த் தெரிய வந்துள்ளார்கள்.

மும்பையில் சிவசேனா கும்பலும், சங் பரிவார்க் கூட்டமும் நடத்திய வன்முறை வெறியாட்டங்களின் காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள்; கோடிக்கணக்கான சொத்துகள் நாசமாக்கப்பட்டன.

அது தொடர்பாக நீதிபதி சிறீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையினை ஒரே வரியில், மகாராஷ்டிராவை யாண்ட பா.ஜ.க. சிவசேனா ஆட்சி நிராகரித்துவிட்டது.

கடும் எதிர்ப்பின் விளைவாக மீண்டும் அதன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றாலும், குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாத நிலைதான். அந்த நிலை லிபரான் ஆணையத்திற்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் மதச் சார்பின்மையாளர்களும், சட்ட ஒழுங்கு காப்பாற்றப்படவேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்களும், நியாயவாதிகளும் எதிர்பார்க்கின்றனர்.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் மூலம்தான் உலக நாடுகளின் முன் தலைகவிழ்ந்த இந்தியா மீண்டும் கம்பீரமாகத் தலைதூக்கி நிற்க முடியும்.

சிறுபான்மை மக்களுக்கும் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட முடியும்.

குற்றவாளிகள் துள்ளிக் குதிப்பார்கள்தாம் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தடுப்பார்கள்தாம் பல்வேறு போராட்டங்களை வீதியில் வந்து நடத்துவார்கள்தாம் அதில் வன்முறைகள்கூடத் தலைதூக்கக் கூடும்; அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது 68 பேர்களின்மீதும் முறையாக வழக்குத் தொடர்ந்து, சட்டத்தின் முன்னிறுத்தி, உண்மையான குற்றவாளிகளை எந்த வகையிலும் தப்பிக்க விடாமல், உரிய தண்டனையைப் பெற்றுத் தந்தே தீரவேண்டும். கண்ணுக்குத் தெரிந்த இந்தக் குற்றவாளிகளை, பட்டப் பகலில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்தவர்களைத் தண்டனையிலிருந்து தப்பிக்கவிட்டால், நாட்டில் சட்டத்தின்மீதும், நிருவாகத்தின்மீதும், நீதியின் மீதும் நம்பிக்கை இல்லாத ஒரு பரிதாபகர நிலையைத்தான் ஏற்படுத்தும்.

சட்ட ஆட்சி என்பது போய், தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற தசைப் பலம் கொண்ட தடியர்களின் ஆட்சிதான் நாட்டில் கோலோச்சும்.

சாதாரண குற்றங்கள் அல்ல; இந்தியக் குற்றவியல் சட்டம் (அய்.பி.சி.) 147, 153(ஏ), 149, 153(பி), 505 போன்ற பிரிவுகளில் வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன.

கலகம் விளைவித்தல், மக்களிடையே மதக் குரோத உணர்வைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமூகத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல், மக்களிடையே பீதியை உண்டாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிகப்பெரிய தலைவர்கள், மிகப்பெரிய பதவிகளை அலங்கரித்தவர்கள் என்று கருதப்படுகிற அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அசோக்சிங்கால் போன்றவர்கள் வழக்கினைத் துரிதமாக நடத்திட ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்பது வெட்கக்கேடாகும்.

இன்னும் சொல்லப்போனால், ஒரு கட்டத்தில் வழக்கிலிருந்து அத்வானியை விடுவித்தனர். சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் என்ற கீழான, மலிவான தந்திர நடவடிக்கையில் ஈடுபட்ட பெரிய மனிதர்தான் அத்வானி; எதிர்ப்பின் காரணமாக நீதிமன்றம் தலையிட்டு, அவரை மீண்டும் வழக்கில் இடம்பெறச் செய்தது.

இப்பொழுது விசாரணை ஆணையத்தின் அறிக்கையும் வெளிவந்துவிட்டதால், வழக்கினை விரைவாக நடத்துவதில் எவ்விதத் தடையும் கிடையாது.

இந்தச் சந்தர்ப்பத்தை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

எங்கே, பார்ப்போம்!

------------------"விடுதலை" தலையங்கம் 25-11-2009

0 comments: