மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமாருக்கு சமூகநீதிக்கான வீரமணி விருது
சிகாகோவை தலைநகரமாகக் கொண்ட பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பாக, சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா பெங்களுரு நகர அரங்கில் 04.11.2009 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவராக சிறப்பாகப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞரான பேராசிரியர் ரவிவர்மகுமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. புதுடில்லி சமூக நீதிக்கான வழக்கறிஞர்களின் அமைப்பு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
பெங்களூரு நகரின் மய்யத்தில் அமைந்திருந்த டவுன்ஹால் மண்டபத்தில் மாலை 5.30 மணிக்-கெல்லாம் முக்கிய பிரமுகர்கள் வருகை தந்தனர். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் யு.பூபதி, அன்னம் சுப்பாராவ், மற்றும் தோழர்கள், தோழியர்கள் வந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று, சிற்றுண்டியுடன் தேநீர் விருந்தும் அளித்தனர்.
அரங்கின் மேடையில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி, வழக்கறிஞர் எல்.ஜி.காவனூர், பேராசிரியர் ரவிவர்மகுமார் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பாக சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா எனப் பதாகையில் பொறிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக கவிஞர் ஜென்னியும், அவரது மகன் சிந்தனுமும் சமூக நீதிக்கான போர்க்குரலை பாடல்கள் மூலம் எழுப்பினர். விழா சரியாக மாலை 6 மணிக்கு தொடங்கிது. விழா ஏற்பாட்டா-ளர்கள் தமிழர் தலைவர் உள்ளிட்ட விருந்தினர்களை மேடைக்கு அழைத்து, அமர வைத்து, பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்தனர். வரவேற்புரை ஆற்ற பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மானமிகு டாக்டர் சோம.இளங்கோவன் அழைக்கப்பட்டார்.
வீரமணி பெயரில் விருது ஏன்?
மானமிகு டாக்டர் சோம. இளங்கோவன் எல்லோரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். சமூக நீதிக்காகப் பாடுபட்ட அய்ம்பெரும் தலைவர்களான ஜோதிபா பூலே, சாகுமகாராஜ், நாராயணகுரு, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் மற்றும் கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் பணிகளை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு நன்றி செலுத்தினார்.
கம்ப்யூட்டர் சிலைடுகள் (பவர் பாயிண்ட்) மூலம் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை, நாத்திகக் கொள்கைகளை விளக்கினார். பெரியார் பன்னாட்டு மய்யம் வீரமணி பெயரில் ஏன் விருது வழங்குகிறது என்ற வினாவையும் எழுப்பி அதற்கான விடையையும் தெரிவித்தார்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பத்து வயதிலேயே மேடை ஏறியவர் ஆசிரியர் கி.வீரமணி. மிகச் சிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், வழக்கறிஞர், மனித நேயர், பத்திரிகை ஆசிரியர், கல்வியாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். என்றைக்கும் பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டன் நான் என்று கூறி, அதன்படி நடப்பவர். கல்வி என்பதனை அடிப்படையாகக் கொண்டு சமூக மாற்றத்திற்கான, சமூக நீதிக்கான அடித்தளம் அமைப்பவர்.
பெரியார் அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டு, இதற்கொல்லாம் காரணம் 25 வயது இளைஞரைப்போல, ஓடி ஓடி உழைக்கும் தலைவர் வீரமணி. எனவேதான் அவரது பெயரில் விருது ஏற்படுத்தப்பட்டது என்றார்.
பெரியார் பன்னாட்டு மய்யம், சமூக நீதிக்கான வீரமணி விருதினை 1994 இல் கொடுக்க ஆரம்பித்தோம். இன்று 10 ஆவது விருதினை கருநாடகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பேரா. ரவிவர்ம குமார் அவர்களுக்கு வழங்குகிறோம்.
மார்டின் லூதர் கிங் கண்ட கனவு இன்று அமெரிக்காவில் ஒபாமாவால் நிறைவேறியுள்ளது. தந்தை பெரியார் கண்ட கனவான ஜாதியற்ற சமூகம் ஒரு நாள் நிச்சயமாக நிறைவேறும் என்று சொன்னார்.
ஈழத் தமிழர்கள்
விருது பெறும் பேராசிரியர் ரவிவர்மகுமாருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ‘மல்ட்டி லிங்கேஜ்’ என்னும் கணினி வசதியைப் பயன்படுத்தி, சமூக நீதிக்கான கருத்துகளை ஒரே நேரத்தில், பல்வேறு மொழிகளில் மக்கள் படிக்க இணையதளத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை எடுத்துக் கூறி, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு மனிதநேயமற்ற இலங்கை அரசின் செயலைக் கண்டிக்க முன்வரவேண்டும் என்று கூறினார்.
-------------------"விடுதலை" 6-11-2009
0 comments:
Post a Comment