தமிழினத்தை தாழ்வாக சித்தரிக்கும் கதை, காவியம், இலக்கியங்களைக் கொளுத்தவேண்டும் அண்ணா கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவரின் அரிய விளக்கவுரை
தமிழினத்தை தாழ்வாக சித்தி ரிக்கும் கதை, காவியங்களை கொளுத்த வேண்டும் என்று அண்ணா அவர்கள் கூறிய கருத்தை எடுத்துக்கூறி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கமளித்தார். சென்னை பெரியார் திடலில் 31.8.2009 அன்று மாலை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவை ஒட்டி அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற விவா-தங்கள் என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வுரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அண்ணா சொல்லுகிறார்:
இந்தியா என்ற இந்த உபகண்டம், பல இனங்கள் வசிக்கும் இடம். ஆகவே இங்கு பல கலைகள் உண்டு. இனத்திற்கோர் கலை என்றுண்டு. எனினும் இரு பெரும் கலைகள் இங்குள்ளன என்று அறிவாளிகள் கூறியுள்ளனர்.
ஆரியக்கலை, திராவிடக் கலை
ஆரியக் கலை ஒன்று; திராவிடக் கலை பிறிதொன்று. இடத்திற்கோர் கலை உண்டென்றும், இனத்திற்கோர் கலை உண்டென்றும் கூறினேன்.
அவை ஒன்றை ஒன்று தழுவாவிடினும், மோதிக்கொள்ளாமல் இருத்தலுண்டு. அவை தனித்தனி அமைப்புப் பெற்றுத் திகழ்வதால், இந்துக்கலை என்று கூறப்படுவதும், இஸ்லாமியக் கலை என்று கூறப்படுவதும் வேறு வேறு எனினும் அவை ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாதபடி தனித்தனி அமைப்புக்களாகி விட்டன. ஆனால், ஆரியக் கலையும், திராவிடக் கலையும், அப்படியின்றி, ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும், மோதிக்கொள்வதாகவும் இருத்தலை அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இந்நிலையின் பயனாகத் திராவிடர் கலைமீதும், சட்ட திட்டங்கள் மீதும், ஆரியம் ஆதிக்கம் செலுத்தலாயிற்று. (அண்ணா அவர்கள் தனது வாதத்திற்கு நல்ல அடித்தளத்தை சிறந்த முன்னுரையை எடுத்து வைத்த பின்புதான் தன்னுடைய வாதங்களை எடுத்து வைக்கின்றார்.) இக்கல்லூரியில் பன்னெடு நாள்களுக்கு முன்பு இருந்தவரும், சட்ட வல்லுநருமான மிஸ்டர் நெல்சன் என்பார், இந்து சட்டம் என்பது ஆரியர்களின் மனு, பராசரர், யாக்ஞவல்கியர் ஆகியோரின் நூல் களின் அடிப்படைகளின்மீது அமைக்கப்பட்டிருப்பதாலும், தென்னாட்டு மக்களில் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் ஆரியரல்லாதார் ஆகையினாலும், அவர்கள் மீது இந்து சட்டத்தைத் திணிப்பது தவறு என்று எடுத்துக்காட்டினார். அவரது பேச்சு, காட்டுக் கூச்சலாகிவிட்டது. இந்தச் சட்டமே ஆரிய நீதியே இன்று நம்மை ஆள்கிறது. தமிழருக்குத் தேவை வளமை போன்ற சட்டமோ அல்லது குறள் நீதியோ இன்று இல்லை.
ஆரியச் சட்டம்
ஆரியமே சட்டத்தை ஆள்கிறது. கலையிலே, ஆரியத்தை ஆதிக்கம் செய்யவிட்டதனால், நாம் கண்டபலன் இதுவென்றுரைக்க ஆசைப்படுகிறேன்.
எனவேதான், தமிழருக்குத் தமிழ்நெறி, தமிழ்முறை, ஒழுக்கம், வீரம், கற்பு, காதல் எனும் பண்புகளைத் தரக்கூடியன கலையாக இருத்தல் வேண்டுமேமொழிய வேறோர் இனத்தைப் புகழ்வதும், அதற்கு ஆதிக்கமளித்துத் தமிழ் மக்கள் மனத்திலே தன்னம்பிக்கையற்றுப் போகும் படியும், தமது இனத்தைப் பற்றியே தாழ்வாகக் கருதிக்கொள்ளும் படியான நிலைமை உண்டாக்குவதுமான கதை, காவியம், இலக்கியமென்பவைகளைக் கொளுத்த வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம்.
தமிழர் என்று நான் கூறும் போது தமிழ் மொழி பேசுவோர் என்பவரை மட்டுமல்ல, நான் குறிப்பது, தமிழ் இனத்தை என்பதை நினைவூட்டுகிறேன். (அண்ணா அவர்கள் ஒவ்வொரு செய்தியிலும் எச்சரிக்கையோடு பேசுகிறார்கள்).
கலை, இலக்கியம், கற்பனை, நூல் ஆகியவற்றின் மீதெல்லாமா எங்களுக்கு விரோதம்? இல்லை. தொல்காப்பியத்தைத் தொட்டோமில்லை, நற்றிணையை, நல்ல குறுந்தொகையை, கற்றறிந்தோர் ஏற்றுங் கலியை, அகத்தை புறத்தை அழிக்கப் புறப்பட்டோமில்லை. ஆரியத்தை அழகுறப் புகுத்தித் தமிழரை அறுக்கும் நூற்களையே கண்டிக்கிறோம்.
இந்த இயக்கத்தால் விளம்பரம் பெற்று
(அண்ணா அவர்களின் இந்த வாதமே மிக முக்கியமான வாதம். இளைய தலைமுறையினர் இப்பொழுது புரிந்து கொள்ள வேண்டும். இளைய தலைமுறையினர் மட்டுமல்ல இந்த இயக்கத்திலிருந்து, இந்த இயக்கத்தால் விளம்பரம் பெற்று, இந்த இயக்கத்தினாலேயே பெரிய மனிதர்களானவர்கள் எதிரிகளுக்குத் துணை நிற்கின்றார்களே அவர்களும்கூட இதைப் புரிந்துகொள்ள வேண்டும்)
தொல்காப்பியமே, அதற்கு முன் இருந்த புலவர்களின் பொன்னுரைகளின் பெட்டகம் எனில், 700 ஆண்டுகள் முன் தோன்றிய கம்ப இராமாயணம் பழம் பெரும் புலவர்களின் இலக்கியங்களின் கூட்டாகவே இருக்கும். பழைய மூல நூற்கள் இருக்கும்போது, இடையே ஆரியத்தைப் புகுத்த வந்த இராமாயணத்தை அழிப்பதனால் இலக்கியம் இறந்துபடுமா? கலை கெடுமா? என்று கேட்கிறேன். தமிழ் இலக்கியம் இரண்டுக்குள்தான் அடக்கமா?
(கம்பராமாயணம் போய்விட்டால் என்ன ஆவது? பெரியா புராணம் போய்விட்டால் என்ன ஆவது?
தமிழ் இலக்கியமே இந்த இரண்டுக்குள்தான் அடக்கமா? என்ற ஒரு கேள்வியை அண்ணா கேட்டார். அந்தக் கேள்வி அப்படியே இருக்கிறது. விடையை இன்னும் எவரும் தரவில்லை. (பலத்த கைத்தட்டல்).
அண்ணா நூற்றாண்டிலேயே நமது சிந்தனைக்கு விருந்தாக வைக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்)
இவ்விரு நூற்களைக் கொளுத்துவதால் கலை போகும் என்று கூறும் பண்டிதர்களை நான் கேட்கிறேன். இவை இரண்டொழியத் தமிழனிடம் இலக்கியம் இல்லையா? கலை கிடையாதா? என்று கலை விஷயமான கிளர்ச்சியை நாங்கள் எடுத்துக்கட்டிக்கொண்டு வர ஆசை கொள்ளவில்லை.
ஆரியக் கலை சார்பாக வாதாடல்
முதலிலே ஆரியக் கலையின் சார்பாக ஜெர்மன் பேராசிரியர் மாக்ஸ் முல்லரும், திராவிடக் கலை சார்பாக சர்.ஜான்மார்ஷலும் வாதிட்டனர். இந்தியக் கலை என்றால் ஆரியக்கலை என்று நம்பிய காலமும், ஆரிய தருமம், நாகரிகம் என்பது குறித்துத் திருவல்லிக்கேணியும் மயிலாப்பூரும் பூரித்த காலமும் உண்டு. நான் சிறுபிள்ளையில் படித்தது. ஆரிய மத உபாக்கியானம் என்பதைத்தான்.
பிறகு மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும், சைவத் திருவாளர் வி.பி.சுப்பிரமணிய முதலியாரும், திராவிட நாகரிக மேம்பாட்டை எடுத்துரைத்தனர். மறைமலை அடிகளாரும் இது குறித்துக் கூறினார்.
நாங்கள் கூறுவதைக் காட்டிலும் கடுமையாகவே, ஆரிய மன்னன் மகன் இராமனைத் தெய்வமாக்கித் தமிழரைச் சிறு தெய்வ வழிபாடாற்றும் சிறு மதியினராக்கிற்று. ஆரிய திராவிடப் போராட்டக் கதையே இராமாயணம் என்று உரைத்ததைக் கூற விழைகிறேன்.
நேரு அவர்களே சொல்லியிருக்கிறார்
(அரசியலிலே வேறுபாடான கருத்தைக் கொண்ட நேரு அவர்கள் கூட ஆரிய திராவிட போராட்டக் கதையே இராமாணம் என்பதை உரைத்தார்கள்)
எனவே, ஆராய்ச்சியாளர்களின் முடிவு, இராமாயணம் ஆரியக் கதை என்பதும், ஆரிய திராவிடப் போராட்ட விவரம் என்பதுமாகும். அதனைக் கம்பர் எழுதியுள்ள முறை, தமிழர் ஆரியத்தை ஏற்றுக்கொள்ளும் தூண்டுகோலாகவும் தமிழ் இனம் தன்னம்பிக்கை, தன்மானம் இழந்து கெடுகின்றது என்று கூறுகிறோம். தமிழ் இனம் ஆரிய இனத்தலைவனிடம் தோற்றுவிட்டது என்பது ஒப்புக்கொள்ளச் செய்வதாகவுமிருப்பதனால், அந்நூலைப் படித்திடும் தமிழ் இனம், தன்னம்பிக்கை, தன்மானம் இழந்து கெடுகின்றது என்று கூறுகிறோம்.
தமிழினம் புத்துயிர் பெற
தமிழ் இனம் புத்துயிர் பெற, இத்தகைய ஆரியக் கலையை அழிப்போம் என்றுரைக்கிறோம். இது, இனஎழுச்சியின் விளைவு. முடியுமா? முடியாதா? என்பது, கேள்விக்குரியதுமல்ல, இலட்சியவாதிகளுக்கு அதைக் குறித்து யோசிக்க அவசியமும் இல்லை என்பேன் என்று சொல்லுகின்றார். (சமுதாயக் கருத்தாக இருந்தாலும் சரி அல்லது எந்தக் கொள்கையாக இருந்தாலும் சரி, அந்த கொள்கைக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்கிற பொழுது முடியுமா? முடியாதா? என்ற கேள்வியே எழக்கூடாது.
தந்தை பெரியார் சொல்லுவார்கள்.செய்ய வேண்டுமா? இல்லையா? என்பதை மட்டும் சிந்தித்துப் பார் உன்னால் வெற்றியா? தோல்வியா என்பதைப் பற்றிக் கவலைப் படாதே. தேவையா? இல்லையா? செய்ய வேண்டுமா? இல்லையா? இறங்கிப்பார் என்று அய்யா அவர்கள் சொல்லுவார்கள். எனவே, போருக்குப் போகின்ற நேரத்திலே தன்னுடைய இலட்சியத்தை எடுத்துச் சொல்லுகின்ற நேரத்திலே அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தத்துவத்தைத்தான் மிக அழகாக அவர்கள் இங்கே சுட்டிக்காட்டுகின்றார்கள். மிக அருமையாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்) சீப்பை ஒளித்தால் திருமணம் நிற்குமா என்ற சிறுமொழிகளெல்லாம், பெருமதி படைத்த நமது சபையினரின் மனதில் உணடாகாது என்று கருதுகிறேன். வெற்றி எமக்குக் கிடைக்குமா என்பது உமது ஒத்துழைப்பைப் பொறுத்தது. நீங்கள் எதிர்ப்பதனால், உமது எதிர்ப்பைச் சமாளிக்கும் சக்தியை நாங்கள் பெறுவதைப் பொறுத்திருக்கிறது.
எனவே, எமது நோக்கம் கலையைக் கெடுத்தலுமல்ல, இலக்கியத்தை அழித்தலுமல்ல. கலைப்புரட்சி மூலம், இன எழுச்சி இன விடுதலை கோருவதேயாகும்.
வாதத்தை தவிடு பொடியாக்கி
(இதைத்தான் அண்ணா அவர்கள் அடிப்படையாக வைத்தார். அவர் சொல்லப்போகிற வாதம் எதுவோ அந்த வாதத்தை இவரே எதிர்நோக்குகிறார். எதிர் தரப்பினர் சொல்லுவதற்கு முன்னாலேயே அந்த வாதத்தை தவிடு பொடியாக்கிவிடுகின்றார். பிறகு அவர் எடுத்து வைக்கின்ற விவாதமே மக்களாலே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அளவிற்கு இதைச் சொல்லப் போகிறார். இதைத்தான் சொல்ல முடியும் என்பது. கீறல் விழுந்த கிராம`ஃபோன் வரிகளைப் போல இன்றக்கும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.) எனக்குப் பிறகு பேச இருக்கும் தோழர் சேதுப்பிள்ளை அவர்கள் கம்பரின் கவித்திறனை, காவியத்திலே வரும் அணியழகை உவமை நயத்தை எடுத்துரைப்பார்கள். அவர் அங்ஙனம் கூறினதை நான் பல முறை கேட்டு மகிழ்ந்துள்ளேன். இன்னும் கேட்கும் அவாவுடையேன்.
(இதுதான் வேடிக்கை எவ்வளவு அழகாக சொல்லுகிறார் பாருங்கள். விவாத முறையிலே எதிரியை மடக்குவது கூட எப்படி பாருங்கள். எதிரியை வசப்படுத்துகிறார். எதிரியை ஆத்திரப்படுத்தவில்லை. கோபப்படுத்தவில்லை.
எதிரிகளைக் கூட தன்வயப்படுத்த வேண்டும்
வழக்கறிஞர்கள், சட்டத்தில் எவ்வளவு ஞானம் உள்ளவர்களாக இருந்தாலும், திறமை உள்ளவர்களாக இருந்தாலும் கூட, அட்வகசி என்று சொல்லக்கூடிய கருத்துகளை நீதிமன்றத்திற்கு முன்னாலே நீதிபதிக்கு முன்னாலே எடுத்து வைக்கக் கூடிய முறை இருக்கிறதல்லவா? எதிரிகளைக் கூட தன்வயப்படுத்த வேண்டும். எதிரி கையிலே உள்ள ஆயுதத்தைப் பறிக்கக் கூடிய அளவுக்கு அருமையாக அண்ணா அவர்கள் இங்கே சொல்லுகின்றார்.
செந்தமிழ்ச் செல்வியில் அவர், கம்பச் சித்திரங்கள் தீட்டியதை நான் அறிவேன். எனவே அவருக்கும் உமக்கும் ஒன்றுரைப்பேன். நாங்கள் கம்பனின் கவித்திறமையைக் குறித்து விவாதிக்கும் நோக்கமுடையவர்களல்லர். இச்சபையிலும் சீத்தலைச் சாத்தனாரும், ஒட்டக்கூத்தர், புகழேந்தி என்பார் போன்ற கவிகளும் கூடிக் கம்பன் கவியிலே திறமை உள்ளதா? இல்லையா? என ஆராய்வது போன்றும் நாம் கூறவில்லை. திறமை வேறு, தன்மை வேறு, விளைவு வேறு. கம்பரின் கவித் திறமையைக் கண்டு நாங்கள் வியக்கிறோம். அந்தத் திறமை ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்பது கண்டு திகைக்கிறோம் (கைதட்டல்).
(அந்தத் திறமை யாருக்குப் பயன்படுகிறது? நம்மவர்களில் ரொம்ப கெட்டிக்காரனாக இருப்பவரின் திறமை எதிரிக்குப் பயன்பட்டால் அந்தத் திறமையினாலே நமக்கு என்ன லாபம்? அது இந்த இனத்தின் அழிவுக்குத் தானே பயன்படும்? ஆகவே அதைப் பாராட்டினால் அது அறிந்தவர்களுடைய செயலாக இருக்கும். அதைத் தூக்கிப் போற்றிப் புகழ்ந்தால் அது நம்முடைய இனத்தின் வீழ்ச்சிக்கு மேலே கொண்டு செல்லுமே தவிர பயனுள்ளதாக இருக்காது. அதைத்தான் இங்கே சொல்லுகிறார்) அவரது கவிதையின் விளைவாகத் தமிழ் இனம் தாழ்ச்சியுற ஆரியத்திடம் அடிமைப்படும் விளைவு நேரிட்டதைக் கண்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். நாங்கள் கண்டிப்பது கம்பனின் கவித்திறனையல்ல, அதன் தன்மையை, விளைவை என்பதை அறிஞர்கள் தெரிய வேண்டுகிறேன். கம்பர் இராமகாதை பாடியதன் நோக்கம் யாது? என்று கேட்கிறேன்.
உலகு பழிக்குமோ?
பழந்தமிழ் நூலான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், தமது பாயிரத்தில், தாம் காதை பாடுவது எதற்கு என்பதைக் கூறும்போது, பத்தினியை உலகு புகழ்ந்தேத்தும், நீதி தவறிய அரசு கெடும், அவனவன், செயலின் விளைவு அவன-வனைத் தாக்கும் என்ற கருத்துரைகளைக் கூறவே, நான் இப்பாட்டுடைச் செய்யுளை இயற்றினேன் என்று எழுதினார், தெளிவாக. ஆனால் கம்பரோ, தாம் இராமாயணம் எழுதியதற்கு நோக்கம் கூறாது. நொந்த மனங்கொண்டு வையகம் என்னை இகழுமோ மாசு வந்து எய்துமோ? என்று கூறுகிறார். ஆண்டவனின் அவதாரம் என்று ஆரியராலும், கம்பராலும் போற்றப்படும். இராமகாதை பாடுவதற்குக் கம்பர் ஏன் இவ்வளவு சஞ்சலப்படுகிறார்? (இந்தக் கேள்வி இன்னமும் பதில் அளிக்க முடியாத கேள்வியாக இருக்கிறது) இதனால் உலகு பழிக்குமோ என்ற சந்தேகம் ஏன் கொண்டார்? என்று கேட்கிறேன். ஆரியக் காதையைப் பாடுவது அடாது என்பதையும், அதற்குப் பூச்சு வேலை செய்து வைப்பது தமிழருக்குத் தீங்காகும் என்பதையும் ஒருவாறு உணர்ந்தே இங்ஙனம் உரைத்தாரோ என்று கேட்கிறேன்.
(தொடரும்)
---------------------------------"விடுதலை" 31-10-2009
2 comments:
செத்தவங்க பேசுனதையே எத்தன காலம் தான் எழுவீங்க? செத்து கிட்டு இருக்குற ஈழ மக்கள பத்தி எழுதலாமே. ஒரு நாளைக்கு பத்து கட்டுரை ............. ஆண்டவா இவங்களுக்கு நல்ல புத்திய குடு.
Blogger அஹோரி said...
செத்தவங்க பேசுனதையே எத்தன காலம் தான் எழுவீங்க? செத்து கிட்டு இருக்குற ஈழ மக்கள பத்தி எழுதலாமே. ஒரு நாளைக்கு பத்து கட்டுரை ............. ஆண்டவா இவங்களுக்கு நல்ல புத்திய குடு.
November 7, 2009 10:26 PM
ஆண்டவ நல்ல புத்திய கொடுத்திருக்கு இல்ல, அப்ப அந்த வேலையை நீ செய்!
இது என்ன நாட்டாமை?...
இணையத்தில வந்து இதை செய் அதை புடுங்கு...என்று கட்டளையிடுவது.
Post a Comment