Search This Blog

13.11.09

கட்டுப்பாடு - பெரியாரும் புத்தநெறியும்


புத்த நெறி

பவுத்தர்கள் தங்கள் வணக்கத்தில் கூறுகிற, கூறி வணங்குகிற விஷயங்கள் மூன்று. அவை

1. புத்தம் சரணம் கச்சாமி
2. தர்மம் சரணம் கச்சாமி
3. சங்கம் சரணம் கச்சாமி

என்பனவாகும்.

இவற்றை முதலிலும், கடைசியிலும் சொல்லித்தான் அவர்களது சமய காரியங்களைத் துவக்கவும் முடிக்கவும் செய்வார்கள்.

இவ்வாக்கியங்களின் தத்துவம் என்னவென்றால் புத்தம் (தலைவன்), தர்மம் (கொள்கை), சங்கம் (ஸ்தாபனம்) ஆகிய மூன்றுக்கும் வணக்கம் செலுத்துகிறேன் என்பதாகும்.

இது பவுத்தர்களுக்கு மாத்திரமல்லாமல் மற்றும் உலகிலுள்ள யோக்கியமான எந்த ஸ்தாபனத்திலுமிருக்கும் யாருக்குமே உண்மையான இன்றியமையாத கடமையாகும். எந்த ஒரு ஸ்தாபனத்திலும் ஈடுபட்டிருக்கிற ஒருவன் அதன் தலைவரைப் பின்பற்றி நல்லவண்ணம் சிந்தித்துத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அந்தத் தலைவனை, அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகுகிறவரை தனக்குக் குருவாக, ஆசானாகக் கருதவேண்டும். தலைவனைப் பெருமைப்படுத்துவதன் மூலம் ஸ்தாபன இலட்சியத்திற்கும், ஸ்தாபனத்திற்கும் தான் உண்மையான தொண்டு செய்தவனாகிறான். தலைவனிடம் மரியாதை, அன்பு, கீழ்ப்படியும் தன்மை இல்லாமல் ஒரு ஸ்தாபனத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது ஈடுபட்டவனின் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்விற்கும், சுயநலத்திற்கும் தெரிந்தெடுக்கப்பட்ட வியாபார, தொழில்முறை என்பதாகத்தான் பொருள்படும், அதனால்தான், புத்த சரணம் என்று சொல்லிக் காரியம் துவக்குவதாகும்.

அதுபோன்றே அடுத்த வணக்கமாகிய தர்மம் (புத்த தர்மம்) சரணம் கச்சாமி என்பதுமாகும். அதாவது ஒருவன் தான் ஈடுபட்டுள்ள ஸ்தாபனத்தில் இலட்சியங்களுக்கு நிபந்தனையற்ற அடிமையாகப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டும். கொள்கைகளில் ஒரு சிறிது தனக்கு ஒத்துவரவில்லையானாலும், அவன் யோக்கியனாக இருந்தால் உடனே ஸ்தாபனத்தை விட்டு விலகிவிட வேண்டும். விலகிவிடச் சம்மதிக்கிறேன் என்று சொல்வது போன்ற பிராண மொழியேயாகும், இது.

மூன்றாவதான சங்கம் சரணம் கச்சாமி என்பது ஒரு ஸ்தாபனத்தின் தலைவருக்கும், இலட்சியங்களுக்கும் எவ்வளவு ஆட்படத்தக்கதோ அதேபோன்று சங்கத்திற்கும் (ஸ்தாபனத்திற்கும்) அடிமையாய் இருந்து, சங்கத்தைப் பாதுகாக்க வேண்டியதென்பதாகும். ஸ்தாபனத்திற்கு அடிமையாய் இல்லாமலும் பக்தி விஸ்வாசம் இல்லாமலும் ஸ்தாபனத்திற்கு அங்கத்தினனாக இருப்பது என்பது அந்த ஸ்தாபனத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகமேயாகும்.

இம்மூன்று தத்துவங்களையும் முக்கியமானவையாகக் காட்டுவதற்காகவே பவுத்தக் கொள்கைகளை முதன்மையானவையாகவும், முக்கியமானவையாகவும் ஆக்கி, பக்தி விஸ்வாச வணக்கத்தோடு ஏற்பாடு செய்து வந்த எல்லாப் பவுத்தர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே,

புத்தம் சரணம் கச்சாமி,
தர்மம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி,

என்ற வணக்கங்களின் தத்துவம் இதுதான் என்பது எனது கருத்தாகும்.

பெரியாரின் இப்பேருரையை முழுமையாக வாசிக்க கீழ்காணும் சுட்டியை சுட்டவும்;-

http://thamizhoviya.blogspot.com/2008/12/blog-post_2219.html



-----------------15.5.57ஆம் தேதி மாலை சென்னை, எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த 2501ஆம் ஆண்டுப் புத்தர் விழாவின்போது தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரையிலிருந்து ஒரு பகுதி

1 comments:

வால்பையன் said...

//ஒருவன் தான் ஈடுபட்டுள்ள ஸ்தாபனத்தில் இலட்சியங்களுக்கு நிபந்தனையற்ற அடிமையாகப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டும். //

அப்படினா கம்யூனிஸ்டுகளுக்கு காயடிக்கனுமா!?