Search This Blog

19.11.09

சமூகநீதியில் அடுத்த கட்டம்



1990 ஆகஸ்ட் 7 இல் சமூகநீதிக் காவலர் பிரதமர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள், சமூகநீதி வரலாற்றில் என்றென்றும் பட்டொளிவீசும் ஓர் அறிவிப்பை மிகப் புளகாங்கிதத்தோடு நெஞ்சு நிமிர்த்தி வெளியிட்டார்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், டாக்டர் ராம்மனோகர் லோகியா ஆகியவர்களின் பெயர்களை மறக்காமல் குறிப்பிட்டு, அவர்களின் கனவுகள் நனவாகின்றன என்ற பீடிகையுடன் மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்றாரே _ அந்த அறிவிப்பு மண்ணுக்கும் விண்ணுக்குமான ஒளி விளக்காகும்.

சமூகநீதி விளக்கை ஏற்றி வைத்த அந்த வி.பி. சிங் என்னும் மன்னர் குலத்துதித்த மாமனிதரின் அரசியல் பதவி என்னும் விளக்கு சதிகாரர்களால், வருணாசிரம வல்லூறுகளால் அணைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், அது கால விளக்காக வரலாற்றின் உச்சியில் ஒளியை உமிழ்ந்து கொண்டேயிருக்கும். இது கல்லின்மேல் எழுத்தாகும்.

பாரதீய ஜனதா என்னும் பார்ப்பனிய அரசியல் கட்சி வி.பி. சிங் அவர்களின் அறிவிப்புக்குப் பிறகு, அவ்வாட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதன்மூலம், அரசியல் பொதுவாழ்க்கையில் சமூகநீதி என்னும் தடத்திலிருந்து குப்புறத் தள்ளப்பட்டுவிட்டது.

இனி அது குடலைக் கிழித்துக்கொண்டு காட்டினாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பப் போவதில்லை. சமூகநீதி தேவைப்படும் மக்கள்தானே நாட்டில் பெரும்பான்மையினர். அவர்களின் நெஞ்சில் நிலைத்துவிட்ட வெறுப்புப் புயலிலிருந்து எப்படி அவர்கள் தப்பிக்க முடியும்?

பிரதமர் வி.பி. சிங் அவர்கள் பிரதமர் நாற்காலியை இழக்க நேரிடும் என்று தெரிவித்த நிலையில்தான் அந்த அறிவிப்பினை வெளியிட்டார். சமூகநீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார் என்றாரே அது சாதாரணமா? இந்த வி.பி. சிங் ஆட்சியை இழந்திருக்கலாம்; ஆனால், அந்த சமூகநீதியில் கைவைக்க யாருக்கும் தைரியம் கிடையாது என்று தைரியமாகச் சொன்னாரே அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்று அவர் அறிவித்தார். இப்பொழுது அடுத்தகட்டமாக கல்வியில் இட ஒதுக்கீடு என்ற நிலை. இதில் குறுக்குச்சால்களை ஓட்டினாலும் முட்டுக்கட்டைகளை மூர்க்கத்தனமாகக் கொண்டு வந்து போட்டாலும், காலதாமதம் செய்தாலும், வளர்ச்சியின் அடுத்தகட்டத்தை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்திட முடியாதே!

சீப்பை ஒளிய வைத்துத் திருமணத்தை நிறுத்தலாம் என்று நினைக்கிற நெருப்புக்கோழி மனப்பான்மையினர் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவற்றில் ஒன்றுதான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முறைப்படி நியாயமாக வந்து சேரவேண்டிய நாடாளுமன்றக் குழு; மற்றொன்று பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்திற்குச் சட்ட ரீதியான அந்தஸ்து ஆகும்.

ஆட்சிகள் மாறினாலும் நிருவாகத் துறை என்பது உயர்ஜாதி பார்ப்பனர்களின் கொடுங்கரங்களில் சிக்கியிருப்பதால் காலதாமதம் என்னும் சண்டிக்குதிரையின் மீது சவாரி செய்கிறார்கள்; அற்ப சந்தோஷத்தில் திளைக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் 200 க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மையினரின் கைகளில்தான் ஆட்சி நிலைத்து நிற்கிறது. இந்த உண்மையை உணராமல் பிரதமரோ, அமைச்சரவையோ, மக்களவைத் தலைவரோ இடக்கு செய்வார்களேயானால், இவர்கள் ஓரணியில் திரள்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?

கைக்கு எட்டியதை வாய்க்குச் செல்ல விடமாட்டோம் என்று ஆதிக்க சக்திகள் நினைக்கின்றன. அவற்றை ஒடுக்கப்பட்ட மக்கள் அடையாளம் கண்டு அடுத்த நடவடிக்கைகளை நோக்கி செயல்படுவார்களாக!


------------------"விடுதலை" தலையங்கம் 19-11-2009

0 comments: