Search This Blog

10.7.12

இராமன் தசரதன் மைந்தனா? ராமனின் மறுபக்கம் -1

ராமனின் மறுபக்கம்


1. மகாவிஷ்ணு இராமனாக அவதாரம் எடுத்தார். எப்படி?

2. இராமன் ஓர் அவதாரம். எப்படி?

3. தசரதனின் மைந்தன் இராமன். எப்படி?

4. தந்தை சொல் மீறாதவன் இராமன். எப்படி?

5. இராமன் ஓர் சுயநலக்காரன். எப்படி?

6. இராமன் ஒரு வஞ்சகன் எப்படி?

7. இராமன் ஈவு இரக்கம் அற்றவன். எப்படி?

8. இராமன் ஒரு கோழை. எப்படி?

9. இராமன் ஒரு காமாந்தகாரன். எப்படி?

10. இராமன் ஒரு சந்தேகப் பேர்வழி. எப்படி?

11. இராமன் ஒரு பதவிப் பிரியன். எப்படி?

12. இராமராஜ்யம் ஒரு வர்ணாஸ்ரம ராஜ்யம். எப்படி?

இத்தனை எப்படிகளுக்கும் விடை காண்பதே இக் கட்டுரை.

மகாவிஷ்ணு வழக்கம்போல் பாற் கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, லட்சுமி அவர் கால்களை அமுக்கிக் கொண்டேயிருக்கிறாள். அந்த ஆனந்த சுகத்திலே பகவான் விஷ்ணு தன்னை மறந்து தான் உலகிற்கு ஆற்றவேண்டிய கடமைகளை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்.

கணவன் மனைவி தனித்திருப்பதைப் பொருட் படுத்தாமல் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் மகாவிஷ்ணுவைத் துயிலெழுப்புகின்றனர். துயிலெழுப்பி மகாப் பிரபோ! மகாதேவா! ஸ்ரீமன் நாராயணா! நமஸ்கரிக்கின்றோம். அபயம், அபயம்! என்று விளிக்க, மகாவிஷ்ணு துயில் நீங்கி, உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று வினவுகிறார்.

(மூவுலகம் அறிந்தவர், காக்கும் கடவுள், உலகி லுள்ள அத்தனை ஜீவராசிகளையும் காப்பவர். இவர் காக்காவிடில் உலகில் யாரும் வாழமாட்டார்கள். அப் பேர்ப்பட்டவருக்கு தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் ஆகியோருக்கு வந்துற்ற துயரம் என்னவென்று தெரியவில்லை. பார்க்கப் போனால் கடமையிலிருந்து தவறியவருக்கு தண்டனை வழங்க வேண்டுமல்லவா!)

முனி: நமோ நாராயணா! நீ அறியாதது ஒன்றுமில்லை. அடியேங்களை அசுரப் பயல் இராவணனும், அசுரப் பயல்களும் துன்புறுத்துகிறார்கள். தொல்லை கொடுக்கிறார்கள். யாகம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். சுராபானம் குடிக்கக்கூடாதாம், மது அருந் தக்கூடாதாம். இம்மாபாதகச் செயலைச் செய்யும் இராவணனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் மஹாபிரபோ!

விஷ்ணு: அப்படியா! மகாசிவ பக்தனான இராவணன், மாமேருவைத் தூக்கிய மாவீரன், இசையில் இணையற்ற ஞானம் பெற்றவன். அவனாலா உங்களுக்குக் கஷ்டம். கவலைப்படாதீர்கள். நான் இராமாவதாரம் எடுத்து அந்த இணையற்ற வீரனான இராவணனை எப்படியாவது வதம் செய்து உங்களைக் காப்பாற்றுகிறேன்.

முனி: தன்யன் ஆனோம்! மகாப் பிரபோ! ஆனந்தம் அடைந்தோம். தங்கள் இராமாவதாரம் காணக் காத்திருக்கிறோம். உத்தரவு தாருங்கள் பிரபோ! விஷ்ணு: அப்படியே செய்யுங்கள். போய் வாருங்கள். நான் லட்சுமியோடு தனித்திருக்க வேண்டும். இராமவதாரம் பற்றி அவளோடு யோசிக்க வேண்டும்.

முனி: வருகிறோம் பிரபோ! நமோ நாராயணா! நமோ நாராயணா! இலட்சுமி: தாங்கள் இராமாவதாரம் எப்போது எடுப்பது? இவர்கள் கஷ்டம் எப்போது தீருவது?

விஷ்ணு: பூலோகத்தில் அயோத்திப் பட்டணத்தில் தசரத ராஜன் என்பவன் ஆண்டுகொண்டிருக்கிறான். அவனுக்கு 60,000 க்கு மேல் மனைவிகள். இருந்தும் குழந்தை இல்லை. அவன் அதற்காக புத்ரகாமேஷ்டியாகம் செய்யப் போகிறான். அப்போது நான் அவன் மகனாக பூமியில் அவதரிக்கப் போகிறேன்.

இலட்சுமி: என்ன பிரபோ முனிவர்கள் கஷ்டம் இப்போது தீராது போலிருக்கிறதே-

விஷ்ணு: ஏன் அப்படிச் சொல்கிறாய்?

இலட்சுமி: இனிமேல் தசரதன் யாகம் செய்து, அதன் பிறகு நீங்கள் அவதாரம் எடுத்து, முடி துறந்து காட்டுக்குப் போய் பதினான்கு ஆண்டுகள் கழித்து அல்லவோ இராவணனை வதம் செய்யவேண்டும்.

விஷ்ணு: ஆமாம்! நான் அவதரித்து 12 வயதுக்கு மேல் கானகம் சென்று அங்கு பதினான்கு ஆண்டுகள் கழித்து, ஆக 26 ஆண்டுகள் சென்றபின்தான் இராவண வதம் நடைபெறும்.

இலட்சுமி: அத்தனை வருஷங்கள் முனிவர்களும், ரிஷிகளும் துன்பங்களை அனுபவிக்கவேண்டுமா?

விஷ்ணு: ஆமாம்! இவர்கள் சோம்பேறிகளாய் எந்த வேலையையும் செய்யாமல் ஊரில் மக்கள் வாழ்வதற்குத் தேவையான அரிசி, நெல், நெய், எண்ணெய், பழங்கள், வஸ்திரங்கள் ஆகியவற்றை நெருப்பில் போட்டு, பொசுக்கி வீணாக்குகிறார்கள். இதனால் மக்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கும், உடுத்தும் உடை களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களைக் காக்கவேண்டிய எனக்கு இவர்களால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே 26 வருஷமாவது இரா வணனால் இவர்கள் தொல்லையிலிருந்து மக்கள் விடுபட்டு சுபிட்சமாக வாழட்டுமே!

இலட்சுமி: நல்ல யோசனைதான். தாங்கள்தான் சூழ்ச்சி செய்வதில் வல்லவர் ஆயிற்றே!

விஷ்ணு: பொறுத்திருந்து பார்.

இராமன் ஒரு கடவுள் அவதாரம் என்றால் இராமாவதாரமோ!, பரசுரா மாவதாரமோ! ஒரே நேரத்தில் இரண்டு அவதாரங்கள் எடுக்கமுடியுமா? அப் படியே எடுத்தாலும் ஏன் ஒன்றுக் கொன்று சண்டையிட்டுக் கொண்டன. (இராமாவதாரமும், மற்றும் பிற அவதாரங்கள் எடுத்தபோதெல்லாம் பாற்கடலில் பாம்புப் படுக்கையும், விஷ்ணுவும் லட்சுமியும் இல்லாமல் வெறிச்சோடிப் போயல்லவா இருக்கும்? அப்போது விஷ்ணுவின் காத்தல் தொழிலை யார் பார்த்தார்கள்? இது போன்ற அய்யங்கள் ஏற்படுவது நியாயம்தானே?) அவதாரம் என்றால் கடவுளுக்குக் கற்பித்த குணங்களில் ஒரு சிலவாவது இருக்க வேண்டாமா? இராமனைப் பொறுத்தவரை அவன் யாரையும் காத்ததாகத் தெரியவில்லை. அரக்கர்களையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் அழித்திருக்கிறான்.

காத்தலைத் தொழிலாகக் கொண்ட கடவுளான விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் இராமன் அழித்தல் தொழிலையே கைக்கொண்டு நடந்துள்ளான். எனவே இராமன் கடவுள் அவதாரமா? என்ற அய்யம் எழுகிறது. இராமன் கடவுள் அவதாரமா? சிந்தித்துப் பாருங்கள்.

இராமன் தசரதன் மைந்தனா? தசரதன் மைந்தன் இராமன் என்று சொல்லப்படுவது சரியா? தசரதனுக்கு 60,000 மனைவிகள் (முதல் மனைவியைப் பார்த்துவிட்டு மீண்டும் அவளைப் பார்க்க வேண்டுமானால் சுமார் 165 ஆண்டுகள் ஆகுமே!) அத்தனை மனைவிகள் இருந்தும் பிள்ளைப் பேறு இல்லையே! அதனால்தானே புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.

அந்த யாகத்தில் கிடைத்த பாயசத்தை அருந்தியதால்தானே மூன்று பட்ட மகிஷிகளும் நான்கு புதல்வர்களைப் பெற்றதாகக் கூறுகிறார்கள். மேலும் அந்த யாகத்தின் முடிவில் தசரதன் தன் மூன்று மனைவிகளையும் ரித்விக்குகளுக்கு அளித்ததாகவும், அவர்களோடு ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் இருந்ததாகவும் கூறப்படுகிறதே! தவிர வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக எழுதப் பட்டுள்ளதே! அதன் பிறகல்லவா நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

அப்படியென்றால் இராமன் கோசலைக்கு பிறந்தவன்தானே தவிர தசரதனுக்குப் பிறந்ததாக எப்படி சொல்ல முடியும்? (இந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்கள் அம்மாதிரி தானுங்களே நமக்குத் தெரியும் என்று சொல்வதை சற்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்). எனவே கோ (கோசலை)இராமன், பா(பாயசம்) இராமன், கு(குதிரை) இராமன் என்று தானே கூறவேண்டும்? இராமனின் பிறப்பு அதுவும் ஒரு அவதாரத்தின் பிறப்பு இப்படியா இருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்.

இராமன் தந்தை சொல்மீறாதவன் என்கிறார்களே! தந்தை சொன்னதாக கைகேயி சொன்னது என்ன? இராமனுக்கு பதில் பரதன் இந்த நாட்டை ஆளவேண்டும். இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதுதானே! அப்படியிருக்க சீதை வருகிறேன் என்றவுடன் சம்மதிக்கிறானே! எப்படி? தந்தை என்னை மட்டும்தான் காட்டுக்குச் செல்ல ஆணையிட்டிருக்கிறார்.

என்னுடன் உங்களில் யாரையும் அழைத்துச் செல்லும்படி சொல்லவில்லையே! என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாமல் சீதையையும், லட்சுமணனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறானே! இது தந்தை சொல்லை மீறியதாகாதா? இதுதான் அவதாரத்தின் லட்சணமா? தந்தை சொல்லை மீறியவன்தானே இராமன்? சிந்தித்துப் பாருங்கள்.

------------------------தொடரும் - 7-7-2012 "விடுதலை” ஞாயிறுமலரில் ச. சோமசுந்தரம் அவர்கள் எழுதிய கட்டுரை

3 comments:

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் போல் மற்ற அரசியல்வாதிகளும் தொண்டு புரிய வேண்டும்

அமெரிக்கப் பேராசிரியை தமிழர் தலைவரிடம் பாராட்டு

பாஸ்டன் அருகில் உள்ள (Studbury) ஸ்டட்பர்ரி என்ற சிறு நகரத்தில் அமைந்துள்ள பிரபல ஆங் கிலக் கவிஞர் ஹென்ரி வேர்ஸ்ஒர்த் லாங்பெல்லோ (H.W.Longfellow) அவர்கள் பெயரில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவத்துடன் அமைக்கப்பட்டுள்ள லாங்க்பெலோ இன் (Longfellow Inn) உணவகத்தில், World Teach உலக நாடுகளுக்கு ஆங்கிலத்தினை நன்கு எழுதப் பேச உதவிடும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பேராசிரியை ஹெலன் கிளாரி செலிவெர்ஸ் (Helan Clariessievers) அவர்கள் தமிழர் தலைவருக்கு சிறப்பான மதிய உணவுக்கொப்ப சிற்றுண்டி விருந் தினை (Breakfast) 8.7,2012 ஞாயிறு காலை 9.30 மணி அளவில் கொடுத்து வரவேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் - நமது கல்வி நிலையங்கள், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களின் சீரிய சமூகப் புரட்சித் தொண்டு பற்றியும், அதை நாம் தொடருவது பற்றியும் மிகவும் பாராட்டி, ஊக்கமூட்டும் வகையில் கலந்துரையாடினார்.

சென்னை, திருச்சி, தஞ்சை கல்வி நிறுவனங்களை பெரியார் அறக்கட்டளைகள் நடத்துவதை நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்த அந்த அம்மையார் (இவர் ஹார்டு வேர்டு பல்கலைக்கழக அமைப்பில் உள்ள உலக நாடுகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை அனுப்பி உதவும் தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆவார்). நமது நிறுவனங் களுக்கு அமெரிக்காவின் உயர் நிலைப் பள்ளி - குழந்தைகள் இல்லம் குழந்தைகள் பயன்படும் வகையில் ஆசிரியைகளை அனுப்பியுள்ளார். நமது இயக்கம், சமூகப் புரட்சியை அமைதியான வழியில் நடத்தி வருகிறது என்றும் இந்திய அரசியல்வாதிகள் பெரியார், காந்தி போன்ற தலைவர்களைப் பின்பற்றி தங்களின் நாட்டில் ஒரு புதிய சமூ கத்தை அமைக்கலாம் என்று கூறி னார். தமிழர் தலைவர் அவர்களுடன் அசோக்ராஜ் அவர்களும் சென்றி ருந்தார். பெரியார் உலகமயமாகி வருவதற்கு இது ஒரு அருமையான சான்று ஆகும்.

தமிழர் தலைவர் அவர்கள் தன்னு டன் காலைச் சிற்றுண்டி அருந்தவும், பேசவும் முன்வந்தமைக்கு நன்றி தெரிவித்து அசோக்ராஜ் அவர் களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:

மகிழ்ச்சியெல்லாம் என்னுடை யதே! அன்று காலை உணவு அருந்திய நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. நீங்கள் இருவரும் கூறியவை அனைத்தும், நீங்களும் உங்கள் தந்தையும், சகோ தரரும் செய்துவரும் நற்செயல்கள் அனைத்தும் மிகுந்த ஆர்வமும் தூண்டுதலும் அளிப்பதாக இருந்தன. என்னை சந்தித்துப் பேச டாக்டர் வீரமணி முன்வந்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன் எனக்காக அவரிடம் எனது நன்றியைத் தெரிவிக்கவும். 10-7-2012

தமிழ் ஓவியா said...

பெரியார் நினைவு சமத்துவபுரம்


பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற கருத்தோட்டம் மானமிகு கலைஞர் அவர்களின் சிந்தனையில் உதித்து மலர்ந்ததாகும்.

வாழ் நாள் முழுவதும் சமத்துவத்துக்காகப் போராடிய சிற்பி தந்தை பெரியார். தம் நோக்கத்தை ஒரே வரியில் கூறினார்.

பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம் (குடிஅரசு 11-11-1944) என்பதுதான் அந்தச் சிறப்பு மிகு வாசக மணியாகும்.

வேறு எந்த அரசியல் கட்சிகளையும்விட சமூக மாற்றத்திற்கான சட்டங்களையும், திட்டங்களையும் ஆணைகளையும் உருவாக்கியதில் முதல் இடம் தி.மு.க. ஆட்சிக்கே உண்டு.

சுயமரியாதைத் திருமணச் சட்டம் முதற் கொண்டு அடுக்கிக் கொண்டே போகலாம். மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கான திட்டத்தை அறிவித்தார்.

(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ((நிஎ 4) நாள் 22-10-1997)

இப்படி உருவாக்கப்படும் வளாகத்தில் நூறு வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீடும் அய்ந்து சென்டில் உருவாக்கப்பட்டவை. சாலை வசதி, பாதுகாக்கப்பட்டகுடிதண்ணீர் வசதி, பூங்கா, கல்விக் கூடம் (தேவைப்படும் இடங்களில்) உள் ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை உள்ளடக் கிய தன்னிறைவுத் தோட்டமாக உருவாக்கப்பட் டது. ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையும் நிறுவப் பட்டது.

வீடுகள் ஒதுக்குவதில் சமூக நீதியும் பின்பற்றப் பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு 40, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 25, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 25 மற்றவர்களுக்கு (பார்ப்பனர் உட்பட) 10 வீடுகள் என்று உருவாக்கப்பட்டன.

பொது மயானமும் இருக்கும். அதே நேரத்தில் எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலமும் இருக் கக்கூடாது. (பிரச்சினையே இங்கு தானே உருவா கிறது) அவரவர் வீட்டுக்குள் சாமி கும்பிடுவது தடுக்கப்படவில்லை.

இந்தியாவிலேயே வேறு யாருக்கும் தோன்றி யிராத இத்திட்டத்தை - மானமிகு சுயமரியாதைக் காரரான - பெரியார் தொண்டன் என்பதில்தான் எனக்குப் பெருமை என்று கூறுபவரான கலைஞர்தான் உருவாக்கினார்.

ஜாதி - வருணம் என்னும் பார்ப்பனிய சமூக அமைப்பு முறையை எதிர்த்து பிரச்சாரம் ஒரு பக்கம்! ஆக்க ரீதியான இத்தகைய செயல் திட்டம் என்பது இன்னொரு புறம்! குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று வினா தொடுப்பவர்களின் விலாவில் வீசப்பட்ட வெடிகுண்டு இது.

கடந்த 15 ஆண்டு காலமாக எங்கும் நடை பெறாத ஒரு செயல்; மதுரை மாவட்டம் உசிலம் பட்டியையடுத்த போச்சம்பட்டி ஊராட்சியில் உருவாக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் திடீரென்று இரு கோயில்களை அமைக்கும் நச்சு வேலையில் ஒரு சிலர் இறங் கினர்; இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் போர்க்கொடி தூக்கிய நிலையில், உசிலம்பட்டி கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலையிட்டு, போச்சம்பட்டி பெரியார் நினைவு சமத்துவ புரத்திலிருந்து அந்த சாமி சிலைகளை அகற்றியது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். தன் கடமையைச் சிறப்பாக நிறைவேற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளைப் பாராட்டுகிறோம்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடிக்கடி பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நேரில் பார்வையிடுவதை ஒரு வழமையாகக் கொள்வது நல்லது.

தி.மு.க. அரசு கொண்டு வந்தது என்பதற்காக பெரியார் நினைவு சமத்துவபுரங்களை மேலும் உருவாக்காமல் இருப்பது நல்லதல்ல.

பெரியார், அண்ணா பெயர்களை உச்சரிக்கும் கட்சிதானே அ.இ.அ.தி.மு.க. அந்த முறையில் பார்த் தாலும் நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவப் புரங்களை மேலும் உருவாக்குவதில் ஆர்வம் காட்டலாம் அல்லவா?

அது பற்றி இவ்வாட்சி சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தமிழ் ஓவியா said...

பெரியார் ஒருவரே!

மயிலாடுதுறைக்கு வந்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு.ச. இராமதாசு அவர்களுக்குக் கட்சியினர் வரவேற்புப் பதாகைகளை அமைத் துள்ளனர். அதில் காணப்படும் வாசகம் இளம் பெரியாரே! வருக! வருக!!

இதனை மருத்துவர் இராமதாசு கண்டிக்க வில்லை. இந்த நாட்டில் பெரியார் ஒருவரே! அய்யா என்றாலும் அவரே!! இதற்கு ஆய்வுகள் தேவைப் படாது. கட்சிகள், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு ஏற்கப்பட்டுவிட்டவை இவை.

இளம் பெரியார், நடுத்தரப் பெரியார், முதிய பெரியார் என்றெல்லாம் யாரும் கிடையாது. அப்படி யாராவது சொல்ல ஆசைப்பட்டால், அது அவருக்கு அவரே செய்துகொண்ட கேலியும் கிண்டலுமே! 29 பதவிகளைத் தூக்கி எறிந்த புடம் போட்ட, பொது வாழ்வில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட ஒப்பற்ற உயர் எண்ணங்கள் மலரும் சோலை பெரியார்.

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

அணிந்திரா அணியாவார்

அறிந்திராத அறிவாவார்!

என்று புரட்சிக் கவிஞரால், பொறுக்கு மணிச் சொற்களால் கணிக்கப்பட்ட காலக்கதிரவன் பெரியார்! உண்மையான புரட்சித் தலைவரும் கூட! தன்னை நாடி வந்து கதவைத் தட்டிய முதல் அமைச்சர் பதவியை மூக்கறுத்து வெளியில் விரட்டிய வெண்தாடி வேந்தர் அவர்.

அறிவார்ந்த மக்களை உருவாக்கும் சிற்பி அவர். அடிமைத்தனத்தில், அடி முட்டாள்தனத்தில் மயங்கிக் கிடக்கும் மக்களின் பின்னால் ஓடுபவர் அல்லர்! வாக்குகளுக்காக தம் வாக்கினை மாற்றிக் கொள்ளாத மாபெரும் மானுடத் தந்தை பெரியார்.

அவரோடு ஒப்பிட்டுக்கொள்ள ஆசைப்பட வேண்டாம்! அவர் கொள்கைகளை நேசிக்க, சுவாசிக்க முதலில் கற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது - ஆரோக்கியமானது.

குறிப்பு: திராவிடத்தை வெறுக்கும் மருத்துவர் திராவிடர் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய தந்தை பெரியாரை எப்படி ஏற்றுக்கொள் கிறாராம்? 11-7-2012