Search This Blog

8.7.12

நம்மை முட்டாளாக்கவே பார்ப்பான், பண்டிகை, விழாக்கள்!

பேரன்புமிக்கத் தலைவர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! இந்தச் சிவகாசியில் என்னைப் பொங்கல் விழாக் குழுவினர் இன்று அழைத்துப் பொங்கல் விழாவினைப் பற்றிப் பேசச் சொல்லி இருக்கின்றார்கள். நான் இந்த ஊருக்குப் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு தடவை வந்து, இதே இடத்தில் பேசி இருக்கின்றேன். அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் காலஞ்சென்ற நண்பர் சவுந்தர பாண்டியன், பி.டி.ராசன் ஆகியவர்களுடன் சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்துள்ளேன்.

இந்த முப்பது ஆண்டுகளில் எவ்வளவோ மாறுதல் அடைந்திருக்கின்றது. இந்தப் பொங்கல் பண்டிகை தமிழனுடைய விழா என்று சொல்லும்படியான நிலையில் உள்ளது. அறிவுக்குப் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளது. மற்றப் பண்டிகைகள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும், முட்டாள்தன மான கருத்துகளை கொண்டனவாகவுமே இருக்கின்றன. ஒன்று கூடத் தமிழனுடையது - தமிழனுக்குச் சொந்தமானது என்று சொல்லத்தக்க நிலையில் இல்லை.

தீபாவளி விழாவை நம் மக்கள் புத்தி இல்லாமல் ஆடம்பரமாகக் கொண்டாடு கிறார்கள். அதன் தத்துவம் என்ன என்பதை எவனும் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது. பெரிய பட்டதாரிகள், புலவர்கள் என்பவர்கள் கூடக் கவலைப்படுவது கிடையாது. என்ன கதை அது?

இரணியனுடைய தம்பி இரண்யாட்சன் என்பான், இந்தப் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு போய்க் கடலில் போட்டு விட்டானாம். அதைத் திருமாலான வன் பன்றி உருவம் எடுத்துக் கடலுக்குள் சென்று மீட்டு வந்தா னாம். இது எவ்வளவு முட்டாள் தனமான கற்பனை என்பதை நம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூமி உருண்டை வடிவமானது என்று விஞ்ஞானி சொல்லுகின்றான். அப்படியே தட்டையாக இருந்த போதிலும், அவன் அதை எதன் மீது நின்று கொண்டு சுருட்டினான்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படிக் கடலுக்குள் இருந்து மீட்டு வந்த அந்த பூமியை மீண்டும் விரித்து அதன் மீது அந்தப் பன்றி நடந்ததாம். அதனால் பூமாதேவிக்கு அந்தப் பன்றி மீது காதல் உண்டாயிற்றாம். இருவரும் சேர்ந்து ஒரு குட்டி போட்டார்கள். அவன் தான் நரகாசூரன் என்பவன். ஆணும், பெண்ணும் மனித இனத்தில் கூடிப் பிறப்பது தான் மனித உருவாகப் பிறக்கும் என்பது இயற்கை. ஆனால், பார்ப்பனர்கள் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான கதைகளை எல்லாம் எழுதி வைத்திருக்கின்றனர்.

அந்த நரகாசூரன் என்பவன் பெரிய வனாக ஆனதும், கடவுள்களை எல்லாம் உதைக்க ஆரம்பித்தான். தேவர்களுக்கெல்லாம் தொல்லை கொடுத்தான். அதனால், விஷ்ணு அவனைக் கொன்று போடச் சென்று முடியாமல் தன் மனைவியை விட்டுக் கொல்லச் செய்தான்.
அப்படி அந்த நரகாசூரன் இறந்த நாளைத் தான் நாம் தீபாவளி என்று கொண்டாட வேண்டுமாம். பார்ப்பானுக்குத் தொல்லை கொடுத்தவன் ஒழிந்ததற்குப் பார்ப்பான் சந்தோஷமாகக் கொண்டாடுகின்றான் என்றால், அதில் அர்த்தம் இருக்கின்றது. ஆனால், நம் மக்கள் இம்மாதிரி, நம்மவன் இறந்ததற்குத் துக்கப்படாமல், மகிழ்ச்சியாகக் குளித்து விட்டுப் புத்தாடை உடுத்திக் கொண்டு பலகாரம் சாப்பிட்டுக் குதியாட்டம் போடுகிறார்கள் என்றால், இந்த மக்களை என்ன என்று கூறுவது?

அடுத்து விநாயக சதுர்த்தி. பார்வதியானவள் குளிக்கப் போகும் முன் தன் உடலில் இருந்த அழுக்குகளை எல்லாம் ஒன்று திரட்டி ஓர் உருவம் செய்து குளிக் கும் அறைக்கு வெளியே உட்கார வைத்து, தான் குளித்து முடிக்கும் வரை உள்ளே யாரையும் விட வேண்டாம் என்று கூறி விட்டுக் குளிக்கச் சென்றாளாம். வெளியே சென்றிருந்த சிவன் உள்ளே நுழைய, அந்த அழுக்குருண்டை ஆசாமி சிவனைத் தடுத்து நிறுத்தினானாம். உடனே சிவன் சினங்கொண்டு தலையை வெட்டி வீழ்த்தி விட்டுப் பார்வதியிடம் சென்று விட்டான். சங்கதி அறிந்த பார்வதியானவள் தன்னுடைய அழுக்கினால் உண்டாக்கப்பட்ட பிள்ளையைக் கொலை செய்ததற்காக மிகவும் விசனப்பட்டாளாம். சிவன் அவள் வருத் தத்தை மாற்ற ஒரு யானைத் தலையை வெட்டி வந்து அந்த அழுக்குருண்டைக்கு வைத் துப் பொருத்தினானாம். அதுதான் யானை முகப் பிள்ளையார் சங்கதி.

ராமன் பிறந்ததைக் கொண்டாட ராமநவமி, கிருஷ்ணர் பிறந்ததைக் கொண்டாட கிருஷ்ண ஜெயந்தி, சுப்பன், சஷ்டியில் பிறந்தான் - அதற்கு விழா. இப்படித்தான் அறிவுக்குப் பொருத்தமற்ற, காட்டுமிராண்டித்தனமான காரியங்களுக்காகத் தான் எல்லா விழாக்களும் ஏற்பட்டு இருக்கின்றன.

அத்தனை கதைகளும் பார்ப்பானால், நம்மை முட்டாள்கள் ஆக்க, நம்மை அடிமைப் படுத்த உண்டாக்கப்பட்ட கதைகளும், விழாக்களுமேயாகும். இதில் ஒன்று கூடத் தமிழ்நாடு சம்பந்தமானதாக இருக்கவில்லை. எல்லா விழாக்களும் இந்தக் கடவுள் இவனைக் கொன்றான், அந்தக் கடவுள் அவனைக் கொன்றான். அவன் 1,000 பேரைக் கொன்றான். இவன் 2,000 பேரைக் கொன்றான். இப்படி எல்லா விழாக்களும் கொலை பண்ணின சங்கதிகளுக்காக ஏற்பட்டதாகத்தான் இருக்கின்றன.

மதுரையில் வருஷா வருஷம் 8,000 சமணர்களைக் கழு மரத்தில் ஏற்றிக் கொன்றதற்காக விழா நடத்தப்படுகின்றது! கேட்டால் கூறுகின்றான் எங்கள் கடவுள் அன்பானவர், அருளானவர் என்று! உன் கடவுள்கிட்டே அருளும், அன்பும் எங்கே இருக்கிறது? எதற்கு அதன் கையில் வேலா யுதம், சூலாயுதம், அரிவாள், கொடுவாள், ஈட்டி, கொட்டாப்புளி இவற்றைக் கொடுத்து இருக்கின்றாய்? அதெல்லாம் கொலைகாரப் பசங்கள், திருட்டுப் பசங்கள் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்களாயிற்றே! இவை எல்லாம் உன் கடவுள் கையில் ஏன் கொடுத்திருக்கின்றாய்?


உலகத்திலே நாம் சங்கங்கள் வைத்துக் கொண்டு - இலக்கியங்கள் வைத்துக் கொண்டு நாகரிகமாக வாழ்ந்த காலத்தில், சுத்தக் காட்டுமிராண்டிகளாகத் துணி கூட உடுக்கத் தெரியாத மக்களாக வாழ்ந்த அய்ரோப்பிய மக்கள் எல்லாம். இன்று எவ்வளவோ முன்னுக்கு வந்து விட்டார்கள். அதிசயமான விஞ்ஞான அற்புதங்கள் எல்லாம் கண்டுபிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், நாம் எந்த நிலையில் இருக்கின்றோம்? பழைய சிக்கி முக்கிக் கல் காலத்தில், கட்டை வண்டிக் காலத்தில் ஏற்பட்ட கடவுளையும், மதத்தையும் தானே கட்டிக் கொண்டு அழுகின்றோம்.

ஆரக்கால் இல்லாத மரப்பட்டரை வண்டியில் மணிக்கு மூன்று மைல் போய்க் கொண்டு இருந்த நாம், இன்று சைக்கிள், மோட்டார் ரயில், அதற்கும் மேலாக மணிக்கு 1,000, 1,500 மைல் போகும் ஆகாய விமான காலத்தில் வாழ்கின்றோம். அமெரிக்காவின் ஜனாதிபதி அய்சனோவர் மாலை 8 மணிக்கு அங்கு ரேடியோவில் பேசுகின்றார் என்றால், நாமும் 8 மணிக்கு உடனுக்குடன் கேட்கும் வாய்ப்புப் பெற்று இருக்கின்றோம் என்றால், நம் கடவுள்கள் பழைய ஆரக்கால் இல்லாத முழுமையும் மரத்தாலேயே செய்யப்பட்ட கட்டை வண்டிக் காலத்தை நினைவுபடுத்து வது மாதிரி, மரக்கட்டைகளால் ஆன தேரில் தானே போய் வருகின்றனர். கொஞ்சம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா?

நம் மக்களை எவ்வளவுக்கெவ்வளவு மடையர்களாக, காட்டு மிராண்டிகளாக ஆக்கி வைத்திருக்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு பார்ப்பானுக்குப் பிழைப்புக் கிடைக்கும். அதனால் தான் அடிக்கடிப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பண்டிகைகளையும், விழாக்களையும் நம் மக்களைக் கொண்டாடச் செய்து, அவர்களுடைய மடமை எத்தனை டிகிரி உயர்ந்திருக்கின்றது என்று பார்த்துக் கொள்ளுகின்றார்கள். எப்படிப் பார்ப்பனர்கள் தம் அறிவினைக் கெடுத்து மடமையில் ஆழ்த்தி இருக்கின்றார்களோ, அது போலவே சமுதாயத் துறையில் நம்மை நான்காம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி மக்களாக, சூத்திரர்களாக, பறையன், சக்கிலி, பஞ்சமர்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர். இந்த இழிநிலை பற்றி இன்று எங்களைத் தவிர, எந்த அரசியல் கட்சிக்காரன்களும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், சட்டசபைக்கும், பார்லிமெண்டுக்கும் பொறுக்கித் தின்ன மட்டும் சொல்லுகின்றார்கள். 100-க்கு 97 பேராக உள்ள இந்த நாட்டிற்குச் சொந்தக் காரர்களான நாம், உடல் உழைப்புக்காரர் களாகிய நாம் ஏன் இழிந்த ஜாதி? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் ஆக இருக்க வேண்டும்? 100-க்கு மூன்று பேராக உள்ள இந்த நாட்டிற்குச் சொந்தமில்லாதவன். உடலுழைப்புச் செய்யாதவன் ஆன பார்ப்பான் ஏன் மேல் ஜாதியாக இருக்க வேண்டும்? இதுபற்றி எவனாவது சிந்திக்கின்றானா? எதற்காக இந்த நாட்டில் பார்ப்பான் இருக்க வேண்டும்? அவனால் இந்த நாட்டிற்கு ஒரு கடுகு அளவு பிரயோசனமாவது உண்டா?

கக்கூஸ் எடுப்பவன் இல்லாவிட்டால் நகரமே நாறிப் போகும். அதற்காகக் கக்கூஸ் எடுப்பவன் இருக்க வேண்டும். துணி வெளுக்க வண்ணான் வேண்டும். மயிர் சிரைக்க சவரத் தொழிலாளி இருக்க வேண்டும். உடை நெய்ய நெசவாளி, உழுது உணவு தானியம் விளையச் செய்ய உழவன் வேண்டும். ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் எந்த வேலையும் செய்யாமல் சமுதாயத்தில் சேர்ந்திருக்க வேண்டும்? இவர்கள் இல்லாவிட்டால் எந்தக் காரியம் கெட்டுப் போகும்? சொல்லட்டுமே. தலைவணங்கி ஏற்றுக் கொள்ளுகின்றேன். வீணாக ராமசாமி, பார்ப்பானைத் திட்டுகிறான், திட்டுகிறான் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

இன்று உத்தியோகத் துறையினை எடுத்துக் கொண்டால், 100-க்கு மூன்று பேராக உள்ள இவர்களே, 100-க்கு 70, 80 பங்குகளுக்கு மேலாகவே பெற்றுக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். நம் வரிப் பணத்தில் இருந்து 60 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் முழுக்க முழுக்க இந்தப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் தானே நடைபெற்று வருகின்றது. ரூ.2,000, ரூ.1,500 இப்படிப்பட்ட பெரிய பதவியில் இருந்து சாதாரண கிளார்க் பதவிகளில் கூட அவர்கள் தான். ரயில்வே அக்கவுண்டெண்ட் ஆபீசில் வேலை பார்ப்பவர் எல்லாம் பார்ப் பனர் மயம்! இது பற்றி எவன் கவலைப்படுகின்றான்? மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்றுப் பொறுக்கித் தின்ன சட்டசபைக்கும், பார்லி மெண்டுக்கும் போகின்றார்களே தவிர, எவனாவது இதுபற்றிக் கேட்கின்றானா?

ஆனால், பார்ப்பானுடன் சேர்ந்து கொண்டு எவன் தமிழனுக்காக நன்மை செய்கின்றானோ அவனை ஒழிக்கிறேன் என்று மட்டும் வந்து விடுகிறான். இன்று நான் எங்கு போனாலும் நீயேன் காமராசரை ஆதரிக்கின்றாய் என்று கேட்கின்றார்கள். நான் காமராசாரை ஆதரிக்காமல் இந்தத் தேர்தலில் இருந் திருந்தால், அந்த இடத்தில் யார் வந்திருப்பார்? ராஜகோ பாலாச்சாரியோ அல்லது அவரது அடிமைகள் தானே வந்திருப்பார்கள்? ராஜகோபாலாச்சாரி கொல்லைப்புற வழியாக மந்திரிசபை ஏற்றுக் கொண்ட சில மாதங்களுக்குள் பச்சை மனு தரும ஆட்சியை அல்லவா நிலைநாட்டி விட்டார். அவனவன் ஜாதித் தொழிலைப் படிக்க வேண்டும். அரை நேரம் மட்டும் பள்ளிக்கூடம் வந்தால் போதும். பாக்கி அரை நேரம் வண்ணான் மகன் வெளுக்க வேண்டும். அம்பட்டன் மகன் சிரைக்க வேண்டும். சக்கிலி மகன் செருப்புத் தைக்க வேண்டும். குயவன் மகன் சட்டிப்பானை செய்யப் பழக வேண்டும் என்றல்லவா சட்டம் போட்டு விட்டான்?

அவரை இந்தச் சட்டசபைக்காரர்களால் என்ன செய்ய முடிந்தது? நான் தானே ஒரு மாதத்துக்குள்ளாக இந்த உத்தரவை மாற்றாவிட்டால் கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் சொல்லும்போது உபயோகிக்கலாம் என்றவுடன், தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதாகக் கூறி விட்டு ஓடினார்.

பிறகு காமராசர் வந்தார். ஆச்சாரியாரின் வருணாசிரமக் கல்வித் திட்டத்தை, வந்ததும் - வராததுமாக உடனே எடுத்துப் போட்டார். ஆச்சாரியாரால் மூடப்பட்ட 3,000 பள்ளிக் கூடங்களையும் திறந்து, மேலும் 4,000 புதிய பள்ளிகளையும் திறந்தார். பள்ளிக்கூடத்துப் பசங்களுக்கு மத்தியான சாப்பாட் டுக்கு வகை செய்தார்! ஏராளமான அய்ஸ்கூல் களையும், காலேஜ்களையும் ஏற்படுத்தினார்! அய்ஸ்கூல் வரை சம்பளம் இல்லாமல் படிக்க ஏற்பாடு செய்தார்.

ஆச்சாரியார் காலத்தில் எஞ்சினியரிங், மெடிகல் காலேஜ், இவற்றில் பார்ப்பனப் பிள்ளைகள் 100-க்கு 60, 70 பேர் படித்து வந்தார்கள். பாக்கியில் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்பதன் கீழ் பார்ப் பானுக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படும் மலையாளி களையும், கிறித்தவர், முஸ்லீம்கள் இவர் களுக்குக் கொடுத்தது போக மீதி நம்மவர் களுக்கு 10, 12 இடங்கள் தான் கிடைக்கும்.

ஆனால், காமராசர் முதன்மந்திரியாக வந்த பிறகு நம் பசங்கள் 60, 70 பேர்களும் பாக்கியில் கிறித்தவர்கள், முஸ்லீம் போகப் பார்ப்பாரப் பசங்கள் 10, 15 பேர்கள் தான் வரும்படியான நிலையை இன்று உண்டாக்கி இருக்கின்றார்.

மற்றும் ராஜகோபாலாச்சாரியார் மந்திரியாக இருந்தபோது, கூன் குருடு, சுடுகாட்டுக்குப் போக வேண்டிய வயதான பார்ப்பனர்களுக்கெல்லாம் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டே இருந்தார். எல்லா பெரிய உத்தியோகங்களிலும் பார்ப்பனராகவே பார்த்துப் போட்டு வந்தார்.

காமராசர் வந்தபிறகு தான் நம் தமிழர்கள் சில பேர்களாவது உயர்ந்த பதவிக்கு வரும்படியான நிலை வந்திருக்கின்றது. இன்று முக்கியமான இலாக்காக்களில் பெரிய பதவிகளில் எல்லாம் நமது தமிழர்களே பதவி வகிக்கின்றனர். இப்படி இருப்பதனால் அந்த அந்த இலாகாக்களில் வேலை பார்க்கும் நமது கீழ்த்தர உத்தியோகஸ்தர்களுக்குத் தானே நன்மை.

தமிழர்களுக்காக, தமிழன் நன்மைக்காக என்றே கட்சி வைத்துத் தொண்டாற்றி வரும் எங்களுக்கு இப்படித் தமிழன் நலத்தில் அக்கறை கொண்ட ஒருவரை ஆதரிப்பது தான் கடமை.

நான் சென்ற தேர்தலில் மட்டும் அல்ல, இந்தக் காங்கிரஸ் கட்சி உயிரோடு இருக் கின்றவரை காமராசரே முதன்மந்திரியாக இருக்க வேண்டுமென்று கருதுபவன். காங்கிரஸ் ஒழியும்போது வேண்டுமானால் காமராசர் ஒழிந்து போகட்டும். கவலை யில்லை. அதுவரை அவர் தான் முதன் மந்திரி யாக இருக்க வேண்டும்.

அவர் பெண்டு பிள்ளை இல்லாதவர். ஆகையால் அவர் களுக்கென்று சொத்து முதலியவை சேர்த்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இல்லாதவர். என்னைப் போலவே அவரும் ஒரு மொட்டை மரம். எனக்குப் பிள்ளைக் குட்டிகள் கிடை யாது. எனக்கும் காமராசர் தயவால் ஆக வேண்டிய காரியம் ஒன்றும் கிடையாது. இப்படிக் கல்வித் துறையிலும், உத்தியோகத் துறையிலுமாக காமராசர் செய்திருக்கின்ற அம்மாறுதல்களால் எங்கள் வீட்டுப் பிள்ளைகளா பலன் பெறப் போகிறார் கள்? 100-க்கு 97 பேராக உள்ள நம் சமுதாயம் முழுமைக்கும் தானே அதனால் பலன் ஏற் பட்டிருக்கின்றது.

-----------------19.1.1959 அன்று சிவகாசி பொங்கல் திருநாளில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை. "விடுதலை" 31.1.1959.

0 comments: