Search This Blog

6.7.12

கடவுளுக்காக நாமா? நமக்காகக் கடவுளா?


பகுத்தறிவுப் பணி


தோழர்களே, விசுவரெட்டிப் பாளையத்தில் என்னை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே முயற்சி செய்தும், இப்போதுதான் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு என் நன்றி.

எங்கள் கொள்கை மிகக் கசப்பான கொள்கை! உங்களுக்கு இனிப்பாக இருக்கும் வகையில் எங்களுக்குப் பேசத் தெரியாது. இன்றுள்ள பிரத்தியட்ச நிலைமையை எங்கள் மனத்தில் பட்டதை - உங்களிடமிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் தைரியமாகச் சொல்கிறோம். உங்கள் அறிவுக்குப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை விட்டுத் தள்ளுங்கள். நாங்கள் சொல்லுவதுதான் சரி. இதைத்தான் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

இப்படியே சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்தன் என்பவர் எதையும் உங்கள் புத்தியைக் கொண்டு ஆய்ந்து பார்த்து உங்கள் புத்திக்கு சரி எனப்பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவருக்கு புத்தர் எனப் பெயர் ஏற்பட்டது. அதற்குப் பின் வள்ளுவர் இருந்தார். அவரும்,

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்குப் பின் ஒருவரும் தோன்றவில்லை. எத்தனையோ நாயன்மார்களும் - ஆழ்வார் களும் தோன்றியும் மக்களுக்குள்ள இழிவு ஒழிய பாடுபட்டதில்லை. அவர்களெல்லாம் பார்ப்பனர்களுடைய தயவால் ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும் ஆக முயற்சித்தார்களே தவிர, மக்களுக்கு ஏன் இந்த இழிவு? பாடுபடும் பாட்டாளி மக்கள் இழிஜாதியினராக - தீண்டப்படாதவர்களாக - சூத்திரர்களாக - பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாக ஏன் இருக்க வேண்டும்? என்று கேட்டதே இல்லை. நாங்கள்தான் துணிந்து பகுத்தறிவுப் பணியாற்ற முன் வந்திருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விளக்கி பல புத்தகங்கள் போட்டிருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் வாங்கி படிக்க வேண்டும். நூல் நிலை யத்திலெல்லாம் திராவிடர் கழகத்தின் ஏடுகள் இருக் காது. இன்னும் அந்தத் துணிவு அவர்களுக்கு வரவில்லை.

பேய் பிடித்தாடும் மடமை இன்னும் நம் மக்களிடம் தானே இருக்கிறது? ஜப்பான்காரன் - ஜெர்மன்காரன் இவர்களைப் பேய் பிடிக்கிறதா? இல்லையே. ஏன்? கடவுள் யோக்கியதை தான் என்ன? திருடனும் கடவுளைக் கும்பிடுகிறான் - திருட்டுக் கொடுத்தவனும் கடவுளைக் கும்பிடுகிறான். கடவுள் யாருக்கு நல்லவர்? கடவுளுக்காக நாமா? நமக்காகக் கடவுளா என்பதே விளங்கவில்லையே!

மதம் என்றால் என்ன? யாராவது சொல்ல முடியுமா? மதத்தின் தத்துவம்தான் என்ன? மதத்தின் பிரச்சாரம்தானே நாம் சூத்திரர்கள். ஜாதி இழிவைக் காப்பாற்றுவதும் இந்த மதந்தானே? இந்த இருபதாவது நூற்றாண்டிலும் ஜாதி ஒழிய வேண்டும் என்று நாங்கள்தானே சொல்லுகிறோம்; அதற்காகப் பாடுபடுகிறோம் - சிறைக்குப் போகிறோம். ஜாதி ஒழிய வேண்டுமென்றால், இந்து மதம், சாஸ்திரம், சம்பிரதாயப் புராண, இதிகாசம் எல்லாம் ஒழிய வேண்டும். காந்தியார்கூட ஜாதியைப் பாதுகாக்க வருணாசிரம மதத்தை நிலை நிறுத்தவே பாடுபட்டார். அதனால்தான் காந்தியார் சிலையை உடைக்க வேண்டும் என்றேன். நமக்கு ஒரு அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால்தானே. இதைச் சிந்திக்க வேண்டாமா?

---------------------------விசுவரெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள்ஆற்றிய பேருரை - "விடுதலை" 8.7.1961.

19 comments:

தமிழ் ஓவியா said...

அரசு பள்ளியில் பெரியார் சிலை வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி


சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாரின் உருவ சிலையை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

காவேரிபட்டினம் அரசு பள்ளியில் தந்தை பெரியார் சிலை வைக்க கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆனால் உள்ளூர் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் கல்வித் துறை இணை செயலாளர் பெரியார் சிலை நிறுவ 2010-ம் ஆண்டு தடை விதித்தார்.

இம்மனுவை நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் பெரியார் சிலை வைக்க அரசு அதிகாரி பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் 2009-ம் ஆண்டு அரசு அனுமதியின்படி பெரியார் சிலையை நிறுவவும் பெரியார் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

தமிழ் ஓவியா said...

ஒரு மனசாட்சியின் வாக்குமூலம்


``சங்கர மடத்தில் நடக்கும் ஊழல்கள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் பற்றியும் சங்கரராமன் தொடர்ந்து கடிதங் களை எழுதி ஜெயேந் திரருக்கு அனுப்பியது டன் அதன் நகலை இந்து அறநிலையத்துறைக்கும் அனுப்பி வந்தார்.

இதையடுத்து, சங்கரராமனிடம் பேசுவதற்காக சென்னை அருகில் உள்ள நசரத்பேட்டை ஆயுர்வேத கல்லூரியில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சாம்பசிவம், ரிக்வேத வைத்தியநாதன், ரிசர்வ் பேங்க் வைத்தியநாதன், சிம்சன் வைத்தியநாதன், கோபாலபுரம் மணி அய்யர் ஆகியோருடன் நானும் சென்றேன்.

அப்போது, மடத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு 3 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று ஜெயேந்திரர் தெரிவித்தார்.

ஆனால், 3 மாதங்களுக்குள் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் கோபமடைந்த சங்கரராமன் சங்கர மடத்தின் அண்டர்கிரவுண்ட் நடவடிக்கைகளை சோமசேகர கணபாடிகள் என்ற பெயரில் கடிதமாக எழுதி மடத்தின் விசுவாசிகளுக்கு அனுப்பினார்.

இதனால் கலவரமடைந்த ஜெயேந்திரர் அந்த கடிதத்தை நான்தான் எழுதியதாக நினைத்து என் மீது கோபமடைந்தார். அதனால், என்னை வெட்டிக்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து, 2002 செப்டம்பர் 20ம் தேதி இரவு எங்கள் வீட்டுக்கு 2 ஆட்களை அனுப்பி எங்களை வெட்டச் செய்தார்.

அதற்கு முந்தைய நாள் (செப்டம்பர் 19) என்னுடன் தொலைபேசியில் பேசிய ஜெயேந்திரர், நீதான் சோமசேகர கணபாடிகள் என்ற பெயரில் கடிதம் எழுதுகிறாய். அதை உடனே நிறுத்து. இல்லையென்றால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டினார்.

காயமடைந்த நான் மருத்துவமனையில் இருந்தபோது, மடத்திலிருந்து பிரசாதத்தை ஸ்ரீகாரியம் நீலகண்டன் மூலம் எனக்கு அனுப்பியதுடன், ஆறுதல் சொல்லச் சொன்னார்.

ஜெயேந்திரர் தவிர என்னை வேறு ஒருவரும் எதிரியாக நினைக்கவில்லை என்று நீலகண்டனிடம் அப்போது கூறினேன். ஜெயேந்திரர்தான் என்னைக் கொலை செய்ய திட்டமிட்டார் என்று சங்கர மடம் தொடர்புடைய எல்லோருக்கும் தெரியும்.

அதனால் எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது பிரச்னை வந்தால் அதற்கு ஜெயேந்திரர்தான் பொறுப்பு என்று பட்டினப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன்-- _ இது ஏதோ சாலையில் போகும் ஒரு சாதாரண மனிதனின் குற்றச்சாட்டல்ல. ஜெகத்குரு, பரமஹம்சர், பெரியவா, அருளாசி வழங்கும் ஞானி என்றெல்லா அள்ளிவிடும் காஞ்சி சங்கர மட சங்கரச்சாரி ஜெயேந்திரர் மீதுதான் ஒரு ஆடிட்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை, மந்தை வெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜூன் 16 அன்று அளித்த வாக்குமூலம் இது. சூத்திர மடங்களின் சாமியார்கள் என்றால் மாய்ந்து மாய்ந்து எழுதும் பார்ப்பனப் பத்திரிகைகள் இந்தப் பார்ப்பன மடச் சாமியார் மீதான குற்றச்சாட்டைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இந்த வாக்குமூலம் அளித்த சில நாட்களில் சென்னைக்கு சிருங்கேரி சாரதா பீடம் சங்கராச்சாரி வந்திருந்தார். கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதற்காக அவருக்கு வரவேற்பளித்து பதாகைகளை வைத்திருந்தனர். அதில் ஒரு பதாகையில் ``பரமஹம்சர்களுள் உத்தமரே...வருக!என்று விளித்திருந்தார்கள். ஒரு வேளை இவர்கள் இப்படி எழுதியிருந்தது காஞ்சி சங்கராச்சாரியை நினைவில் வைத்துத்தானோ?

தமிழ் ஓவியா said...

சோ அவர்களே! சோடி போட்டுக்குவோமா சோடி?


கேலிச் சித்திரத்தை கேலிச் சித்திரமாகப் பார்க்க வேண்டும்; கோலிக் குண்டை கோலிக் குண்டாகப் பார்க்க வேண்டும்! என்றெல்லாம் கருத்துச் சுதந்திர வியாக்யானம் பேசுகிறார்கள் சோ கும்பலும் அறிவு ஜீவிகளும்!

அம்பேத்கரை இழிவுபடுத்தியும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை இழிவுபடுத்தியும் ழிசிணிஸிஜி பாட நூலில் வெளிவந்த கார்ட்டூன்களுக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் சூழலில்தான் இவர்களுக்கு கருத்துச் சுதந்திரமும், சகிப்புத் தன்மையும் நினைவுக்கு வரும்!

கேலிச் சித்திரத்துக்கெல்லாம் கொந்தளித்திருந்தால் துக்ளக், தினமலர் உள்ளிட்ட உள்ளூர் ஏடுகள் முதல் இந்திய தேசிய ஏடுகள் வரை இவற்றின் அலுவலகங்கள் எல்லாம் செங்கல் செங்கலாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதைய பிரச்சினை கேலிச் சித்திரம் பற்றியதல்ல! அதைப் பாடப் புத்தகங்களில் சேர்ப்பது பற்றித்தான்.

எவ்வித வாய்ப்பும் இன்றி வரலாற்றை வரலாறாகத் தர வேண்டிய பாட நூல்களில் பார்ப்பனிய விஷம் குழந்தைகளுக்கு ஊட்டப்படுவதைக் கண்டித்துத் தான் இன்று நாடு முழுக்கக் குரல் எழுகிறது. நாமும் வேண்டுமானால் நமது தமிழ்நாட்டுப் பாட நூலில் கேலிச் சித்திரங்களை இடம் பெறச் செய்வோம்.

இதோ மணவை திருமலைச்சாமி நடத்திய நகர தூதனில் 1937 டிசம்பரில் வெளிவந்த கேலிச் சித்திரம்; இதை தமிழ்நாட்டு வரலாற்றுப் பாடத்தில் வெளியிட்டால் பூணூலை இறுக்கிக் கட்டிக் கொண்டிருப்பாரா சோ? குல்லுகப்பட்டர் ராஜாஜிக்காக குதிகால் தரையில் படாமல் அல்லவா குதிப்பார்! வெளியிட்டுப் பார்ப்போமா?

- ஈரோட்டுக் கண்ணாடி

தமிழ் ஓவியா said...

நாத்திகமே இறுதியில் வெல்லும்!


வலது கை இட்ட திருநீற்றை, பொள்ளாச்சி கழக மேடையிலே இடதுகையால் அழித்தது, வெறும் கைத்தட்டலுக்குத் தான் என்பதைப் பகுத்தறிவுப் பாசறை முன்னமேயே உணரும். கண்ணதாசன் ஒரு க்ஷண சித்தன் _ ஒரு க்ஷணப்பித்தன் என்பதையும் நாடிபிடிக்காமலே சொல்லும் தொலைநோக்கு, பெரியார் தொண்டர்களுக்கு உண்டு.

ஆத்திகப் போர்வை போர்த்தி பழங்குப்பை களை அர்த்தமுள்ள இந்துமதமாக்கி, மூடநம்பிக்கைகளுக்கு தலைப்பாகை கட்டி, ராஜகிரீடமும் புதுபாஷ்யம் சிருஷ்டித்த கொடுமைக்கு அவரது தமிழ் துணை போனதுதான் கொடுமையிலும் கொடுமை. எட்டி உதைத்த சங்கரமடம், கட்டிப் பிடித்து கைலாகு தந்தது. இதெல்லாம் தற்காலிக மயக்கம். போதை தெளியும் என்பதே பகுத்தறிவு பெரியாரியக்க நம்பிக்கை.

அது வீண் போகவில்லை. கண்ணதாசனின் ஊரறிய மகளே ஆனாலும், விசாலி அவரது எச்சமே. அவர் எழுதிய சத்தியவாக்கு என்ற புத்தகம். (ஆனந்த விகடன் வெளியீடு) அதில்,துன்பம் வந்தபோது சிவாய நம என்றேன். திடீர் தோல்வி வந்தபோது ஆஞ்சநேயா என்றேன். ஆதரவு தேடியபோது ஏசுபெருமானே பொருத்தம் என்றேன். எல்லா இடமும் சுற்றிப் பார்த்து விட்டு இப்போது சொல்கிறேன் என் காளியே எனக்கு தோதானவள். இந்த க்ஷணத்தில் நான் நினைக்கிறேன். இல்லை என்ற ஒன்றிலேயே உறுதியாக நிலைத்திருக்கும் நாத்திகன் என்னைவிட நல்லவனே! உள்ளத்தில் கறை ஏறியவனுக்கே அதைக் கழுவ பக்தி தேவைப்படுகிறது. உண்மையை நினைத்து உண்மையே பேசி, உண்மையாகவே வாழ்ந்து முடிக்கிற ஒருவனுக்கு என்ன தேவைப்படப் போகிறது?

தகவல்: -சந்தனத்தேவன், திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...

நாத்திகர் வாக்கு பலித்தது !

கவிஞர் வாலி அப்பல்லோவில் பைபாஸ் சர்ஜரி முடித்து அய்.சி.யு.வில் இருந்து மீண்டு இருந்தபோது ஊரறியாத விஷயம் ஒன்று உண்டு.

கவிஞர் வாலி கூறுகின்றார்.

என் Suiteல் படுத்திருந்தேன். Artificial Respirationக்காக என் வாய் வழி விடப்பட்ட Ventilator Apparatus.

ஒரு Vocal Cord தனைப் பாதித்துவிட நான் பேச்சிழந்தேன்.

முதல்வர் முதல் _ பல பிரமுகர்கள் வந்து நலம் விசாரித்தனர். சைகையாலேயே நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன்.

அப்போதுதான் அவர் வந்தார். ஒரு மணி நேரம் உடனிருந்து ஊமைத்தனத்தால் உளமொடிந்திருந்த எனக்கு ஆறுதல் கூறினார். வாலி! அமெரிக்காவில், நானும் பைபாஸ் பண்ணிக்கிட்டவன்தான். எனக்கும் “Vocal Cord” பாதிக்கப்பட்டு முழு ஊமையா ஆயிட்டேன். என் மனைவி மக்கள் விழி எல்லாம் கண்ணீர்.

மெல்ல மெல்ல எனக்கு பேச்சு வந்திடுச்சு. அது மாதிரி உங்களுக்கும் வரும். இன்னும் மூணு மாசத்துல நீங்க மேடையேறிப் பேசுவீங்க. என் வாக்குப் பொய்க்காது என்றார் அவர்.

என்ன ஆச்சரியம் அவர் வாக்குப் பலித்தது! நான் மேடையேறிப் பேசினேன். என்னளவில் அவர் வாக்கு தெய்வ வாக்கு. ஆனால் அவர் தெய்வத்தை ஏற்காத தீவிர நாத்திகர்! அவர்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு திரு. வீரமணி அவர்கள்.

கவிஞர் வாலி நினைவு நாடாக்கள் நூலிலிருந்து...

- மு.அன்புக்கரசன்

தமிழ் ஓவியா said...

பெரியார் இல்லாமல் முன்னேற்றம் இல்லை


தலித் சிந்தனையாளர்கள் சிலர் பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதியை ஒழித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதி ஒழிப்பு என்பது சாத்தியமா?

நான் திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்தவன். திராவிடச் சிந்தனைகள் எனக்குள் ஊறிப்போன விஷயம். பெரியாரின் பங்களிப்பை நாம் சரியாக மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவை தான் காரணம். பெரியாரை முன்னிறுத்துவதால் தனக்கான இடம் இல்லாமல் போய்விடுமோ என்று இவர்கள் நினைக்கிறார்கள். தலித் தலைவர்களைத் தான் அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

பெரியாரின் பங்களிப்பை மறுத்து விட்டு சாதி ஒழிப்பு பேசுவது என்பது ஒருவகையான துரோகம் தான். பெரியாரின் பங்களிப்பு தான் நம் சமூகத்தில் பரவலான, வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. சாதிய ஒழிப்பை நீங்கள் கடுமையாக இன்று பேச முடியும் என்றால் அதற்கு பெரியார் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். தலித் அறிவுஜீவிகளைத் தான் பெரியார் இடத்தில் நிறுவ வேண்டும், பெரியாருக்கு பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்று திரண்டிருக்கிறது அதனால் தலித்களுக்கான இடம் பறிபோய்விட்டது போன்ற விமர்சனங்களை, தவறான அனுமானங்களால் எழக்கூடிய விமர்சனங்களாகத் தான் நான் பார்க்கிறேன்.

இந்திய அளவிலேயே தலித்துகளுக்கான போராட்டத்தில் தலித்கள் அல்லாத இடைச்சாதியினரும் தீவிரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் பகுஜன் போன்ற கருத்தோட்டங்கள் வடமாநிலங்களில் உருவானது. அந்தச் சிந்தனை ஏன் தமிழ்நாட்டில் வரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. பெரியாரை நிராகரித்து விட்டு தலித்துகளின் முன்னேற்றம் சாத்தியமே இல்லை. அவரை வைத்துக்கொண்டே நாம் அந்தப் பாதையில் பயணிப்பதுதான் நம்முடைய பலம்.

- எழுத்தாளர் அழகிய பெரியவன் நன்றி:keetru

தமிழ் ஓவியா said...

காவேரிப்பட்டினம் பள்ளி வளாகத்தையொட்டி பெரியார் சிலை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களின் உன்னதத் தீர்ப்பு


ஜாதி அடக்குமுறை ஒழிப்பு, பெண் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர் பெரியார்
பெரியார் அவர்களின் கருத்துக்களை மாணவர்கள் அறிவது அவசியமே!

சென்னை, ஜூலை 6 - தந்தை பெரியார் மாபெரும் சீர்திருந்தக்காரர், அவரின் கருத்துக்களை மாணவர்கள் தெரிந்து கொள்வது நல்லது. அவரது சிலையைத் திறக்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தார். (5.7.2012)

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுற்றுச் சுவர் ஓரமாக 10 சதுர அடி இடத்தில் தந்தை பெரியார் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு தனது ஆணை எண். 331 பள்ளிக் கல்வித் துறை நாள் 11-12-2009 ஆணையில் அனுமதி அளித்திருந்தது.

ஆனால் அதன் பின்னர் காவேரிப்பட்டினம் பா.ஜ.க. அரசியல் கட்சிக்காரர் ஒருவர் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை அரசின் இணைச் செயலாளர் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரை இது பற்றி நடவடிக்கை மேற்கொண்டு ஓர் அறிக்கை அனுப்பும்படி கேட்டிருந்தார்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அளித்த அறிவுரைகளின்படி, 16-7-2010 அன்று பிறப்பித்த ஆணையில், கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் சிலை அமைக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தத் தடை ஆணையை எதிர்த்து காவேரிபட்டினம் தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழுத் தலைவர் தா. திருப்பதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் கே.சந்துரு அவர்கள், சிலை அமைக்க தடை விதித்த ஆணையை ரத்து செய்த துடன், சிலை அமைக்க சிலை அமைப்புக் குழுவிற்குப் பாதுகாப்பு அளிக்கும்படி காவல்துறையினருக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

5-7-2012 அன்று அளித்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பின் முழுவிவரம் வருமாறு:

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இணைச் செயலாளர் அவர்களின் எண். 5492/ஓஐ /2010-1, நாள் 02-03-2010 ஆவணங்களைக் கேட்டுப் பெற்று, பரிசீலனை செய்து, அவர் பிறப்பித்த ஆணை சட்டத் திற்குப் புறம்பானது, எதேச்சதிகாரமானது மற்றும் இயற்கை நீதிக் கொள்கைக்கு எதிரானது என்று அறிவித்து ரத்து செய்யவும், 6 ஆவது பிரதிவாதியான காவேரிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் தென்கிழக்கு மூலையில் பெரியார் சிலை அமைப்பதற்கு தக்க பாதுகாப்பு அளிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு (பிரதிவாதி 4 - கிருஷ்ண கிரி காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பிரதிவாதி 5 காவேரிபட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு) அறிவுரை வழங்கவும் கேட்டு வாதி தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழுவின் தலைவர் திருப்பதி ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரருக்காக வழக்கறிஞர்கள் டி.வீரசேகரனும் ஜே.துரைசாமியும் ஆஜராகினர்.

பிரதிவாதிகளுக்காக அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீத கிருஷ்ணனும், அவருக்கு உதவியாக கல்வித்துறை உதவி அட்வகேட் ஜெனரல் பி. சஞ்சய் காந்தியும் ஆஜராகினர்.

இரண்டாவது பிரதிவாதி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் இணைச் செயலாளர் 2-3-2010 அன்று பிறப்பித்த ஆணையை ரத்து செய்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கும், காவேரி பட்டினம் காவல் துறை ஆய்வருக்கும் காவேரிபட்டினம்

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் சுற்றுச் சுவருக்குள் தென் கிழக்கு மூலையில் தந்தை பெரியாரின் சிலையை அமைப்பதற்கும் தக்க பாது காப்பு அளிக்க அறிவுரைகள் வழங்கு மாறும் மனுதாரர் தனது ரிட் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
2. இந்த ரிட் மனு 28-3-2012 அன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு அட்வகேட் ஜெனரல் அதை கவனத்தில் எடுத்துக் கொண்டார். தனிப்பட்டவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.

3. காவேரிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் தென் கிழக்கு மூலையில் சுற்றுச்சுவருக்குள் இருக்கும் 10 சதுர அடி பரப்பு காலி யிடத்தில் தந்தை பெரியார் சிலை அமைக்க மனுதாரர் குழு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு இக்குழு பள்ளியின் தலைமை ஆசிரியரைக் கேட்டுக் கொண்டது.

தமிழ் ஓவியா said...

பின்னர், இந்த விவகாரம் மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட் டது. மாநில அரசு 11-12-2009 அன்று அரசு ஆணை 331 பள்ளிக் கல்வித் துறை யில் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சிலையை அமைக்க மனுதாரர் குழுவிற்கு அனுமதி வழங்கியது.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிர்வாகக் குழுவும் இது பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் கருத்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட் டது. இது தொடர்பான அனைத்து உண்மைகளையும், தகவல்களையும் பரிசீலித்த பிறகு சிலை அமைக்க அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் இந்தச் சிலை அமைப்பதை விரும்பாத சில அரசியல் குழுக்கள் அரசுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் மனுக்களை அனுப்பத் தொடங்கினர். அவ்வாறு அனுப்பப்பட்ட மனுக்களில் ஒன்று பா.ஜ.கட்சி என்னும் அரசியல் கட்சி உறுப்பினர் அனுப்பியது. இவ்வாறு சிலை அமைப்பது ஒரு மோச மான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்றும், சிலை அமைக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கேட்டிருந்தார்.

இந்த மனுவின் அடிப்படையில், காவேரிப்பட்டி னம் ஜி.கிருஷ்ணன் என்பவரிடமிருந்து வந்த தந்தியியைப் பற்றி விசாரித்து, அது பற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையைத் தனக்கு அனுப்பும்படி பள்ளிக்கல்வித் துறை இயக்குநரை அரசு பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலர் கேட்டுக் கொண்டார். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அந்தத் தந்தியை கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் முறை யான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்ட பின்னர், அரசு சிலை அமைக்க அனுமதி அளித்து ஆணையிட்ட பிறகுதான் பள்ளியின் தென்கிழக்கு மூலையில் சிலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் என்ன காரணத்தாலோ, பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், 15-7-2010 அன்று கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் ஒரு ஆணையைப் பிறப்பித்தார். பள்ளிக்குச் சொந்தமான சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டுள்ளதெனக் கூறப்படுவதால், அடுத்த ஆணை பிறப்பிக்கப்படும் வரை சிலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும், சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டது பற்றி ஒரு விரிவான அறிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர் அனுப்பவேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பிறகுதான், பள்ளியின் தலைமை ஆசிரியர் இயக்குநர் எடுத்த முடிவு பற்றிய தகவலை மனுதாரருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார். ஆனால், சிலை அமைப்புக் குழு அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதியைப் பெற்றிருப்ப தால், சிலை அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தும் இயக்குநரின் முடிவு சிலை அமைப்புக் குழுவைக் கட்டுப்படுத்தாது என்று குழு பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரிவித்துவிட்டது.

இதற்கிடையில் தந்தை பெரியார் அவர்களின் வெண்கலச் சிலையை ரூ. 5,20,000 செலவில் செய்ய முடிவு செய்த சிலை அமைப்புக் குழு, சிலையை அமைக்கும் பீடம் செய்வதற்கான மதிப்பீட்டினையும் தயாரித்து வைத்தது. அந்தச் சிலையைத் 16-4-2012 அன்று திறந்து வைக்க ஒரு பொது விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான அழைப் புகளும் அச்சடிக்கப்பட்டன.

சிலை அமைப்பதை விரும்பாத குறிப்பிட்ட சில சக்திகள் பிரச்சினையை உருவாக்குகின் றனர் என்பதால், காவல்துறை ஆய்வ ருக்கு 22-7-2011 அன்றும் 25-7-2011 அன்றும் சிலை அமைப்புக் குழுவால் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் பிறகு தான் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

5. இந்த ரிட் மனு நிலுவையில் இருந்த போது, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் என்று தன்னைக் கூறிக் கொண்டு பி.டி. சுந்தரேசன் என்பவர் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த 11-12-2998 அன்று பிறப்பித்த 331 எண் ஆணையை பல்வேறு காரணங் களின் அடிப்படையில் எதிர்த்து ரிட் மனு எண். 14627 / 2012 தாக்கல் செய்தார். இந்த ரிட் மனு இந்த நீதிமன்றத்தால் 08-06-2012 அன்று தள்ளுபடி செய்யப் பட்டது. இந்தத் தீர்ப்பின் 2, 7 முதல் 12 வரையிலான பத்திகளில் கீழ்க் குறிப்பிட்ட வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

2. அரசு ஆணை பிறப்பிப்பதற்கு முன்னர், மாநில அரசு பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்தை அரசு பெற்றுள் ளது. பள்ளியின் தென்கிழக்கு மூலையில் சிலைக் குழு சிலை அமைக்கக் கேட்கும் இடம் மிகச் சிறிய இடம்தான் என்றும், குழந்தைகள் விளையாட அந்த இடம் பயன்படுத்த முடியாதது என்றும், இந்த இடத்தில் சிலை அமைக்கப்படுவதால், பள்ளியின் நடைமுறை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், சிலை அமைக் கப்பட்டவுடன் அதனைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவர் கட்டப்படும் என்றும், சிலை அமைப்புக் குழுவின் செலவில் நிறுவுவதற் கான வெங்கலச் சிலை உருவாக்கப்படும் என்றும், அந்தச் சிலையை எதிர்காலத்தில் பராமரிக்கும் பணியை சிலைக் குழுவே ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அரசுக்குத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சிலைக்கு மாலை இடுவதற்காக நெடுஞ் சாலைப் பகுதியில் இருந்து உள்ளே வர ஒரு இரும்புக் கதவு குழுவால் அமைக் கப்படும் என்றும், இது பற்றி பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் விவாதிக்கப்பட்டது என்றும், இந்த பகுதியில் 10 அடிக்கு 10 அடி பரப்பில் சிலை அமைப்பதில் தங் களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தனது 4-9-2008 அன்று நடை பெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரி விக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இந்த உண்மைகளின் அடிப்படையில், பள்ளியின் தென்கிழக்கு மூலையில் சிலையை அமைக்க அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் பரிந்துரைத்திருந்தார். இப்பரிந்துரையை ஏற்றுக் கொண்ட அரசு 11-12-2009 அன்று தனது 331 எண் கொண்ட பள்ளிக் கல்வித் துறை ஆணை யில் சிலை அமைக்க அனுமதி அளித்துள் ளது. இந்த அனுமதியை எதிர்த்துதான் 2 1/2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

(7.) இத்தகைய ஒரு ரிட் மனுவை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்ய தனக்கு உள்ள தகுதியையும் மனுதாரர் விளக்கிக் கூறவில்லை. பள்ளியின் செயல்பாட்டுக்கு எந்த வகையிலும் இடையூறு அளிக் காதபடி பள்ளி வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் 10 அடிக்குப் 10 அடி என்ற பரப்பில் தந்தை பெரியார் அவர்களின் சிலையை அமைப்பதன் நியாயத்தன் மையைப் பற்றி மனுதாரர் கேள்வி கேட் டுள்ளார்.

பெரியார் அவர்களின் போத னைகள் என்று மனுதாரர் தன் மனுவில் தெரிவித்திருப்பது ஒன்றே தமிழ் சமுதாயத்தை பல்வேறு வழிகளிலும் மறு மலர்ச்சி அடையச் செய்வதில் பெரியார் ஆற்றிய பங்கினைப் பற்றி மனுதாரர் சிறிதும் அறியாதவர் என்று காட்டுகிறது.

நாத்திகக் கருத்தைப் பிரச்சாரம் செய்தவர் என்று மட்டும் அவரை முத்திரை குத்தி விடமுடியாது. ஜாதிய அடக்குமுறை, சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள், பெண் விடுதலை ஆகிய பெரியாரின் கருத்துகள் இந்தியாவில் அவரது சம காலத்தில் வாழ்ந்த பல தலைவர்களின் சீர்திருத்தக் கருத்துக்களை மிஞ்சியவை.
பூலே, அம்பேத்கர் போன்று எதிர் காலத்தைப் பற்றிய மிகச் சிறந்த தீர்க்க தரிசனக் கண்ணோட்டமும், ஆழ்ந்த பரிவுவும் கொண்ட மாபெரும் சுயசிந் தனையாளர்களாக விளங்கியவர்கள் அயோத்தி தாசரும் பெரியாரும் ஆவர். தங்கள் சமூகத்தில் நிலவிய அறியாமை, துன்பங்கள், அநீதி ஆகியவற்றின் கொடுந்தன்மையைப் பற்றி ஆழ்ந்து உணர்ந்திருந்தவர்கள் அவர்கள். அவற்றைப் சரியாகப் புரிந்து கொள்ளவும், பகுத்தாயவும், அவற்றைப் போக்குவதற் கான செயல்களை உலகளாவிய முறை யில் மேற்கொள்ள உதவும் புதுமையான நுண்ணிய பார்வையை அவர்களுக்கு அவை அளித்தன.

இவ்வாறு பிரித்துப் பகுத்து ஆய்வு செய்ததன் மூலம் சமூகத்தில் துன்பங்கள், அடக்குமுறை, அநீதி ஆகியவை எந்த அளவுக்கு நிலவின என்பதை அடையாளம் காணவும், அவற்றை எதிர்க்கவும் அவர்களால் முடிந்தது. இவ்வாறு இந்து சமூக அமைப்பின் அடித்தளத்தையே, ஆணி வேரையே அவர்கள் ஆட்டி அசைத்தனர். பெரியார் அவர்களின் பேச்சு வழக்கில் கூறுவதானால், அதன் தலைமீதே அவர்கள் ஏறி நின்றனர் என்று கூறலாம்.

(8-ஏ.) அப்போது இருந்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு ஒன்று டி. கண்ணன் என்பவருக்கும் - சென்னை லிபர்டி கிரியேஷன்ஸ் சார்பில் மதன் பிரதிநிதியான தயாரிப்பாளர் இயக்குநர் ஞானசேகரன் என்பவருக்கும் இடையே நடந்த வழக்கு 2 எம்எல்ஜே 1015 இல் அளிக்கப்பட்ட தீர்ப்பின் 7 ஆவது பத்தியில் தந்தை பெரியார் சமூகத்திற்கு ஆற்றிய சேவையைப் பற்றி பாராட்டிக் கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

(7.) . . தீண்டாமை ஒழிப்பு, ஜாதி அமைப்பு முறை ஒழிப்பு, பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுதல் மற்றும் சமூக நீதிப் போராட்டம், பகுத்தறிவு பரப்புதல், சுயமரியாதை மற்றும் சமூகப் புரட்சி ஆகிய பணிகளிலேயே பெரியார் ஈ.வெ.ராமசாமி தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித் தார். ஒரு பகுத்தறிவாளரான அவர், தங்களுள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவும், தங்களது நேரத்தையும் பொருளையும் வீணாக்கி தீயவிளைவுகளை அளிக்கும் கண்மூடித் தனமாக மூடநம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் கைவிடும்படியும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

1926 இல் அவர் தனது சுயமரியாதை இயக் கத்தை உருவாக்கினார். கடவுளைப் பற்றி அச்சத்தை ஏற்படுத்தி ஏதுமறியாத அப்பாவி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு பார்ப்பன, பூசாரி வர்க் கத்தை உருவாக்கி நிலைநிறுத்தும் ஒரு மோசமான சமூக நடைமுறையை மதம் தான் ஏற்படுத்தி காத்து வருகிறது என்று அவர் நம்பினார். அதனால் கவுள் மற்றும் மதத்திற்கு எதிரான ஒரு போராளியாக அவர் மாறினார்.

(9.) ஒரு பொது இடத்தில் ஒருடு சிலை அமைப்பது பற்றிய கேள்வி இந்த நீதி மன்றத்தின் ஓர் அமர்வின் முன் விசா ரணைக்கு வந்த டி.அமிர்தலிங்கத்துக் கும், சென்னை மாநில அரசின் உள்துறை செயலாளரைப் பிரதிநிதியாகக் கொண்ட மாநில அரசுக்கும் இடையே நடைபெற்ற (2010) 2 எம்.எல்.ஜே. 1022 வழக்கில், ஒரு பொது இடத்தில் டாக்டர் பி.ஆர்.அம் பேத்கர் அவர்களின் சிலை அனுமதி இன்றி அமைக்கப்பட்ட போதும்கூட, அம் பேத்கரின் தகுதியைக் கருத்தில் கொண்டு அந்தச் சிலையை அந்த இடத் திலிருந்து அகற்றுவது தேவையற்றது என்று நீதிமன்றம் கருதியது.

தமிழ் ஓவியா said...

அதே இடத்தில் அந்தச் நிலையை மறுபடியும் அமைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்தத் தீர்ப்பை வழங்கியபோது, நீதிமன்ற அமர்வு சம்பந்தப்பட்ட பொருத்தமான அரசாணை களையும் தனது தீர்ப்பின் 35 மற்றும் 36 ஆவது பத்திகளில் கீழ்க் குறிப்பிட்டவாறு கூறியுள்ளது:

(35.) சிலைகள், நினைவுச் சின்னங்கள், நினைவு வளைவுகள் மற்றும் நினைவுத் தூண்கள் அமைப்பதற்கு முன்பாக அரசின் அனுமதி பெறவேண்டும் என்பது முதல் உத்தரவு. இது அரசின் அனு மதியைப் பெறுவதைப் பற்றியது. இந்த வகையில், இது போன்ற எந்த ஒரு சிலையையோ அமைக்க விரும்பும் தனிப் பட்டவர், சங்கம் அல்ல அமைப்புகள் அதற்கு அனுமதி வேண்டி ஒரு விண் ணப்பம் செய்வதே விரும்பத்தக்கதாகும். . . எந்த வழக்கிலும், அரசின் முன் அனுமதி பெறாமல் சிலை அமைக்கும் பணி எதுவும் தொடங்கப் படவோ, மேற்கொள்ளப்படவோ கூடாது.

(36.) மேலே குறிப்பிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள இரண்டாவது உத்தரவு, ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்ட அத் தகைய சிலைகள், நினைவுச் சின்னங்கள், நினைவு வளைவுகள், நினைவுத் தூண்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது. அவற்றை நிறுவிய நபர்களே அவற்றின் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்குமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த 20-11-1998 நாளிட்ட அரசாணை, சிலைகள் வெங்கலத்தில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அதற்கு முந்தைய 23-8-1990 நாளிட்ட 193 எண்ணிட்ட அரசாணைக் குறிப் பிடுகிறது. அரசு அனுமதி அளிக்கும் போது அந்த நிபந்தனையை வலியுறுத்த வேண்டும் என்பது எமது கருத்து. இந்த வழக்கில் ஒரு கம்பு விழுந்ததினால் சிலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதுவே ஒரு வெண்கலச் சிலையாக இருந்தால் இது போன்ற சேதம் ஏற்பட்டிருக்காது.

தமிழ் ஓவியா said...

(10.) எதிர்த்து மனு தொடரப்பட்டுள்ள அரசு ஆணையில் இந்த நிபந்தனைகள் எல்லாம் முழுமையாக நிறைவு செய்யப் பட்டுள்ளன. இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்பதும், முன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மை தான். வெண்கலச் சிலை அமைக்கும் நிபந்தனையும் 7 ஆவது பிரதிவாதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

11. மனுதாரர் தெரிவித்திருக்கும் அச்சம் எந்த வித அடிப்படையும் அற்ற தாகும். பள்ளிவளாகத்தில் பெரியார் சிலை அமைப்பதால் மட்டுமே அது அனைத்து மாணவர்களையும் நாத்திகர் களாக மாற்றிவிடாது. அதற்கு மாறாக, பெரியார் அவர்களின் வாழ்க்கை மற்றும் அவரது தொண்டு பற்றி பள்ளி குழந் தைகள் அறிந்து கொள்வது அவசிய மாகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த ஒருவரின் தத்துவத்தைப் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு, அரசமைப் புச் சட்டத்தின் 51 -ஹ() பிரிவில் வலி யுறுத்தியுள்ளபடி அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், எதையும் கேள்விகேட்டு தெளிவு பெறும் மனப்பான்மை, சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள் ளவும் உதவும்.

(12.) மேற்குறிப்பிட்ட விவாதங்களி லிருந்து, , மனுதாரர் இந்த மனுவை ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலால்தான் தாக்கல் செய்துள்ளார் என்பதும், இந்தக் கட்சியினர் நேரடியாக வழக்காட முன் வராமல், சட்டப்படி செல்லத் தகாதது மட்டுமல்லாமல், இந்த நீதி மன்றத்தால் எப்போதுமே ஏற்றுக் கொள்ளப்பட இயலாத காரணங்களைக் கூற மனுதாரர் போன்றவர்களை நிர்பந்தித்து உள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

அனுமதி அளித்து இந்த அரசா ணையை பிறப்பித்ததன் மூலம் அரசு எந்த தவறையும் சட்டத்திற்குப் புறம்பாகச் செய்து விடவில்லை. அதற்கு மாறாக, சமூக அடக்குமுறையை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதிலும் போரிட்ட ஒரு மாபெரும் மனிதருக்கு அரசு பெரிய மரியாதை செய்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

6. அதனால், சிலையை அமைக்க விதிகளின்படி அனுமதித்து அரசு பிறப் பித்த ஆணை செல்லத் தக்கதே என்று இந்த நீதிமன்றம் நிலைநாட்டுவதுடன், சிலையை அமைக்கவும், அதன் திறப்பு விழாவை ஏற்பாட செய்வதிலும் மேற் கொண்டு எந்த இடையூறும் ஏற்படுத் தப்படக்கூடாது என்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

7. ஆனாலும், சிலை அமைக்க அனுமதி அளித்த அரசு ஆணை மீது தற்போதைய நிலை பற்றி அரசிடமிருந்து அறிவுரைகள் பெறவேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் கேட்டுக் கொண்டு, தாக்கல் செய்துள்ள அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அனுப்பிய 26-6-2012 நாளிட்ட கடிதத் தில் கீழ்க் குறிப்பிட்டவாறு கூறப்பட் டுள்ளது.

11-12-2009 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 331 பள்ளிக் கல்வித் துறை (ஈ-1) இன்னமும் நடைமுறையில் இருக்கிறது என்றும், அரசுக் கடிதம் எண். 5492/ஓஐ/ 2010-1 நாள் 2-3-2010 கடிதத்திற்கு அளிக்கப்பட்ட தவறான விளக்கம்தான் கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம் என்றும் தெரிவிக்க நான் பணிக்கப்பட்டுள்ளேன். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசின் இந்த நிலை தெரிவிக்கப்பட வேண்டும்.

8. கற்றறிந்த அட்வகேட் ஜெனரல் மேற்கொண்ட நிலையின்படி, சிலை அமைக்கும் நடவடிக்கையில் இனி எந்த இடையூறும் இருக்க முடியாது. அரசு பிறப்பித்த ஆணையை கீழ் அதிகாரிகள் செல்லாததாக ஆக்கிவிட முடியாது. அரசின் ஆணைக்குக் கீழ்ப்படியக் கடமைப்பட்டவர்கள் அவர்கள். இது போன்றதொரு சிலையை வைப்பதன் முக் கியத்துவத்தைப் பற்றி இந்த நீதிமன்றம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது. எனவே, இந்த ரிட் மனு ஏற்றுக் கொள் ளப்படுகிறது.

தவறாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்படுகிறது. சிலையை நிறுவுவதற்கும், அதனைத் தொடர்ந்து அவர்களால் தெரிவிக்கப் படும் தேதியில் சிலை திறப்பு விழா நடத்துவதற்கும் மனுதாரரான சிலை அமைப்புக் குழுவிற்கு போதிய காவல் துறை பாதுகாப்பு அளிக்கும்படி4ஆவது பிரதிவாதியான கிருட்டிணகிரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரும், 5 ஆவது பிரதிவாதியான கிருஷ்ணகிரி காவல்துறை ஆய்வரும் பணிக்கப்படு கிறார்கள்.

செலவுத் தொகை ஏது மில்லை. இதன் விளைவாக இதனுடன் தொடர்புடைய உபரி மனுக்களும் முடிவுக் குக் கொண்டு வரப்படுகின்றன.6-7-2012

தமிழ் ஓவியா said...

அய்.நா. அதிகாரியோடு தமிழர் தலைவர் சந்திப்பு தனியீழத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்,


நியூயார்க், ஜூலை 6- அய்க்கிய நாட்டு மன்றத்தின் தெற்காசியாவின் முக்கிய அதிகாரி ஹிடோகிடென் அவர் களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, இலங் கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக் கப்படும் கொடுமைகள் குறித்தும், தனி யீழத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதை வலியுறுத்தியும் 50 நிமி டங்கள் உரையாடினார்.சூன் 27 ஆம் நாள் அமெரிக்க நியூயார்க் நகரத்தில் உள்ள அய்க்கியநாட்டுச் சபையில் ஹிடோகிடென் அவர்களைச் சந்தித்து 50 மணித்துளிகள் உரையாடினார்.

ஹிடோகிடென் தெற்கு ஆசியாவின் முக்கிய அதிகாரி ஆவார்.இவர் முன்னர் மியான்மா (பர்மா) சமாதானத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.அய்க்கியநாட்டுச் சபையின் சிறப்புத் தூதுவராக அங்கு சென்று ஆக்கப் பூர்வமாகச் செயல்பட்டவர். உலக அரசுகள், முக்கியமாக அமெரிக்கா இந்தியா, இங்கி லாந்து போன்ற அரசுகள் சேர்ந்து இது போன்ற அதிகாரியை அனுப்பினால் தான் ஈழத் தமிழர்களுக்கு ஒரு முடிவான தீர்வு கிடைக் கும்.

ஆசிரியர் அவர்கள் இவரிடம் அங்குள்ள இராணுவ ஆதிக்கம், தொடர்ந்து நடக்கும் வன்கொடுமைகள், பத்திரிகைச் சுதந்திரம் இல்லாமை இவற்றை விவரமாக எடுத்துரைத்து தனி ஈழம் ஒன்றே முடிவான தீர்வாக அமைய முடியும் என்பதை எடுத்துச் சொன்னார்.

அங்கு நடக்கும் அத்துணை வன்முறை களையும் நன்கு அறிந்தவர் இவர். தெற்கு ஆசியா முழுவதற்கும் இவர் பொறுப்பானவர். தெற்கு ஆசியாவின் அரசியல் விவகாரங் களுக்குத் தலைமை அதிகாரியாவார். இலங்கையில் நடக்கும் கொடுமைகளை நன்கு அறிந்தவர்.

இத்தனைக் காலமும் தீவிரவாதம் என்று இலங்கை அரசு சொன்னதை நம்பிய அமெரிக்கா மற்ற நாடுகள் இப்போதுதான் முழு உண்மையைப் புரிந்து கொள்ளத் தொடங் கியுள்ளனர்.இது மக்கள் போராட்டம்.

மக்கள் தங்கள் மொழி, இனம், படிப்பு, வேலை வாய்ப்பு என்று அனைத்து உரிமைகளுக்காகவும் போராடினர். இவற்றை அடைய அவர்கள் பெரும் விலையை உயிராக, மானமாக, வதை யாகக் கொடுத்துள்ளனர் என்பதை உலகம் இப்போது தான் உணரத் தொடங்கியுள்ளது என்பதை அவர் நன்கு புரிந்து சொன்னார்.

ஆசிரியர் அவர்கள் கிழக்கு தைமூர், கோசவா போன்ற விடுதலை தமிழ் மக்களுக் குக் கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத் தினார். டெசோ இயக்கத்தைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

அவரும் அது உலக அரசுகளின் ஈடு பாட்டைப் பொறுத்துள்ளது. உலக அரசுகளை, முக்கியமாக இந்திய அரசையும் நீங்கள் அதை உணர வைக்கவும், செயல் படவும் செய்யுங்கள் என்று கூறினார். அப்போது தான் அய்க்கிய நாட்டுச் சபை எதையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக் கூறினார்.

ஆகவே உலகெங்கும் வாழுந்தமிழர்கள் ஆங்காங்கே உள்ள அரசுகளை உண்மைகளை உணரச் செய்வோம். அவர்களின் கண் களையும், உள்ளங்களையும் திறக்கப் பாடுபடு வோம். டெசோவின் முயற்சியே அது தான் என்று கூறி விடை பெற்றார்.

ஹிடோகிடென்பற்றி

திரு ஹிடோகிடென் அய்க்கிய நாடு கள் சபையின் அரசியல் விவகாரத் துறையின் மூத்த அரசியல் விவகார அதிகாரியாக தற்போது இருக்கிறார். தெற்கு ஆசியா மற்றும் அய்க்கிய நாடுகள் -ஆசிய உறவுகள் (குறிப் பாக மியான்மா, தாய்லாந்து மற்றும் பிலிப் பைன்ஸ்) பற்றிய பகுதிகளில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

அரசியல் விவகாரத் துறை யின் ஆசிய பசிபிக் பகுதியில் தெற்கு ஆசியா வின் குழுத் தலைவராக அவர் இப்போது பணி யாற்றி வருகிறார். நேபாளத்தில் அய்க்கிய நாடுகள் மேற்கொண்டுள்ள செயல் திட்டத் திற்கு அரசியல் மற்றும் அடிப்படையான ஆதரவு அளிக்கும் முயற்சிகளில் அவர் இப்போது ஈடுபட்டுள்ளார்.

இதற்கு முன், அமைதி மற்றும் பாதுகாப்பு பகுதியில் அய்க்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்தும் பணியில் பணியாற்றி வந்துள்ளார். அதன் மூலம் 2006 இல் அய்க்கிய நாடுகளில் நோக்குநராக அவர் ஆனார். 2001-05 காலத்தில் மியான்மருக் கான அய்க்கிய நாடுகளின் பொதுச் செயலா ளரின் சிறப்புத் தூதுவரின் மூத்த ஆலோசக ராக அவர் இருந்தார்.

இக்காலகட்டத்தில் மியான்மா நாட்டில் அமைதி நிலவவும், மக்க ளாட்சி மலரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன. இவர் தனது முதுகலைப் பட்டத்தை கார்னல் பட்டப் பள்ளியிலும், பட்டப்படிப்பை சேடன் ஹால் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்பே ஃபூ ஜென் கேத்தலிக் பல்கலைக் கழகத்திலும் பயின்றவர்.
6-7-2012

தமிழ் ஓவியா said...

இலங்கை இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி


சென்னை, ஜூலை 6 - இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஒரு சிலருக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப் பதாகச் சொல்லப்படுவது உண்மை யானால் அது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட் டியில் கூறியுள்ளார். இதுகுறித்து கலைஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வரு மாறு:-

செய்தியாளர் :- இலங்கையின் விமானப் படையைச் சேர்ந்த ஒரு சிலருக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதாக சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது. பயிற் சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பியனுப்புவதே சரியாக இருக்கும்.

செய்தியாளர் :- முதலமைச்சர் ஜெயலலிதா அதை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருக் கிறாரே?

கலைஞர் :- அது பற்றி எனக்குத் தெரி யாது. அவர் அதைப் பின்பற்ற முடியாது. ஏனென்றால் ஏற்கெ னவே விடுதலைப் புலி களின் யுத்தத்தை எதிர்த் துப் பேசி சட்டசபை யிலேயே தீர்மானம் போட்டவர். அவரோடு ஒத்துப்போக முடியாது.

இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார். 6-7-2012

தமிழ் ஓவியா said...

இந்தியாவுக்கு இந்நிலை தேவைதானா?


சென்னையை அடுத்த தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளித்து வருகிறது என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் எதிர்ப்புப் பீரங்கி வெடித்துக் கிளம்பியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை அது இரட்டை வேடம் போட்டு வருகிறது என்கிற கூற்று இப்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் சிங்கப்பூர் ஆசிய நாடுகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், சிங்கள பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் ஆகியோர் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந் தோணியையும், அமெரிக்க நாட்டின் பிரதிநிதியும் யாகக் கலந்து கொண்ட டெம்ப்சி ஆகியோரைச் சந்தித்து இலங்கைக் கடற்படைக்குப் பயிற்சி அளிப்பதற்கான வேண்டுகோளை முன் வைத்த நேரத்தில், ஏற்றுக் கொள்ளப்பட்டதை இந்த நேரத்தில் பொருத்திப் பார்ப்பது பொருத்தமான தாகும்.

இதற்கு முன்புகூட இலங்கை இராணுவத்திற்கு இந்தியா தாம்பரத்தில் பயிற்சி அளிக்க முன் வந்தபோது திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. அதன் எதிரொலியாக அப்பயிற்சி இடையில் நிறுத்தப்பட்டு, வட மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. என்பதெல்லாம் நினைவூட்டப்பட வேண்டியவை!

1990 செப்டம்பரில் இலங்கைக் கடற்படை, விமானப்படைகளைச் சேர்ந்த 300 பேர்களுக்கு இந்தியா இராணுவப் பயிற்சி அளிக்கிறது என்று இலங்கை இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் வனசிங்க தெரிவித்த நேரத்தில் விடுதலை கண்டித்து எழுதியதுண்டு.

இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் பயிற்சி தருவது உண்மையென்றால் தமிழகம் பொங்கி எழும்;

பயிற்சியை ஒரு போதும் தமிழர்களால் ஏற்க முடியாது என்பதை மத்திய அரசுக்குத் தெரி வித்துக் கொள்கிறோம் என்று எச்சரிக்கை கொடுத்தது விடுதலை (விடுதலை 24.9.1990 முதல் பக்கம்)

இதையெல்லாம் பார்க்கும்பொழுது ஈழத் தீவில் தமிழினம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதில் சிங்களவர்களோடு, குறிப்பிடத்தக்க வகையில் இந்திய அரசுக்கும், அதன் இராணுவத்துக்கும் பங்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

இவ்வளவுக்கும் பிரதமர் இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் சரி, ஈழத் தீவில் நடைபெறுவது இனப்படுகொலையே (Genocide) என்று தெளி வாகக் கூறியுள்ளனர்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகவில்லையா?

இனப்படுகொலை செய்யும் இலங்கை சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்திய அரசும், இந்திய இராணுவமும் இந்த இனப் படுகொலைக்குத் துணை போகின்றன என்பது விளங்கவில்லையா?

அய்.நா.வின் ஜெனிவா கூட்டத்தில் இலங் கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும்கூட, இலங்கைக்கு எதிரான தீர்மானத் திற்கு இந்திய அரசு ஆதரவளித்த நிலையிலும்கூட, இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிப்பது என்பது தார்மீகப் பண்பாட்டின் அடிப்படையிலும், மனிதநேய அடிப்படையிலும்கூட இந்தியா தன் தகுதியை இழந்து விட்டதாக உலக நாடுகள் கருதாவா?

எந்த வகையில் இலங்கை அரசுக்கு யார் துணை போனாலும், அவர்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மிக மோசமான மதிப்பீட்டுக்கு ஆளாவர் என்பது உறுதி. இந்தியாவுக்கு இந்நிலை தேவைதானா? வெறிகளுக்குத் துணை போனால் நெறிகள் சவக் குழிக்குப் போக வேண்டியதுதான்!6-7-2012

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு வினாக்கள்
உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? 6-7-2012

தமிழ் ஓவியா said...

திதி மந்திரமும் அதன் பொருளும்


மந்திரம்:

என்மே மாதா ப்ரலுலோபசரதி

அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா

பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம...

பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள்.

இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தமென்ன?

தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப் படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான்.

ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது...

பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு.

எனவே இந்துமதப்படி பெற்றோர்களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள். இதைத்தான் இந்து மதம் கூறுகிறது. 6-7-2012

தமிழ் ஓவியா said...

இந்து திருமண மந்திரமும் அதன் பொருளும்


மந்திரம்:

ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!

த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!

ஸோமோ ததத் கந்தர்வாய

கந்தர்வோ ததத் அக்னயே!

ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம்

அதோ இமாம்

பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்.

சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்.... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.

இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தம் என்ன? இந்து மதப்படி திருமணம் செய்து கொள்கின்ற ஒருவரின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்றும், இந்த பெண் (மணப்பெண்) வேறொருவனிடம் குழந்தை பெற்றுக் கொண்டே அவனுக்கு மனைவியாகிறாள் என்றும் இந்து மதம் கூறுகின்றது.

ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் - பாகம் 2 - பக்கம் 874

எனவே இந்துமதப்படி திருமணம் செய்துக் கொண்டால் உன் மனைவி ஒரு விபச்சாரி என்று பொருள்.

தமிழ் ஓவியா said...

தாம்பரத்திலிருந்து சிங்கள வீரர்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி: மத்திய அரசு


சென்னை: தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த 9 சிங்கள வீரர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவின் வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு 9 மா தொழில்நுட்பட பயிற்சி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த பயிற்சி தொடங்கியது. இதில் சிங்கள வீரர்கல் 9 பேரும் இடம்பெற்றிருந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தாம்பரம் விமானப் படை தளத்தை முற்றுகையிட்டு மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி போராட்டமும் நடத்தின. மத்திய அமைச்சர் வாசனும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்ற 9 சிங்கள வீரர்களையும் வெளியேற்றவும் அவர்களுக்கு வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்கவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.6-7-2012