Search This Blog

7.3.18

பூணூல் அறுப்பு பற்றி பெரியார்




தந்தை பெரியார்


ஆவணி அவிட்டத்தன்று பூணூல் போடுவதைத் தான் கேட்டிருக்கிறேன், ஆரியர்களும் அவர்கள் சீடர்களும்! ஆனால் நம் தோழர்கள் அதே நாளில் தங்கள் பூணூல்களை அறுத்து விட்டார்களாம்! இது ஒரு மாதிரியான கொண்டாட்டந்தான்! ஆரிய அடிமைச் சின்னங்களில் முதல்தரமான இந்தப் பூணூலை அறுத்தெறிவதற்கு ஆவணி அவிட்டம் வருகிற வரையிலா இவர்கள் காத்திருக்க வேண்டும்? நெற்றியிலிருக்கும் விபூதியையோ, நாமத்தையோ அழிப்பது போலவே, எந்த நிமிஷத்தில் நினைக்கி றோமோ அந்த நிமிஷத்திலேயே பூணூலை அறுத் தெறிய வேண்டியது தானே!
ஓஹோ! விஷயம் புரிகிறது! நம் தோழர்கள் சப்பையானவர்களா? ஆவணி அவிட்டத்தன்று ஏன் அறுத்திருக்கிறார்கள் தெரியுமா? அந்த நாள் ஆயுள் முழுவதும் ஞாபகத்திலிருக்க வேண்டுமே, அதற்காகத்தான்! அதுமட்டுமல்ல! "ஓய்! பிராம ணரே! ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும்! எல் லோரும் சகோதரர்கள்! என்ற வாய்ச் சவடால் அடிக்கிறீரே! உம் தோளிலுள்ள பூணூலை மட்டும் அறுத்தெறியாமலிருக்கிறீரே!"
என்று யாராவதொரு காங்கிரஸ்காரரைப் பார்த் துக் கேட்க வேண்டியிருக்கும். அப்போது அவர் கேட்பார், "நீர் செட்டியார்தானே! பூணூல் உண்டே! நீர் மட்டும் போட்டுக் கொள்ளலாமா!" என்று.
"அட பைத்தியக்காரரே! நானும் இன்னும் 20 பேரும் சேர்ந்து 1946ஆம் வருஷத்து ஆவணி அவிட்டத்தன்றைக்கே அறுத்தெரிந்து விட்டோம்! இது தெரியாதா?
"விடுதலை"ப் பத்திரிகை படித்தால்தானே இதெல்லாம் தெரியும்?" என்று கூறலாமல்லவா?
பார்ப்பனத் தோழர்களுக்கு ஒரு வார்த்தை, பூணூலின் தத்துவம் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ? நான் சொல்லுகிறேன். கேளுங்கள்! மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் கட்டுப் படுத்துவதன் சின்னமாகவே முப்புரிகளைக் கொண்ட பூணூல் அணியப்படுகிறது என்கிறது உங் கள் சாஸ்திரம்! ஆனால், உங்களில் எத்தனைபேர் இம்முன்றையும் கட்டுப்படுத்தியவர்கள்? அல்லது கட்டுப்படுத்த முயன்றவர்கள்? அல்லது முயன்று வெற்றி பெற்றவர்கள்?
'இராஜபார்ட்' போட்டுக் கொண்டு நாடகத்தில் நடிப்பவன் மறுநாள் காலையில் அரை "கப்" காப்பிக்கு அலைச்சலாய் அலைகின்றான், பாவம்! அது இராத்திரி வேடம்! ஆனால் நீங்கள் போடுவது பகல் வேடமல்லவா?
உங்களில் எத்தனையோ பேர் யோக்கியர்களாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கலாம்! அப்பேர்ப்பட்டவர்களாவது, பூணூலை அறுத்து, நெருப்பில் போடாவிட்டாலும், உங்கள் வீட்டில் துணி உலர்த்தவாவது கட்டிவையுங்கள்! உங்கள் விலாசத்தை மட்டும் எனக்கு அனுப்பினால் போதும்!
அந்நிய நாட்டுத் துணியை அவிழ்த்து நெருப் பில் வீசிய தேசபக்தர் பிராமணர்களுக்கு, இது ஒரு பிரமாதமான காரியமாயிருக்க முடியாதே! ஒருக்கால் இப்படிச் செய்வதற்கு நடுக்கமாயிருக்கி றதோ? அப்படியானால், கண்ணை இறுக்கி மூடிக் கொண்டு உங்களுக்குத் தோழராயுள்ள ஒரு சுயமரியாதைக்காரரைக் கூப்பிட்டுச் செய்யச் சொல்லுங்களேன்! அவர்கள் பூணூல், விபூதி, ருத்திராட்சம், நாமம் இந்த வேடங்களைக் களைந் தெறிவதில் வீரர்கள்! ஆனால் மற்றவர்களுக்கு மட்டும் தொல்லை கொடுக்க மாட்டார்கள்!
இவர்கள் ஹிந்து சமூதாயத்தின் டாக்டர்கள்! நீங்கள் விரும்பிக் கூப்பிட்டால் உதவிக்கு வரு வார்கள்! டாக்டர்கள் கட்டியை அறுப்பது போல, பூணூலை மட்டுமல்ல, குருட்டு நம்பிக்கைகள் எதையும் ஒரே நிமிடத்தில் அறுத்தெறிவார்கள்! உதவி தேவையானால், கூப்பிடுங்கள்! 

சகுனம் பார்க்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. சுமார் 20 வருஷங்களாவே கிடையாது. அதற்கு முன்புகூட அவ்வளவு கண்டிப்பாய் இருந்ததாக ஞாபகமில்லை. உங்களில் எத்தனைபேர் சகுனம் பார்க்கிறீர்களோ எனக்குத் தெரியாது.
ஒற்றைப் பிராமணன் எதிரே வந்தால் கெட்ட சகுனமாம்; இரட்டைப் பிராமணன் வந்தால் நல்ல சகுனமாம்! பார்ப்பான் தனியே வந்தால் எதிரிகள் ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்திருந்த அந்தக் காலத்தில் ஏற்பட்டது தானே! ஒருவருக்கு இருவராயிருந்தால் ஏதோ கொஞ்சம் தைரியமாகவாவது இருக்காதா என்ற நினைப்பில் எழுதி வைத்திருக்கலாம்!
காலந்தான் மாறிவிட்டதே! எத்தனை பிராமணர் கள் சேர்ந்து வந்தால் தான் இன்று என்ன செய்ய முடியும்! ஒன்று மூவர்ணக்கொடி பிடித்துக் கொண்டு வரவேண்டும்! அல்லது பிரிட்டிஷ் துப்பாக்கிக்குப் பின்னால் வரவேண்டும்! அல்லது "கடவுள்" என்ற "அணுக்குண்டு"க்கு முன்னால் வேதம் படித்துக் கொண்டு வரவேண்டும்! அல்லது கம்பர் மகாநாட்டு ஊர்வலத்தின் நடுவில் வரவேண்டும்!
இன்னொரு நல்ல சகுனமிருக்கிறது, பஞ்சாங்கத்தில்! சகுனத்தில் நம்பிக்கையுள்ளவர்களைக் கண்டால், கட்டாயம் கவனித்து ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள். அது என்ன தெரியுமா? புலி இடமிருந்து வலமாகப் போனால் நல்ல சகுணமாம்! யாருக்கு நல்ல சகுணம்? புலிக்கா சகுனம் பார்த்துப் போகிறவனுக்கா, என்று பஞ்சாங்கத்தில் கூறவில்லை! "நாமாகக் கட்டாயப்படுத்திச் செய்யக்கூடாது என்று சகுன நம்பிக்கைக்காரர்கள் சொல்லுவார்கள். அப்படியானால், புலிகள் தாராளமாக நடமாடும் பகுதிகளுக்காவது போய் பரீட்சைப் பார்த்து வரச் சொன்னால்தான் நல்லது! நம் முன்னோர்கள் எழுதியதெல்லாம் பொய்யாகாது! சும்மா போய் வரச் சொல்லுங்கள்! அல்லது போகச் சொல்லுங்கள்!

     --------------------------"காலி மணிபர்ஸ்" என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. "குடிஅரசு" - 07.09.1946

0 comments: