Search This Blog

16.9.10

தி.மு.க. அரசு எப்படி ஆட்சி நடத்தவேண்டும்?


தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிந்தனை

சுயமரியாதை இயக்கம் ஜாதியை, கடவுளை, மதத்தை எதிர்ப்பது ஏன்?

சுயமரியாதை இயக்கம் ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்ததாலேயே அதன் யோக்கியதையைக் கெடுத்துக் கொண்டது என்கிறார்கள். மனிதனுக்கு இழிவு, ஜாதியால்தானே உண்டாகி வருகின்றது? ஜாதியோ மதத்தினால்தானே உண் டாகி வருகின்றது? மதமோ கடவுளால்தானே உண்டாகி வருகின்றது? இவற்றுள் ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா?

ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப் பாடும், பந்தமும் உடையதாக இருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா? அல்லது இந்து மதத்தை வைத்துக்கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா? ஜாதியையும், மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா? நான்கு ஜாதியை இந்து மத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன.

நான்கு ஜாதிமுறை களைக் கீதை முலியவை கடவுள் வாக்குகள் என ஒப்புக்கொள்கின்றன. நான்கு ஜாதி களையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில் களை)யும் நானே சிருஷ்டி செய்தேன். அத் தருமங்கள் தவறி எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப் பேன் என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ண பகவான் என்பவர் கூறி இருக்கிறார்.

இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதி பேதம், ஜாதிப் பிரிவு ஆகியவைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன்றையோ ஒழிக்கவேண்டுமா னால் மதங்களையும், கடவுள்களையும், சாஸ்திரங்களையும் ஒழிக்காமல் முடியுமா? அல்லது இவைகளுக்குப் பதில் ஏற்படுத்தா மலாவது முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை, மதத்தை, கடவுளை எதிர்க்கிறார் கள்; ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக்கிறதா என்று பாருங்கள்.

(குடிஅரசு, 19.1.1936).

யார் தேசத் துரோகிகள்- பார்ப்பனரல்லாதாரா? பார்ப்பனர்களா?

நாம் எந்த விதத்தில் தேசத் துரோகிகள்? இந்த தேசத்துக்கு அன்னிய ஆட்சியென் பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர் களுக்கு இங்கு என்றும் நிலைபெறும்படியான ஆட்சிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்து அவற் றிற்கு தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித் திரங்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள். நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதிதிராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லிம்கள் என்ற முறையிலோ இந்த தேசத்துக்குத் துரோகம் செய்ததாக ஏதாவது ஓர் உதாரணத்தை எடுத்துக்காட்டட்டும்.

நாம் உடனே அதற்கு பிராயச்சித்தம் செய்துகொள் ளத் தயாராய் இருக்கிறோம். வெள்ளைக் காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என்றும், அவர்களும் தாங்களும் ஒரே ஜாதி என்றும், அவர் முகச் சாயலும் தங்கள் முகச்சாயலும் ஒரே மாதிரி இருக்கிறது என்றும், அவர்களும், தாங்களும் ராசியாய் போய் இந்த நாட்டில் நிரந்தரமாக வாழவேண்டும் என்றும், நேற்று வரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா? அவர்கள் ஒழிந்த மற்றவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

இன்றுகூட பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்காக என்ன தியாகம் செய்ய தீர்மானித்தாலும் சரி, எங் களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், அதற்கப்புறம் நடப்பதென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத்திரம் சொல்லி விட்டு நாங்களும் கையொப்பம் போடுகி றோம். அதற்குச் சக பார்ப்பனர்கள் எத்தனை பேர் சாகிறார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம்.

பிறகு யார் தேச பக்தர்கள்? யார் கோழைகள்? யார் தேசத்தைக் காட்டிக் கொடுத்து கக்கூசில் போய் ஒளிந்துகொள்பவர்கள் யார்? என்று பார்க் கலாம். அதை விட்டுவிட்டு உண்மைக் கார ணம் என்ன என்பதை மறைத்துவிட்டு எங் களைக் கோழைகள் என்றும், தேசத் துரோ கிகள் என்றும் சொல்லி விடுவதாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினைத்தால் அது முடியுமா? என்றுதான் கேட்கின் றேன்.

(குடிஅரசு, 14.6.1936).

இராமாயணம், பாரதம், கீதை, நூல்களை அரசாங்கம் பறிமுதல் செய்யவேண்டும்-ஏன்?

ஜாதியையும், வருணாசிரம தருமத்தை யும் பரப்புவதற்கு என்றே உள்ள இராமா யணம், பாரதம், கீதை, மனு மற்றும் உள்ள பல நூல்களை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும். இதனைப் பரப்பும் திரு. இராச கோபாலாச்சாரி முதல் சத்கதாகாலட்சேபம் செய்யும் பார்ப்பனர் மற்றும் அனைவர் மீதும் ஜாதியை, தீண்டாமையை நியாயப்படுத்திப் பரப்பும் குற்றம் புரிவதற்காக நடவடிக் கையை எடுத்துத் தண்டிக்கவேண்டும்.

அரசு இதனைச் செய்யத் தவறினால், ஜாதி இழிவைச் சகிக்காத தமிழர்கள்- திராவி டர்கள், கொதித்துக் கொந்தளித்து நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டியும் நேரிட லாம் என்பதையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை நகரத்திலும் மற்ற முக்கிய நகரங்கள், சிற்றூர்கள், பேரூர்கள் இவற்றிலும் நடைபாதைகளின் குறுக்கே யும், அரசாங்க காம்பவுண்டுக்கு உள்ளும் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங் களிலும், இந்து மதத்தையும், பார்ப்பன தருமத்தையும், பரப்பும் கோயில்களைக் கட்டுவது மக்களின் மான உணர்ச்சிக்கும், போக்குவரத்திற்கும், நகரத்தின் அழகிற்கும், வளர்ச்சிக்கும், இடையூறாக இருப்பதால் அரசாங்கம் அவற்றை உடனடியாக அப்புறப் படுத்திவிடவேண்டும்.

(விடுதலை, 21.4.1969).

வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும் ஏன்?

பொதுவாக யாருக்குப் பிறந்த நாள் கொண்டாடினாலும் பிறந்த நாள் என்பது கொள்கையைப் பாராட்ட, பரப்ப என்கின்ற கருத்திலேயே ஆகும். வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும். அந்த வார்த்தைக்கு உண்மையில் மதிப்பே கிடையாது.

நாமம் போட்டுக் கொள்வது எப்படி முட்டாள் தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம்தான் வாழ்த்துக் கூறுவதுமாகும். பார்ப்பான் பிச்சை எடுப்பதற்கு ஆசீர்வாதம் என்று ஆரம்பித்தான். அதையே தமிழாக்கி இவன் வாழ்த்து என்கின்றானே ஒழிய, அதில் எந்தப் பலனும் கிடையாது. ஒருவன் நூறு வருஷம் வாழவேண்டும் என்று சொன் னாலேயே எவனும் வாழ்ந்துவிட முடியாது. அதுபோல, வசை கூறுவதால் எவரும் கெட்டுப் போய்விடப் போவதுமில்லை.

என்னை வாழ்த்துகிறவர்களைவிட வசை சொல்கிறவர்கள்தான் அதிகம். அதற்கு உண்மையான பலனிருக்குமானால் நான் இத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்திருக்க முடியாது. எனவே, வாழ்த்துவதற்கும் வசை கூறுவதற்குமுள்ள பலன் ஒன்றேயாகும். வாழ்த்துவது வாய்க்கும், காதுக்கும் இனி மையாக இருக்குமே தவிர பலனில் ஒன்று மில்லை.

(விடுதலை, 12.12.1968).

அய்ரோப்பாவின் நோயாளி நாடு துருக்கி முன்னேறியது எப்படி?

இப்போது பகுத்தறிவாளர்கள் ஆட்சி யான அறிஞர் அண்ணா ஆட்சியானது அரசாங்க சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடவுள் மத சம்பந்தமான படங்களை அகற்ற வேண்டுமென்று உத்தரவு போட்டிருக் கிறது.

சாதாரண ஒரு படம் எப்படிக் கடவுளாக முடியும்? அதை எடுத்து எறி வதால் மனம் புண்படுகின்றது; எடுக்கக் கூடாது என்று பார்ப்பானும், அவனோடு சேர்ந்து கொண்டு பார்ப்பன அடிமைகளும் கூப்பாடு போடுகிறார்கள். எந்த சிறு மாற் றத்தையும் செய்ய பார்ப்பானும், காங் கிரஸ்காரனும் இடம் கொடுப்பதில்லை.

துருக்கி தேசத்தை அய்ரோப்பாவின் நோயாளி நாடு என்று சொல்லி வந்தார் கள். அந்த நாட்டுக்கு கமால்பாட்சா சர் வாதிகாரியானான். மதத் தலைவனை (கலிபாவை) ஆட்சியை விட்டு விரட்டி விட்டதோடு அரசாங்க அலுவலகங்களி லிருந்த குரான் வாக்கியங்கள் அனைத் தையும் அழிக்கச் செய்தான்.

புனிதமான குரான் பள்ளி வாசலில் இருக்கட்டும். அதற்கு அரசாங்க அலுவலகத்தில் வேலை யில்லை என்று சொல்லி அத்தனையும் அழிக்கச் செய்தான். பெண்களின் கோஷாவை நீக்கி அவர்களைப் படிக்கச் செய்தான். அரபி எழுத்துகளை ரோமன் லிபியாக மாற்றினான். ஆண்கள் வைத் திருந்த தாடியையும், குல்லாவையும் மாற்றி அய்ரோப்பியர்களைப் போல உடை அணியச் செய்தான்.

இன்றைக்கு அந்த நாடு அய்ரோப்பியர்களால் பாராட்டப்படும் அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. மற்ற நாடுகளுடன் போட்டி போடுகின்றது. உலக வல்லரசுகள் என்பவை பயப்படும் அளவிற்கு அந்த நாடு வளர்ச்சியுற்றிருக் கிறது. அப்படித் துணிந்து காரியம் செய் தால்தான் முன்னேற முடியுமே தவிர, மனம் புண்படுகிறது. வெங்காயமென்று சொல் லிக் கொண்டிருந்தால் இன்னமும் காட்டு மிராண்டியாக வேண்டியதுதானே தவிர, முன்னேற்றமடைய வழியே கிடையாது.

(விடுதலை, 5.12.1968).

தேர்தலில் நிற்காமல் தொண்டாற்றி வருவது ஏன்?

நான் 1925 இல் காங்கிரசை விட்டு வெளியே வந்தேன். வந்தது முதல் ஜாதி ஒழியவேண்டும். நம் மக்களிடையே இருக் கிற இழிவு, மானமற்ற தன்மை ஒழிய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன்.

தேர்தலில் ஈடுபட்டால் மக்களிடையே உண்மையைக் கூற முடி யாது. ஆகையால், தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்று கொள்கை வைத்துத் தொண்டாற்றி வருகின்றேன். தேர்தலில் ஈடுபடாத காரணத்தினால்தான் நான் உங்களைக் காட்டுமிராண்டிகளே என்று அழைத்து, உங்களின் இழிநிலையை எடுத்துக் கூற முடிகிறது. இப்படிக் கூறி விட்டு உங்களிடம் வந்து நான் ஓட்டுக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்.

அயோக்கியன்! எங்களை காட்டுமிராண்டி என்று சொல்லிவிட்டு வோட்டு வேறு கேட் கிறாயா? என்று திருப்பிக் கேட்பீர்களா? இல்லையா? அதோடு நான் உண்மையை உங்களிடம் சொல்ல முடியாது என்பதால் தேர்தலில் நிற்காமல் தொண்டாற்றி வருகின்றேன்.

(விடுதலை, 13.11.1968)

மாணவர்களிடையே ஒழுக்கம், நேர்மை ஏற்பட என்ன செய்யவேண்டும்?

பள்ளிக்கூடங்களில் மாணவர்களி டையே ஒழுக்கம் நேர்மை ஏற்படும்படி அவர்களைப் பழக்கவேண்டும். இன் றைக்கு நாட்டில் நடக்கும் பல கலவரங் களுக்குக் காரணம் மாணவர்களால்தான் நடக்கின்றன. இதற்கு மாணவர்கள் மட்டும் காரணமல்ல, ஆசிரியர்களும்தான் காரண மாவார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களைத் தங்களுக்கு அடங்கி நடக்கும்படிச் செய்வது கிடையாது. நமக்கென்ன, மாதா மாதம் சம்பளம் வந்தால் போதும் என்கின்ற கொள்கையுடையவர்களே அதிகம் இருக் கின்றனர். மாணவர்களுக்கு ஒழுக்கம், நேர்மை இவற்றைக் கற்றுக்கொடுக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு ஒழுக்கம், நேர்மை கிடையாது. ஆசிரியர்கள் சம்பளம் பெறு வதை மட்டும் கருதாமல், மாணவர்களிடையே ஒழுக்கத்தையும், நேர்மையையும் வளர்ப் பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்.

பகுத்தறிவுப் பிரச்சாரங்களையும், பகுத் தறிவுப் போட்டிகளையும் மாணவர்களிடையே வளரச் செய்யவேண்டும். மேல்நாடுகளில் கல்வியோடு இயந்திரத் தொழில் கல்வியும் புகுத்தப்பட்டு வருகின்றது. அதுபோல், நம் நாட்டுக் கல்வி முறையிலும் இயந்திரத் தொழிற்கல்வி புகுத்தப்படவேண்டும்.

நெசவு கைத்தறித் தொழில் கற்றுக் கொடுப்பதால், மாணவர்களுக்கு எந்தப் பலனும் கிடையாது. நேரக்கேடும், பணச் செலவும்தான் மிச்ச மாகும். நம் கல்வியானது வயிற்றுப் பிழைப் பிற்கும், உத்தியோகத்திற்கும் என்று இருக் கிறதே ஒழிய, அறிவு வளர்ச்சிக்குரியதாக இல்லை. ஆசிரியர்களும், பொதுமக்களும் போராடி, கல்வியை அறிவிற்கு ஏற்ற வகையில் மாற்றும்படி அரசாங்கத்தை முன்வரச் செய்ய வேண்டும்.

(விடுதலை, 10.3.1969).

தி.மு.க. அரசு எப்படி ஆட்சி நடத்தவேண்டும்?

தி.மு.க. ஆட்சி ஒவ்வொரு பதவி, உத்தியோகம்பற்றிக் கையொப்பம் போடும் போதும் பார்ப்பானா, கிறிஸ்தவனா, முஸ்லிமா, சைவனா, மலையாளியா, தமிழனா என்பதைப் பார்த்துத்தான் கையொப்பம் போடவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் போட்டால், தமிழனைப் பலி கொடுத்ததாகத்தான் பொருள். காமராசர் தமிழனுக்குக் கண் கொடுத்தார்; தி.மு.க. தமிழனை எழுந்து நடக்கச் செய்யவேண்டும்.

கண் இருந்தும் குருடனாய் இருப்பதில் ஜீவனுக்குப் பயன் என்ன?

நான் இவ்வளவு வேண்டுகோள் செய்வது முதல் மந்திரிக்கு மாத்திரமல்ல, முக்கியமாக மற்ற பத்து மந்திரிமார்களுக்குமேயாகும். ஆகவே,

கவனிக்கவேண்டும்,

கவனிக்கவேண்டும்,

கண்டிப்பாய்க் கவனிக்கவேண்டும்.

(விடுதலை, 5.3.1969).

கடவுள் நம்பிக்கையாளர்களை கடுமையாக விமர்சிப்பது சரியா?

கடவுள் இருக்கிறது என்பவர்களை எல்லாம் கடுமையாகப் பேசுகின்றீர்களே, இது சரியா என்று கேட்கலாம்! நியாயம்தான். அதேநேரத்தில், உங்கள் புராணங்களில் கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களை எவ்வளவு கேவலமாக, இழிவாக எழுதி வைத்திருக்கிறார்கள்?

கடவுள் இல்லை என்பவன் மனைவியை எல்லாம் கற்பழிக்க வேண்டும். தலையை வெட்டவேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்துள்ளார்களே! அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? கடவுள் இருக்கிறது என்பவனைத்தான் கேட்கின்றேன். கடவுள் இருக்கிறது என்று கருதுகிறவன் எல்லாம் மற்றவன் சொல்லி நம்புகிறானே தவிர, அவனுக்கே - அவன் சொந்தப் புத்திக்குப் பட்டு ஏற்றுக்கொண்டு இருக்கிறானா? கடவுளுக்கு ஏன் இவ்வளவு கோயில்கள், உருவங்கள்? கடவுள் அன்பே உருவானவன் என்கிறான்.

அவன் கையில் ஏன் அரிவாள், கொடுவாள், ஈட்டி எல்லாம்? இவை எல்லாம் கொலைகாரன் கையில் இருக்கவேண்டிய ஆயுதங்கள் அல்லவா? உருவமே இல்லாத கடவுளுக்குப் பொண் டாட்டி ஏன்? வைப்பாட்டி ஏன்? வருஷா வருஷம் கலியாணம் ஏன்? போன வருடம் பண்ணின கல்யாணம் என்ன ஆச்சு? எவன் அவளை அடித்துக்கொண்டு போனான் என்று பக்தன் சிந்திக்கவேண்டாமா? இவற் றையெல்லாம் நம்புவதால் யாருக்கு என்ன பிரயோசனம்? மனித சமுதாயத்திற்கு என்ன லாபம்? பார்ப்பான் இடுப்பில் காசு சேருவது தான் மிச்சம்.

(விடுதலை, 20.1.1973)

0 comments: