Search This Blog

30.9.10

பகுத்தறிவுப் பிரச்சார உரிமையும் - காவல்துறையின் போக்கும் -2


பிரச்சார உரிமை

சீர்காழியில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் கீழ்க்கண்ட முதல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும் ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ - எச் பிரிவில் திட்டவட்டமாக வலியுறுத்தப் பட்டுள்ள நிலையில், திராவிடர் கழகம் தமது கொள்கையின் அடிப்படையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்கையில், அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று இந்து முன்னணி மற்றும் சங்பரிவார்க் கும்பல் காவல்துறையிடம் புகார் கொடுப்பதும், அதனை ஆழ்ந்து நோக்காமல் நுனிப்புல் மேயும் தன்மையில் காவல்துறையினர் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை அழைத்து விசாரிப்பதும், திட்டமிட்ட வகையில் ஏற்கெனவே முறைப்படி ஏற்பாடு செய்துள்ள கழகத்தின் நிகழ்ச்சி களுக்கு இடையூறு செய்து வருவதும் சட்டப்படியும், நியாயப்படியும் முறையானது அல்ல என்பதை இம் மாநாடு தெரிவித்துக் கொள்வதுடன், முதலமைச்சர் அவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தி, உரிய வழிகாட்டுதல்களைக் காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.


இத்தீர்மானத்தின் அவசியத்தை அதிகம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. நம் நாட்டு ஊடகங்களும் குறிப்பாக தொலைக்காட்சிகள் காலைமுதல் இரவு வரை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மத்தியில் மூட நஞ்சை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே பழக்கவழக்கம் என்ற பெயரால் மூட நம்பிக்கை என்னும் பொல்லாத நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் அறிவின்மீது பலம் கொண்டு சம்மட்டி அடிகொடுப்பது போல, நம் நாட்டுத் தொலைக்காட்சிகள் சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்து வருகின்றன.

விஞ்ஞானம் தந்த கருவிகளைப் பயன்படுத்தி, அஞ்ஞானக் கருத்துகளை மக்கள் மூளையின் மீது திணித்து வருகின்றனர். தீர்மானத்தில் சுட்டிக்காட்டி யுள்ளபடி மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை - சீர்திருத்த உணர்வைப் பரப்புவது இந்த ஊடகங்களின் அவசியமான கடமையாகும். அப்படிச் செயல்படாத இந்த ஊடகங்கள் கண்டிப்பாக அறிவியல் மனப்பான்மையை, வளர்க்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிடவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவேண்டிய கடமை கூட மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

இந்த அடிப்படைக் கடமையினைச் செய்யத் தவறிய ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், கடமை உணர்வோடு சீர்திருத்தப் பிரச்சாரத்தைச் செய்துவரும் திராவிடர் கழகத்தின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டு வருவது வெட்கக்கேடான தாகும். தங்களால் அந்தக் கடமையினைச் செய்யத் தவறும் பட்சத்தில் சீர்திருத்தக் கடமையினைச் செய்துவரும் கழகத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் எதிராகச் செயல்படாமல் இருக்கவேண்டாமா?

மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வுகளை ஏற்படுத்தும் செயல் திட்டங்களை வகுத்துச் செயல்பட கடமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிமகனுக்குமே அந்தக் கடமையை அடிப்படையானதாக இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும்போது, அரசிற்கு இதில் கூடுதல் கடமை உணர்வு இருக்கவில்லையா?

சீர்திருத்தப் பணிகளை அடிப்படைக் கடமையாகச் செய்துவரும் அமைப்புகளுக்கு ஊக்கம் தரவேண்டியதும், பாதுகாப்பு கொடுக்கவேண்டியதும் அரசுகளின் கடமை யாகும்.

மூட நம்பிக்கைகளுள் மிகவும் மோசமான மூத்த - முடைநாற்றமடிக்கும் மூட நம்பிக்கை கடவுள் நம்பிக்கையே!

அதிலும் இந்து மதம் கற்பித்துள்ள கடவுள்கள் ஆபாசமும், அருவருப்பும் நிறைந்தவை. அழுக்கில் பிறந்த கடவுள், குதிரைக்குப் பிறந்த கடவுள் அவதாரம், விபச்சாரம் செய்யும் கடவுள், கொலை செய்யும் கடவுள், சண்டை போடும் கடவுள், மகளையே மனைவியாகக் கொண்ட கடவுள் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இந்த ஆபாச, அறிவுக்குப் பொருத்தமற்ற கடவுளை நம்பி அறிவையும், தன்னம்பிக்கையையும், பொருளையும், பொழுதையும் பலி கொடுக்கும் மக்களைத் திருத்தும் பணியிலே திராவிடர் கழகம் ஈடுபடும்பொழுது, ஆதா ரங்களின் அடிப்படையில் இந்தக் கடவுள்களின் தன்மைகள்பற்றி அச்சிட்டுக் கொடுக்கும்பொழுது, மூட மக்களின் மனது புண்படுகிறது என்று கூறி, காவல்துறையினர் கழகப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிப்பது உகந்தது அல்ல.

அதுவும் மதவெறியைத் தூண்டும் இந்துத்துவா அமைப்புகளின் குரலுக்குச் செவிமடுத்து, துண்டு அறிக்கைகளை வழங்கக் கூடாது என்று தடுக்க முயற்சிப்பது சட்ட விரோதமும், கருத்துரிமையைத் தடுக்கும் தவறான அணுகுமுறையுமாகும்.

இதில் வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக சில ஊர்களில் திராவிடர் கழகத்தினர்மீது வழக்குகளைப் பதிவு செய்தும் உள்ளனர்.

இராமனையும், சீதையையும், இலட்சுமணனையும் பகிரங்கமாகக் கொளுத்தி இராவண லீலாவை நடத்தி தமிழின மக்களின் தன்மான உணர்வை அன்னை மணி யம்மையார் கம்பீரமாக வெளிப்படுத்திக் காட்டினார்களே, தமிழர்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களே, அந்த நிகழ்ச்சிகூட இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக அரசு தொடர்ந்த வழக்கில் கழகம் வெற்றி பெற்றதே - வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதே - இந்த உண்மைகளையெல்லாம் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தெரிந்து வைத்திருந்தால் வழக்குப் பதிவு செய்வார்களா?

இந்துக்களைப்பற்றி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தெரிவித்த கருத்தின்மீதுகூட வழக்குப் பதிவு செய்யப் பட்டதுண்டு - பிறகு அது விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதையும் இந்தத் தருணத்தில் நினைவூட்டுகிறோம்.

--------------------"விடுதலை” தலையங்கம் 29-9-2010

0 comments: