Search This Blog

9.9.10

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களே, சிந்திப்பீர்!


விநாயகர் சதுர்த்தியா?

வரும் 11 ஆம் தேதி சனியன்று விநாயகர் சதுர்த்தியாம். இந்து மதத்தின் யோக்கியதையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதன் கடவுள்களின் பிறப்பு, வளர்ப்பு, செயல்பாடுகளை ஒரு பார்வை பார்த்தாலே போதும்.

இவற்றைவிட அருவருப்பு ஆபாசம், படு முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது - கேள்விப் படவும் முடியாது. கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ஆபாசத்தின் ஊற்றுகள் இவை.

பிள்ளையார் என்ற விநாயகன் பிறப்புப்பற்றி ஒரு கதையா? இரு கதைகளா? உண்மையாக இருக்கும் எதற்கும் எப்படி பல பிறப்புகள் இருக்க முடியும்?

பிறப்பு என்பது எப்படி ஒருவருக்குப் பலவகையாக இருக்க முடியும்? பார்வதிதேவியின் அழுக்கிலிருந்து பிறந்தார் பிள்ளையார் என்று சொன்னால், அது அருவருப்பாக இருந்தாலும், அறிவுக்குப் பொருத்தமற்றதாக இருந்தாலும், பிறப்பு என்பதால் அது ஒன்றோடு ஒன்றாக மட்டுமே நிறுத்தப்பட்டு இருக்கவேண்டும்; நந்தவனத்துக்குச் சென்றபோது, அங்கு ஓர் ஆண் யானையும், பெண் யானையும் கலவி செய்ததைப் பார்த்த பார்வதிக்கும், பரமசிவனுக்கும் காமவெறி எடுத்து, பரமசிவன் ஆண் யானையாகவும், பார்வதி பெண் யானையாகவும் உருமாறிப் புணர்ந்து பெற்ற பிள்ளைதான் பிள்ளையார் என்பது இன்னொரு பிறப்புக் கதை.

இன்னொரு பக்கத்தில் என்ன சொல்லுகிறார்கள்? கடவுள் பிறப்பு - இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் என்று கதைக்கின்றனர். அப்படி சொல்லுபவர்களே இப்படி கடவுள் பிறப்புக் கதைகளை ஆபாசமாகத் தீட்டி வைத்துள்ளனர். அவற்றுக்குத் தடபுடலாக விழாவும் கொண்டாடுகின்றனர்.

இந்தப் பிள்ளையார் பிரம்மச்சாரி என்பது ஒரு புராணம் - இல்லை, இல்லை; சத்தி, முத்தி என்று இரண்டு மனைவிகள் உண்டு என்பது இன்னொரு புராணம்.

தாயைப்போலவே தனக்குப் பெண்டாட்டி வேண்டும் என்று கேட்டதாக இன்னொரு புராணம்.

வரலாற்றுப் பின்னணியில் பார்க்கும்போது, புத்தர் பிறந்த பிறகு எப்படி கிருஷ்ண அவதாரம் என்ற ஒன்றைக் கற்பித்து, புத்தர் போதித்த நெறிமுறைப் பண்புகளுக்கு மாறாக கிருஷ்ணன் என்ற காமக் கடவுளைக் கற்பித்து மக்களைப் பாலியல் உணர்ச்சிப் பக்கம் தள்ளி, இந்து மதத்திற்கு உயிர்ப் பிச்சை கொடுத்தார்களோ, அதேபோல, புத்தர் விகாரங்களை உடைத்து, அந்த இடங்களில் எல்லாம் இந்த விநாயகனைக் கொண்டுவந்து வைத்துவிட்டனர். புத்தருக்கு விநாயகர் என்ற பெயருண்டு விநாயகர் என்றால் தலைவன் என்று பொருள். இந்தப் பெயர் மோசடி, ஆள் மாறாட்டம் செய்து, புத்தர் சிலைகள் இருந்த இடங்களில் எல்லாம் இந்த விநாயகன் சிலைகளைக் கொண்டுபோய் வைத்துவிட்டனர். ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் அடுக்கடுக்கான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட பவுத்தமும் தமிழும் என்னும் நூலைப் படித்தால் நன்கு அறியலாம்.

இந்த விநயாகன் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றுதான். சோழ நாட்டின் அமைச்சராக விருந்த சேக்கிழார் படையெடுத்துச் சென்று புலிகேசி யைத் தோற்கடித்து, வாதாபியை வெற்றிகொண்டு, அதன் அடையாளமாக அங்கு இருந்த பிள்ளையாரைக் கொண்டு வந்து திருச்செங்காட்டாங்குடியில் கோயில் எழுப்புவித்தான் என்று டாக்டர் இராசமாணிக்கனார் கூறுகிறார். திருஞானசம்பந்தனின் பாடல் வரிகளும் இதற்குச் சாட்சியம் கூறுகின்றன.

மகாராட்டிரத்தில் பாலகங்காதர திலகர் என்கிற சித்பவன் பார்ப்பனர்தான் இந்த விநாயகரைப் பெரும் அளவுக்குப் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் பிடிப்பை ஏற்படுத்தியவர்.

தமிழ்நாட்டில், பிள்ளையார் ஊர்வலம் என்பதெல்லாம்கூட, அந்த ஆசாமி அம்மாநிலத்தில் நடத்தியதன் பிரதிபலிப்புதான். மகாராட்டிரத்தில் ஒருமுறை பிளேக் நோய் ஏற்பட்டபோது, அந்த நோய்க்குக் காரணம் எலிகள் என்பதால், எலிகளை ஒழிக்க வெள்ளைக்கார அரசு திட்டம் தீட்டிச் செயல்படுத்தியபோது, விநாயகன் வாகனமான எலியை மிலேச்சனான கிறிஸ்துவன் வெள்ளைக்காரன் கொல்லுவது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகும் என்ற வெறிப் பிரச்சாரம் கிளப்பப்பட்டதால், இரு வெள்ளைக்கார அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது எத்தகைய கொடுமை!

இதில் இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். கடவுள் வழிபாட்டில் சில நிலைப்பாடுகளைக் கூறி வைத்துள்ளனர்.

துவிஜர்களாகிய பார்ப்பனர்களுக்குத் தெய்வம் - கடவுள் என்பது அக்னி; முனிவர்களுக்குத் தெய்வம் என்பது இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் என்பது சிலையில். சம பார்வை உடையவர்களுக்குத் தெய்வம் என்பது எங்கும் என்று உத்தர கீதை கூறுகிறது.

இதன்படி பார்த்தால் பிள்ளையார் சதுர்த்தி கொண் டாடி பிள்ளையார் சிலையைக் கும்பிடுபவர்கள் யார் என்றால் புத்தி குறைந்தவர்கள் என்று பெறப் படுகிறது.

பிள்ளையார் சிலையை மட்டுமல்ல; கோயில்களுக்குச் சென்று சாமி சிலைகளைக் கும்பிடுவோர் அனைவருமே புத்தி குறைவானவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களே, சிந்திப்பீர்!

---------------------" விடுதலை” தலையங்கம் 8-9-2010

*******************************************************************************

பிள்ளையார் பிறந்த ஆபாசத்தைப் பாரீர்!

தேவாரப் பாடல்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

(திருவலிவலம் கோயில் கொண்ட இறை வனைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி - பெண் யானை, உருவுமை கொள - உருவத்தை பார்வதியார் கொள, கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள).

சிவன் ஆண் யானை உரு கொண்டும், பார்வதி பெண் யானை உரு கொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்.

0 comments: