Search This Blog

17.9.10

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் தந்தை பெரியார்பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - அவ்வாறு அவர் பாடியது 1958 இல், சிதம்பரத்தில்.

52 ஆண்டுகளுக்குப்பின் நிலை என்ன? தொலை நோக்காளர் தந்தை பெரியார்பற்றி தொலைநோக்கோடு புரட்சிக்கவிஞர் சொன்னது - இதோ நம் கண்முன்னே!

தந்தை பெரியார் அவர் வாழ்ந்த காலத்தில் பேசப் பட்டதைவிட அவர் மறைந்த காலத்தில் அதிகமாகப் பேசப்படுகிறார் - தேவைப்படுகிறார்.

இந்த வாய்ப்பு எல்லாத் தலைவர்களுக்கும் கிடைப் பதில்லை. காலத்தைக் கடந்து வெல்லும் கருத்துகளை எடுத்து வைப்பவர்கள்தான் காலம் கடந்தும் போற்றப் படுவார்கள்.

புத்தர் போற்றப்படுகிறார்; திருவள்ளுவர் போற்றப்படுகிறார்; தந்தை பெரியாரும் அந்த வரிசையின் உச்சியில் ஒளிவீசிக் கொண்டு இருக்கிறார்.

மனிதனைப் படைத்தது கடவுள் என்று மதவாதிகள் கூறினார்கள்.

அந்தக் கடவுளைப் படைத்ததோ மனிதன். அதுவும் முட்டாளாக என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியவர் தந்தை பெரியார். இந்தக் கருத்தைக் கல்வெட்டாக நாடெங்கும் பொறித்து வைக்கச் சொன்னார். தமக்கு நிறுவப்படும் சிலைகளின் பீடத்தில் இந்தப் புரட்சிக் கருத்துகள் இடம்பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அந்தத் தத்துவப் பேராசான் சொன்ன அந்தக் கருத்தினை இன்றைய தினம் விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டு விட்டனர். செயற்கை உயிரணுவை உண்டாக்கிக் காட்டிவிட்டார் ஒரு விஞ்ஞானி - ஜெ.கிரேய்க் வெண்டர் (J.Craig Venter) என்ற அமெரிக்கர்.

வெண்டரும், அவர்தம் விஞ்ஞானக் குழுவினரும் முதன்முதலாக ஓர் இயற்கை உயிரணு வரிசையை உரு வாக்கியதோடு மட்டுமல்ல; அதை மற்றொரு இயற்கை உயிரணுவின் உள்ளே செலுத்தி, இயற்கையான உயிரணு வைப் போலவே செயல்பட வைத்துவிட்டனர்.

இதன்மூலம் எல்லா மதங்களின் உயிர்ப்பும் மரணக் குழியில் வீழ்ந்துவிட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த கிரேய்க் வெண்டர் மட்டுமல்ல - இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கும் உலகினைப் படைத்தது எந்தக் கடவுளும் கிடையாது என்று மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துக் கூறிவிட்டார்.

உயிர்களின் தோற்றத்தைப் பற்றியும், பரிணாம வளர்ச்சி குறித்தும் டார்வின் சார்லஸ் ராபர்ட் எழுதிய உண்மையை (1871) 125 ஆண்டுகளுக்குப் பிறகு 1996 இல் கத்தோலிக்க மத குருவான போப் ஏற்றுக்கொண்டு, டார்வினுக்கு இழைக்கப்பட்ட தண்டனை குறித்துத் தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

உலகம் உருண்டை என்றும், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்றும் அறிவியலின் அடிப்படையில் கண்டு பிடித்த கலிலியோவுக்கு ஆயுள் முழுவதும் வீட்டுக் காவல் தண்டனை அளிக்கப்பட்டது. 360 ஆண்டுகளுக்குப் பிறகு (1992 இல்), அந்தத் தண்டனை தவறுடையதுதான் - கலிலியோ கூற்று சரியானதுதான் என்று போப் ஒப்புக் கொண்டார்.

ஏதேனும் ஒரு விஷயத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்வதே ஆபாசமானது, அனாவசியமானது; துரோகமானது என்ற உணர்ச்சி மக்களுக்கு இருக்குமேயானால், அந்த விஷயம் பகுத்தறிவுக்கு முரணானது என்றுதான் கூறப்படும் என்றார் தந்தை பெரியார்.

மேலும் கூறுகிறார்:

வட்டமாக அன்றி, இதர முறைகளில் கிரகங்கள் சுற்றுகின்றன என்று நம்புவது வெகுகாலமாக அசாத்திய மாகவே இருந்து வந்தது. வட்ட வடிவம் அல்லது மண்டலம் மேற்பார்வைக்கு ஒரு பூர்ணமான உருவம்; எனவே, கிரகங்கள் எல்லாம் வட்டமாகச் சுற்றுகின்றன என்று நம்புவதே இயற்கையானது; சாத்தியமானது. ஆனால், இந்த நம்பிக்கையை ஒழிக்க அநாதி காலமாக நடந்து வந்திருக்கும் போராட்டம் சரித்திரத்திலேயே மிகவும் அற்புதமானதாகும்.

உணர்ச்சிக்கு இருதயமே ஆதாரமென்றும், மூளை அல்ல என்றும் முன்னோர் நம்பி வந்தனர். இன்றோ பெரும்பாலோர் மூளையின் உதவியினால் நாம் சிந்தனை செய்வதாகவே நம்புகிறார்கள். மூளையின் உதவியின்றி மனிதனுக்குச் சிந்திக்கவே முடியாதென்ற தற்காலத்தவர்களில் பெரும் பாலோர் கூறுகிறார்கள். எனினும் முன்னோர் மாறாகவே நம்பினார்கள்.

பூமி பரப்பானதென்பது தெளிவான உண்மையாகத் தோன்றியதனால் வேறு விதமாக அபிப்பிராயப்படுகிறவர்கள் கேலி செய்யப்பட்டார்கள் - துன்புறுத்தப்பட்டார்கள்.

பளுவான பொருள்கள் இலேசான பொருள்களைவிட விரைவாக விழுமென இரண்டாயிர வருஷ காலம் தடையின்றி நம்பப்பட்டு வந்தது. அதற்கு அரிஸ்டாட்டில் அபிப்ராயமும் மேற்கோள் காட்டப்பட்டது. உண்மை வேறு விதமானதென்று கலிலியோ நிரூபித்துக் காட்டும்வரை மக்கள் அவ்வாறே நம்பி வந்தனர். ஆராய்ந்து பாராமல் கண்மூடித்தனமாக நம்பப்படுபவைகள் எல்லாம் ஆதார முடைய உண்மைகளாகிவிட மாட்டா. அத்தகைய தப்பு நம்பிக்கைகளை உடைத்தெறிவதிலேயே அறிவு வளர்ச்சி அடைகிறது என்றார் அறிவியல் சிந்தனை தத்துவவாதியாகிய தந்தை பெரியார்.

(1936, பகுத்தறிவு - மலர்-2 இதழ்-5)

அறிவியல் விங்ஞானிகளின் சிந்தனையோடு தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை எப்படி ஒத்துப் போகின்றது என்பதற்கு இது ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.

எதிர்த்த மதம் கடைசியில் பகுத்தறிவின் முன் மண்டியிடுவதையும் நம் காலத்திலேயே காண்கிறோம். 21 ஆம் நூற்றாண்டு தந்தை பெரியார் நூற்றாண்டே என்பதில் உறுதியாக நின்று, இந்த நிலையை மேலும் வளர்க்க இந்நாளில் உறுதி கொள்வோம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

---------------------”விடுதலை” தலையங்கம் 17-9-2010

4 comments:

Unknown said...

இத்திருநாள் அன்று உம் உள்ளங்களில் மகிழ்ச்சியும், இல்லங்களில் மலர்ச்சியும் அடைவதாக!

அசுரன் திராவிடன் said...

வணக்கம் அய்யா நான் http ://naathigam.blogspot.com என்கிற வலைத்தளம் ஆரம்பித்துள்ளேன்..அதில் தங்கள் தளத்தில் உள்ள கருத்துகளை பிரசுரம் செய்து இருக்கிறேன்.செய்யவும் உள்ளேன்.அதற்கு தங்களின் ஆதரவு தேவை.

தமிழ் ஓவியா said...

எங்களது ஆதரவு எப்போதும் உண்டு.

தாராளமாகச் செய்யுங்கள்.

பெரியாரின் கொள்கைகள் பரவ வேண்டும்.

நன்றி

அசுரன் திராவிடன் said...

நன்றி அய்யா..