Search This Blog

7.9.10

உங்கள் வீட்டுத் திருமணத்திற்குப் பார்ப்பனர்களை அழைக்காதீர்கள்!


அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணம்

சென்னையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திருமண விழாவில், சுயமரியாதைத் திருமணத்தை அகில இந்திய அளவில் கொண்டு சென்று, சட்ட அங்கீகாரம் கிடைத்திடச் செய்ய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முயற்சிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார் மாண்புமிகு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். மிக அருமையான யோசனை என்பதில் அய்யமில்லை.

சென்னையில் மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அவர்கள் பங்குகொண்ட ஒரு திருமண விழாவில் முதலமைச்சர் கலைஞர் அவர்களும் இதே கருத்தினை வலியுறுத்திப் பேசினார்.

சோம்நாத் சட்டர்ஜி அவர்களும் இந்தத் திருமண முறை எளிமையாக உள்ளது, இதனை மற்ற மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம். முதலமைச்சர் கூறிய யோசனை சிறந்ததுதான் - நாம் முயற்சிக்கலாம் என்றும் அதே இடத்தில் கூறினார்.

வரவேற்றாரே தவிர மக்களவைத் தலைவர் மேலால் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் இந்தத் திருமண முறையை மறைந்த மக்களவை உறுப்பினரும், தலைசிறந்த நாடாளுமன்றவாதி யுமான மூத்த பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் ஹிரேன் முகர்ஜி அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

கம்யூனிஸ்டாகிய நான் எனது வீட்டில் நடக்கும் திருமணங்களில் புரோகிதரைத் தவிர்த்து நடத்த முடியாத நிலைதான்; ஆனால், தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளிலும்கூட புரோகிதர் இன்றி, சீர்திருத்தத் திருமணம் ஏராளம் நடைபெறுவது மிகவும் வியப்பானது; இதற்குக் காரணமான பெரியார் அவர்களுக்கு எனது வணக்கமும், மரியாதையும் உரித்தாகட்டும் என்று, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களிடம் கூறியுள்ளார்.

சோம்நாத் சட்டர்ஜி வீட்டில்கூட தம் பேரப் பிள்ளைகளுக்குப் பூணூல் கல்யாணம் நடத்தியது பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் புரோகிதரைத் தவிர்த்து நடத்தப்படும் இந்தச் சுயமரியாதைத் திருமணம் கண்டிப்பாக வட மாநிலங்களுக்குத் தேவையான ஒன்றுதான். ஏன் எனில் இன்றும் அங்கு சமூக ரீதியாகப் பார்ப்பனர்கள் தங்களின் உயர்ஜாதி ஆணவத்தைக் கொடிகட்டிப் பறக்கவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், அமைச்சரவையில் இடம்பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பார்ப்பனர்கள், கட்சியின் பொதுச்செயலாளரான சதிஸ் சந்திர மிஸ்ராவின் காலைத் தொட்டுக் கும்பிட்டார்கள்; ஆனால், அதே நேரத்தில் முதலமைச்சர் செல்வி மாயாவதியின் காலைத் தொட்டுக் கும்பிட்டார்களா, இல்லை; காரணம், மாயாவதி அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் (காலில் விழும் கலாச்சாரத்தை நாம் ஏற்கவில்லை என்பது வேறு சங்கதி!).

உத்தரப்பிரதேசத்தில் பார்ப்பனர்கள் 10 விழுக் காட்டுக்கு மேல் இருக்கின்றனர். அரசியலில் ஒரு சக்தியாக அவர்கள் இருந்து வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அத்தகைய மாநிலத்தில் புரோகிதப் பார்ப்பனர்களைத் தவிர்த்து சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தினால், பார்ப்பனர்கள் அல்லாத மக்கள் மத்தியில், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் புரட்சி ஏற்படுமே!

பிகாரில் லாலுபிரசாத் அவர்கள் ஒரு கட்டத்தில், தம் மக்களைப் பார்த்து, உங்கள் வீட்டுத் திருமணத்திற்குப் பார்ப்பனர்களை அழைக்காதீர்கள்; என்னைக் கூப்பிடுங்கள்; நானே நடத்தி வைக்கிறேன் என்று கூறினாரே!

ராம்விலாஸ் பஸ்வான் போன்றவர்கள் பார்ப்பன எதிர்ப்பில் முன்னணியில் இருக்கக் கூடியவர்கள்தாம்.

மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கத்திற்காக அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் திரட்டப்பட்டு, ஓரணிக்குக் கொண்டு வந்ததுபோல, அடுத்தகட்டமாக, பார்ப்பனர்களை அவர்களின் ஆதிக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஜாதி ஆணவ வைதிகத்தைத் தகர்த்து எறிவதற்காக - பார்ப்பனர் அல்லாதாரை ஒன்று திரட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை கற்பனைக் கதாநாயகனான ராமனைக் காட்டி, அவன் பெயரால் ராமன் பாலம் இருந்ததாகச் சொல்லி - மக்கள் நலவாழ்வுத் திட்டத்தையே முடக்கியும்விட்டார்களே - இத்தகு பிற்போக்குத்தனங்கள் முறியடிக்கப்பட வேண்டுமானால், பார்ப்பனீயத்தின் ஆணி வேரான பிரச்சினைகளின் மீது கை வைத்தாக வேண்டாமா? அதற்கு முதற்கட்டம்தான் பார்ப்பன புரோகித மறுப்புத் திருமண அறிமுகமாகும். துணை முதல மைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் யோசனை சரியானது - வரவேற்கத்தக்கது. இதனை சாதித்து முடித்தால் இதுவரை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சாதித்தவைகளையும் தாண்டி வரலாற்றில் நிலை நிறுத்தப்படுவார் என்பதில் அய்யமில்லை.

---------------- "விடுதலை” தலையங்கம் 7-9-2010

1 comments:

ஒசை said...

கல்யாணத்தை பார்ப்பான் பண்ணி வைக்கிறானா, பகுத்தறிவாளன் பண்ணி வைக்கிறானாங்கிறது முக்கியம் இல்ல.

ஒருத்திக்கு ஒருவனா இருக்கானங்கிறது தான் முக்கியம்.