Search This Blog

12.9.10

வீரமணி நங்கூரம் - கலைஞர் வெற்றிக்கொடி


திராவிடர் இயக்கத்திற்கு நங்கூரம் வீரமணி; வெற்றிக்கொடி - கலைஞர்
நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பேச்சு

திராவிடர் இயக்கத்தின் நங்கூரம் வீரமணி; வெற்றிக்கொடி கலைஞர் என்று தி.மு.க பொதுச்செயலாளர் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கூறினார்.

சென்னை-பெரியார் திடலில் 7.9.2010 அன்று திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழாவில் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியார் முத்தைய்யா முதலியாருக்கு பாராட்டு

அந்த சுயேச்சை கட்சியால் வந்தவர் சுப்பராயன் முத்தையா முதலியார், சேதுரத்தினம் அய்யர் ஆக மூன்றுபேர்தான். அப்பொழுது அமைச்சர்கள் 1921ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பார்ப்பனர் அல்லாதாருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமைவேண்டும் என்று சட்டமன்றத்திலே வாதாடி அரசு அலுவல்களில் எல்லாம் பார்ப்பனரல்லா தாருக்குப் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை ஏற்று கம்யூனல் ஜி.ஓ.வை நிறை வேற்றியவர் முத்தையா முதலியார்.

பெரியார் அவர்கள் முத்தையா முதலியாரைப் பாராட்டியிருக்கிறார்கள். ஏழு உத்தியோகம் இருக்குமேயானால், அது இன்ன முறையில் பிரித்துத் தர வேண்டும் என்று பட்டியலிடப் பட்டது. ஒவ்வொரு வகுப்பாரையும் வரிசைப்படுத்தி உத்தியோகங்கள் வழங்கப்பட்டன. பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அன்றைக்கு கோவில்களில் பொட்டுக்கட்டிவிடும் பழக்கம் பற்றி முத்துலெட்சுமி ரெட்டி அன்றைக்கு இருந்த பேரவையில் பேசினார். அப்பொழுது மேலவை, கீழவை என்பதெல்லாம் கிடையாது. ஒரே அவைதான்.

முத்துலெட்சுமி ரெட்டி வாக்குவாதம்

நீங்கள் கடவுள் விசயத்தில் தலையிடுகிறீர்கள். ஆண்டவனுக்குத் தொண்டு செய்கிற விசயத்தில் தலையிடுகிறீர்கள்; நீங்கள் ஏதோ ஒரு வகையில் மத சம்பிரதாயங்களை உடைக்கிறீர்கள்; இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கோவிலிலே பொட்டு கட்டாவிட்டால் யார் பொட்டுக் கட்டுவார்? என்று கேட்டார்கள்.

முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி மசோதாவை எதிர்த்துப் பேசி விளக்கம் சொன்னார்: எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களே பொட்டுக் கட்டி, பொட்டுக் கட்டி அலுத்துப் போய்விட்டார்கள். இனி உங்களுடைய (பார்ப்பனர்) ஜாதியைச் சேர்ந்தவர்கள் பொட்டுக்கட்டட்டும் என்று சொன்னார். இதற்கு அடிப்படை என்னவென்றால் பார்ப்பனர்களுடைய வடிவத்திலேதான் இந்த நாட்டு ஆரியம் இருந்தது.

அந்தக் கலாச்சாரத்தினுடைய பிரதிபலிப்புதான் கடவுள். அந்தக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்புதான் அர்ச்சனை. ஆக, இந்தப் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை எல்லாம் மாற்ற புயல்போல கிளம்பியவர்தான் தந்தை பெரியார் அவர்கள் (கைதட்டல்). சாதாரணமாக நியாயங்களைக் கேட்டார்

அவர் முதலில், எனக்கு சாப்பாடு போடு என்று கேட்டார். தகராறு வந்தது. என் பங்கு எங்கே என்று கேட்டார். அதற்கும் தகராறு செய்தார்கள். இந்த கடை யாருடையது என்று கேட்டார். அதற்கும் தகராறு செய்தார்கள்.

இந்த கடையே எங்களுடையது என்று சொன்னார்கள். நீங்கள் வெளியே போங்கள் என்று சொன்னார். தந்தை பெரியார் தொடங்கும் பொழுது சாதாரணமாக நியாயங்களைக் கேட்டார்.

சேரன்மாதேவி குருகுலத்திலே எதற்கு பார்ப்பனர்களுக்கு சுடுசோறு, பார்ப்பனரல்லா தாருக்குப் பழைய சோறு என்று பெரியார் கேட்டார். இது அய்தீகம் என்று சொன்னார்கள். அய்தீகத்தை மாற்ற முடியாது என்று சொன்னார்கள்.

இந்த அய்தீகம் எப்பொழுது வந்தது? பார்ப்பனர்கள் என்றைக்கு தங்களது செல்வாக்கை உருவாக்கிக்கொண்டு வந்தார்களோ அன்றைக்கு வந்தது இந்த அய்தீகம். அதற்கு முன்பு அந்த அய்தீகம் உண்டா?

தமிழர்களை மனிதர்களாக நடத்த முடியாத அளவிற்கு இழிவுபடுத்திய அந்தக் கால கட்டத்திலோ, திராவிடர் இயக்க உணர்வு நமக்கு ஏற்பட்டது.

வி.அய்.சுப்பிரமணியம் கேட்ட கேள்வி

நான் பல்கலைக் கழகத்திலே திராவிடர் இயக்கம் என்று சொற்பொழிவாற்றினேன். அந்தச் சொற்பொழிவிலே நான் தெரிவித்தேன்.

திராவிடர் என்பது நாமாக இட்டுக்கட்டியது அல்ல. பெயர் எதுவாக இருந்தாலும் அந்த உரிமை நமக்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் தமிழனுடைய பழந்தமிழ்ப் பெருமைகளை எல்லாம் நிலைநாட்டுவதற்கு அமைந்துவிட்டது. அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தில்...

என்ன காரணம் என்றால், திராவிடருக்கு சான்று தேட வேண்டுமே. சுமேரியாவிலே இருக்கிற நாகரித்திலே யூப்ரட்டீஸ் டைக்ரிஸ் நதிக்கரையில் வளர்ந்த ஒரு நாகரிகத்திலே- அய்யாயிரம், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த நாகரிகத்திலே தமிழ்ப் பண்பாடு இருக்கிறது.

எகிப்து நாகரிகத்திலே தமிழர்களுடைய பண்பாடு, நாகரிகம் இருக்கிறது. கிரேக்க நாகரிகத்திலே அந்த மொழியிலே கூட தமிழ் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஸ்பெயின் நாகரிகத்திலே இருக்கிறது.

அய்ரோப்பாவில் திராவிடக் கலாச்சாரம் ஏறத்தாழ அய்ரோப்பாவின் தெற்குப் பகுதியில் தான் திராவிட நாகரிகத்தின் கலாச்சாரங்கள் இருக்கின்றன.

கிழக்கு ஆசிய நாடுகளிலே இருக்கிறது. ஆப்பிரிக்காவிலே இருக்கிறது. அமெரிக்காவிலே செவ்விந்தியர்கள் கலந்த நாகரிகத்திலே தொடர்பு இருக்கிறது. ஆகவே அவ்வளவு தொன்மையுடையது தமிழர்களுடைய நாகரிகம், பண்பாடு கலாச்சாரம்.

திராவிடன் நமக்கு உரிமை தருகிற பெயர்

தமிழ் நமக்கு மதிப்புத்தருகிற மொழி, திராவிடன் நமக்கு உரிமை தருகிற பெயர். இந்த மதிப்பைப் பெற நம்முடைய கலைஞர் அவர்கள் அண்மையிலே முயற்சி எடுத்தார். கலைஞர் தமிழை செம்மொழி ஆக்கினார் என்பது தவறு. தமிழ்ச் செம்மொழி என்பதை நிலைநாட்டினார்.

இன்னும் சொல்லப்போனால் ஆரியம்தான் உயர்ந்த மொழி என்று சொன்னவர்களுக்கு அதைவிட உயர்ந்த மொழி, சிறந்தமொழி தமிழ் மொழி என்று காட்டியவர் கலைஞர்.

தமிழ்மொழி இன்றைக்கு உலகத்தில் உள்ள பல அறிஞர்களாலே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. என்னுடைய நண்பர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் டில்லியிலே அன்றைக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியிடத்திலே பேசுகிறபொழுது சொன்னார். அவர் குப்பத்திலே திராவிட பல்கலைக் கழகம் ஒன்றைத் துவக்குவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டார்.

தேசிய கீதத்தை மாற்றத் தயாரா?

இதைப் பற்றி ஜோஷியிடம் கேட்டார். ஜோஷி பா.ஜ.க வைச் சார்ந்தவர். எதற்கு திராவிடப் பல்கலைக் கழகம் என்று பெயர் வைக்கிறீர்கள்? இந்தப் பெயரை மாற்றுவதாக இருந்தால் உடனே கையெழுத்துப் போடுகிறேன் என்று சொன்னார்.

உடனே வி.அய்.சுப்பிரமணியம் கேட்டார். தேசிய கீதம் பாடலிலே திராவிட என்பதை நீங்கள் எடுத்து மாற்றிவிட்டால் இந்த திராவிடத்தையும் நான் எடுத்துவிடுகிறேன் என்று சொன்னார்.

ஆகவே, இதற்கு அடிப்படை உணர்வு-தமிழனை தாழ்த்தியதால் இந்த உணர்வு ஏற்பட்டது. பார்ப்பனர்கள் நம்மை பார்ப்பார்கள்; சிரித்துதான் பேசுவார்கள். நாம் அவர்களை நண்பர்களாக மதித்தால் கட்டுப்பாடாக இருந்து சர்ந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களை எஜமானர்கள் என்று நினைத்தால் நம்மை அடிமைகளாகத்தான் நினைப்பார்கள்.

அவர்களை மனிதர்கள்தான் என்று நினைத்து நடத்தினால் அவர்கள் ஆரியர்களாக நடந்து கொள்வார்கள்.

ஃபாதர் ஹீராஸ் கையெழுத்து

எனவே நாம் திராவிடர் என்ற உணர்வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள். 1943ஆம் ஆண்டு சிந்துவெளி நாகரிக ஆய்விலே ஈடுபட்ட ஃபாதர் ஹீராஸ்; அன்றைக்கு அவருக்கு வயது 60தான். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேச அழைத்தோம்.

நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும், நானும் ஒரே பல்கலைக் கழகத்திலே படித்தவர்கள். நான் மன்றச் செயலாளராக இருந்தால் அவர் தலைவராக இருப்பார்; அவர் செயலாளராக இருந்தால் நான் தலைவராக இருப்பேன்.

ஃபாதர் ஹீராஸ் பேசிவிட்டு விடைபெறுகிற பொழுது, அவரை வழியனுப்பி வைத்தபொழுது அவரிடத்திலே கையெழுத்து கேட்டோம். அவர் என்ன எழுதிக்கொடுத்தார் தெரியுமா?

நான் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த திராவிடன் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். வரலாற்று அடிப்படையில் நாம் எந்தெந்தக் காலகட்டத்தில் வீழ்த்தப்பட்டோமோ, மறைக்கப்பட்டோமோ, அதனை நாம் விழிப்போடு இருந்து செயல்படக்கூடிய வாய்ப்பு அன்றைக்கு இல்லாவிட்டாலும், இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

விழிப்போடு இருக்கவேண்டும்

நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள் பேசுகிறபொழுது சொன்னதைப் போல இன்றைக்கு இணையதளத்தைப் பயன்படுத்துவோமேயானால் அன்றாடம் ஏடுகளில் வருகிற, நமக்கு எதிராக வருகிற கருத்துகளுக்கு மறுப்புகளைச் சொல்வோமானால் நாம் விழிப்போடு இருக்கவேண்டும். பேராசிரியர்கள் எல்லாம் நாம் ஒரு கூட்டு முயற்சியிலே ஈடுபட்டு தொடர்ந்து இந்தப் பணியை ஆற்றுவதன் மூலமாக நிச்சயமாக நம்முடைய தமிழ் மக்கள் பயன்பெறுவார்கள்.

வீரமணி நங்கூரம்; கலைஞர் வெற்றிக்கொடி

தொடர்ந்து இந்தப் பணியை ஆற்றுவதன் மூலமாக நிச்சயமாக நம்முடைய தமிழ் மக்கள் பயன்பெறுவார்கள். திராவிட இயக்கமும் பயனடையும், மேன்மையடையும் என்று கூறி நமது அடிப்படைக் கொள்கைகளை மேடை தோறும் பரப்பி வருகிற வீரமணி அவர்கள் நங்கூரம் போன்றவர். இந்த இயக்கத்தின் வெற்றிக் கொடியை பட்டொளி வீசிப் பறக்க வைக்கக் கூடியவர் நம்முடைய கலைஞர் அவர்கள். இந்த இரண்டு பேரும் இந்த இயக்கத்திற்குத் துணை நிற்கிறபொழுது, இது வளரும். வளர்ப்போம்; வெல்வோம் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன். -இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.

---------------- "விடுதலை” 12-10-2010

0 comments: