Search This Blog

16.9.10

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அத்தனைக் கோயில்களையும் அகற்றுக!

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க ஆணை
அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அத்தனைக் கோயில்களையும் அகற்றுக!
தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்

நடைபாதைக் கோயில்கள், பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டுக் கோயில்களையும், சின்னங்களையும் உடனடியாக அகற்றுமாறு - உச்சநீதிமன்ற ஆணையை செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

நாடெங்கும் அனுமதி பெறாது போக்குவரத்துக்கு இடை யூறாகவும், பலருடைய தனி வருவாய்க்கு வழி செய்யவும் பல நூற்றுக்கணக்கான நடைபாதைக் கோயில்களைக் கட்டியிருக் கிறார்கள்;

இதேபோல வேறு மத வழிபாட்டுச் சின்னங்களும்கூட தோன்றியுள்ளன; (இவை விகிதாச்சாரத்தில் மிகவும் குறைவு தான்) இவைகளை அகற்றவேண்டும் - இது பொதுமக்களின் வசதிக்கு மிகப்பெரிய இடையூறு என்பதை பலமுறை சுட்டிக் காட்டப்பட்டது பகுத்தறிவாளர்களால், திராவிடர் கழகத்தவர்களால், மதச்சார்பின்மையாளர்களால் (Secularists).

வம்புக்கு இழுக்கும் வேலை!

அனுமதியின்றி இந்தத் திடீர்க் கோயில்கள் அரசு அலுவலக வளாகங்களில், அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கோயில்கள் கட்டப்படுகின்றன. பல மதத்தவர் மத நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்கள் உள்ள பொது அரசுப் பணிமனைகளில், பொது இடங்களில் பலர் வேண்டுமென்றே மற்ற மதத்தவர்களை வம்புக்கு இழுப்பதற்கோ அல்லது மதவெறியைப் பரப்புவதற்கோ உள்நோக்கத்துடன் கட்டப்பட்டவைகளும் உண்டு.

பல இடங்களில் வழக்குகள்

இதை எதிர்த்து நாகர்கோவில் முதல் சென்னை, திருத்தணி எல்லைவரை உள்ள பல ஊர்களில் சென்னை மாநகரம் உள்பட கட்டப்படும் கோயில்களை, வழிபாட்டு நிலையங்களை (தனியா ருக்கு வருவாய் மூலங்களும் ஆகும்) எதிர்த்து திராவிடர் கழகத்தவர்கள் போட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தஞ்சை, திருச்சி போன்ற பெருநகரங்களில் - தஞ்சை, திருச்சி மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்ட கோயில்களை இடிக்க நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பின்னரும்கூட, ஆங்காங் குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களோ, மற்ற அதிகாரிகளோ, அவைகளை இடித்து அப்புறப்படுத்துவதை ஏனோ ஏதேதோ சாக்குக் கூறி காலந்தாழ்த்தி வருகின்றனர்!

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஆணைக்குப் பிறகும் காலந்தாழ்த்தக்கூடாது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையின் ஆணை

திருச்சி, மதுரை போன்ற பல மாவட்டங்களில் உள்ளவற்றை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தால் சில ஆண்டுகளுக்குமுன் தீர்ப்பு வழங்கப்பட்டு, அகற்ற ஆணை பிறப்பித்த நிலையில்கூட, சில ஊர்களில் இடித்தனர்; பிறகு மெத்தனமாகக் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த முற்போக்குக் கருத்துள்ள தீர்ப்பு, காலத்தால் கிடைத்த அருமையான பாராட்டி வரவேற்கவேண்டிய தீர்ப்பு!

இத்தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்தத் தவறிய மாநிலங்களின் அரசு தலைமைச் செயலாளர்களை நேரில் வருமாறு அழைப்போம்; விளக்கம் கேட்போம் என்று கூறியுள்ளது மிகச் சரியானதே!

தீர்ப்பை அமல்படுத்த, வற்புறுத்திட காலக் கெடுவுடன்கூடிய (Time Bound) அகற்றல் நடவடிக்கைக்குச் சரியான ஆணை மிகவும் தேவை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் எவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக உள்ளன.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தவேண்டும்

தமிழ்நாட்டில் பெரியார் பிறந்த மண்ணில் பகுத்தறிவாளர் ஆளும் இம்மாநிலத்தில் உள்ள நடைபாதைக் கோயில்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாம்!

கிழக்கே உள்ள அருணாச்சல பிரதேசத்தை உச்சநீதிமன்றம் பாராட்டி உள்ளது. அங்குதான் அனுமதியற்ற ஒரு வழிபாட்டு நிலையம்கூட இல்லை என்பதற்காக!

மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் (பாண்டிச்சேரி, டில்லி போன்றவைகள்) இத்தகைய அனுமதியற்று எழுப்பப்படும் வழிபாட்டு நிலையங்களை அகற்றிட, ஒரு கொள்கை திட்டத்தை உருவாக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக அக்கறை செலுத்தி, தயவு தாட்சண்யமின்றி இடித்து அகற்றிடவேண்டும்.

ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்றிட முன்வருதல் போலவே, அரசு, மாநகராட்சி, காவல்துறை உதவியுடன் செய்யவேண்டும்.

கழகத் தோழர்களின் கவனத்திற்கு...

திராவிடர் கழகத்தவர்கள், பகுத்தறிவாளர்கள் ஆங்காங்கே உடனடியாக இதனைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க உதவிகரமாக இருக்கவேண்டும்; இருப்பார்கள் என்பது உறுதி.

தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் இதில் கவனம் செலுத்திட முன்வரவேண்டும்.

அவசரம் - அவசியம்.


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
16.9.2010

0 comments: