Search This Blog

3.9.10

இனிமேல் பகவான் செயல் பறந்து போகும்!


அறிவுக்கு வேலை தாருங்கள்

நமக்கு அறிவு இருக்கிறது. இதைச் செய்யலாமா? கூடாதா? இன்னது செய்தால் இன்ன பலன் ஏற்படும், இதைச் செய்தால் இன்னின்ன வகையான நஷ்டம் ஏற்படும் என்பது போன்ற காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கும் தன்மை மனிதனிடத்திலே இருக்கிறது. அந்தப்படி இருக்கும்போது நம்முடைய அறிவை, ஆராய்ச்சியை, புத்தியைப் பழைய புராணக் கதைகளைப் பற்றி சிந்திப்பதில் செலுத்தாமல் பெரியவர்கள் செய்தது அது. ஆகவே, அதை மாற்றக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? நாம் ஒவ்வொருவரும், நமக்கு முன்காலத்தில் இருந்த சராசரி மக்களைவிட எவ்வளவோ அறிவாளிகள் தான். ஏன் என்றால் 3,000 வருடங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு மின்சார விளக்கு தெரியாது. ஒலிபெருக்கி, மோட்டார் ரயில் அவர்கள் அறியாதது.

நம்முடைய சாமிகள் என்பவைகளுக்குக் கூட இது தெரியாது. நம்முடைய சாமிகள் கதையெல்லாம் வில், அம்பு, வாள் என்ற அளவோடு நின்று போய் விட்டது. எந்தச் சாமியாவது துப்பாக்கியால் சண்டை போட்டதாகவோ, அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டு ஆகியவற்றை அவை அறிந்ததாகவோ எந்தக் கதையும் கிடையாது. ஏன் என்றால் அவன் சாமி பற்றிய கதை எழுதிய காலத்தில் துப்பாக்கி, அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டுகள் இல்லை. அதனால் அவன் வேல், சூலம், வில், அம்புபோடு தான் எழுதும் சாமிக் கதையை நிறுத்திக் கொண்டான்.

இன்றைய தினம் வாழுகின்ற நாம் நம்முடைய கடவுள்களை விட அறிவாளிகள், விஷயந் தெரிந்தவர்கள் என்று கூறுவேன். ஏனென்றால், நாம் கடவுள்கள் வாழாத, அவர்களுக்குத் தெரியாத, அவர்கள் சொல்லாத விஞ்ஞானக் காலத்தில் வாழுகிறோம்.

இந்த மாதிரியான பல வசதிகளால் நாம் நமக்கு முன் னிருந்தவர்களைவிட நல்ல அறிவு படைத்தவர்களாய்த்தான் இருக்க வேண்டும். நமக்குப் பின்னால் உலகத்தில் இன்னமும் பலப் பல மாறுதல்கள், கண்டுபிடிப்புகள் நடக்கப் போகின்றன. ஏனென்றால், மனிதனுடைய அறிவுக்கு எல்லை கிடையாது. அவன் மேலும் மேலும் ஆராய்ந்து கொண்டே போகிறான். இந்த ஆராய்ச்சிக்கு முடிவே கிடையாது. ஆராய்தல் என்னும் துறையில் மனிதன் இறங்கி விட்டான். அதனால் இன்று அவன் பல புதிய அதிசயச் சங்கதிகளைக் கண்டுபிடித்திருக் கிறான். இன்னும் ஆராய, பல புதுப் பொருள்களைக் கண்டு பிடிக்கத்தான் போகிறான். அப்போது இன்றைய தினம் நமக்கு அதிசயப் பொருள்களாய் இருக்கின்ற பொருள்களும், நமக்குப் புதியதாய், புரட்சிகரமாய் இருக்கின்ற கொள்கைகளும், அவர்களுக்குப் பழைய சங்கதியாய், ஆறின பழங்கஞ்சியாகப் போய்விடும். நமக்குப் பின்னால் வரக்கூடிய மக்கள் நம்மைவிட அறிவாளிகளாய்த்தான் திகழுவார்கள்.

இந்தப்படியாகவேதான் உலகம் நடந்து கொண்டு போகும். இனிமேல் மக்கள் 100 வயதிலேகூட சாக மாட்டார்கள். 150 வயது வரை பிள்ளை பெறுவார்கள். பகவான் செயல் பறந்தே போகும்.

ஆகவே, உலகத்தில் மாறுதல் என்பது இயற்கை; அந்த மாறுதலுக்கு ஏற்றவாறு தங்களைத் திருத்திக் கொள்பவர்கள் தான் முன்னேற முடியும். நல்ல பெருமையான, சிறந்த வாழ்வு வாழ முடியும். இல்லையேல், மாறுதலை மதிக்காமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்பது போல விடாப் பிடியாக இருந்தால் நிச்சயமாக அந்த நாடும், அந்த நாட்டு இனமும் கீழ்நிலையிலேதான் இருக்க வேண்டி நேரிடும்.

எனவேதான் நான் கூறுகிறேன், நாம், நமக்கு முன்னிருந்தவர்கள் அவரவர்களுடைய அறிவுக்கு, தெளிவுக்குத் தெரிந்த வரையில் ஏதோ காரியங்களைச் செய்தார்கள்; நல்ல அறிவுக் காலத்தில் வாழுகிற நாம் நம்முடைய அறிவுக்கு, தெளிவுக்கு, காலச்சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மைத் திருத் திக் கொண்டு மாறுதலை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்று.

அந்தப்படியாக நாம் சிந்தனை செய்து பார்க்காமல், பகுத்தறிவைப் பயன்படுத்தாமல், மாறுதலைப் பற்றிய கவலையே இல்லாமல் அர்ச்சகர், புரோகிதன், சாஸ்திரி, சவுண்டி ஆகியவர்கள் சொன்னதே கடவுள் வாக்கு என்ற தன்மையில் நடந்து வந்ததன் பலனாய் தான் இன்று நாம் இவ்வளவு இழி நிலையில் இருக்கிறோம். நம்முடைய முட்டாள் தனம் மனிதனைச் சாமி என்றழைக்கச் செய்து, குழவிக் கல்லை கடவுள் என்று நினைத்து, அதற்கு ஆக ஆதற்கு கும்பிடு போடுவதோடு மாத்திரம் அல்லாமல், நிறைய பொருள் செலவும் செய்யும்படியான முட்டாள்களாக ஆக்கிவிட்டது மக்களை. அது மட்டுமல்ல; சாமிக்குக் கல்யாணம் பண்ணி வைத்து, அதற்குத் தேவடியாளையும் கூட்டி வைத்து, சாமிக்கு என்று பள்ளியறையும் ஏற்படுத்தி, அறிவுள்ள உலகம் நம்மைக் கண்டு எள்ளி நகையாடுகின்ற முறையில் நம்மை மடையர்களாக, காட்டுமிராண்டிக் காலத் தன்மை படைத்த மக்களாக ஆக்கிவிட்டது. எனவேதான், நான் மக்களிடத்தில் இந்த இருபத்தி அய்ந்து ஆண்டுகளாக சிந்தனை செய்து பாருங்கள், பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள் என்று குரல் எழுப்பி வருகின்றேன். இவற்றில் எல்லாம் நாம் மாற்றம் அடையா விட்டால், இவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளா விட்டால் நிச்சயமாய் நாம் நல்வாழ்வு காண முடியாது.

நமக்கு என்று என்னதான் சுயராஜ்யம், சுதந்திரம், ஜனநாயகக் குடிஅரசு என்பவை போன்றவை வந்தாலும் நாம் கடுகு அளவு முன்னேற்றத்தையும் காண முடியாது. எனவே தோழர்களே, நான் உங்களிடத்தில் முதலாவதாக கூறிக் கொள்வதெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுங்கள்; நான் சொல்லுவதையெல்லாம் உண்மையென்று அப்படியே நம்பி விடாமல், நான் சொல்லுகிற கருத்தைச் சிந்தித்துப் பார்த்து, நான் சொல்லுகிறது சரிதானா என்று யோசித் துப் பாருங்கள் என்பதுதான் ஆகும்.

---------------11.7.1950 அன்று ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை -"விடுதலை" 26.7.1950

0 comments: