Search This Blog

8.9.10

கிரிக்கெட் சூதாட்டம்!மனைவியை வைத்துச் சூதாடிய மகாபாரதத்தின் இந்துக் கலாச்சாரம் இந்தியாவையும் தாண்டி உலகெங்கும் பரவிவிட்டது போலும்!

இந்தியாவிலும் கிரிக்கெட் சூதாட்டத்தில் அசாருதீன், ஜடேஜா போன்றவர்கள் சிக்கியதுண்டு. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் குழுவின் தலைவன் (கேப்டன்) ஹான்சி குரோஞ்ஜி (Hansie Cronje) இதுபோல கிரிக்கெட் சூதாட்டத்தில் (மேட்ச் ஃபிக்சிங்) சிக்கிக் கொண்டவன் தான். அந்த ஒரு நிமிடத்தில் கடவுள் எனக்கு நல்ல புத்தி யைக் கொடுக்கவில்லை என்று கடவுள்மீது பழி போட்டான். பின்னர் விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தான்.

இப்பொழுது பாகிஸ்தானில் 7 கிரிக்கெட்காரர்கள் சூதாட்டத்தில் வசமாகச் சிக்கிக்கொண்டு தூக்குத் தண்டனையை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பேகூட பாகிஸ்தான் கிரிக்கெட் விளை யாட்டுக்காரர்கள் சலீம் மாலிக், அதாஉர் ரகுமான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு, ஆயுள்காலத் தடை விதிக்கப் பட்டனர்.

இந்த முறை பாகிஸ்தான் விளையாட்டுக்காரர்கள் சிக்கிக் கொண்டதற்குக் காரணம் இங்கிலாந்தோடு நடைபெற்ற விளையாட்டில் (டெஸ்ட்) மிக மோசமான தோல்வியைத் தழுவிக் கொண்டதுதான்.

வேண்டுமென்றே பாகிஸ்தான் அணியினர் தோற்கும் வகையில் ஆடியதால் சந்தேகம் ஏற்பட்டது. இங்கிலாந்தின் நியூஸ் ஆஃப் வேர்ல்டு என்ற பத்திரிகைதான் உண்மை யைக் கண்டுபிடிக்கும் களத்தில் குதித்தது. தங்களை ஊடகக்காரர்கள் என்று காட்டிக்கொள்ளாமல் பாகிஸ் தானைச் சேர்ந்த சூதாட்ட தரகரான மஷார் மஜீத்தை அணுகினர். அதற்காக தரகருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. அந்தத் தரகர்மூலம் பாகிஸ்தான் அணியினர் பணம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகம்மது ஆசீப் உள்பட ஏழு பேருக்கு ரூ.1.15 கோடி லஞ்சமாகக் கொடுக்கப் பட்டது.

இப்படி விளையாட்டில்கூட சூதாட்டம் புகுந்து விளை யாடுவது மிகவும் வெட்கக்கேடானதாகும். இந்தியாவில்கூட கிரிக்கெட் போர்டு தலைவர் பதவிக்குப் பெரும் போட்டி நடைபெறுகிறது. மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய சரத்பவார் போன்றவர்கள் மத்திய அமைச்சர் பதவியைவிட கிரிக்கெட் (அய்.சி.சி.) போர்டு தலைவராக வருவதைத் தான் விரும்புகின்றனர் என்றால், அதற்குள்ளிருக்கும் இரகசியம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு போட்டி அரசாங்கம் போல பல்லாயிரக்கணக்கில் இதில் வரவு செலவு நடக்கிறது. இதன் தலைவராக இருந்த டால்மியாமீது பொருளாதாரக் குற்றச்சாற்று சுமத்தப்பட்டதுண்டு.

இந்தியக் கிரிக்கெட் போர்டின் அய்.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) ஆணையராக இருந்த லலித் மோடியின் மீது கோடிக்கணக்கான ரூபாய் மோசடி குற்றம் எழுந்தது. 80 கோடி ரூபாய்க்கு ஜெட் விமானம் ஒன்றை விலைக்கு வாங்கிக் கொண்டார் என்றால் சாதாரணமா? இப்பொழுது லண்டனுக்கு ஓடித் தப்பித்துக் கொண்டு இருக்கிறார்.

கிரிக்கெட் என்றால் பணம் காய்ச்சித் தொங்கும் தோப்பாகக் காட்சி அளிக்கிறது. பெரும்பாலும் பார்ப்பனர் களின் பண்டக சாலையாகவும் உள்ளது. விளையாட்டுக் காரர்களைத் தேர்வு செய்யும் இடத்தில் பார்ப்பனர்; அதன் காரணமாகப் பெரும்பாலும் பார்ப்பனர்களே தேர்ந்தெடுக் கப்படும் நிலை! இந்திய அணியில் இடம்பெற்றுவிட்டால் விளையாடினாலும், வேடிக்கை பார்க்கும் இருக்கையில் அமர்ந்தாலும் பணம் லட்சக்கணக்கில் வந்து குவிகிறது.

கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி விளம்பரங்கள்மூலம் அடிக்கும் கொள்ளையோ கணக்கில் அடங்காது. இதற்குமேல் மத்திய அரசாங்கத்தின் சலுகைகளோ கொத்துக் கொத்தாக!

உழைப்புக்கும், திறமைக்கும் இடமான விளையாட்டில் சூதாட்டம் புகுந்தது எப்படி? இவ்வளவுக்கும் ஒவ்வொரு விளையாட்டுக்காரரும் மைதானத்தில் இறங்கும்பொழுதும் தொழுவது என்ன, ஜெபிப்பது என்ன, சூரியனைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்வது என்ன, ஒவ்வொரு பந்தையும் வீசும்போதும் கழுத்தில் தொங்கும் மாந்திரிகக் கயிறைத் தொட்டுப் பார்த்துக் கொள்வது என்ன, பூமியைத் தொட்டுக் கும்பிடுவது என்ன, சாயிபாபாக்களின் தரிசனம் என்ன, எந்த வண்ணத்தில் கைக்குட்டை வைத்திருப்பது என்கிற அளவுக்குப் பக்தியிலும், கடவுள் நம்பிக்கையிலும் விழுந்து புரளுகின்றனர்.

ஆனால், இவற்றில் எல்லாம் ஒழுக்கம் அறவேயில்லை என்பது சூதாட்டத்தில் சிக்கியதன்மூலம் அம்பலமாகி விடவில்லையா?

இந்தியாவிற்கென்று இருந்த ஹாக்கியைப் புறந்தள்ளி விட்டு, கிரிக்கெட்டை இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சிப் பாலும், பழமும் கொடுத்து ஊட்டி வளர்த்து வரு கின்றனர். காரணம், கிரிக்கெட் பிராமண விளையாட்டு, ஹாக்கி, சடுகுடு போன்றவை சூத்திர விளையாட்டுகள் என்பதுதானே!

விளையாட்டிலும்கூட வருணாசிரமம் கொடிகட்டிப் பறப்பதை மறுக்க முடியுமா? ஒரு சூத்திரர் கபில்தேவ் இந்திய அணியின் தலைவராக இருந்தபோதுதான் ஒரே ஒருமுறை உலகக் கோப்பையை இந்தியா வென்றது என்பதையும் நினைவூட்டுகிறோம்.

-------------------- “விடுதலை” தலையங்கம் 2-9-2010

1 comments:

ஒசை said...

நாட்டில் லட்சக்கணக்கானோர், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள போது, நாடாளுமன்ற எம்.பி களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுக்கிற அநியாயத்தை, கண்டிக்க துப்பு இல்லாத பகுத்தறிவு. சத்துணவு தொழிலாளர்களுக்கு தடியடி. ஆனால் தமிழ் சினிமா கலைஞர்களுக்கோ, அள்ளி அள்ளி கொடுக்கிற நவீன கர்ணனா கலைஞர். இதெல்லாம் பகுத்தறிவோட குருட்டு கண்ணுக்கு தெரியாது தான்.