Search This Blog

6.9.10

கடவுள் ராமனும், கிருஷ்ணனும் பிறந்த நாள் எப்படி கெட்ட நாளாகும்?


நல்ல நேரமா?

டாக்டர்கள் யாரும் நல்ல நேரம் பார்த்து சிசேரியன் ஆபரேசன் செய்வதை விரும்புவதில்லை. தாயின் கருவில் உள்ள குழந்தையின் நிலை எந்த அளவு உள்ளது? குழந்தையின் தலை திரும்பிவிட்டதா என்பதையெல்லாம் பார்த்து ஆபரேசன் முடிவு செய்யப்படும்.

உதாரணமாக அஷ்டமி, நவமி வரும்போது இரண்டு நாள்கள் கழித்து ஜோதிடர்கள் நல்ல நேரம் குறித்துத் தருவார்கள்.

ஆனால், தாய்க்குப் பிரசவவலி அதற்கு முன்பே வந்து, தாய் சேய்க்கு ஆபத்து ஏற்பட்டால் உடனே சிசேரியன் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே, பிறப்பு என்பது நம் கையில் இல்லை. இது இயற்கை முடிவு செய்யும் அற்புதம்.

நம் நாட்டில் ஏராளமான பேர் சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காகப் புதுமண தம்பதிகளை ஆடி மாதம் பிரித்து வைப்பார்கள். இதுவும் தவறுதான். குழந்தை எந்த காலகட்டத்தில் பிறந்தாலும் நன்றாகத்தான் இருக்கும். அதற்கான நவீன மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. இதனால் வீணாக மனதை குழப்பாமல் தம்பதிகள் விரும்பும் காலகட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். நமக்குக் கிடைத்துள்ள அனைத்து நேரமும் நல்ல நேரம்தான் என்று பிரபல செக்சுவலஜிஸ்ட் மருத்துவ நிபுணர் டாக்டர் காமராஜ் கூறியுள்ளார்.

திருமணம் ஆவது - பிறகு குழந்தை பெறுவது என்பது நாட்டில் நாள்தோறும் நடக்கக் கூடிய நிகழ்வு ஆகும். இதுபற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை. ஏதோ பாமர மக்கள்தான் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கிறார்கள் என்று கருதிவிட முடியாது. பாமரர்கள் இருவகை, ஒன்று படித்த பாமரர்; இன்னொன்று படிக்காத பாமரர். மூட நம்பிக்கை என்னும் கிருமி மூளையில் புகுந்துவிட்டால், அது இல்லாத, தேவையில்லாத சேட்டைகளைச் செய்யும்தான்.

குழந்தை பிறப்பது இயற்கை என்கிற போது, அதனுடைய இயற்கைக் காலத்தை மாற்றி, நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக, ஒரு நாளையும், நேரத்தையும் ஜோதிடர்கள் சொல்லும் வகையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பது மட்டும் எப்படி சாத்திரப்படி சரியாகும்?

இந்நேரத்தில்தான் பிறக்கவேண்டும் என்பது கடவுளின் கட்டளை என்றால் (அவனன்றிதான் ஓர் அணுவும் அசையாதே!) அந்தக் கட்டளையை மீறி தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்வது என்பது சரியா? இது இயற்கைக்கு மாறான - அதாவது ஆண்டவன் நிர்ணயித்த நேரத்திற்கு மாறாக செயற்கையாக வேறு ஒரு நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுப்பது - ஆண்டவன் கட்டளைக்கு எதிரான நாத்திகச் செயல்தானே?

நவமி, அஷ்டமி, கெட்ட நாளாம். சரி, நவமி என்பது ராமன் (ராம நவமி) பிறந்த நாள் - அஷ்டமி என்பது கிருஷ்ணன் (கோகுலாஷ்டமி) பிறந்த நாள். அவர்கள் நம்பிக்கைப்படியே ஒரு வினாவை நாம் எழுப்ப முடியும். கடவுள் ராமனும், கிருஷ்ணனும் பிறந்த நாள் எப்படி கெட்ட நாளாகும்? சிந்திக்கவேண்டாமா?

நல்ல கிரக நிலையில் குழந்தை பிறக்கவேண்டுமா? நவக்கிரகங்களைத் தாண்டி, புதிய கிரகங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவே, அந்தக் கிரகங்களுக்கு ஜோதிடத்தில் பலன் இல்லையே - இதற்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்?

பிறந்த காலம் குறித்து தந்தை பெரியார் சில வினாக்களைத் தொடுத்துள்ளார்.

பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போதே ஜீவன் உயிர் ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படிப் பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள்; அரை நாள் குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டு கால் நிலத்தில் விழாமல், தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது மருத்துவச்சி கைவிட்டு எடுத்த நேரமா? அல்லது டாக்டர் வயிற்றை அறுத்து எடுத்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒருபுறமிருக்க, ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக்கொண்டே பார்ப்போமானாலும் அதற்கு மாத்திரம் என்ன விசேஷம் என்பது ஒரு பக்கமிருந்தாலும், அந்த நேரத்தையாவது எப்படி சரியாகக் கண்டுபிடிக்க முடியும் என்பதை யோசிப்போம்.

குழந்தை விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா? இல்லையா? ஆணா? பெண்ணா? என்பன போன்றவை களைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். அந்தச் சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும் - அந்தச் சேதியைக் கேட்டவுடன் நேரத்தைக் குறிக்க கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியைக் காட்டு கிறதா என்பது தெரியவேண்டும். கடிகாரமில்லா விட்டால், வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்ப தாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை, அல்லது அக்கம்பக்கம் கடிகார நேரம் அதுவுமில்லாவிட்டால், உத்தேச நேரம் ஆகியவைகளின் காலதாமதங்களும், பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? என்று தந்தை பெரியார் அடுக்கடுக்காக விடுக்கும் நியாயமான வினாக்களுக்கு விடை உண்டா?

மனிதன் பிறக்கும் நேரத்தில் நாய்க் குட்டிகளும், பன்றிக் குட்டிகளும் பிறக்கும்தானே - அவைகளுக்கும் மனிதனுக்கு ஏற்படும் பலன்கள்போல ஏற்பட வாய்ப்புண்டா?

ஆறறிவுள்ள பகுத்தறிவு மனிதன் சிந்திக்கும் திறனை மூட நம்பிக்கைக் கிருமிகளால் இழப்பானாயின், இதுபோன்ற எத்தனை எத்தனையோ மூட நம்பிக்கை உளைச் சேற்றில் கிடந்து உழலவேண்டியதுதான்.


------------------- “விடுதலை” தலையங்கம் 6-9-2010

0 comments: