Search This Blog

11.9.10

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் - ஒரு பார்வை


திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் - ஒரு பார்வை

என் பொது வாழ்க்கையில் நான் கலந்துகொண்ட முக்கிய நிகழ்ச்சிகளில் இதனை ஒன்றாகக் கருதுகிறேன் என்று தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ் நாடு நிதி அமைச்சருமான இனமானப் பேராசிரியர் அவர்களால் மிகப் பெருமிதமா கக் குறிப்பிடுகிறார் என்றால் அந்த நிகழ்ச்சியின் பெருமையை மேற்கொண்டு விளக்கவே தேவையில்லை.

கடந்த செவ்வாயன்று (7.9.2010) சென்னை- பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழா நடைபெற்றது. அதனைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில்தான் இனமா னப் பேராசிரியர் இந்தக் கருத்தை வெளி யிட்டார்.

வரலாற்றில் மிக உன்னதமான பெருமைக் குரிய இனம் திராவிட இனம். சிந்து சமவெளி நாகரிகமும் மிக உன்னதமானது.

மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரி கங்களில் கட்டமைப்பும், ஒழுங்கு முறையும் ஆய்வாளர்களின் புருவத்தை உயர்த்துகிறது.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் பிறந்த மூத்தக்குடி என்ற பெருமை நமக்குண்டு.

தொல் காப்பியத்தின் காலகட்டம் கி.மு.711 என்று கூறப்படுகிறது. ஒரு மொழிக்கு இலக்கண நூல் 2500 ஆண்டு களுக்கு முன் தோன்றியது என்றால், அந்த மொழி அதற்கு முன் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி யிருக்க வேண்டும் என்று நினைப்பது பகுத்தறிவாகும்.

ஆனால், இந்த நாட்டில் உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் என்ன சொல்லுகிறார்கள்- செய்கிறார்கள்? அப்படியே தலைகீழாகப் புரட்டி எல்லாம் ஆரியம்தான்; மூத்த மொழி சமஸ்கிருதம்தான் என்று புரட்டு வேலை களில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படி அவர் களால் முடிகிறது? விடை மிக எளிதானது. ஊடகங்கள் எல்லாம் பார்ப்பனத் திரு மேனிகளின் கைகளில்தானே பத்திரமாக இருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி உருட்டல், புரட்டல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஊடகங்களில் உயர் ஜாதியினர் 88 விழுக்காட்டினர் என்று இந்து நாளேட்டில் யோக சந்திரயாதவ் எனும் சமூக ஆர்வலர் தலைமையில் அமைந்த குழு தெரிவிக்கிறது.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் அல்ல; ஆரியர் நாகரிகம் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

மத்தியிலே பா.ஜ.க ஆட்சிப்பொறுப்பில் இருந்த அதிகாரத் திமிரைப் பயன்படுத்தி, சிந்து சமவெளி நாகரிகம் என்று கூறி, திராவிடர்களுக்குரிய எருதினைக் குதிரை யாக-கணினி தந்திரம் மூலம் (Graphics) காட்டினார்கள். அந்தப் பித்தலாட்டம் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது.

அதேபோல திராவிடம் என்பது மாயை என்று தெனாவெட்டாகப் பேசுகிறார்கள்.

இந்த நிலையில் ஆரியத்தின் இந்த மோசடிகளைத் தோலுரித்துக் காட்டவும் புதைக்கப்பட்டுள்ள, திராவிடத்தின் வரலாற்றை அகழ்வாராய்ச்சி செய்து வெளிக்கொணரவும் ஓர் அமைப்பு தேவைப் படுகிறது.

காலத்தின் இந்தக் கட்டாயத் தேவை யைக் கருத்தில்கொண்டு திராவிட இயக் கங்களின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஓர் அமைப்பை நிறுவினார்; அதுதான் திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யம் என்பதாகும்.

அதனுடைய நோக்கங்கள் குறித்து தொடக்கவிழாவில் தமிழர் தலைவர் எடுத்துரைத்தார்.

1. திராவிடர் வரலாற்று ஆய்வுக்கு ஊக்கமளிப்பது

2. திராவிடர் வரலாற்று ஆய்வாளர் களுக்குப் பாராட்டு

3. திராவிடர் வரலாறு பற்றிய தவறான கருத்துகளுக்கும், திரிபு வாதங்களுக்கும் மறுப்பு

4. திராவிடர் வரலாறு பற்றிய கருத் தரங்குகள்

5. திராவிடர் வரலாறு பற்றிய ஆவணத் தொகுப்பு

6. திராவிடர் வரலாற்றைக் கூறும் பருவ இதழ் நடத்துதல் (JOURNAL OF DRAVIDIAN HISTORICAL RESEARCH)

7.திராவிடர் வரலாற்றில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ளவர்களை உறுப்பினர் ஆக்குதல் (மய்யத்தின் முடிவுக்குக் கட்டுப் பட்டது)

8. திராவிடர் வரலாறு பற்றிய அரிய நூல்களை வெளியிடல்

ஆகிய முக்கிய நோக்கங்களும், பணிகளும் இம்மய்யத்தால் நிறைவேற்றப்பட உள்ளன.

அருந்தொண்டாற்றிய அந்தணர் வரலாறு என்றும், தமிழக அந்தணர் வரலாறு என்றும் பார்ப்பனர்கள் பல தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அதனை வெளியிட்டார். கடவுளுக்கு மேலே உள்ளவர்கள் பிராமணர்கள் என்று அதில் அவர் பேசவும் செய்கிறார்.

தன்மான இயக்கம்-திராவிடர் இயக்கம் தோன்றி செழுமையை வளர்த்திருக்கும் தமிழ்நாட்டிலேயே இப்படியெல்லாம் இவர் களால் பேச முடிகிறது என்கிறபோது, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய கடமையைக் கண்டிப் பாக-ஆழமாகச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா?

தொடக்கவிழாவில் இனமானப் பேரா சிரியர் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னது போல, திருவள்ளுவர் யார் என்று கேட்டால் - ஆதி என்ற புலைச்சிக்கும், பகவன் என்ற பார்ப்பானுக்கும் பிறந்தவர் என்று சொல்லு வதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அயோத்திதாசப் பண்டிதர் திருவள்ளு வர் நாயனார் பறைச்சிக்கும், பார்ப்பானுக் கும் பிறந்தவரென்னும் பொய்க்கதை எனும் நூலினை எழுதியுள்ளார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசும்பொழுது, வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார். சுக்கில-சுரோனிதம் கலப்பறியாது என்ற குறிப்பிடும் பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த அறிஞர் க.அயோத்திதாசப் பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்றார்.

அதற்குச் சிவ நாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார்.

நமதுநாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள் என்பவர் கள், கிறித்துவ சங்கத்தார்களின் கருணை யால் எம்.ஏ., பி.ஏ., படித்து, பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக் கிறார்களே, அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர் கள்? என்று வினாதொடுத்தார் அயோத்தி தாசர்.

சிவநாம சாஸ்திரி பதில் கூறாமல் உலக்கை போல நின்றுகொண்டிருந்தார்.

பெருங்குற்றங்களைச் செய்து சிறைச் சாலைகளில் அடைபட்டிருக்கும் பார்ப்பனர் கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று நீர் நினைக்கிறீர்? என்று அணு குண்டு வினாக்களைத் தூக்கி எறிந்தார். கூட்டம் கலகலத்தது. சிவநாம சாஸ்திரி நைசாகக் கூட்டத்தைவிட்டு நழுவினார்.

திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும் முதலில் உள்ள பத்துக் குறட்பாக் களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு பொருட்பால், காமத்துப் பாலை சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காஞ்சி மட சங்கராச்சாரி ஜெயேந்திரர் கூறினாரே!

இவற்றை எல்லாம் எதிர்கொண்டு முகத்துக்கு முகம் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் திராவிட இனத்த வருக்கு உண்டு. அந்த உணர்வின் அடிப் படையில் பெரியார் திடலில் கருவுற்றது தான் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்.


----------------------------தொடரும் 9-9-2010

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் - ஒரு கண்ணோட்டம் (2)

கடந்த செவ்வாயன்று மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதாமன்றத்தில் நடைபெற்ற திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய அனைவரின் உரைகளும் பொறுக்குமணிகளாக ஒளிவீசின.

நிகழ்ச்சியின் தலைவர், பேராசிரியர் முனைவர் அ. இராமசாமி (மேனாள் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர்) திராவிடர் இயக்கத்திற்கு எதிராக வெளிவந்த இரண்டு நூல்களைப்பற்றிக் குறிப்பிட்டார். அதில் திராவிட இயக்கத்துக்கு எதிராக - உண்மைக்கு மாறாக எழுப்பிய சில பகுதிகளைத் தொட்டுக் காட்டினார்.

ஒரு நூல் - India After Gandhi - இது இராமச்சந்திரகுகா என்பவரால் எழுதப்பட்டது.

தி.மு.க. வளர்ந்தது - ஆட்சியைப் பிடித்தது என்பதற்கெல்லாம் நியாயமான அடித்தளமும், கொள்கைகளும் இருக்க, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, தன் மனப் போக்கில் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.

காங்கிரஸ் சிறப்பாக தமிழ் மாநிலத்தில் ஆட்சி செய்தது என்றாலும், இந்தி எதிர்ப்பை மய்யப்படுத்தி தி.மு.க. வெற்றி பெற்றது என்றும்,

சினிமாத் துறையைக் கையில் எடுத்துக்கொண்டதாலும், சினிமா நடிகர் எம்.ஜி.ஆரின் செல்வாக்காலும், தேர்தல் நேரத்தில் குண்டடிபட்டதாலும், அந்த அனுதாபத்தால் தி.மு.க. வெற்றி பெற்றது என்றும் மனப்போக்கில் எழுதப்பட்டு இருப்பதை எடுத்துக்காட்டி, தி.மு.க. வெற்றி பெற்றதற்கான உண்மையான காரணங்களை எடுத்து வைத்தார் மய்யத்தின் தலைவர் முனைவர் அ. இராமசாமி.

இன்னொரு நூல் - India After Independence என்பதாகும். இதன் ஆசிரியர் பிபின் சந்திரா. இவரும் உண்மைக்குப் புறம்பான முறையில் தகவல்களைத் தந்துள்ளார்.

வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக இருந்த நீதிக்கட்சியின் வாரிசுதான் தி.மு.க. என்கிறார் இந்நூலாசிரியர்.

உண்மையைச் சொல்லப்போனால், காலாகாலத்திற்கும் இந்த நாட்டை வெள்ளைக்காரர்கள்தான் ஆளவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்துத் தீர்மானம் போட்டது காங்கிரஸ்தான். ஆனால், இந்த ஆட்சி (வெள்ளைக்காரர் ஆட்சி) ஏன் ஒழிய வேண்டும் என்று எழுதியதற்காகத் தண்டனை விதிக்கப்பட்டவர் தந்தை பெரியார்.

வெள்ளைக்காரர்கள் சில சீர்திருத்தச் சட்டங்களைச் செய்ததுண்டு. சதி என்ற உடன்கட்டை ஏறுதலை அவர்கள்தானே சட்டம் இயற்றித் தடுத்தனர்!

பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி என்ற மனுதர்மத்துக்கு மாறாக சூத்திரர்களுக்குக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர்கள் வெள்ளைக்காரர்கள்தானே. இந்த உண்மையை மறுக்க முடியுமா?

வெள்ளையர்கள் ஆட்சியில் அவர்கள் கொண்டு வந்த மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தின் காரணமாக இந்தியர்களும் தேர்தலில் நிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது 1920 முதல்.

1920 முதல் 1935 வரை சென்னை மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பினை நீதிக்கட்சி வெகு திறம்படச் செய்தது. வகுப்புரிமை உள்பட பல அரிய சட்டங்களையும், ஆணைகளையும் பிறப்பித்தது. 1937 இல் ஆட்சிக்கு வந்த காங்கிரசோ, என்ன செய்தது?

பிரதமர் பொறுப்பேற்ற சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 2500 தொடக்கப்பள்ளிகளை இழுத்து மூடினார் என்ற வரலாற்றையெல்லாம் மறைத்து வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தது திராவிட இயக்கம் என்று எழுதியிருப்பது அசல் பார்ப்பனத்தனம்தானே.

பார்ப்பனர்களை மற்ற மாநிலங்களுக்கும் - அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் தி.மு.க. விரட்டியதால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெரும் வீழ்ச்சி அடைந்தது தமிழ்நாடு என்று அந்நூலில் குறிப்பிட்டு இருந்ததை எடுத்துக்காட்டி நையாண்டி செய்தார் முனைவர் இராமசாமி.

தமிழர் தலைவரின்
கருத்துகள்

சிறப்புரையை வழங்கிய தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திராவிடரா? தமிழரா? என்ற பிரச்சினையை முக்கியமாக எடுத்துக்கொண்டார்.

இப்பொழுது இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு இளைஞர்களைக் குழப்பி அரசியலில் மீன் பிடிக்கலாம் என்று ஒரு சிலர் கிளம்பியுள்ளனர். அத்தகையவர்களுக்குப் பார்ப்பன ஊடகங்கள் சபாஷ் போட்டுக் கைலாகு கொடுக்கின்றன.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழாவில் இந்தப் பிரச்சினையை அவர் கையில் எடுத்துக்கொண்டது மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

இது தொடர்பாக தந்தை பெரியார், திரு.வி.க., புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பாவாணர், டாக்டர் மு.வ. போன்றவர்கள் தெரிவித்த கருத்துகளை ஆதாரக் குறிப்புகளுடன் எடுத்துக்காட்டினார்.

தமிழர் என்று சொல்லும்போது அதில் பார்ப்பனர்கள் ஊடுருவ வாய்ப்புள்ளது; திராவிடர் என்று சொல்லும்போது பார்ப்பனர்கள் உள்ளே நுழைய முடியாத பாதுகாப்பு இருப்பதை தந்தை பெரியார் கூற்றினை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார்.

தமிழர் என்று சொல்லும்போது அது மொழிப் போராட்டத்துக்குத்தான் பயன்படுமே தவிர, இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது என்று தந்தை பெரியார் அவர்கள் கூறிய மிக அருமையான, ஆழமான கருத்தினை எடுத்துக்காட்டி தாம் எடுத்துக்கொண்ட கருத்தினை வலுவாக நிறுவினார்.

இந்த மய்யம் சென்னை அளவோடு முடங்கிவிடாமல், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விரிவாகும்; கருத்தரங்குகள் நடைபெறும் என்றும் தமிழர் தலைவர் கூறினார்.

இனமானப் பேராசிரியர்உதிர்த்த முத்துகள்

மய்யத்தைத் தொடங்கி வைத்துப் பேருரை யாற்றிய இனமானப் பேராசிரியர், தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு க. அன்பழகன் அவர்கள், தமிழன் என்று சொன்னால் பெருமை பெறலாம்; திராவிடன் என்று சொன்னால் உரிமை பெறலாம் என்று எடுத்துச் சொன்ன கருத்து செறிவுமிக்கது - விஞ்ஞானக் கண்ணோட்டம் கொண்டதாகும்.

தந்தை பெரியாரால் ஊட்டப்பட்ட இனவுணர்வு - இந்தவுணர்வு - இந்த மய்யத்தால் நீண்ட காலம் நிலைக்க வைக்கப்படும் வாய்ப்பு உண்டு என்று சொன்னதன் மூலம் இந்த மய்யத்தின் முக்கியத்துவத்தை - இனமானப் பேராசிரியர் புரிய வைக்கிறார்.

திராவிட இயக்க ஆட்சியில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதை எடுத்துக்காட்டிய நிதி அமைச்சர் அவர்கள், சட்டசபையில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தை எடுத்துக்காட்டியபோது பார்வையாளர் பக்கத்தில் சுவையும், சூடும் நிறைந்த உணர்வு அலைகள் எழுந்தன.

கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பொட்டுக்கட்டி விடப்படுவதை எதிர்க்கும் தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவின்மீது விவாதம் நடந்தபோது, இது தெய்வ காரியம். தேவதாசிகளாக இந்த ஜென்மத்தில் இருப்பது, அடுத்த ஜென்மத்திற்கு மோட்சம் செல்லுவதற்கான தெய்வ காரியம் என்று சாமர்த்தியமாகப் பேசினார். அம்மையார் டாக்டர் முத்துலட்சுமி அவர்களோ எழுந்து அதற்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார்.

இதுவரை குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே பொட்டுக்கட்டிக் கொண்டு, தேவர்களுக்கு அடியார்களாக இருந்து அடுத்த ஜென்மத்தில் மோட்சம் பெற்று வந்தது போதும்; இனி வேண்டுமானால், அந்த மோட்சத்தை அடைந்திட சத்தியமூர்த்தி வகையறாக்களைச் சேர்ந்தவர்கள் தாராளமாகப் பொட்டுக்கட்டிக் கொள்ளலாம் என்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் கூறியதை தி.மு.க. பொதுச்செயலாளர் - திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கக் கூடிய இனமானப் பேராசிரியர் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு வரலாற்று ஏட்டைப் புரட்டிக்காட்டினார்.

அறிவார்ந்த - வரலாற்றுப் பெருமைமிக்க இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள் பெரும்பாலும் புதிய முகங்கள் - பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் பெரும் அளவில் திரண்டு இருந்தது இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

அடுத்த கருத்தரங்கம் மதுரையில் நடக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிவித்தார். நமது பேராசிரியர்கள் திராவிடர் இனம், திராவிடர் இயக்கம்பற்றிய கட்டுரைகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதவேண்டும். தவறான - பொய்யான வகையில் வெளிவரும் கருத்துகளுக்கு, நூல்களுக்கு மறுப்புகளை உடனுக்குடன் எழுதிடவேண்டும். அவற்றை வெளியிடவும், நூலாக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பெரியார் திடலில் இயங்கும் பெரியார் வலைக்காட்சியையும் தாராளமாய் பயன்படுத்திக் கொள்ளலாம். உலகெங்கும் நம் கருத்துகளைக் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் திராவிடர் கழகத் தலைவர் கூறியபோது, அந்த அறிவிப்புக்குப் பெருத்த ஆரவார வரவேற்புக் கிடைத்தது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி எதைச் செய்தாலும் அது ஆழமாக இருக்கும்; நங்கூரம் பாய்ச்சுவது போல் இருக்கும் என்றும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களும், முதலமைச்சர் கலைஞர் அவர்களும் திராவிட இயக்க வரலாற்றில் வகிக்கும் முக்கிய பாத்திரம் குறித்தும் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் முத்தாய்ப்பாக எடுத்து வைத்தார்.

கூடினால் மட்டும் போதாது - கூட்டாகப் பணியாற்றவும்வேண்டும் என்ற அறிவுரையையும் பேராசிரியர் கடைசியாகக் கூறியது மய்யத்திற்கான வழிகாட்டும் அறிவுரையாகும்.

7 ஆம் தேதி பெரியார் திடல் நிகழ்ச்சி திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் தொடக்க விழா மட்டுமல்ல - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியுமாகும். காலம் அதனை நிரூபிக்கும் என்பதில் அய்யமில்லை.

-------------------- கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை -- “விடுதலை”

9-9-10 &10-09-10

0 comments: