Search This Blog

27.9.10

நாயினும் கேடா தாழ்த்தப்பட்டோர்?மத்தியப் பிரதேசம் போபாலில் நடைபெற்றுள்ள சம்பவம், இந்தியாவில் இந்து சமூக அமைப்பில் இந்த 2010 ஆம் ஆண்டிலும்கூட நாடு எந்த அளவிற்குக் கீழிறக்கத்தில் இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டே!


ராம்பால்சிங் என்ற ராஜபுத்திர ஜாதியைச் சேர்ந்தவர் ஷெரு என்ற கலப்பு இனத்தைச் சேர்ந்த நாயை வளர்த்து வந்துள்ளார். சுனிதா ஜாடவ் என்ற தாழ்த்தப்பட்ட பெண் ரொட்டித் துண்டு ஒன்றை அந்த நாய்க்குப் போட அந்த நாயும் வாலை ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாகச் சாப்பிட்டுள்ளது.


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் போட்ட ரொட்டித் துண்டை தனது வளர்ப்பு நாய் சாப்பிட்டதைப் பார்த்துவிட்ட அந்த உயர்ஜாதிக்காரர் ஆத்திரப்பட்டார், வாய்க்கு வந்தவாறு அந்தத் தாழ்த்தப்பட்ட பெண்ணைத் திட்டித் தீர்த்துள்ளார். செருப்புத் தைக்கிற பெண்ணே, நீ எப்படி என் நாய்க்கு உங்க வீட்டு ரொட்டியைப் போடலாம்? என்று திட்டியுள்ளார்.


அதோடவாவது அவர் சீற்றம் தணிந்து போய்விட வில்லை! ஊர்ப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. நாய் ஜாதி விலக்குச் செய்யப்பட்டது. இனி அந்த நாய் உயர்ந்த ஜாதிக்காரரான அந்த ராஜபுத்திரர் (ராஜ்புட்) வீட்டில் இருக்கக் கூடாது; தாழ்த்தப்பட்டவர் வீட்டில்தான் - சேரியில்தான் இருக்கவேண்டும். அதோடு மட்டுமல்ல; அந்தத் தாழ்த்தப்பட்ட பெண் ரூ.15 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும் என்று ஊர்ப் பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினார். (இதுதான் ஊர்ப் பஞ்சாயத்தின் நிலைமை!).


அர்த்தமுள்ள இந்து மதம் குறித்து வாய் கிழியப் பேசுவோர் இந்தக் கேவலமான செயல்பாட்டுக்கு என்ன வெங்காய விளக்கம் - விளக்கெண்ணெய் சப்பைக்கட்டு சொல்லப் போகிறார்கள்?


இவ்வளவுக்கும் அந்த நாய்க்கூட கலப்பின வகையைச் சார்ந்ததுதான். நாய் கலப்பு ஜாதியைச் சார்ந்தது என்றால், அங்கு ஜாதி பார்க்கப்படுவதில்லை. ஆனால், அந்த ஜாதி மறுப்பு நாய்க்கு ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ரொட்டித் துண்டைப் போட்டால் அங்கு மட்டும் ஜாதி பார்க்கப்படுகிறது என்றால், இதன் பொருள் என்ன?
தன்னை வளர்க்கும் எஜமான் என்ன ஜாதி? தனக்கு ரொட்டித் துண்டைப் போட்ட அந்தப் பெண் என்ன ஜாதி என்று அந்த நாய் பொருட்படுத்தவில்லை.
ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் - செல்வந்தன் மட்டும் ஜாதி பார்க்கிறானே! ரொட்டித் துண்டில்கூட ராஜபுத்திர ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று பிரிவு இருக்கிறதோ!


வட மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் மிக வெளிப்படையாக நடந்து வருகின்றன. மதவாத சக்திகள் அங்கு காலூன்றி நிற்கின்றன! செத்துப் போன பசுமாட்டின் தோலை உரித்த அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சங் பரிவார்க் கும்பலால் படுகொலை செய்யப்படவில்லையா?


இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவிருந்த பாபுஜெகஜீவன்ராம், வாரணாசியில் டாக்டர் சம்பூர்ணா னந்து சிலையைத் திறந்தார் என்பதற்காக - காசி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயர்ஜாதி ஆணவம் பிடித்த மாணவர்கள், அந்தச் சிலையை கங்கைத் தண்ணீரை ஊற்றிக் கழுவவில்லையா? காரணம் பாபுஜெகஜீவன்ராம் செருப்புத் தைக்கும் ஜாதியைச் சேர்ந்தவராம்!


பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வைக் கற்பிக்கும் இந்த இந்து சமூக அமைப்பின் வருணக் கொடுமை அமைப்பு முறையை ஒழித்துக் கட்டுவதற்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கின்றனர் இந்த நாட்டில் உள்ள படித்த மேதாவிகள்? எழுத்தாளர்களான அறிவு ஜீவிகள்? இவர்களில் பெரும்பாலோர் மேல்ஜாதி ஆணவக்காரர்கள் என்பதுதானே இதற்குக் காரணம்? ஊடகங்கள் எல்லாம் உயர்ஜாதிக்காரர்களின் உடைமையாக இருப்பது இன்னொரு முக்கியக் காரணம் இல்லையா?


சரி, அவர்கள்தான் இதற்காகக் குரல் கொடுக்க வில்லை; குரல் கொடுக்கக் கூடிய போராடக் கூடிய அமைப்புகளுக்காவது ஆதரவுக் கரம் நீட்டுவதுண்டா? ஆதரவு தெரிவிக்காததோடு மட்டுமல்ல; குறுக்குச்சால் ஓட்டி குற்றப் பத்திரிகை வாசிக்காமல் இருக்கிறார்களா?


இந்தியா வளர்கிறது - ஒளிர்கிறது என்பதன் இலட்சணம் இதுதானா? இதில் கடைந்தெடுத்த வெட்கக்கேடு இது தொடர்பாக பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண் காவல் துறையிடம் புகார் கொடுத்தால் அதனை உடனடியாகப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கூட காவல்துறை தயாராக இல்லை!


இதுதான் இந்தியாவில் தீண்டாமை ஒழிப்பின் யோக்கியதை - நிருவாக இயந்திரத்தின் அடிநாதம்!


தந்தை பெரியார்தம் கருத்துகளும், அண்ணல் அம்பேத்கர்தம் சிந்தனைகளும் மக்கள் மத்தியில் பரவினாலொழிய வேர்பிடித்தாலொழிய இதற்குப் பரிகாரம் காண முடியாது.


வெறும் தீண்டாமை ஒழிப்பு என்ற ஏட்டுச் சுரைக்காய் சட்டத்தை வைத்துக்கொண்டு இருக்கும்வரை இதற்கு நிரந்தரத் தீர்வும் காணப்பட முடியவே முடியாது.


தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதில், ஜாதி ஒழிப்பு என்று திருத்தி, அதனைச் செயல்படுத்திட கடுமையான அணுகுமுறை மேற்கொள்ளப்படாதவரை, பார்ப்பனர்களும், ராஜபுத்திரர்களும், உயர்ஜாதியினரும் இங்கே துள்ளித் திரியத்தான் செய்வார்கள். மற்றவர்கள் நாயினும் கேடாக மதிக்கப்படும் அவலம்தான் தொடரும் - எச்சரிக்கை!

-------------------"விடுதலை” தலையங்கம் 27-9-2010

2 comments:

Unknown said...

உயர் ஜாதியினராலும் விட, தம்மை அடுத்துள்ள வகுப்பினராலேயே, தாழ்த்தப்பட்டோர், இழிவுபடுகிறார்கள்! கிராமங்களில் இது கண்கூடு!

நம்பி said...

//Blogger ரம்மி said...

உயர் ஜாதியினராலும் விட, தம்மை அடுத்துள்ள வகுப்பினராலேயே, தாழ்த்தப்பட்டோர், இழிவுபடுகிறார்கள்! கிராமங்களில் இது கண்கூடு!

September 28, 2010 9:51 PM//
உண்மை, இதை ஆரம்பித்து வைத்தது ஆரியனான பார்ப்பனன்...அவன் உருவாக்கிய வர்ணாசிரத தர்மம் தான் அனைத்திற்கும் காரணம். இன்னும் அதை கையில் பிடித்துக்கொண்டிருப்பது பார்ப்பனன் தான்.