Search This Blog

13.9.10

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


திராவிடம் இது தமிழகம் என்பதன் திரிபு; ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.

பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! - மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.

தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு.

தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.

தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழின்
திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு.

திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த
பழத்தைப் பயம்பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.

உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம் திராவிடம்என்றேதிரிந்த தென்று! - திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி.

தென்குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப் பெயரே பூண்டு.

திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப் பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.

திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று -திராவிடம்
வெல்க என்று சொன்னால் நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்க என்று விண்டதுவே யாம்.

வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச் சொல்! - முந்தியே
இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்

வேட்டி!

இது வேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பன அடியாரும் பகர்வர். வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப் பெயர். வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இ-இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ என்னும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப் படுதலின் அறுவை என்றும், துணிக்கப்படுதலின் துணி என்றும், துண்டிக்கப்படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

முட்டி

இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க.

ஆசாரம் ஆசு+ஆர்வு+அம். குற்றத்தை ஆய்ந்து ஒழுகுவதோர் ஒழுக்கத்திற்குக் காரணப் பெயர். ஆர்வு என்பதில் வு தொக்கது.

பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஒழுக்கப் பகுதியின் தொகுப்புக்கும் ஆசாரக் கோவை என்று பெயர். இத்தொடர் தமிழானதால் அப் பெயர் வைத்தார்.

அதி

இஃது அதைத்தலில் முதனிலை வேறுபட்ட தமிழ்ச் சொல், அதைத்தல், அதை, அதி, என்பன வற்றிற்கு மிகுதி என்பது பொருள்.

--------------------------புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - "குயில்", குரல்: 1, இசை: 7, 15.7.1958

2 comments:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. குயில் கூவட்டும். வாழ்த்துக்கள்

Thamizhan said...

பல வார்த்தைகள் ஓரளவுக்குத் தமிழறிந்தவர்களே கூட வட மொழி என்று நினைத்திருப்பதை வேர்ச்சொல் காட்டி இலக்கணம் காட்டி அன்றைய "குயிலி"ல் புரட்சிக் கவிஞர் "வந்தவர் மொழியா ?செந்தமிழ்ச் செல்வமா?" என்று வாரா வாரம் படைத்தார்.இப்போதுள்ள தமிழ் இலக்கணம் அறிந்த அறிஞர் பெருமக்கள் மறைந்திடுமுன் முக்கியமாகச் செய்ய வேண்டிய தொண்டு இது.