Search This Blog

28.9.10

பெரியார் இயக்கம் பார்ப்பனர்களை ஜாதியை கடவுளை மதத்தை எதிர்ப்பது ஏன்?


(தந்தைபெரியார் அவர்களின் கொள்கைகளை இங்கு கேள்வி -பதில் வடிவத்தில் தொகுத்துத் தரப்பட்டிருக்கிறது- படியுங்கள்-தெளிவடையுங்கள்-பரப்புங்கள் ..... நன்றி)



சுயமரியாதை இயக்கம் ஜாதியை கடவுளை மதத்தை எதிர்ப்பது ஏன்?


சுயமரியாதை இயக்கம் ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்தாலேயே அதன் யோக்கியதையைக் கெடுத்துக் கொண்டது என்கிறார்கள்.

மனிதனுக்கு இழிவு ஜாதியால் தானே உண்டாகி வருகிறது? ஜாதியோ மதத்தினால் தானே உண்டாகி வருகின்றது? மதமோ கடவுளால்தானே உண்டாக்கி வருகின்றது? இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள்.

ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா? அல்லது இந்துமதத்தை வைத்துக் கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா?

ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?

நான்கு ஜாதியை இந்தமத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன. நான்கு ஜாதிமுறைகளைக் கீதை முதலியவை கடவுள் வாக்குகள் ஒப்புக் கொள்கின்றன.

"நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில்களை)யும் நானே சிருஷ்டி செய்தேன். அத்தருமங்கள் தவற எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன்" என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ண பகவான் என்பவர் கூறி இருக்கிறார்.

இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதிபேதம், ஜாதிப்பிரிவு ஆகியவைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன்றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங்களையும், கடவுள்களையும், சாஸ்திரங்களையும் ஒழிக்காமல் முடியுமா? அல்லது இவைகளுக்குப் பதில் ஏற்படுத்தாமலாவது முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை, மதத்தை, கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக்கிறதா என்று பாருங்கள்.

------------------------- ”குடிஅரசு” 19-1-1936


பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி?

நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்.
திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பது போல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன் திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுதனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான் பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப்பாடுபடுகிறேன்.

------------ 31.08.1959 சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் பெரியார் ஈ.வெ.ரா.சொற்பொழிவு. “விடுதலை” 11.09.1959


பகுத்தறிவுவாதியின் கொள்கை எது?

பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும். தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும்.
மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும். ஏனெனில் இந்த உலகத்தில் இருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ்டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகிவிட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி.
இராட்சதர் என்பதும் சுத்தப் பொய். ஏனென்றால் இராட்சதா அசுரர் என்பவர்கள் எல்லாம் இந்த பூமியில் இருந்ததாகத்தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை.
இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளாக இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால் 'கடவுளுக்கு' எதிரி இருக்க முடியுமா?

ஜோசியம் என்பது பெரும் பொய், வெறும் ஏமாற்றுதலே ஆகும்.
இராகு காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் பொய். பட்சி சாஸ்திரமும் பச்சைப் பொய். நட்சத்திரப் பலன், கிரகப் பலன், வாரப் பலன், மாதப் பலன், வருடப் பலன் என்பவை யாவும் பொய்.
பல்லி விழும் பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய். கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல், காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய்.
மந்திரம், மந்திரத்தால் அற்பதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டப் பொய்.

”தெரியாத புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும்" என்பதாக கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான்.
நம்பியதன் பலனாக பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவற்றிற்குத் தன்னை சரிப்படுத்திக் கொள்ளுகிறான்.
பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.


--------------- 09.02.1970- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

ஒழிக்க வேண்டிய மூன்று கேடுகள்

தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமூதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள் நன்மை தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும்.

முதலாவதாக மேல்ஜாதி.... கீழ்ஜாதி; ஒருவன் பார்ப்பான், கடவுளுக்குச் சமமானவன்! அவன் சாமி! பிராமணன் என அழைக்கப்பட வேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள்.

மனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே!

மேல்ஜாதி என்பது பாடுடாத சோம்பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் ஜாதி. பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.

இரண்டாவதாகப் பணக்காரன், ஏழை. இது எதற்காக? பணக்காரன் - ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?

மூன்றாவதாக - ஆண் எஜமானன்! பெண் அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி பெண் அடிமைதான்! சில நிர்பந்தம், அடக்குமுறை ஆண்களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் எசமான்; பெண் அடிமை; இந்த வேறுபாடு தேவையில்லாதது. அக்கிரமமானதுங்கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.

இங்கு மூன்று பேர் மேல் ஜாதி; 97-பேர் கீழ்ஜாதி! அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97-பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மையினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.

காரணம் 1.கடவுள்; 2.மதம் - சாஸ்திரம்; 3.அரசாங்கம்.

கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால் மதம் சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக்கிறார்கள் திராவிடர் கழகத்தைத் தவிர?

--------------12-11-1958 அன்று மேலவாளாடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. (விடுதலை 07-01-1959)



நமக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள வேறுபாடு?

நமக்கும் பார்ப்பனர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்ன வித்தியாசமென்றால் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடான ஒற்றுமை இருக்கிறது. காஷ்மீர் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் கன்னியாகுமரியிலே இருக்கிற பார்ப்பானுக்கு நெறி ஏறும். அவ்வளவு தூரம் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடு இருக்கிறது.
ஒரு பார்ப்பான் அவன் எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும் அவன்கூட ஒருக்காலமும் தன்னுடைய இனத்துக்கு, அதன் நலத்துக்கு, சவுகரியத்துக்கு, விரோதமான காரியம் செய்யமாட்டான். தன்னுடைய இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். காட்டிக் கொடுக்க மாட்டான்.

ஆனால் நம்முடைய திராவிட ஆட்கள் என்பவர்களோ அதற்கு நேர்மாறான குணம் படைத்தவர்கள் தன் வாழ்வுக்கு தன் சவுகரியத்துக்காகத் தன்னுடைய இனத்தை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கத் தயங்கவே மாட்டான் திராவிடன். இனத்தைக் காட்டிக் கொடுப்பதிலேயே தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்ளும் விபீஷணர்கள், அனுமார்கள் தான் அதிகமாய் இருக்கிறார்கள். ஆனதால் நாம் பார்ப்பனர்களை எதிர்ப்பதோடு, இந்த இனத்துரோக வீபிஷண அனுமார்களையும் சேர்த்து எதிர்த்து வெற்றி பெற வேண்டியிருக்கிறது.
--------------------- “ விடுதலை” 8-9-1953

பார்ப்பானே வெளியேறு" என்று சொல்லுவது ஏன்?

"பார்ப்பானே வெளியேறு" என்று நாம் ஏன் சொல்லுகிறோம் என்றால், இந்த நாட்டில் பார்ப்பான் எதற்கு ஆக இருக்க வேண்டும்? உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது இம்மாதிரிப் பார்ப்பான் என்ற ஒரு ஜாதி பாடுபடாமல் வாழுகிற ஜாதி அதுவும் உயர் ஜாதியாக வாழுகிற ஜாதி இருக்கிறதா? பார்ப்பான் இருக்கிறதால் இந்த நாட்டுக்கு என்ன லாபம்? அல்லது பார்ப்பான் இல்லாவிட்டால் தான் இந்த நாட்டுக்கு என்ன நட்டம் வந்துவிடும்? பார்ப்பனர்களே சகல சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டு நம் மக்கள் எதிலும், என்றைக்கும் முன்னேற முடியாமல் நிரந்தரமாக அழுத்தி வைக்கப்படுவதை எவ்வளவு நாளைக்குச் சகித்துக் கொண்டிருக்க முடியும்?

இந்த நாட்டின் பெருவாரியான மக்கள் 97 பேராகவுள்ள திராவிட மக்கள், நாட்டின் சொந்தக்காரர்கள் காட்டு மிராண்டிகளாய் அடிமைகளாய் இருக்க 3 பேராக உள்ள பார்ப்பனர்கள் அந்நியர்கள் இந்த நாட்டைக் கொள்ளையடிப்பதா? பார்ப்பான் இருக்க வேண்டும் என்றால், இருக்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவனால் அவன் "பார்ப்பானாக" இல்லாமல் மனிதனாக இருக்கட்டும் என்றுதான் திராவிடர் கழகம் கூறுகிறது.

-------------- 23.08.1953 தருமபுரியில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு. “விடுதலை” 02.09.1953

1 comments:

Lakshmanan said...

பெரியார் தொண்டுக்கு நன்றி!