Search This Blog

15.1.15

நாணயக்கேடு,ஒழுக்கக்கேட்டிற்கு அதிகமான பிள்ளைகள் பெறுவதே காரணம்-பெரியார்


(தோழர்களே  பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினர்  சாக்ஷிசாமியார் என்பவர்  இந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் எப்படி யாவது நான்கு குழந்தைகளைப் பெற வேண்டும் என்று பேசிவருகிறார். இதற்கு கண்டனங்களும் அதிகரித்து வருகிறது.  அதிக  அளவில் பிள்ளைபெறுவதால் என்ன நேரும் அதன் கேடுகள் பற்றி பெரியாரின் கருத்தை இங்கு பதிவு செய்கிறோம். இருபால் தோழர்கள் அனைவரும் ஊன்றிப்படித்து உண்மையை உணர வேண்டுகிறோம்.மிக்க நன்றி. அனைவருக்கும் பொங்கல்,தமிழர் திருநாள்,தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்    -------தமிழ் ஓவியா)


அதிகக் குழந்தைகளாலேயே ஒழுக்கக் கேடு
தோழர்களே! இன்றையத் தினம் இந்தக் கூட்டமானது குடும்பக் கட்டுப்பாடு இரு வார விழா - சுகாதார நிலையத்தின் 10-வது ஆண்டு விழா என்கிற பெயரால் கூட்டப்பட்டதாகும். இந்த விஷயங்களைப் பற்றித் தலைவர் அவர்களும் மற்றவர்களும் நல்லவண்ணம் அரிய கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

இதில் நானும் வந்து எனக்குத் தெரிந்த கருத்துகளை எழுத்துச் சொல்ல வேண்டுமென்று அழைக்கப்பட்டிருப்பதற்கிணங்க சில விஷயங்களைச் சொல்கிறேன்.

இந்த இந்திய நாட்டிலேயே குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடை என்பது பற்றி முதன் முதல் பேசியவன், எழுதியவன் நானேயாவேன். இதனால் அந்தக் காலத்திலே பெரிய எதிர்ப்புகளுக்கெல்லாம் ஆளானேன். கிறிஸ்த்தவர்கள் எதிர்ப்பு மிக அதிகமாக இருந்தது. கர்ப்ப ஆட்சி என்ற கட்டுரை எழுதியது 1930-லே. அந்தக் கட்டுரையிலேயே இரண்டு வருடங்களுக்கு முன்பே எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டு ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறேன். அதற்கும் முன்பிருந்தே இந்தப் பிரசாரம் செய்து கொண்டு வருகிறேன்.

என்றாலும், மதத்தின் பெயரால் எதிர்த்தவர்கள் எதிர்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டுரையல்ல, இரண்டு கட்டுரையல்ல, பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். அவற்றையெல்லாம் தொகுத்து 1936- இல் 'கர்ப்ப ஆட்சி' என்ற தலைப்பில் புத்தகமாகப் போட்டிருக்கின்றேன். இப்போது நான் இந்தப் பிரசாரத்தை எந்த முறையில் செய்து கொண்டு வருகிறேன் என்றால், சுயமரியாதைத் திருமணம் என்கிற பெயரால் செய்யப்படும் திருமணங்களில் எல்லாம் ஆசி கூறும் போது, அளவோடு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டு தொல்லைப் படாதீர்கள் என்றும், அதிகக் குழந்தைகளால் தங்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் கேடு என்றும் விளக்குவதன் மூலம் செய்து வருகின்றேன்.

இப்போதுள்ள நிலைமை - அரசாங்கமே முயற்சி எடுத்து அதற்காக பெரிய நிலையங்களை எல்லாம் ஏற்படுத்திப் பிள்ளை பெறுவதைக் குறைக்க வேண்டுமென்று ரொம்பப் பணம் செலவழிக்கிறார்கள் பிரசாரம் செய்கிறார்கள். அதில் ஒன்று தான் இந்த விழாவாகும்.

பொதுவாகவே உலகத்தில் மனிதன் சுகப்படப் பிறந்தவனே யொழிய தொல்லைப்படுவதற்கு - கஷ்டப்படுவதற்காக அல்ல. குழந்தைகள் அதிகம் உள்ளவன் சுக வாழ்வு என்பது முடியாது. அவன் வாழ்வு பூராவும் அவற்றுக்கே செலவிட வேண்டியவனாகிறான். ஒரு நாடு மனித சமுதாய வாழ்வுக்குக் கட்டுப்பட்டு சமமான நிலைமையில் வாழ வேண்டுமானால், மனிதன் தொல்லைகளற்றவனாக, அறிவோடு கூடியவனாக இருக்க வேண்டும்.

நம் நாடு ஏன் இவ்வளவு இழிவான நிலையில் இருக்கிறது? மக்கள் ஏன் உணவு, உடை, பொருள்களுக்குக் கஷ்டப்படுகிறார்கள்? என்றால் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், மக்களிடையே இருக்கும் மடமை, மூட நம்பிக்கை, பகுத்தறிவற்ற தன்மையினாலுமேயாகும்.

இப்போது சாவு குறைந்து விட்டது. முன்பெல்லாம் 50- பிள்ளை பிறந்தால், 50- பேர் இறப்பார்கள். கிறிஸ்து பிறந்த அந்த வருடத்தில் உலகத்தில் இருந்த மக்களின் தொகை 20-கோடி தான் ஆகும். அந்த 20-கோடி மக்கள் 1,430-வது வருடத்தில் கணக்குப் பார்த்தால் அவர்கள் 45-கோடி பேர் தான் ஆனார்கள். 1,500-வருடங்களுக்கு அதிகரித்த மக்கள் 25-கோடி பேர்தான். காரணம் என்னவென்றால் 50-பேர் பிறந்தால், 50-பேர் சாவார்கள். பிறப்பும், இறப்பும் ஏறக்குறைய சமமாக இருந்தன. பின்னால் மக்கள் தொகை அதிகரித்து வந்திருக்கிறது. 1650-லும் 47-கோடி மக்கள் தான் உலக ஜனத்தொகை 1800-இல் 70-கோடி மக்களாக இருந்தது ஜனத்தொகை. 150- வருடத்திற்கு 23-கோடி மக்கள் அதிகமானார்கள். அதன் பின் 1914-இல் 165- கோடி ஆயிற்று. 115-வருடத்தில் 95-கோடி மக்கள் அதிகமாகி விட்டார்கள். இது மேல் நாட்டானின் ஆட்சி வசதிகளால் ஏற்பட்டதாகும்.

1953-இல் உலக ஜனத் தொகை 326-கோடியாகி விட்டது. 40-வருடத்தில் 1-க்கு 2-மடங்காகப் பெருகிப் போய்விட்டது. இது மேல் நாட்டவர்கள் முயற்சியால் மருத்துவமனைகள், சுகாதார வசதிகள், நோய்கள் எதுவானாலும் அவற்றுக்கு மருந்து - உடனுக்குடன் சிகிச்சை என்பதெல்லாம் ஏற்பட்ட பின், குறைந்த மக்கள் தொகை சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து இப்போது 370-கோடி என்று சொல்கிறார்கள்.

முன்பெல்லாக் காலத்தையும் விட இப்போது மக்கள் தொகை அதிகரிக்கக் காரணம் என்ன? மக்கள் கிறிஸ்து பிறந்த போதெல்லாம் காட்டுமிராண்டிகளாக மிருகத்தோடு ஒன்றாக இறந்தார்கள். பிறந்தால் இறப்பது 'பகவான் செயல்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின்னால் மேல் நாட்டானின் முயற்சியாலும், அவர்கள் தம் நாட்டையெல்லாம் ஆளும்படியான வாய்ப்பு ஏற்பட்டதாலும், அவன் சுகாதார வழிகளில் செய்த பிரயத்தனத்தாலும் மக்கள் தொகை அதிகமாகிவிட்டது.

உலகத்திலேயே படித்தவனெல்லாம் - நல்ல மனிதனெல்லாம் கூட பிச்சை எடுக்க வேண்டி வந்தது இந்தப் பிள்ளைக்குட்டியாலேயேயாகும். பிச்சை எடுப்பது எப்படியென்றால், பல்லைக் காட்டிக் கொண்டு கெஞ்சுகிறான். "அய்யா, நான் பிள்ளைக் குட்டிக்காரனுங்க. எனக்கு 6-பிள்ளை 8-பிள்ளை என்னை மாற்றி விட்டார்கள். பிள்ளைகளெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ரொம்பக் கஷ்டப்படுகிறேன். எப்படியாவது இந்த மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கெஞ்சுகிறார்கள். இலஞ்சம் வாங்கி, வேலையிழந்து விட்டவனும், பிள்ளைக் குட்டியைக் காட்டி எனக்கு இத்தனை பிள்ளைகளிருக்கின்றன வேலை போய் விட்டது; எப்படியாவது வேலை வாங்கிக் கொடுங்கள்" என்று காலைப் பிடிக்கிறான். ஏண்டா, இலஞ்சம் வாங்கினாய் என்றால் இத்தனை பிள்ளைக்குட்டிகளுக்குக் கொடுக்கிற சம்பளம் காணவில்லை என்கிறான். இப்படி நாணயக்கேடு, ஒழுக்கக் கேட்டிற்கு அதிகமான பிள்ளைகள் பெறுவதே காரணமாகும்.

1, 2-குழந்தைகளோடு தொலைந்து போகட்டும்; அதற்கு மேல் பெற்றால் அரசாங்கம் வரி போட வேண்டும். அப்படி ஒரு ஏற்பாடு செய்தால் தான் முடியும். இல்லாவிட்டால் இன்னமும் நாணயம், ஒழுக்கம், நேர்மையெல்லாம் விடுபட்டு விடும். "ஏண்டா இத்தனை பிள்ளை? என்றால், 'பகவான் கொடுக்கிறான், நான் என்ன செய்வது?" என்கிறான். பகவான் உனக்குப் பிள்ளை கொடுத்தான் என்றால், கூடவே ஒரு மாட்டையும் கொடுப்பானே! பிள்ளைக்குப் பால் கொடுக்காதப் பகவான் என்ன முட்டாளா? பிள்ளையை மட்டும் கொடுத்து விட்டு மாடு கொடுக்காமலிருக்க? நீயும் உன் பெண்ணும் பிறக்கும் போது சேலையும், வேட்டியும் கட்டிக் கொண்டா பிறக்க முடிந்தது. இயற்கை என்று சொன்னால், பிறந்தது போலவேயல்லவா இருக்க வேண்டும். எதில் நீ இயற்கையோடு இருக்கிறாய்? சோறு தின்பதிலாகட்டும், துணிமணிகளை அணிவதிலாகட்டும், மற்றும் வாழ்விற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொள்வதிலாகட்டும், எதில் நீ இயற்கையோடு இருக்கிறாய்?

உனக்குத் தேவையானவற்றுக்கு மட்டும் இயற்கையையும், பகவானையும் சொல்வதில்லையே! உன் பாட்டுக்குத் தானே உனது காரியங்களையெல்லாம் செய்கிறாய் இயற்கை பகவான் என்று எந்தக் காரியத்தைச் செய்யாமல் இருக்கிறாய்? அல்லது உனது வாழ்க்கையில் எதில் நீ இயற்கையோடு வாழ்கிறாய்?

மனிதனுக்கும், மிருகத்திற்கும் உள்ள பேதமே மனிதனுக்குச் சிந்தனையும், ஆறாவது அறிவும் இருப்பதேயாகும். மனிதன் பிறந்து வாழ்வது பிள்ளைகள் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே அல்லவே! அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் மனிதனின் ஒழுக்கம், நாணயம் எவ்வளவு கெடுகிறது என்று பார்க்க வேண்டும். 10, 12-பிள்ளைகள் என்றால் அவன் எப்படி ஒழுக்கத்தோடு நாணயத்தோடு வாழ முடியும்? உனக்குக் கொடுக்கிற சம்பளம் ரூ.300 என்றால் கூடப் போதாதே! குழந்தைகள் படிக்க வேண்டும் - பாட்டு, நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் - நவநாகரிக உடைகள் உடுத்த வேண்டும். இப்படியெல்லாம் இருக்கும் போது மனிதன் தவறு செய்யாமல் எப்படி இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவான்? அவன் நாணயம், நேர்மை உடையவனாக இருந்தாலும், பிள்ளைக் குட்டிகளை முன்னிட்டு அவன் அதிலிருந்து தவற வேண்டியவனாகிறான்.

இந்தப் பிள்ளை பெறுகிற வேலை ஆண்களுக்கிருந்தால் தடுத்திருப்பான். பெண்களுக்கு இருப்பதால், அதுவும் அவர்கள் வீட்டிலேயே இருப்பதால் சோறு சமைப்பது, வீட்டு வேலை செய்வது, கணவனுக்குத் தேவையான காரியங்களைக் கவனிப்பது என்பதோடு இருப்பதால் - ஆண்களுக்குத் தங்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிற நிலையிலேயே இருப்பதால் பெண்களும் பிள்ளை பெறுகிற வேலையைப் பெரிய பளுவாகக் கருதவில்லை என்பதோடு, அது தங்களின் கடமையென்றே கருதும்படியாகவும், நம் புராண - இதிகாசங்கள் அவர்களை ஆக்கிவிட்டது.

இந்தப் பிள்ளைக்குட்டிகள் அதிகமானதால் விலை ஏற்றமடைகிறது; போதாமை அதிகமாகிறது. பணக்காரனுடன் ஏழை போட்டி போட முடியவில்லை; பணக்காரனுக்கு நல்ல பண்டமாகக் கிடைக்கிறது. விலை அதிகம் கொடுத்து வாங்கி விடுகின்றான். ஏழைகளுக்கோ மிக மோசமான பொருள்களே கிடைக்கின்றன. அதற்கும் அவன் விலை அதிகம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது; இதையெல்லாம் எவனும் நினைப்பதில்லை. விலை அதிகமானதால் உடனே அரசாங்கத்தைக் குறை கூறுகிறானே தவிர, தன்னிடமிருக்கிற குறையை எண்ணுவது இல்லை.

நான் 1928-இல் குடும்பக் கட்டுப்பாடுப் பிரசாரத்தை ஆரம்பிக்கும்போது அரசாங்கமே எதிர்த்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாடெல்லாம் பரவிற்று. இப்போது இந்தியாவில் நம் நாடு தான் முன்னணியிலிருக்கிறது. பிள்ளைப் பெறுவதைக் குறைத்துக் கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்தியாவில் மொத்தம் 30-இலட்சத்து 40-ஆயிரம் பேர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5-இலட்சத்து 40-ஆயிரம் பேர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5-இலட்சத்து 78-ஆயிரம் பேர் கருத்தடை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் 3.25-கோடி மக்கள். இந்தியாவில் எடுத்துக் கொண்டால் ஜனத்தொகைப்படி நாம் 14-இல் ஒரு பங்காக இருக்கின்றோம். நம் நாடு 14-இல் ஒரு பங்கு மக்களாக இருக்கிற நாம் கிட்டத்தட்ட 5-இல் ஒரு பங்கு கருத்தடை செய்து கொண்டிருக்கிறோம். நியாயமாக 14-இல் ஒரு பங்காக இருக்க வேண்டும். நாம் தான் அதிகமாகக் கருத்தடை செய்து கொண்டிருக்கிறோம். 7-கோடி மக்களுள்ள உத்தரப்பிதேசத்திலேயே 2-இலட்சம் பேர் தான் கருத்தடை செய்து கொண்டிருக்கின்றனர். மற்ற மாநிலங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் நம்மை விடக் குறைந்த அளவிலேயே கருத்தடை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவிலேயே நம் நாட்டில்தான் முதன் முதல் இந்தப் பிரசாரத்தை நான் ஆரம்பித்துச் செய்து கொண்டு வருகின்றேன். நம் நாட்டில் செய்து வந்த பிரசாரமும், முயற்சியும் வீணாகப் போகவில்லை. நாம் என்ன முடிவு செய்ய வேண்டும்? 1, 2-குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதற்கு மேல் பிள்ளை பெறக் கூடாது. இதனால் மனிதனின் ஒழுக்கம், செல்வம் இவை வளர்வதோடு, சுதந்திரமாகக் கவலையற்று வாழ முடியும் என்பதோடு, நாட்டிலேயும் அதிக நெருக்கடி ஏற்பட்டு ஒருவனை ஒருவன் "தின்கிற" நிலையும் இல்லாமல் போகும்.

நம் நாட்டில் குழந்தை பெறுவதை மதத்தோடு பிணைத்து விட்டான். குழந்தை இல்லாவிட்டால் நரகத்திற்குப் போவாய் என்கிறான். குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்றால் வேறு யாரிடமாவது, தன் மனைவியை விட்டுக் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறான்.

இது "ஞான பூமி, அவன் பிறந்த பூமி, இவன் பிறந்த பூமி" என்பான். ஆனால் உலகத்தை எடுத்துக் கொண்டால், நாம் இன்றும் காட்டுமிராண்டிகள் தான். நம் முன்னோர்கள் என்ன சொன்னார்கள்? பாட்டன் எப்படி இருந்தான் என்று பின்னால் போவானே ஒழிய, நமக்கு முன்னுள்ள நாட்டு மனிதன் எப்படி வாழ்கிறான் என்று முன்னோக்கிச் செல்ல மாட்டான். தனது அறிவை முன்னோக்கிச் சிந்திக்க விட மாட்டான். 2.000-வருடங்களுக்கு முன் எப்படியிருந்ததோ, 2-கோடி வருடங்களுக்கு முன் நம் ரிஷிகளும், வெங்காயங்களும் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்ப்பானே ஒழிய, நாளைக்கு நடக்கக் கூடியவற்றைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது கிடையாது.

நம் மக்கள் நாளையைப் பற்றிச் சிந்திக்காததும், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாததும், எல்லாம் கடவுள் செயல் என்று நம்பிக் கொண்டிருந்ததும் தான் நாம் வளர்ச்சியடையாமைக்குக் காரணமாகும்.

ஆனாலும், வெள்ளைக்காரன் வந்ததாலே, அவன் முயற்சி எடுத்து பல அற்புத அதிசயங்களைக் கண்டு பிடித்தாலே, கடவுள் எங்கேயோ போய் விட்டான். இப்போது மனிதன் சாவதில்லை. இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிகையில் பார்த்தேன். இதயத்தையே மாற்றி வைத்திருக்கிறார்கள். இன்னொருவனுடைய இதயத்தை எடுத்து வயதான ஒருவனுக்கு வைத்து அவன் மேலும் வாழும்படியாகச் செய்திருக்கிறார்கள். இப்படிப் பல அதிசய, அற்புதங்களைச் செய்து கொண்டு வருகிறார்கள்.

நம் நாட்டில் மிகப் படித்த மேதாவிகள் விஞ்ஞானத்திலேயே பட்டம் பெற்றவர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பூகோளம், வான சாஸ்திரம் எல்லாம் நன்றாகக் கற்றவர்கள். அவை பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்தவர்கள். அவர்களே கிரகணம் வருகிறது என்றால், வீட்டில் உட்கார்ந்து கொண்டு துக்கம் கொண்டாடுகிறார்கள். சூரியனையும் - சந்திரனையும் பாம்பு விழுங்கி விட்டது என்று அதை மீட்க ஜபம் செய்கின்றனர். இப்படி நம் நாட்டின் வாழ்வு - அறிவிற்கும், வாழ்விற்கும் சம்மந்தமில்லாமல் போய்விட்டது.

-------------------------30.12.1968 அன்று வாலிகண்டபுரம் குடும்பக் கட்டுப்பாடு வார விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 12.01.1968

1 comments:

Unknown said...

evalavu karuthaiyum hindukalidam mattumeh solah mudiyum mattra matham udaiyavaridam oru masurum solamudiyathu .