Search This Blog

13.2.13

குழவிக் கல்லுக்குக் கேட்குது ரூ.அய்ந்து கோடி!கடவுளைக் கற்பித்தவர் சிற்பி தானே?


சர்வதேச அளவில் பட்டினி அட்ட வணையில் இந்தியாவுக்கான இடம் 66. இந்த அட்டவணையில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 88.

இது சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மய்யம் தெரிவிக்கும் புள்ளி விவரம்.

இந்தியாவில் 50 விழுக்காடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுக் குறைவு - இது தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவிப்பது.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் கீழ் வருமானம் உள்ளவர்கள் இந்தியாவில் 70 விழுக்காடு என்பது இன்னொரு கணக்கு. (சென்குப்தா குழு அறிக்கை).
இவ்வளவு தரித்திரப் புழுக்கள்  குடலைப் பிடுங்கித் தின்னும் இந்தியாவில்தான், கோவில்களில் டன் டன்னாக தங்கக் கட்டிகள் - கோடிக்கணக்கான ரூபாய் இருப்பு - உருப்படுமா நாடு?

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே உள்ள ஒரு ஊர் திருக்கடையூர். இந்த ஊரில் உள்ள ஒரு கோவிலுக்குப் பெயர் அமிர்தகடேஸ்வரர்.

15 கிலோ தங்கம் மற்றும் மாணிக்கம், கனக புஷ்பராகம், பச்சை மரகதம், பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், முத்து உள்ளிட்ட நவரத்தினங்களைக் கொண்டு அபிராமி அம்மனுக்கு 4 கை, மார்பு, உபாதம், ஒரு ஒட்டியாணம் மற்றும் வஸ்திரங்கள் இரண்டு ஆண்டுகளாக 30 பேர் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டதாம்.

அம்மனுக்கு இந்த நவரத்தின மாலையை சென்னையைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவரால் சாத்தப்பட்டதாம். இதன் மதிப்பு ரூபாய் 5 கோடியாம்!

வறுமைக்கோடு ஒரு பக்கம் (32 சத விகிதம்); வெளிநாடுகளிலிருந்து கடன்கள் இன்னொரு பக்கம், இந்தக் கூத்தில் கோவி லில் குழவிக் கல்லுக்கு (சாமிக்கு) ரூ.5 கோடியில் நவரத்தின மாலை கேட்குதாம்.

எதற்கு இதனைச் செய்கிறார்களாம்?

பாம்பைக் கயிறாக்கி, மலையை மத்தாக்கி, திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர் தகலசத்திலிருந்து தோன்றியவர் அபிராமியம்மாள் உடனுறையும் அமிர்தகடேஸ்வரர். அவரிடம் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ வரம் பெற்ற மார்க்கண்டேயர் தஞ்சம் புகுந்தார். கெடுகாலம் முடிந்த பின் மார்க்கண்டேயன் உயிரைப் பறிக்க எமன் வீசிய பாசக் கயிறு, இறைவனையும் சேர்த்து இழுத்ததால், கோபம் கொண்ட அமிர்தக டேஸ்வரர் லிங்கத்திலிருந்து வெடித்து, வெளிப்பட்டு, சூலத்தினால் எமதர்மனைக் குத்தி சம்ஹாரம் செய்தார். மேலும் மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 ஆக வாழும் வரத்தையும் சிவன் தந்தாராம்.

(அந்த 16 வயதுடைய மார்க்கண்டேயன் அந்தப் பகுதிகளில் எங்கேயாவது திரிந்து கொண்டிருந்தால், அவனைப் பிடித்துக் கொண்டு வருக - தக்க சன்மானம் வழங்கப் படும் - அவனைப் பார்க்க ஆசை பீறிட்டுக் கிளம்புகிறது).

இந்தக் கோவிலில் 59 வயது முடிந்து 60 இல் காலடி எடுத்து வைக்கும் இணையர்கள் நேரில் வந்து பூஜை புனஷ்காரங்கள் செய் வார்கள். அது அதற்கென்று தனி ரேட் - ரூபாய் ஒரு லட்சம் வரை உண்டு.
இந்தக் கோவிலில் உள்ள அர்ச்சகப் பார்ப்பனர்கள் தனி அலுவலகம் வைத்து, கம்ப்யூட்டர் எல்லாம் வைத்துப் பூஜைக்கு ஆள் பிடிக்கும் தொழிலை (ஞசடிகநளளடி) ஜாம் ஜாம்வென்று நடத்தி வருகின்றனர்.

சென்னை நகை வியாபாரி ரூ.5 கோடி மதிப்புடைய நவரத்தின மாலையை ஏன் சாத்தினார் தெரியுமா?

மார்க்கண்டேயன்போல என்றும் 16 வயது வரம் பெறுவதற்காகத்தான் - புரிகிறதா?

பேராசைதானே பக்தி!

இவ்வளவுக்கும் இந்தக் கடவுள்களாகிய சிலைகளைச் செதுக்கிய சிற்பிகளின் கருத்தென்ன?

குமரி முனையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையைச் செய்தவரும், மிகப்பெரிய கோவில் கருவறை சாமி சிலை களைச் செய்து புகழ்பெற்ற சிற்பியுமாகிய கணபதி ஸ்தபதி (அண்மையில்தான் மறைந்தார்) என்ன சொல்கிறார்?

ஒரு கடவுள் சிலையை வடி வமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கட வுளை? அவர் எப்படி இருப் பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அத்தனைத் தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டுவர முடியுது? கோவிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படுறீங்க? நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தி யைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கறாங்க? நாங்க தானே? எங்கக்கிட்ட அப்படி என்னதான் வித்தை இருக் குன்னு தெரிஞ்சுக்க வேண் டாமா?

                                         ---------------------(கல்கி, பேட்டி, 11.6.2006).
சூட்சமம் புரிகிறதா? பிரபல சிற்பி கணபதி ஸ்தபதிதான் இப்படிச் சொல்லி இருக்கிறார். அதுவும் கல்கி பேட்டியில்.

ஆகக் கடவுளைக் கற்பித்தவர் சிற்பி தானே?

அதற்குப் போய் இப்படி கோடிக்கணக் கான ரூபாயைச் செலவு செய்து நவரத்தின அங்கி சாத்துகிறார்களே - அந்தோ பரிதாபம்!
                            ------------------------------"விடுதலை” 13-2-2013

11 comments:

தமிழ் ஓவியா said...


வெறித்தனம் வீழ்த்தப்படவேண்டும்!காரைக்காலைச் சேர்ந்த - சென்னையில் பணி யாற்றிக் கொண்டிருந்த பொறியாளர் வினோதினி என்னும் பெண் ஒருதலைக் காதல் கொண்ட வெறியன் ஒருவனால் அமிலம் (ஆசிட்) வீசப்பட்டு மூன்று மாத மருத்துவ உதவிக்குப் பிறகு நேற்று மரணமடைந்தார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீவிர மான மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மரணமடைந் தார் என்ற செய்தி நாட்டை உலுக்கி எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதி களிலும் அது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் அந்தக் கொடுமைகள் நடந்து வந்திருக்கின்றன. ஊடகங் களின் நேர்மையற்ற தன்மையால் பெரிய அளவுக்கு வெளிச்சத்திற்கு வரவில்லை.

காரைக்கால் வினோதினி நேற்று மரணமடைந் தார் என்ற தகவல் வெளிவந்த ஒரு சில மணி நேரத்தில், மயிலாடுதுறை பகுதியில் மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட ஒருவன், அதற்கு அந்தப் பெண் இசையாத நிலையில், அவரைத் தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இது நாடா? கொடிய விலங்குகள் திரியும் காடா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான மூல நோய் எது என்பது அறியப்படவேண்டும். நோய் நாடி நோய் முதல் நாடி தீர்வு காணப்படவேண்டும்.

பெண்கள் என்றால் மென்மையானவர்கள், பல கீனமானவர்கள் என்ற நிலையில் மாற்றம் தேவைப் படுகிறது. அதற்கான பயிற்சிகள் அவசியம் தேவை!

பாலுணர்வு என்பது இயற்கையானதுதான். அது ஒரு பசியாகவோ, தாகமாகவோ கூட இருக்கலாம்; இருக்கக்கூடும். அதுவே வெறியாகும்பொழுதுதான் இதுபோன்ற விபரீதங்கள் தலைதூக்கி நிற்கின்றன.

நம்முடைய கல்வி முறை, கலாச்சார சாதனங்கள், ஊடகங்கள் இந்தப் பிரச்சினைகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

அறிவியல் ஒருபக்கம் வளர்வது சமுதாய வளர்ச் சிக்கு அவசியம் என்றாலும், அதுவே தவறாகப் பயன்படுத்தப்படும்பொழுது எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இணைய தளம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன.
ஏடுகள், இதழ்கள் என்பனவற்றை எடுத்துக் கொண்டால், அட்டைப்படத்திலிருந்து உள்ளடக் கங்கள் வரை பெரும்பாலான இடத்தை சினிமா தொடர்பான சங்கதிகள்தான் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

அட்டைப் படங்களே அரைகுறை ஆடைகளை உடைய ஒரு பெண் - அது பெரும்பாலும் நடிகை என்பது ஒரு முடிந்த முடிவாகி விட்டதோ என்று கருதவேண்டியுள்ளது. நடிகைகளின் அந்தரங்கங் களை அலசுவதுதான் ஊடகங்களின் முக்கிய பணியா? நாய் விற்ற காசு குரைக்காது என்ற எண்ணமா?

ஊடகங்களுக்கு ஏனிந்த வக்கிரப்புத்தி? சின்னத் திரைகளும், பெரிய திரைகளும் தத்தம் பங்குக்கு இவற்றில் சமுதாயத்திற்குப் பெரும்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.

கல்லூரிப் பேராசிரியைகளைக் கேலி செய்யும் மாணவர்கள், ஆசிரியைகளைக் காதலிக்கும் மாணவர்கள், இரட்டைப் பொருள் தரும் வசனங்கள், குத்துப்பாட்டு நடனங்கள் என்று புரை ஏறும் அளவுக்கு சமாச்சாரங்கள் அன்றாடம் நம்மைச்சுற்றி நடந்துகொண்டுதானிருக்கின்றன.
பொழுதுபோக்கும் அம்சங்கள் பொழுதையே முற்றிலும் போக்கும் - நாசப்படுத்தும் அம்சங்களாக மாறி இருப்பது கெட்ட வாய்ப்பாகும். சுற்றிச் சுற்றி எங்கு வந்தாலும் சந்திக்கக் கூடிய இடம் பாலியல் உணர்வுகள்தானா? இதைத்தவிர வாழ்க்கையில் வேறு முக்கிய அம்சங்களே கிடையாதா?

இந்தத் திசையில் சிந்தனைகள் வெடித்துக் கிளம்பவேண்டும். கல்லூரிகள் அளவிலாவது பாலியல் தொடர்பான கல்வி என்பது உலகம் முழு வதும் பேசப்படுகிறது - வேறு எந்த காலகட்டத்தை யும்விட இந்தக் காலகட்டத்தில் சிந்தித்துச் செயல் படுத்தப்படவேண்டியது காலத்தின் கட்டாயம் இது!

படிக்கும் வயதில் படிப்பு, விளையாட்டு, என்.சி.சி. போன்ற பயிற்சிகள் சமூகப் பணி என்று மாணவர்கள் சிந்தனை மேம்பட்ட நோக்கில் செலுத்தப்படு வதற்கான கல்வித் திட்டம்பற்றி கல்வியாளர்களும், ஆட்சியாளர்களும் சிந்திக்கட்டும், செயல்படட்டும்! பயிற்சிக்கான பருவமாக இருக்கவேண்டுமே தவிர, பாழ்படும் பருவமாக அது இருக்கக்கூடாது - கவனம்! கவனம்!!

பெற்றோர்களுக்கும் இதில் பொறுப்புண்டு!

தமிழ் ஓவியா said...

கண்டனங்களிலிருந்து தப்பிக்க இலங்கை முயற்சி! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, பிப். 13- உலக நாடுகளின் கண்டனங்களிலிருந்து தப்பிக்க இலங்கை அரசு பல தந்திரங்களை மேற்கொண்டு வருகிறது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அறிக்கை வருமாறு:

இலங்கையில் தமிழர்கள் வாழும் 89 கிராமங்களுக்கு இருந்த தமிழ்ப் பெயர்களையெல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றியதைப் பற்றி நான் முன்னரே ஆதாரங்களோடு விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறேன். தற்போது இலங்கையில் 367 இந்துக் கோவில் களை இடித்துள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்தச் செய்தியினை இண்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட் என்ற இதழ் விரி வாக வெளி யிட்டுள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி களில் உள்ள கோயில்கள் உட்பட அனைத்து நினைவுச் சின்னங்களையும் ஒழிப்பது என்கிற கொள்கை முடி வினை ராஜபக்ஷே அரசு எடுத்திருப்ப தாகவும், தமிழர்கள் வாழ்ந்த இடங் களின் அடையாளங்கள் அனைத்தை யும் அழித்து விட்டு, அந்த இடங்க ளில் சிங்களவர் குடியிருப்புகளை ஏற்படுத்தும் பணியினைச் செய்து வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் மட்டும் 208 கோயில்கள் இதுவரை தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற திரிகோணமலைப் பகுதியிலே 17 இந்துக் கோயில்கள் இடித்துத் தள் ளப்பட்டுள்ளதாம். வவுனியா, மன்னார், அம்பாரை மாவட்டங்களி லும் பல கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த இடங்களில் இந்துக் கோயில்கள் இருந்தன என்ப தற்கான அடையாளங்களே எதுவு மில்லை என்றும் அந்தச் செய்தியிலே கூறப்பட்டுள்ளது.

இந்தக் கொடுமை களுக்கெல்லாம் அடுத்த மாதம் அமெரிக்கா கொண்டு வரவிருக்கின்ற தீர்மானத்தின் மூலமாகவாவது விடிவு காலம் ஏற்படுமா என்பது தான் நம்முடைய இன்றைய கவலையாகும்.

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக் கூடாது!

மேலும், இலங்கை அரசு தொடர்ந்து செய்து வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில், இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திடத் திட்டமிடப்பட் டுள்ள காமன்வெல்த் மாநாட்டை, வேறொரு நாட்டில் நடத்த வேண்டு மென நியூயார்க்கில் உள்ள சர்வ தேச மனித உரிமை அமைப்பு, காமன் வெல்த் தலைவருக்கு கடிதம் அனுப்பி யுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடருவதால், காமன் வெல்த் மாநாட்டினைப் புறக்கணிக் கப்போவதாக கனடா போன்ற நாடு கள் எச்சரித்துள்ளன. இந்தச் செய்தி கள் எல்லாம் இலங்கை ராஜபக்ஷே அரசின் கொடுமைகளை உலக நாடு கள் புரிந்து கொள்ளத் தொடங்கி யிருக்கின்றன என்பதை உணர்த்துவ தால், அது நமக்கு நம்பிக்கை அளிக் கின்றது.

தமிழ் ஓவியா said...

உலகநாடுகளும், உலக அமைப் புகளும் இலங்கையில் நடைபெற்ற - மனித உரிமை மீறல்களையும், ராஜ பக்ஷே அரசு புரிந்திருக்கும் வரலாறு காணாத போர்க் குற்றங்களையும் புரிந்து கொண்டு இலங்கை அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டுமென்று தீர்மானித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றன. சர்வ தேச அளவில் நடை பெறும் இந்த முயற்சிகளைப் புரிந்து கொண்டு தான், அவற்றை எப்படியா வது திசை திருப்பிட வேண்டுமென்ற தந்திரத்தோடு, மீண்டும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப் போகிறார் கள் என்று இலங்கை அதிபர் ராஜ பக்ஷேயின் தம்பியும், இலங்கைப் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷே பேசியிருக் கிறார்.

விடுதலைப்புலிகள் மீண்டும் தாக்குவார்களா?

தமிழ் ஓவியா said...

மேலும் கோத்தபாய ராஜபக்ஷே தனது உரையில்: இலங்கைக்கு எதி ராகச் செயல்படும்படி உலக நாடு களை விடுதலைப் புலிகளின் ஆதரவா ளர்கள் நிர்ப்பந்திக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள், இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் ராணுவத் தலைமை அழிக்கப்பட்டு விட்ட தெனினும்; மிகப் பெரிய அளவிலான விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு பிரிவினர் தான் அழிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சர்வ தேச அளவில் அவர்கள் ஜனநாயகவாதிகள் போன்ற முகத்தைக் காட்டி வந்தா லும், அவர்கள் இலங்கைக்கு எதிராக மீண்டும் தாக்குதல் தொடுக்கக் கடுமை யாக முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

சர்வதேச அளவில் இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகள் இலங்கை அரசின் திட்டங்களைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இலங்கையில் நடைபெற்று வரும் மறு குடியமர்வுப் பணிகள் குறித்துத் தவறானத் தகவல் களைப் பரப்பி வருவதன் மூலம், சர்வ தேச மன்றங்களில் உலக நாடுகளை இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்குத் துண்டுகின்றனர் என்று குறிப்பிட்டிருப்பதில் இருந்தே;

ஜெனிவா நகரில் அடுத்த மாதம் நடை பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அதி பர் ராஜபக்ஷேக்கு எதிராக அமெ ரிக்கா கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை முனை மழுங்கச் செய் திடும் முயற்சியில் இலங்கை அரசு சாதுர்யமாக ஈடுபடத் தொடங்கி யுள்ளது என்பதைப் புரிந்து கொள் ளலாம்.

உலகத் தமிழர்கள் நம்பிக்கை!

இலங்கை அதிபர் ராஜபக்ஷே எப்படிப்பட்ட தந்திரோபாயங்களைக் கையாண்ட போதிலும், உலக நாடு களின் கண்டனத்திலிருந்தும், தண்ட னையில் இருந்தும் தப்பி விட முடி யாது என்பதே உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் நம்பிக்கையாகும்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்பார்ப்பான்

செய்தி: 2020 ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் நீக்கப்படுமாம்!
சிந்தனை: அதற்குப் பதிலாகக் கிரிக்கெட்டை சேர்த்தாலும் சேர்ப்பார்கள் - மல்யுத்தத்தில் எந்தப் பார்ப்பான் இருக்கிறான்?

தமிழ் ஓவியா said...


படித்தவர்களும் ஜாதியைப் பார்த்தே வாக்களிப்பதா?


பிரஸ்கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கண்டனம்

புதுடில்லி, பிப்.13- இந் தியாவில் படித்தவர் கள்கூட ஜாதியைப் பார்த்தே வாக்களிக் கின்றனர் என்று பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தி யாவின் தலைவரும், உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

கட்ஜு உரை

டில்லியில் வோட் ஃபார் இந்தியா என்ற வாக்காளர் விழிப் புணர்வு அமைப்பின் சார்பில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது:

வாக்களிக்கச் செல் லும்போது, வேட்பா ளர்களின் தகுதியை ஆராயாமல் ஜாதி அடிப்படையிலேயே 90 சதவிகித வாக்கா ளர்கள் வாக்களிக்கின் றனர். படிக்காதவர்கள் மட்டுமின்றி, படித்த வர்களும் இப்படித் தான் இருக்கின்றனர். பேராசிரியர்களும், வழக்குரைஞர்களும்கூட ஜாதி அடிப்படையில் தான் வாக்களிக்கிறார் கள். நாடு அந்த அள வுக்குப் பின்தங்கி உள்ளது.

மக்கள் தங்கள் ஜாதிக்காரர் என்று கருதி வாக்களித்ததா லேயே குற்றப் பின் னணி உள்ள பலரும் தேர்தலில் வென்றுள் ளனர். ஜனநாயகம் என்பது தொழில்துறை சார்ந்த சமூகத்தின் பணியா கும். இது பண்ணை யார் முறை நிலவும் விவசாயச் சமூகத்தின் பண்பு அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 வரை இந்தியாவும் பண்ணையார் முறை கொண்ட விவசாயச் சமூகமாகவே இருந் தது. இந்தியாவைத் தொழில்மயமாக்காமல் வைத்திருக்கவேண்டும் என்பதே ஆங்கிலே யரின் கொள்கையாக இருந்தது.

நாடு விடுதலை பெற்றபோது, நமது முன்னோர்கள் மேற்கத் திய பாணியிலான அரசியல் சாசனத்தை உருவாக்கினர். பின் தங்கிய நிலையில் இருந்தும், ஆண்டான் - அடிமை சித்தாந்தத் தில் இருந்தும் சமூ கத்தை உயர்த்துவது, அதை நவீன தொழில் யுகத்துக்கு அழைத்துச் செல்வதுமே அவர் களது நோக்கம். இத னால் தொழிற்சாலை கள் அமைந்து, நாடு முன்னேறியது. ஆனால், இடையில் பரம்பரைச் சக்திகள் தலைதூக்கியதன் விளைவாக மக்கள் ஜாதி அடிப்படையில் வாக்களிக்கத் தொடங் கினர் என்றார் கட்ஜு.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களவை துணைத் தலைவர் கரியமுண்டா உரை யாற்றுகையில்,

நாட்டில் படித்த வர்கள் உள்பட கணிச மான மக்கள் வாக் களிக்கச் செல்வதே இல்லை. வாக்களிப்ப தால் என்ன பயன் என்று பலரும் நினைக் கிறார்கள். ஒவ்வொரு வரும் இதேபோல் சிந் தித்தால், வாக்குப் பதிவே நடக்காது என்று சுட்டிக்காட்டி னார்.

தமிழ் ஓவியா said...


தீராது


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


உயிர் குடிக்கும் கும்பமேளா


புதுடில்லி, பிப். 13- அலகாபாத்தில் நடை பெற்று வரும் கும்ப மேளாவில், 2.75 லட்சம் பேர் காணாமல் போய் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் கும்பமேளா, உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் தற் போது நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் குழுமியுள்ள இந்த விழாவில், காணா மல் போவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூட்ட நெரி சல் காரணமாக, குடும் பத்தினரிடம் பிரிந்து சென்றவர்களை மீட்கும் பொருட்டு, ஆங்காங்கே மய்யங்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், தங் களுக்கு வந்துள்ள தக வலின்படி, 2.75 லட்சம் பேர் மாயமாகி உள்ள தாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

கும்பமேளா பலன்!

மும்பை, பிப்.13- கும்பமேளாவுக்குச் சென்று வந்தார் மும் பையைச் சேர்ந்த சிவ மணி மிஸ்ரா. மும் பையில் மட்டும் 25 பெட்ரோல் பங்க்கு களை நடத்தி வருகிறார்.
கும்பமேளாவுக்குச் சென்று, பின் திரும்பி வீட்டுக்குச் சென்ற போது, ஒரு கோடி ரூபாய் வீட்டில் கொள் ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
கும்பமேளாவுக்குச் சென்று வந்ததால் ஏற் பட்ட கைமேல் பலனோ இது!

தமிழ் ஓவியா said...


காதலர் நாள்

இன்று உலகெங்கும் காதலர் நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.

காதல் என்பது மனித இயற்கை - அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்று பாடினார் புரட்சிக் கவிஞர்.

காதல் மட்டும் அல்ல; எதுவாக இருந்தாலும் கட்டுக்கு அப்பாற் போனால் ஆபத்துதான். ஏதோ விதி விலக்காக காதல் தோல்வி அடைவதாலோ தவறுதலான புரிதலாலோ எதிர் விளைவுகள் ஏற்படுவதை முன்னிறுத்தி, காதலே கூடாது -அது ஒழுக்கக் கேடானது என்று கூக்குரல் போடுவது அசல் பிற்போக்குத்தனமாகும். காதல் இல்லாமல் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்பட்ட திருமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் புயல்கள் வீசவில்லையா!

விவாகரத்துத் திருமணம் இத்தகையவர்களிடம் தான் அதிகம் என்ற புள்ளி விவரம் - எதைக் காட்டுகிறது?

சமுதாயத்தின் பல்வேறு கேடுகளுக்குச் சரியான வளர்ப்பும், முறையான கல்வித் திட்டமும் இல்லாததே காரணம் ஆகும்.

காதல் நாளை எதிர்த்து சில சக்திகள் புறப்பட்டுள்ளன; ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற சங்பரிவார்கள் கும்பல் இதனைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

இந்(து)த மதவாத சக்திகள் காதலை வெறுப் பதற்கு அடிப்படைக் காரணம், காதல் திரும ணத்தில் ஜாதிக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. மதத்திற்கு மரணக் குழி வெட்டப்படுகிறது என்பதுதான்.

ஜாதி என்பது பற்றி ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகம் என்று கூறப்படும் பஞ்ச் ஆஃப் தாட்ஸ் எனும் நூலில் கோல்வாக்கர் என்ன கூறுகிறார்?

நீண்ட காலமாக சிலர் ஜாதியை எதிர்த்து வருகின்றனர். ஜாதி அமைப்பு முறை இருந்த பழங்காலத்தில் நாம் மிக உயர்ந்த நிலையில் இருந்தோம். ஜாதி என்கிற அமைப்பு நமது முன்னேற்றத்திற்கோ, வளர்ச்சிக்கோ முட்டுக் கட்டையாக இருந்ததில்லை. அவற்றிற்கு ஆதாரமும் கிடையாது. ஜாதி அமைப்பு முறை சமுதாயத்தில் ஒற்றுமையைக் காப்பாற்றவே பயன்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படையிலேயே இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து வெறிக் கும்பல் ஜாதியை ஒழிக்கும் காதலை, காதல் திருமணங் களை எதிர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

ஜாதியைக் காப்பாற்றக் கூடியவர்களும் காதலை வெறுப்பார்கள் - எதிர்ப்பார்கள் என்பதை இன்றைக்கு நேரிடையாகக் காண முடிகிறது.

அந்த வகையில் பார்க்கும் பொழுது இந்த நவீன அரசியல்வாதிகளும் இந்த ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது அம்பலமாகி விட்டது.

ஒரு கேள்விக்கு இந்துத்துவா வாதிகள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். இவர்களின் முக்கிய கடவுளான கிருஷ்ணன் என்பவன் காதல் லீலை மன்னன் தானே?

வீட்டுக்கு வீடு கோபியர்களுடன் கொஞ்சும் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு வழிபடும் இவர்கள், காதலை வெறுப்பது ஏன்?

காதலைப்பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை தவறான வகையில் வியாக்கி யானம் செய்ய சிலர் புறப்பட்டுள்ளனர்.

எல்லாமே காதல் தான் - அதற்கு மேல் உலகில் வேறு எதுவும் இல்லை என்று கூறுவதைத்தான் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். அது ஒரு வகையான உணர்வு - அதற்கு அளவுக்குமேல் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று கூறும் தந்தை பெரியார் இதில் மற்றவர்கள் பிரவே சிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசிய மான ஆதிக்கம் செலுத்துவதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல் என்பது குறிப்பிட்ட வயது அளவு ஓர் ஆணின் - பெண்ணின் தனிப்பட்ட முடிவாகும். அது கூடாது என்பதோ, தடுப்பதோ அதிகப் பிரசங்கித் தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தைத்தான் திராவிடர் கழகம் வலியுறுத் துகிறது.

கல்விக் கூடங்களில் ஆண் - பெண் மாணவர்கள் சேர்ந்து கற்கும் தன்மையைத் தந்தை பெரியார் வரவேற்கிறார் (விடுதலை 22.5.1967) என்பதையும் குழப்பவாதிகளுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். 14-2-2013

தமிழ் ஓவியா said...


தேவையில்லாதவர்கள்


ஆரியர்கள் இனி நம் நாட்டுக்குத் தேவையில்லாதவர்கள்; ஒழிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் இல்லாம-லிருந்தால் இந்த இழி நிலைக்கு நாம் வந்திருப்போமோ? (விடுதலை, 21.3.1954)

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பொன்மொழி


பகுத்தறிவு வளர்ந்தால்...

மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.