Search This Blog

20.2.13

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மீதான படுகொலை ஊட்டும் உணர்வு

பாலச்சந்திரன்மீதான படுகொலை ஊட்டும் உணர்வு

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் - பாலகன் பாலச்சந்திரனை சிங்கள இன வெறியன் இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு காட்டு விலங்காண்டித்தனமாக - குரூரமாக நெஞ்சில் ஒரு துளியும் இரக்கமுமின்றி சுட்டுக் கொன்ற விதம் உலக மக்களைப் பதைபதைக்கச் செய்துவிட்டது.

நேற்று இந்து ஏட்டில் முதல் பக்கத்தில் வெளிவந்த அந்தச் சிறுவனின் முகம் வெளிறிக் காணப்பட்ட காட்சி! படத்தைப் பார்த்தவர்களின் நெஞ்சில் வடிந்த ரத்தக் கசிவு எளிதில் உறையாது.

வேறு எந்தப் பிரச்சனையை நோக்கிக் கவனம் செலுத்தினாலும் இந்தக் காட்சி அவர்கள் நினைவில் குறுக்கே குறுக்கே வந்து நிற்கிறது.

சீ..... இப்படியும் சில மனிதர்களா? ஆட்சியாளர்களா? என்ற வினாக்கள்தான் எழுந்து நிற்கின்றன.

ஏதோ தின்பண்டம் கொடுத்து, பழுது ஏதும் அறியாத அந்தப் பால் வடியும் பாலகனைக் குரூரமாகக் கொன்றுள்ளார்களே!

அந்தப் பாலகனின் முன்னிலையிலேயே சிலரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர் - அந்த மனித உருவத்தில் நடமாடும் மிருகங்கள்.

இலங்கை சிங்கள அரசு இதனைச் சிறிதும் எதிர்பார்த்திருக்காது. அதுவும் காலம் காலமாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஜெயவர்த்தனேயின் சீடராக இருந்து செயல்பட்டு வந்திருக்கிற இந்து ஏட்டில் படத்துடன் இந்தச் செய்தி வெளி வந்திருப்பதை ராஜபக்சே எதிர்பார்த்திருக்கக் கூட மாட்டார்.

ஆனாலும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது நடைமுறையில் வழங்கப்படும் பழமொழியாகும்.

பல நாடுகளில் ஆயுத உதவியைப் பெற்று ஈழ விடுதலைப்புலிகளை, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து விட்டோம் என்று ஆணவத்தின் உச்சியில் நிர்வாணக் கூத்தாடிய ராஜபக்சே - தன்னை நோக்கிக் கடுமையான அம்புகள் பாயும் என்று நினைத்திருக்க மாட்டார்; காரணம் அதிகார வெறியும், ஆணவமும், அழித்து முடித்து விட்டோம் என்ற திமிரும் அந்தக் கொடியவனை அவ்வாறு நினைக்கச் செய்திருக்கும்.

தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான மானமிகு டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளது போலவே ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்பதற்கு பாலச்சந்திரன் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம் ஒன்று போதாதா என்று வினா எழுப்பியுள்ளது மிகவும் சரியானதாகும்.

இதற்கு மேலும் எந்த ஒரு நாடாவது ஜெனிவாவில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மறுக்குமேயானால், அந்த நாடுகளையும் ராஜபக்சேயின் பட்டியலில்தான் வைக்க வேண்டும் - வரலாறும் அவ்வாறுதான் எள்ளி நகையாடும்.
இலட்சக்கணக்கான யூதர்களை ஆரிய வெறியன் அடால்ப் ஹிட்லர் கொன்று குவித்துக் குதியாட்டம் போடவில்லையா? இறுதியில் நஞ்சு அருந்தித் தற் கொலை செய்து கொண்டான். அந்த நிலைக்கு ராஜ பக்சேயை விட்டு விடாமல், விரைந்து அதிகாரபூர்வமாக உலக நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அதற்கான தண்டனையை அனுப வித்தே தீர வேண்டும்.

ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு. மருத்துவமனைகள், மத நிறுவனங்கள், குழந்தைகள் இல்லம் இவற்றின்மீது குண்டு மாரி பொழியவில்லையா?

பத்திரிகைக்காரர்களைத் தீர்த்துக் கட்டவில்லையா? 2006 முதல் 2009 வரை ஒன்பது பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 27 பேர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாகரன் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது, கடத்தப்பட்டது குறித்து எழுப்பிய வினாவுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.  உலகில் எங்கு போர் நடந்தாலும், அங்கெல்லாம் சென்று பொது மக்களுக்குத் தொண்டுக்கரம் நீட்டக் கூடிய செஞ்சிலுவைச் சங்கத்தினர்கூட அவர்களின் தொண்டினைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அடுக்கிக் கொண்டே போகலாம் போர்க் குற்றவாளி ராஜபக்சே என்பதற்கான காரணங்களை...

உலக நாடுகள் மதிப்புப் பெற - குறிப்பாக இந்தியா - மனித உரிமை காப்பாற்றப்படக் குரல் கொடுக்கும் நாடு தான் என்பதை நிலைநாட்ட - அய்.நா. தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள - நம் முன் எழுந்து நிற்கும்  அரிய வாய்ப்பு - அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானமாகும். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் நடந்து கொள்ளட்டும்! பாலகன் பாலச்சந்திரன்மீதான படு கொலை இந்த உணர்வை ஊட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

           ---------------------” விடுதலை” தலையங்கம் 20-2-2013

17 comments:

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாதுபார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது.
(விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...


வீறுகொண்டெமுக!


கொஞ்சி விளையாடிய
குழந்தைமுகம் கண்டும்
துமுக்கி கொண்டு
துடிதுடிக்கக் கொல்லத்
துணிந்தனரே!
பால்வடியும் முகத்தைப்
பார்த்தவர்க்குக் கண்ணில்லையா?
பச்சைப் பசுந்தளிரைப்
பழிகாரப் பாவிகள்
பதைக்கப் பதைக்கக்
கொன்றனரே!
பிஞ்சுமனம் துவண்டவிதம்
அறிவோமா நாம்?
கறைபடிந்த காந்தியும்
புனிதம் தொலைந்த புத்தரும்
வரலாற்றின் ஏடுகளில்
வாழ்விழந்து போயினரே!
நெட்டைமரமென நின்றுபுலம்புகிறோம்!
வெற்றுப் புலம்பல்
விடியலைத் தந்திடுமோ?
வீறுகொண்டு எழுக
வீரத் தமிழினமே!

- மறைமலை

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


92 வயதை நெருங்கும் ஒரு சிவப்பு சுயமரியாதைக்காரரின் கடிதம்

திருவாளர் கி.வீரமணி அவர்களுக்கு

செங்கம் தியாகி ஆர். இராமசாமி எழுதி கொண்ட மடல் நலம் நலம் அரிய அவா தாங்கள் 13ஆம் தேதி இட்ட கடிதமும் பெரியார் புத்தகமும் கிடைக்க பெற்றேன் பெரு மகிழ்வு அடைந்தேன் பெரியார் அவர்களே என் வீட்டிற்கு வந்துவிட்ட மகிழ்வு அடைந்தேன் தங்களுக்கு உள்ள வேலையில் இதை செய்ததை என் ஆயுட் காலம் வரையில் மறக்க மாட்டேன். தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஊர் புதுப்பாக்கம் இல்லை. புதுப்பாளையம் என தெரியப்படுத்திக் கொள்கிறேன். அந்த காலத்தில் செங்கம் தாலுக்காவே பெரியாரின் கோட்டையாக இருந்தது என்பதையும் தெரியப்படுத்தி கொள்கிறேன்.

தண்டராமபட்டில் இரங்கசாமி ரெட்டியார், செங்கத்தில் வெங்கிடாஜல முதலியார், புதுபாளையத்தில் பி.ஆர். குப்புசாமி செட்டியார், காஞ்சியில் முத்துராமரெட்டியார், செர்பந்தலில் சுப்புநாயுடு போன்றவர்கள் எல்லாம் அவருக்கு தூண்களாக இருந்த காலம் அது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். இத்துடன் நான் எழுதிய இரு புத்தகம் இரண்டு அனுப்பி உள்ளேன். பெற்றுக் கொள்ளவும். நான் ஏற்கெனவே என்னிடத்திலிருந்து ஆயிரம் புத்தகங்களை எங்கள் கட்சி அலுவலகத்திற்கு கொடுத்து விட்டேன். தற்போது சேர்த்துள்ள புத்தகங்களையும் கொஞ்சம் வாசகர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்பதைத் தெரியபடுத்தி கொள்கிறேன்.

தாங்கள் திருவண்ணாமலைப் பக்கம் நிகழ்ச்சிக்கு வந்தால் எனக்குத் தெரியப்படுத்தும்படி கேட்டு கொள்கிறேன்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதிக்கு மேல் எனக்கு 92ஆவது ஆண்டு வருகிறது. அதற்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய உள்ளேன். உங்களுக்குச் சந்தர்ப்பம் இருக்குமானால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எனக்கு மனத் திருப்தி ஏற்படும் என் வரவேற்பு அறையில் ஒரு பக்கம் பெரியார் படமும், இன்னொரு பக்கம் காரல்மார்க்ஸ் படமும் வைத்துள்ளேன் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன்.

தோழமையுள்ள
ஆர். இராமசாமி

தமிழ் ஓவியா said...


இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!


பிரபாகரன் மகன் படுகொலைப் படங்கள் பொய்யா?

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்!

பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

தமிழர் தலைவர் அறிவிப்பு


மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச் சந்திரனைப் படுகொலை செய்ததோடு அல்லாமல் அந்த உண்மைச் செய்தியை - வெளியில் வந்த படங்களை பொய்யென்று கூறி உலக மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவும் இலங்கை அரசின் தூதரக அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அந்நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே - மாவீரன் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாக மார்பில் அய்ந்து குண்டுகளைப் பாய்ச்சிப் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட படங்களை உலகெங்கும் பரப்பி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டார்.

இன்று உலகளவில் பேசப்படும் முதல் நிலைச் செய்தி இதுதான். இதன் மூலம் இலங்கை சிங்கள இனவாத அரசு - அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மனிதாபிமானமற்ற கொடிய இட்லர் முகம் உலகெங்கும் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும் ஒரு கால கட்டத்தில்...

அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க அரசால் இலங்கைக்கு எதிராகப் புதியதோர் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள ஒரு கால கட்டத்தில் இப்படி ஒரு செய்தி உலகெங்கும் தொலைக்காட்சி மூலம் அதிரடியாக வெளி வந்திருப்பது - இலங்கை அரசின் மீதான உலகப் பார்வை மேலும் கொழுந்து விட்டு எரியக் கூடிய நிலைதான். போர்க் குற்றவாளிதான் ராஜபக்சே என்பதற்குக் கூடுதல் சாட்சியமாகும்.

மிகப் பெரிய நெருக்கடியில் இலங்கை அரசு

கடுமையான - அதேநேரத்தில் உண்மையான இந்தக் குற்றச்சாற்றிலிருந்து எப்படியாவது விடுவிக்கப்பட வேண்டும் என்ற மிகப் பெரிய நெருக்கடிப் பள்ளத்தாக்கில் இலங்கை அரசும், ராஜபக்சேவும் தள்ளப்பட்டு விட்டனர்.

பொய்தானே - இந்தக் கொடியவர்களின் கையில் உள்ள கேடு கெட்ட பொல்லாத ஆயுதம்?

ஹிட்லரும், முசோலினியும், இடி அமீன்களும் என்றாவது உண்மைகளைப் பேசி இருக்கிறார்களா? இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் (பிரிகேடியர் ரூபன் வானிகசூர்யா) என்ற ஒருவர் பெயரால் பிரிட்டன் சேனல் 4 ஒளிபரப்புப் படங்கள் பொய்யானவை என்று மறுப்பு வெளி வந்துள்ளது.

கெல்லம்மெக்ரே திட்டவட்ட அறிவிப்பு

படுகொலை செய்யப்பட்ட பிரபாகரன் மகன் பாலசந்திரன் படம் உண்மையானதுதான்; சித்திரிக்கப் பட்டவையல்ல; வெளியிடப்பட்ட படங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார் - பிரிட்டன் நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே.

அது மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களுக்கு எதிராக சிங்கள இராணுவ வெறியர்கள் நடத்திய பாலியல் வன்கொடுமை, சரண் அடைய வந்த போராளிகளை சுட்டுக் கொன்ற காட்சிகள் எல்லாம் விரைவில் ஒளிபரப் பப்பட உள்ளன என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித் திருப்பதன் மூலம் ராஜபக்சேயின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் இயக்குநர் கெல்லம்மெக்ரே.

28இல் முற்றுகைப் போராட்டம்!

இந்த நிலையில் உலக மக்களின் கண்களில் மிளகாய்த் தூள் தூவி உண்மைத் தகவலை முற்றிலும் தகர்த்திட வழக்கமான பொய்ப் பிரச்சாரம் என்னும் பட்டத்தை உலகெங்கும் பறக்க விட முயற்சிக்கிறார்.

ராஜபக்சேயின் இந்தக் கேவலத்தைக் கண்டிக்கும் வகையிலும், கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியையும் பறிக்கும் இலங்கைப் பாசிச அரசின் முகமூடியைக் கிழிக்கும் வகையிலும், இந்திய அரசே இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடு! எனும் முழக்கத்தை முன்னெடுப்போம்.

வரும் 28.2.2013 வியாழன் காலை 11 மணிக்கு சென் னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்.

தமிழின உணர்வாளர்கள் கட்சிகளைக் கடந்து ஓரணியில் ஒன்றுபடுவோம் வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


யூனியன் வங்கி கோ. கருணாநிதி பணி நிறைவு விழா


வழியனுப்ப அல்ல - நண்பர் கருணாநிதியை கழகத்திற்கு அழைத்துப் போகவே வந்துள்ளேன்!
தமிழர் தலைவர் சூட்டிய புகழாரம்!

கருணாநிதி அவர் இணையர் சுகுணா ஆகியோர் இருவரையும் இணைத்துப் பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கினார்தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் (சென்னை, 17.2.2013)


சென்னை, பிப். 20- இந்திய யூனியன் வங்கியில் பணியாற்றி, பணி நிறைவு பெற்றாலும், அவரை வழி யனுப்பிட அல்ல; கழகத்திற்கு அழைத்துப் போகவே இங்கு வந்திருக்கிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

17.2.2013 ஞாயிற்றுக்கிழமை சென்னை அசோகா ஓட்டலில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

இந்திய யூனியன் வங்கியில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தி 20 ஆண்டு கள் நிறைவு பெற்றுள்ளன.
விதை விதைத்து, நீர் ஊற்றி, உழவாரப் பணி களைச் செய்து கதிர் முற்றி தலைசாய்ந்து நிற்கும் காட்சியைக் காணும் நிலையில்தான் கருணாநிதி இருக்கிறார்.

இந்தியா முழுமையும் தந்தை பெரியாரைக் கொண்டு சென்று, அடையாளம்காட்டி, எல்லா உரிமைகளும், நலன்களும், வளங்களும் பெரி யாருக்குள் அடக்கம் என்பதை நிலை நாட்டியுள்ள நண்பர் கருணாநிதி அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

வங்கிப் பணி நிறைவு என்றுதான் அழைப் பிதழில் வெளியிட்டுள்ளார்களே தவிர, ஓய்வு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

இது ஒன்றும் வழியனுப்பு விழா அல்ல; அவரை வரவேற்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்.
பல தளபதிகள் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் திராவிடர் கழகத்திற்கு அழைத்துப் போக, அதற்காக வரவேற்கத்தான் இந்த விழாவிற்கு வந்துள்ளேன்.

நான் இங்கு வந்தபோது எனக்குக் கைகொடுக்க வந்தார், நானோ வருக வருக என்று கூறினேன்.

சமூகநீதியில் நாம் எட்டவேண்டிய பணிகள், செல்லவேண்டிய தூரம் ஏராளம் இருக்கின்றன.

இன்னும் ஆதிக்க சக்திகள் எந்தெந்த இடங்களில் இருந்துகொண்டு நமக்குத் தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டுள் ளன; முட்டுக்கட்டை களைப் போட்டுக் கொண்டுள்ளன என்பதை செயல் தலைவர் நண்பர் பார்த்தசாரதி அவர்கள் இங்கே பேசும்போது குறிப்பிட்டுள்ளார். நூற் றுக்கணக்கான துறை களில் உரிமைகள் மறுக் கப்பட்டுதான் கிடக்கி றோம்.

அண்ணல் அம்பேத் கர் மிக அழகாகவே சொன்னார், உலகிலேயே அறிவாளிகள் எல்லாம் ஒரு குறிப்பிட்டவர்களி டத்தில்தான் இருக்கி றார்கள் என்று சொல்லக் கூடியவர்கள். இங்கு இருக்கிறார்கள். அதனை ஏற்க முடியாது என்றார். அப்படி இருக்கவும் முடியாது என்று அழுத்தமாகவும் கூறினார்.

வடக்கே வாரணாசிக்கு என்னை அழைத்துச் சென்று ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். நண்பர் கருணாநிதி அவர்களின் செயல் ஆற்றலை அறிய முடிந்தது.

வங்கியிலிருந்து வெளியேறினாலும், நீங்கள் போகவேண்டிய தூரம் அதிகம் உண்டு. தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதியை எட்டுத் திசை களுக்கும் எடுத்துச் செல்லும் பணிக்காக கருணாநிதி அவர்களை வரவேற்கிறேன்.

நண்பர் கருணாநிதி அவர்கள் இந்த அளவுக்குப் பொதுப் பணி ஆற்ற முடிகிறது என்றால், அதற்குப் பெருந்துணையாக இருக்கக் கூடியவர் அவரின் வாழ்விணையர் ஆவார்.

கருணாநிதி அவர்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகளில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், இவ்வளவு பணிகளை வெளியில் அவர் ஆற்றியிருக்கவே முடியாது (பலத்த கரவொலி!) என்று கூறினார் தமிழர் தலைவர்.

சால்வைகள் குவிந்தன

தோழர் கருணாநிதி அவர் இணையர் சுகுணா ஆகியோர் இருவரையும் இணைத்துப் பொன் னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனியார் சார்பிலும் ஏராளமான சால்வைகள் குவிந்து கொண்டே இருந்தன.

மதியம் அனைவருக்கும் விருந்தளித்து உப சரிக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு விழா நிறைவுற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருட்டிணன், பேராசிரியர் கள் முனைவர் ந.க. மங்களமுருகேசன், பி.ஆர். அரங்கசாமி, பகுத்தறிவாளர்கள், வங்கி அதிகாரிகள், பணியாளர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர்.

தமிழ் ஓவியா said...


யூனியன் வங்கியில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற கருணாநிதிக்குப் பாராட்டு விழாடி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.,
இ.எம். சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., பாராட்டு

சென்னை, பிப். 20- இந்திய யூனியன் வங்கி - பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு மலர் வெளி யீடும் - யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோ. கரு ணாநிதி அவர்களின் வங்கிப் பணி நிறைவு விழாவும் சென்னை அசோகா ஓட்டலில் 17.2.2013 ஞாயிறு காலை 11 மணியளவில் சிறப் பாக நடைபெற்றது.

பல தரப்புப் பெரு மக்களும் வருகை தந்து சிறப்பித்தனர். துணைத் தலைவர் பி. கோபால் விழாவுக்குத் தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் மலர்க்கொடி வரவேற் புரையாற்றினார். நிகழ்ச் சிகளையும் ஒருங்கி ணைத்தார்.

ஆண்டு மலரை திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட, டி.கே.எஸ். இளங்கோ வன் எம்.பி., முனைவர் இ.எம். சுதர்சன நாச்சி யப்பன் எம்.பி., ஆகி யோர் பெற்றுக்கொண் டனர்.

அகில இந்திய யூனி யன் வங்கிபிற்படுத்தப் பட்டோர் சங்க செயல் தலைவர் ரவீந்திரராம், அமைப்புச் செயலாளர் அமிர்தான்ஸி, செயல் தலைவர் ஜெ.பார்த்த சாரதி (அகில இந்தியக் கூட்டமைப்பு) வங்கியின் உதவிப் பொது மேலா ளர் நிஷிஷ்முபார், துணைப் பொது மேலா ளர் ஆர். நெல்லையப் பன், தென் மண்டலப் பொது மேலாளர் அசோக்குப்தா, மும்பை - மத்திய அலுவலக பொது மேலாளர் பி.கே. பன்சால் ஆகியோர் பாராட்டுரை - வாழ்த் துரை வழங்கினர்.

டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.,

மக்கள் தொகையில் பெரிய அளவில் இருந் தாலும், மத்திய அரசுத் துறைகளில் இதரப் பிற் படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) நிலைதான் தீண்டத்தகாத ஒன்றாக இருக்கிறது.
வேலை வாய்ப்பு களில் அவர்களுக்கு 27 விழுக்காடு இடங்கள் கொடுக்கப்படவேண்டும் என்று இருந்தாலும், 11 விழுக்காட்டை விஞ்சவில்லை.

பல மாநிலங்களில் 27 விழுக்காட்டுக்குப் பதி லாக அந்தந்த மாநில அரசுகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு எத்தனை சதவிகிதமோ, அத்தனை சதவிகிதங்களை மட்டும் அளித்து வருகிறார்கள்.

அப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டில் பிற்படுத் தப்பட்டோருக்கு 50 விழுக்காடு அளிக்கவேண் டுமே - ஏன் அளிக்க வில்லை?
35 மாநிலங்களில் 18.5 விழுக்காடுதான் அளிக் கப்பட்டு வருகிறது.

இன்றைக்குப் பிற் படுத்தப்பட்டோர்களுக் காக நாடாளுமன்றக் குழு (பார்லிமெண்டரி கமிட்டி) அமைக்கப்பட் டுள்ளது என்றால், அதில் பெரும்பங்கு நமது கரு ணாநிதி அவர்களைத் தான் சாரும்.

எங்களுக்குத் தேவைப் படும் அத்தனைப் புள்ளி விவரங்களையும் ஒன்று திரட்டி எங்களை சதா வேலை வாங்கிக் கொண்டே இருப்பவர் நமது கருணாநிதி அவர் கள்.

தந்தை பெரியார் பிறந்து, சமூகநீதிக்காகப் பாடுபட்டதால், தென் மாநிலங்களில் ஓரளவு இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. வட மாநிலங்களில் அந்த நிலை இல்லை.

திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் நான் வந்ததால், சமூகநீதி உள் ளிட்ட தந்தை பெரியார் அவர்களின் கொள்கை களில் என்னை நான் அழுத்தமாக ஒப்படைத் துக் கொண்டிருக்கிறேன்.

யூனியன் வங்கியில் பணியாற்றிக் கொண்டே சமூகநீதிப் பணியில் முடிந்தவரை தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நண்பர் கரு ணாநிதி அவர்கள், இனி முழுநேரமும் சமூகநீதிக் காக உழைப்பார் - அந்த வகையில் வரவேற்கி றேன் என்று குறிப்பிட் டார்.
முனைவர் சுதர்சன நாச்சியப்பன் எம்.பி.,

நான் நாடாளுமன்றத் தில் பார்லிமெண்டரி கமிட்டி தலைவராக இருந்தேன். அந்தக் கமிட் டிக்கே நாச்சியப்பன் கமிட்டி என்று சொல் லும் அளவுக்குப் பிர பலப்படுத்தியவர் நண் பர் கருணாநிதி.

நான் சிவகங்கைக் காரன். பெரியார் அறக் கட்டளையின் தலைவ ராக இருந்த வழக்குரை ஞர் சண்முகநாதன் அவர் களோடு பழகக் கூடிய வாய்ப்பு எனக்கு அதிகம் கிடைத்ததால், இந்த இட ஒதுக்கீடு - சமூக நீதியில் எனக்கு ஆர் வமும், அக்கறையும் அதிகம் கிடைக்கும் வாய்ப்புகள் கிட்டிற்று.

அதுவும் நண்பர் கரு ணாநிதி அவர்கள் நான் பொறுப்பில் இருந்த காலத்தில், சதா என் னைத் தூண்டிக் கொண்டே இருப்பார்.

பிற்படுத்தப்பட்டவர் களுக்குப் பொருளாதார அளவுகோல் - கிரீமிலே யர் என்பதில் எனக் கென்று சில கருத்துகள் இருந்ததுண்டு. காரண காரியங்களை எடுத்துக் கூறி என்னைத் தெளிவு படுத்தியவர் கருணாநிதி அவர்களே!

இந்தி தெரியாமலேயே இந்தியா முழுமையும் சுற்றிக் கொண்டு வந்தி ருப்பவர் நமது கருணா நிதி!

இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் இந்தப் பாராட்டு விழா வுக்கு வந்துள்ளீர்கள். நண்பர் கருணாநிதியின் மீது நீங்கள் எல்லாம் வைத்திருக்கும் அன்பு, மதிப்பு கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன் என்று குறிப் பிட்டார்.

தமிழ் ஓவியா said...


இறுதிப் போரில் சிங்கள வீரர்கள் வெறியாட்டம்: சானல்-4 தொலைக்காட்சியிடம் புதிய வீடியோ ஆதாரம்


லண்டன், பிப்.21- பிரபாகரன் மகன் பால சந்திரனை சிங்கள ராணுவத்தினர் பிடித்து வைத்து கொன்ற வீடியோ ஆதாரத்தை இங்கிலாந்து டி.வி.யான சானல்-4 வெளியிட்டது. தற்போது இந்த நிறு வனம் புதிய ஆவண படம் ஒன்றை தயாரித் துள்ளது. நோ பயர் சோன் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படம் 90 நிமிடம் ஓடுகிறது. இலங்கை இறுதிகட்ட போரின்போது நோ பயர்சோன் என்று அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் சிங்கள ராணுவம் எந்த மாதிரி கொடுமையான தாக் குதல் நடத்தின என்பது பற்றிய முழு விபரங் களும், அதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணப் படத்தை கெல்லம் மெக் கரே என்பவர் தயாரித் துள்ளார். அடுத்த மாதம் ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் இது வெளியிடப்பட உள்ளதாக கெல்லம் மெக்கரே தெரிவித்துள் ளார். இந்தப் படத்தின் பல்வேறு புதிய காட் சிகளும், போரின் பின்னணி குறித்த கூடுதல் விவரங்களும் இணைக் கப்பட்டிருப்ப தாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, இந்த ஆவணப் படம் இலங்கையில் போர் குற்றம் நடந்த தற்கான முழு ஆதார மாக இருக் கும். இதை பார்த்தால் அங்கு என்ன போர்க் குற்றங்கள் நடந் தன என்பது தெளிவாக தெரியும் என்றும் கூறினார். இந்த ஆவண படத்தின் முக்கிய காட்சி களை அடுத்த வாரம் டில்லியில் இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் காண்பிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிராக அய்.நா. தீர்மானம் : மத்திய அரசு ஆதரிக்கும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேட்டி


திண்டுக்கல், பிப்.21- மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், திண்டுக்கல்லில் 19ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி சிங்களர்களை போலவே இலங்கை தமிழர்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களை மறுகுடி அமர்த்த வேண்டும். தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதில், அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இலங்கை மீதான மனித உரிமை மீறல் தீர்மானத்தில், அதற்கு எதிராக மத்திய அரசு வாக்களித்தது போல அய்.நா.சபையில் தீர்மானம் கொண்டு வந்தாலும், தமிழர்களின் நலன் கருதி அதை எதிர்த்து வாக்களிக்க இந்தியா தயங்காது. மத்திய அரசை பொறுத்த வரையில், ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம் பாதிக்கப்படாமல் இருக்க இலங்கை அரசை தட்டிக்கேட்கும் பணியை செய்து கொண்டிருக்கிறது. ராஜபக்சே இந்தியா வருவது என்பது தனிப்பட்ட விஷயம். எதிர்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் தான், அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று இருக்கின்றனர். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் வரவேற்கவில்லை. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தாண்டவமாடுகின்றன...இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன.

- விடுதலை, 30.4.1958

தமிழ் ஓவியா said...


தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை இலங்கை அரசு மேலும் அதிகப்படுத்தி வருகிறது


வரலாறு மீண்டும் திரும்பும் - ஈழப் படுகொலை ஆவணப்பட இயக்குநர் கருத்து

ராஜபக்சே கும்பல் இனியும் நீடித்தால் இலங்கையில் மீண்டும் ரத்தக்களரி ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று ஈழப்படுகொலை ஆவணப்பட இயக்குநர் காலும் மக்ரே கூறியுள்ளார் .

சேனல் - 4 தொலைக்காட்சி ராஜபக்சே அரசு அரங்கேற்றிய கொடூர நிகழ்வுகளை ஒளிபரப்பி யுள்ளது . காலும் மக்ரே தலைசிறந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார் . இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை அவர் வெளிச் சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் . இதுதொடர்பாக ஏற்கெனவே பல பதிவுகளை அவர் வெளியிட்டுள் ளார். நோ பயர் சோன்: த கில்லிங் பீல்ட்ஸ் ஆஃப் சிறீலங்கா என்ற பெயரில் ஆவணப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். ஜெனிவா நகரில் அடுத்த மாதம் அய்.நா. மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காட்ட காலும் மக்ரே முடிவு செய்துள்ளார். காலும் மக்ரே , கடந்த கால நினைவுகள், நிகழ்கால சம்ப வங்கள் மற்றும் எதிர் காலம் குறித்து அலசி ஆராய்ந்து கட்டுரை எழுதி யுள்ளார். அதில் அவர் குறிப்பிட் டுள்ளதாவது:- இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர், இலங்கை குற்ற நிகழ்வு கள் குறித்த கடினமான கேள்விக ளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளனர் . ஏனெனில் இலங்கையை பொறுத்தவரை அரசுக்கும் , ராணு வத்துக்கும் இடையே வித்தியாசம் ஏதுவும் இல்லை. விடுதலைப் புலிகள் குற்றம் இழைத்துள்ளார்கள் என்று இலங்கை அரசு திரும்ப திரும்ப கூறி வருகிறது. விடுதலைப் புலிகளில் ஒரு பிரிவினர் மனித வெடிக் குண்டுகளாக இயங்கினார் கள் . சிறுவர்களை கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்றெல்லாம் இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாற்றுகளை சுமத்துவதால் இலங்கை அரசு தனது குற்றங்களை நியாயப்படுத்த முடியாது.

ஒரு தரப்பின் குற்றத்தால், மற்றொரு தரப்பின் குற்றத்தை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது . சர்வதேச மனித நேய சட்டத்தைப் பின்பற்றுகிறோம் என்கிற அரசு, விடுதலைப்புலிகள் குற்றம் செய் தார்கள் என்று கூறி அந்தக் குற்றச்சாற்றின் பின்னால் ஒளிந்து கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தியாவுக்கும் கடும் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு என்ன பதில்கள் என்பதால் மட்டும் ஏற்பட்ட சங் கடம் அல்ல இது. இந்த கேள்வி களை எழுப்புகிறவர்கள் யார் என்ப தாலும் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை இது . இவற்றிற்கு எல்லாம் மய்யப் புள்ளியாக இந்தியா இருக்கிறது.

இது ஏற்கெனவே சொல்லப்பட்ட உண்மை தான். ஆனால், இப்போது மீண்டும் அழுத்தம் திருத்தமாக இதை சொல்ல வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது . நீதியின்றி அமைதியோ, இணக்கமோ சாத்தியம் இல்லை. அதைப்போல உண்மையின்றி நீதியும், சாத்தியம் இல்லை .இது கல்வியியல் சார்ந்த வாசகம் அல்ல . இது வரலாற் றின் குரலாகும் . இதை தட்டிக்கழித் திட முடியாது, இலங்கையில் கொடூரங்களை அரங்கேற்றிய வர்களே, இப்போது ஆட்சிப்பீடத் தில் அமர்ந்திருக்கிறார்கள். இலங் கையின் வடக்குப் பகுதியில் தமிழர் களை இப்போதும் கொடூரமாக ஒடுக்கி வருகிறார்கள். அரசை யார் விமர்சித்தாலும் அவர்கள் கடும் தண்டனைக்கு இலக்காக்கப்படு கிறார்கள். இலங்கையின் தலைமை நீதிபதி, இலங்கை அரசுக்கு உடன் பாடில்லாத சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை இலங்கை அரசு தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கி விட்டது. உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எந்த முயற்சியும் மேற் கொள்ளப்படவில்லை,

தமிழர்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள் . இன்னும் சொல்லப்போனால் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையை இலங்கை அரசு மேலும் மேலும் அதிகப்படுத்தி வருகிறது. தொலை நோக்கில் பார்த்தால் வரலாறு மீண் டும் திரும்பும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இலங்கையில் மிகவும் உக்கிரமாக மீண்டும் ரத்தக் களரி ஏற்படும். வட்டார உறுதித் தன்மை குலையும் . இலங்கை குற்ற நிகழ்வுகள் குறித்து நம்பத்தகுந்த, பார பட்சமற்ற சுயேச்சையான சர்வதேச ஆய்வு நடத்தப்பட வேண்டுமென்று ஏற்கெனவே அய்.நா. வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது . இதற்கு ஏற்பாடு செய்வதுதான் தீர்வுக்கு வழிவகை செய்யும் என்பது இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடு களில் உள்ள மனித உரிமை ஆர்வலர் களின் எண்ணமாகும். வல்லுநர்கள் அடங்கிய சர்வதேசக் குழு, இருதரப்பினர் செய்ததாக சொல் லப்படும் எல்லா குற்றங்கள் குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும் .இதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அது, இலங்கைக்கு மிகவும் இன்றியமை யாத ஆனால் இதுவரை நடை முறைப்படுத்தப்படாமல் தாமதிக்கப் பட்டுவரும், அரசியல் நீதி, அமைதி, இணக்கம் ஆகியவற்றை நிலைநாட் டுவதற்கான தொடக்கமாக அமையும். இவ்வாறு காலும் மக்ரே தமது கட்டுரரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதாவை சிக்கலில் மாட்ட வைக்கும் நமது எம்.ஜி.ஆர்.


டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்று ஒரு நாளேடு நடந்து வருகிறது. அது, அ.இ.அ.தி. மு.க.வின் அதிகாரபூர்வமான நாளேடாகும்.

அதில் கட்டுரை தீட்டுவோர், பெட்டிச் செய்தி வெளியிடுவோர் எழுதிவரும் விவரங்கள் - அக் கட்சியின் பொதுச்செயலாளரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடி யவை. அவர்மீது எளிதாக எதிர் தரப்பினர் தாக்குதல் தொடுப்ப தற்கான வசதியைச் செய்து கொடுத்து வருகின்றனர். எத் தனையோ உண்டு - எடுத்துக் காட்டுக்கு இதோ ஒன்றே ஒன்று.

நமது எம்.ஜி.ஆரில். இம் மாதம் 18 ஆம் தேதி பக்கம் நான்கில் ஒத்தக் குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்!

அடேயப்பா அண்ணா தி.மு.க. ஏடு எப்படி எல்லாம் எகிறிக் குதிக்கிறது?

டெசோ நாடகக் கம்பெனியாம்... விமர்சிக்கிறது அந்த ஏடு.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன? இவரைப் போல இந்தப் பிரச்சினையில் சந்தர்ப்ப சதிராடும் வேறு ஒருவரைக் காட்ட முடியுமா?

இந்தியாவைத் தலையிட வைப்பதுபற்றி எல்லாம் பேச ஆரம்பித்துள்ளனரே - நியாயம்தான் - இந்தியா தலையிடவேண்டும்தான்!

ஆனால், செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன?

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
(டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008).

அம்மையார் ஜெயலலிதாவின் இந்தக் கூற்றுக்கு அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லிவிட்டு, இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு மூக்கை நுழைப்பதுதான் சரியாக இருக்க முடியும்.

பந்தை அடிக்க முடியாத பேர்வழி காலை அடிப்பது என்பது ஒரு வகை கோழைத்தனமாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை - விடுதலைப் புலிகள்பற்றி பிரச்சினை பற்றி எல்லாம் தமிழர் விரோதமாக செல்வி ஜெயலலிதா எடுத்துக் கூறியவை எல்லாம் வண்டி வண்டியாக இருக்கின்றன.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்பட்டால், அதன் விளைவு என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இடம் தெரியாமல் காலை வைக்க ஆசைப்படவேண்டாம்!

திராவிடர் கழகத்தின் மீதோ அதன் தலைவர் மீதோ அவதூறு பேச ஆரம்பித்தால், ஆயிரம் ஆயிரம் எதிர் அம்புகள் அம்பறாத் தூணியில் தயார்! தயார்!!

கூடுதல் தகவல் (Tail - Piece)

அத்தகைய பதிலடிகள் வரும்போது செல்வி ஜெயலலிதாவின் முரண் பாடுகளில் தமிழர் விரோத நடவடிக்கைகளும்தான் அம்பலப்படும் - அதன் விளைவு நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் இத்தகைய எழுத்தாளர்களுக்குத்தான் எதிர்விளைவை ஏற்படுத்தும். அம்மா சேதி தெரியும் அல்லவா!

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் நடத்திய பசுவதை அய்தேரயப்ராஹ்ணம் கூறுகிறது

அய்தரேய ப்ராஹ்ணம் இரண்டாம் பஞ்சிகையின் தொடக்கத்தில் சொல்லுவதாவது:

யஜ்னேவை தேவா - ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோக மாயம்ஸ்தே பியயுரஸ்மின் நோத்ருஷ்ட்வா மனுஷ்யாஸ்ச ரிஷ்யஸ் சானுப் ரஞ்ஞாஸ் யந்தீதி (அய்தரேயப்ராஷ் மணம்த்ஷதீய பஞ்சிகா பிரதம காண்டம்)

இதன்பொருள்:- தேவர்கள் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தார். ஆதலால், மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக் கடவர் யூபஸ்தம்பங்களையும் நாட்ட வேண்டும் . யூபம் - யாகத்தில் கொல்லப்படும் உயிர்களைப் பிணிக்கும் தூண்.

இதன்பின் யாகத்தால் உயிர்களைக் கொல்லக் கட்டளையிடுகிற மந்திரமாவது:-

தைவ்யா:- சாமி தார ஆரபத்வமுத மனுஷ்யா இத்யாஹ. அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ராதா ஸ்கர்யோனு ஸகா ஸயூட்ய இதிஜனித்ரை ரேவைனம் தத்ஸ மனு மத மாலா பந்த உதி சீனாம் அஸ்பபதோ நிதித்தாமஸுர்யம் சக்ஷீர்க்ம ப்தாத் வாந்தப் ராண மன் வஸ் ருஜ தாந்திரி க்ஷமஸும் திச ஸ்ரோத்திரம், ப்ருதிவிசரீம்

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

இம்மந்திரத்தினால் பசுவின் தாய் தந்தையரைக் கேட்டுக் கொள்ளுவதாவது இந்தப் பசுவை எனக்கு கொடுங்கள்.

இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அத்வர்யு வென்னும் தலைமைப் புரோகிதனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு பசுவை சமித்ரசாலா என்னுமிடத்திற்கு அழைத்துக் கொண்டு போய் வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும் படியாகச் செய்து சமிதா வென்னும் பசுவைக் கொல்லும் புரோகிதன் முஷ்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வான். அதன்பின் சுரா இடா ஸுனு ஸ்வதீதி என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவின் பிணத்தைக் கிடத்தி தோல் உரித்துச் சதையை அரிந்தெடுத்து சிறிது நெருப்பிலிட்டு மீதியுள்ள மாமிசத்தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ளுவார்கள்.

இந்த பசுவைப் பங்கிடும் முறை ஞான சூரியன் முதல் பக்கத்தில் மேற்படி மந்திரமும், அதன் தமிழ் அர்த்தமும் எழுதியிருப்பதால் இதில் எழுதவில்லை. இம்முறை கோபதப் ராஹ்மணம் என்னும் வேத நூலிலும் இருக்கிறது. யாகத்தில் கொலையுண்ட பசு சுவர்க்கத்தை அடைகிறது என்று கீழ்க்காணும் மந்திரம் கூறுகிறது:

பார்வை நியாமான; ஸம்ருத்யும் ப்ரா பஸ்யத் ஸதேவான் நான் வகா மயதைதும் தம் தேவா அப்ரூ வன் கம் னேஹிஸை வர்க்வத்வர் லோகம் கமயிஷ் யாம இதி

(அய்தரேயப் ராஹ் பஞ்சிகா காண்டம் 6)

பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தை காண்கிறது; மரணத்தினின்றும் தேவர்களை காண்கிறது.

தேவர்கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-

அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேதத் ப்ராணன் தாதிஸ் யேன மாஸ்ய வக்ஷ கருணுதாத் ப்ரசஸா பஹீ சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ வகவேஷாரூஸ்ரேக பர்ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்காயஸ்கா அனுஷ்ட யோச்யா வயதத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.

பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற்குப் பிரமாணம்:-

உத்ய கோஹம் பார்த்திவம் (அய்தரேய பஞ்சி 2 க6)

பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்

(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே.

தொகுப்பு: பெ.சுந்தரராசன்.

தமிழ் ஓவியா said...


தாண்டவமாடுகின்றன...

இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன. - விடுதலை, 30.4.1958

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த 1948 ஆம் ஆண்டிலேயே அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி(ரெட்டியார்)ஒரு குழு அமைத்தார்.அந்தத் திட்டத்தைப் பின்னால் முதலமைச்சரான ராஜகோபாலாச்சாரியார் கை கழுவினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! இன்னமும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. சொந்த நாட்டு மக்களாகிய தமிழ் மக்கள் அங்கே ஏதோ பிடிபட்ட நாட்டின் போர்க் குற்றவாளிகள் போல் கொடுமையாய் நடத்தப்படும் கோரம் படமெடுத்தாடுகிறது.

முள்வேலிக்குள்தான் அங்கு எஞ்சியுள்ள தமிழர்கள் பலர் முதியவர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் - சொல்லொணாத் துயரத்துடன் அரை வயிற்றுக் கஞ்சிக் குக்கூட வழியில்லாமல் அவலமான வாழ்க்கையை சுமந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் பரிதாப நிலை!

எம் தமிழச்சிகளின் நிலையோ எழுதவும் கூசும் வகையில் சிங்கள இராணுவத்தால் நடத்தப்படுகின்ற சோகம் தொடர் கதையாகி வருகிறது!

குறைந்தபட்ச மனித உரிமை, வாழ்வுரிமைகூட இன்னும் எம் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.

வட பகுதியான யாழ்ப்பாணம் கிழக்குப் பகுதிகள் எங்கும் சிங்கள இராணுவ ஆட்சியே; ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒரு இராணுவ சிப்பாய் என்பதுபோன்று உள்ள நெருக்கடி நிலை!

போர் நடந்து முடிந்தபிறகு தமிழர்களை மீள் குடியமர்த்துதல் நடைபெறாமல், அந்தப் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் குடியமர்த்தும் திட்டமிட்ட அநீதி அரங்கேறிக் கொண்டுள்ளது.

தமிழர்களின் அடையாளங்களைக்கூட விட்டு வைக்கக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதம் நிர்வாணத் தன்மையில் வெறிகொண்டு, ஊர்ப் பெயர்களை மாற்றுவது முதல் அங்கே தமிழர்கள் வழிபடும் கோயில், சர்ச், பள்ளிவாசல் எல்லாம் அழித்தொழிக்கப்படும் அவலம் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.

இதுபற்றி டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் தமது வேதனையைத் தெரிவித்து, தடுத்து நிறுத்த வேண்டும் என்று எழுதிய கடிதத்திற்கு அந்த அம்மையார் அவர்கள், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கலைஞருக்குக் கடிதம் எழுதி, இதுபற்றி கவலை கொள்கிறேன்; அவசியம் வெளி உறவுத் துறை அமைச்சருடன் பேசி ஆவன செய்வதாக குறிப்பிட்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது. நடவடிக்கை செயலில் தெரிய வேண்டும்.

இது ஒருபுறம்; தமிழக மீனவர்கள்மீது சிங்கள இராணுவத்தின் தாக்குதல், உரிமைகள் பறிப்பு நாளொரு முறையும் பொழுதொரு வேளையும் நடந்த வண்ணமே உள்ளது. வழக்கமான வெண்டைக்காய் பதிலையே மத்திய அரசு தருகின்ற நிலை!

இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல், போருக்குப் பின் மேலும், மோசமான இடி அமீன்தர்பார், ஆள் தூக்கிச் செல்லும் அரசின் கூலிப்படை ஏவுதல் மூலம் காணாமற் போனவர்கள் பட்டியலில் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர்.

வருகின்ற மார்ச் மாதத்தில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் இந்த அடாவடி அட்டகாசத்தை எதிர்த்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், மனிதாபிமானத்தின் மற்றொரு வெளிப்பாடு; இதில் இந்திய அரசு அதன் பங்கை அதிகமாகச் செய்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் வாக்களிப்பால்தான் மத்தியில் இன்றைய இந்திய அரசு உள்ளது என்ற உண்மையை உணர்ந்து தம் கடமையைச் செய்திட தயங்கக் கூடாது.

இந்நிலையில் உலக நாடுகள் உண்மைகளை உணர்ந்து, இலங்கையின் யதேச்சதிகார ஆட்சி எப்படி மனித உரிமைகளைப் பறிக்கும் ஹிட்லர் ஆட்சியாக மாறி யுள்ளது என்று உணர்ந்திடும் நிலை கண்டு, இலங்கை அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சே குமுறுகிறார் - கொக்கரிக்கிறார்.

அய்.நா.வும், இதர பல உலக நாடுகளும் இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றனவாம்; பசப்புரை பகருகின்றார். மிரட்டுகிறார். அய்.நா.வை மிரட்டி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர்களையும் போர் நடக்கும்போது மிரட்டி, கப்பலேற்றிய கபட வேடதாரி மற்றொரு வேடம் தரித்து உள்நாட்டு இறையாண்மை பற்றிப் பேசுகிறார்.

எம் தமிழினம் பூண்டோடு, கூண்டோடு அழிக்கப்படும் முயற்சிகளை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க வேண்டுமா?

அய்.நா.வின் நோக்கம் என்ன? உலகம் ஒரு குலம் என்ற நிலை ஓங்கியுள்ளபோது, அநீதி, அக்கிரமம், அழிப்பு வேலைகளை கை கட்டி மனிதநேயம் உள்ளோர் வேடிக்கை பார்ப்பார்களா?

கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேசிடும் குடும்ப வாழ்க்கையில் தான் பிறர் தலையிடக் கூடாதே தவிர, கணவன் மனைவியைக் கொலை செய்ய முயன்றால் அடுத்த வீட்டுக்காரன் வேடிக்கை பார்க்கலாமா? கண்டித்துக் கடமையாற்றுவது தவறா என்று அறிஞர் அண்ணா அவர்கள் நல்லதொரு உவமை கூறியதைவிட, வேறு இதற்குப் பொருத்தமான பதில்தான் ஏது?

உள்நாட்டுப் பிரச்சினை என்றால், இந்திய அரசிடம் இலங்கை உதவி கேட்கலாமா? இராணுவப் பயிற்சிக்கு வரலாமா? 1000 கோடி ரூபாய்களைப் பெற்று அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க - புனர் வாழ்வுக்கு நிதி கேட்கலாமா? இந்திய வீடு கட்டுவோரை, பல்கலைக் கழகத்தவரை அழைக்கலாமா?

சர்வதேச போர்க் குற்றவாளியான ராஜபக்சேக்களை உலகம் பார்த்து தண்டனை வழங்கும் காலம் தூரத்தில் இல்லை.

-கி.வீரமணி,ஆசிரியர்.

தமிழ் ஓவியா said...

ராஜபக்சே போர்க் குற்றவாளியே!


கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகள்
பிரிட்டன் சேனல்-4 தயாரித்த ஆவணப் படம் டில்லியில் வெளியீடு

புதுடில்லி, பிப். 23- இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் சிங்கள ராணுவம் நடத்திய போர் வெறியாட்டம், நேற்று டெல்லியில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. இலங்கை அரசு போர்க்குற்றங்கள் செய்ததற்கான மேலும் சாட்சியங்களும், ஆதாரங்களும் இதன் மூலம் வெளி உலகத்துக்கு அம்பலமாகி உள்ளன. ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாடு கேட்டுப் போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 26 ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வந்தது. இந்தப் போர் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தை அடைந்தது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்தப் போரில் அப்பாவி பொது மக்கள் உள்பட பல்லாயிரக் கணக்கில் பலியானார்கள்.

வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரணடைய வந்த வீரர்கள் அனைவரும் கொல்லப் பட்டதுதான் கொடூரம் ஆகும். இது பற்றிய ஆவணப்படங்களை, இங்கிலாந்தைச் சேர்ந்த 'சேனல்-4' தொலைக்காட்சி பலமுறை வெளியிட்டு உலகையே அதிர வைத்தது.

12 வயது பாலச்சந்திரன்

சில நாள்களுக்கு முன்னர் இந்த தொலைக் காட்சி, ரத்தத்தை உறைய வைக்கும் மேலும் ஒரு கொடூரக் காட்சியையும் வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை, சிங்களப் படைகள் பிடித்து வைத்து, சாப்பிடுவதற்கு சில உணவுகளைக் கொடுத்து, பின்னர் அவனை நெஞ்சில் நேருக்கு நேர் சுட்டுக்கொன்ற காட்சிதான் அது.

உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தக் காட்சி, இலங்கை மீது போர்க் குற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மேலும் ஒரு சாட்சியமாக அமைந்தது.

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய போர் வெறியாட்டம் தொடர்பான ஆவணப்படம் (டாக்குமெண்டரி சினிமா) ஒன்றை சேனல்-4 தொலைக்காட்சி தயாரித்துள்ளது. நோ பயர் சோன் (தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகள்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த சினிமா நேற்று டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் என்ற அரங்கில் திரையிடப்பட்டது.

இயக்குநர் கெல்லம் மெக்கரே!

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் இந்திய கிளை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவர் களை பரிந்துரைக்கும் குழுவும் இதற்கு ஏற்பாடு செய்து இருந்தது. இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரு ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட இயக்குநர் கெல்லம் மெக்கரேதான் இந்தப் படத்தையும் தயாரித்து, இயக்கி உள்ளார்.

தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகளில், சிங்கள ராணுவம் அத்துமீறி கொடூரத் தாக்குதல் களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்ததால், இந்த சினிமாவுக்கு நோ பையர் சோன் என்று மெக்கரே பெயரிட்டுள்ளார்.

படம் தொடங்கியதும், இயக்குநர் மெக்கரே தோன்றி, போர்க் காட்சிகள் குறித்து விளக்கம் அளிக்கிறார். பின்னர், காண்போர் கண்களை குளமாக்கி, கண்ணீர் வரவழைக்கும் போர்க்காட்சிகள் வெளியாகின்றன.
உச்சக்கட்ட கொடூரம்!

போர் நடத்தக்கூடாத பகுதி என்று அறிவிக்கப் பட்ட இடங்களிலும், பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும் சிங்கள ராணுவம் கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசும் கொடூரக் காட்சிகள், ஊரெங்கும், அப்பாவி மக்கள் உயிர் இழந்து பிணங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தாயும், குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடக்கும் நெஞ்சை உறையச் செய்யும் காட்சி, மருத்துவ மனைகளில் நூற்றுக்கணக்கானோர் உடலின் பல பாகங்கள் சிதைந்த நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற நெஞ்சை பதற வைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்பாவிப் பெண்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக சுட்டுக் கொல்லப் பட்டிருக்கும் காட்சி, சிங்கள ராணுவத்தின் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மேலும், பெண் புலிகள் என்ற சந்தேகத்தில், ஏராளமான பெண்களை ஒரு லாரியில் ஏற்றி சிங்கள ராணுவத்தினர் கொண்டு செல்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சிங்கள ராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ், மன்றாடுவதும், அவரிடம் ஏதோ வாக்குமூலம் வாங்கும் காட்சியும், பின்னர் அவர் கொல்லப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடப்பதும் காட்டப்படுகிறது. பெண் புலிகளின் தளபதியாக இருந்த இசைப்பிரியாவை சிங்கள ராணுவம் சீரழித்து, படுகொலை செய்த காட்சியும் இடம் பெற்று உள்ளது.

போரில் இடம் பெயர்ந்த தமிழர்கள் நிராதரவாக திறந்த வெளியில் அவதியுறுவது, கொத்துக்குண்டு வீச்சில் பலியானவர்களின் உடல்கள் அப்புறப்படுத்த முடியாமல் சிதறிக்கிடந்த காட்சிகளும், குண்டு மழை யால் பீதி அடைந்த மக்கள் கைக்குழந்தைகளுடன் வேறு இடங்களுக்குச் செல்வது ஆகிய காட்சிகளும் இந்த சினிமாவில் காட்டப்படுகின்றது.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சிங்கள ராணுவம் பயன்படுத்தியதும், அதனால், அப்பாவித் தமிழ் மக்களின் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்பட்டதும் இந்த சினிமாவில் காட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவண சினிமா, மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

போர்க்குற்றம்

இந்த சினிமாவில் இடம் பெற்று உள்ள மனதைப் பதை பதைக்கச் செய்யும் காட்சிகள், இலங்கையில் போர் குற்றம் நடந்ததற்கு மேலும் ஒரு உறுதியான ஆவணமாகவும், இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வலுவான சாட்சியங்களாக இருக்கும் என்று இயக்குநர் மெக்கரே தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெற உள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் இந்த சினிமா திரையிடப்பட உள்ளது.