Search This Blog

1.2.13

சிண்டு முடிந்திடுவோய்!-ஊரார் பேசிக் கொள்வதுபற்றி


டீக்கடை பெஞ்சு என்றால் அக்கப்போர் பேசுவது என்று இனமலரான தினமலர் நினைத்துக் கொண்டுள்ளது. ஏன், அம்பி அய்யர் ஓட்டல் என்று தலைப்பு வைப்பதுதானே? வைக்க மாட்டார்கள். டீ கடை பெஞ்சு என்றால் சூத்திரர்கள் நடத்துவது தானே - அதனை இழிவுபடுத்த வேண்டும் என்ற கெட்ட புத்தி!
டெசோ தூதர்களாக டில்லி சென்று வெளி நாட்டுத் தூதர்களைச் சந்திக்கச் சென்றனர் என்றவுடன், அக்ரகாரத்தில் இழவு விழுந்தது மாதிரி வேகின்றனர். ஈழத் தமிழ் மக்களுக்கு நல்லது நடந்துவிடக் கூடாது என்ற அவ்வளவு நல்ல எண்ணம்!
மாவீரன் பிரபாகரனை எத்தனை முறை இந்த இனமலர் சாக அடித்தது என்று நமக்குத் தெரியாதா?
பிரபாகரன் உடலுக்கு இதோ மலர் வளையம் வைக்க மக்கள் சாரை சாரையாகச் சென்று கொண்டு இருக்கின்றனர் - எழுதிய வெட்கங்கெட்ட கூட்டமாயிற்றே!
இனமணியான தினமணி வைத்தி அய்யரும் சேர்ந்து கொண்டிருக்கிறார் மெய்யாலுமே இவர்கள் பேசுவதெல்லாம் இனப்புத்தியோடுதான்.
ராகுல்காந்தியைச் சந்திக்க நினைத்தால் அது என்ன முடியாத அவ்வளவுப் பெரிய காரியமா?
அப்படிப் பார்க்கப் போனால் இந்த முறை பிரதமரைக் கூடத்தான் சந்திக்கவில்லை; காங்கிரஸ் தலைவர் சோனியாவைக் கூடத்தான் சந்திக்கவில்லை - அதற்காக புதுக்கதை ஜோடிக்க வேண்டியதுதானே!
ராகுல்காந்தி காங்கிரசில் துணைத் தலைவர் ஆகி இருக்கிறார். அவர் இவர்களோடு நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அவாளுக்கே உரித்தான சிண்டு முடித்தனம்தான் இதற்குள் சிணுங்கும் சங்கதி!
சாணக்கியன் என்று அவாள் சொல்லும் ஆச்சாரியாரே எங்களிடம் தோற்றுப் போனார் - இனமலர்கள் - இனமணிகள் எம்மாத்திரம்?
கூடுதல் தகவல் (TAIL- PIECE)
ஊரார் பேசிக் கொள்வதுபற்றி
சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு.பா.வெ.மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு கரூர் டிவிஷனில் அஸிஸ்டெண்ட் இன்ஜினியராக நியமிக்கப்பட்டபோது, ஒரு ஓவர்ஸீயரிடம் வேலை கற்க அமர்த்தப்பட்டார். பிறகு அவர் அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் வேலை ஏற்றுக்கொண்டார். அப்போது அந்த ஓவர்ஸீயர் மாணிக்க நாயக்கரின் கீழ் வேலை பார்க்க வேண்டியவரானார்.
இவரின் நடத்தையை மாணிக்க நாயக்கர் வேலை பழகும் போது தெரிந்து இருந்ததினால், சந்தேகப்பட்ட ஒரு காரியத்தில் கண்டித்தார். இது அந்த ஓவர்ஸீயருக்குப் பிடிக்கவில்லை. நம்மிடம் வேலை பழகின பையன் நம்மைக் கண்டிக்கிறானே! என்று கருதி மாணிக்க நாயக்கருக்குப் புத்தி சொல்லுகிற மாதிரி,
நீங்கள் சிறுவயது; உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். உடனே மாணிக்க நாயக்கர், என் பெயர் ஏன் கெடும்? என்று கேட்டார்.
உங்களைப் பற்றி மக்கள் கண்டபடி பேசுகிறார்கள். இதற்கு இடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று ஓவர்ஸீயர் சொன்னார்.
என்ன பேசுகிறார்கள்? சொல்லுங்கள் என்று மாணிக்க நாயக்கர் கேட்டார்.
நீங்கள் பணம் வாங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பேசுகிறார்கள் என்றார் ஓவர்ஸீயர்.
அந்தப்படி யார் சொன்னார்? சொல்லுங்கள் என்று சற்றே கோபமாகக் கேட்டார் மாணிக்க நாயக்கர். அதற்கு ஓவர்ஸீயர், ஜனங்கள் அப்படி பேசிக் கொள்ளுகிறார்கள் என்று சொன்னார்.
உடனே மாணிக்க நாயக்கர், வாழாமல் உன் வீட்டிற்கு வந்திருக்கும் உன் மகளுக்கும், லஸ்கர் நாராயணசாமிக்கும் சம்பந்தம் உண்டு என்று ஊரெல்லாம் பேசிக் கொள்ளுகிறார்களே? அப்படி நீ வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார். உடனே அந்த ஓவர்ஸீயர் கோபப்பட்டு, எந்த அயோக்கியப் பயல் அப்படி சொன்னான்? சொல்லு; முட்டாள்தனமாகப் பேசாதே என்றார்.
உடனே மாணிக்க நாயக்கர் தன் காலில் இருந்ததைக் கழற்றி அந்த ஓவர்ஸீயல் தலையில் இரண்டு, மூன்று போட்டார்; பக்கத்திலிருந்தவர்கள் தடுத்து ஓவர்ஸீயரைப் பார்த்து, நீங்களும் ஊரில் பேசிக்கொள்ளுகிறார்கள் என்று சொன்னீர்கள்; அவரும் ஊரில் பேசிக் கொள்ளுகிறார்கள் என்று சொன்னார். இதில் தப்பென்ன? உங்களைச் சொன்னதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. நீங்கள் அவரைச் சொன்னது அவர் வேலைக்கே ஆபத்தாய் முடியுமே என்று சொல்லி ஓவர்ஸீயரை மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும்படி செய்தார்கள். இது கரூரில் அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சி.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால், அரசியலில் எதிர்க்கட்சி மீது எதிரிகள் மீது குறை கூறுவதற்காகச் சிலர் எதையும் சொல்லிவிட்டு, அழுத்திக் கேட்டால், மக்கள் அப்படிப் பேசிக்கொள்ளுகிறார்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுக்குப் புத்தி வருவதற்காக உண்மையாய் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டேன்.
ஊரில் பேசிக்கொள்ளுகிறார்கள்என்பது மிகக் கீழ்த்தரமான மக்கள் தன்மையாகும்.
-------------------------------------------- தந்தை பெரியார் அறிக்கை விடுதலை 26.3.1969
 ****************************************************
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களைச் சந்திப்பது வெட்கப்படத்தக்கது என்று சொல்வதன் மூலம் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இவர்களின் மனப்போக்கு எப்படிப்பட்டது என்பது எளிதில் விளங்கக் கூடியதே!
யுத்தம் என்று வந்தால் மக்கள் சாவது இயற்கைதானே என்று சிங்கள வெறியர் களுக்கு லாலி பாடிய, ஜால்ரா போட்ட அந்த நிலையிலிருந்து அவாள் இன்னும் மாறவில்லை என்பதை அவருக்காக வக்காலத்துப் போட்டுப் பேசுவோர் அறிவார்களாக!
*****************************************

ஹிந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டாலும் பரவாயில்லே அவை கற்களும், சிமெண்டும் தானே! மீண்டும் கட்டிக் கொண்டால் போச்சு! ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துள்ள ஆரிய சிங்கள இனத்தைச் சேர்ந்த ராஜபக்சே அவர்களே - உங்களுக்குக் கோடி கோடி நமஷ்காரம்!
- அடியேன் இந்துத்துவாவாதி கோட்சே சீடன் சோ.ராமசாமி அய்யர்


                                                                                   “விடுதலை” 31-1-2013 

5 comments:

தமிழ் ஓவியா said...

தீராது

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


இங்கும் - அங்கும் வெளியீட்டிலிருந்து.... அய்யத் தெளிவு...!

கேள்வி: பெரியார் வழியினர் இந்து மதத்தையும் இந்துக் கடவுள்களையும் எதிர்க்கும் அளவுக்கு மற்ற கிறித்துவ, இசுலாமிய சமயங்களை எதிர்ப்பதில்லையே, ஏன்?

பதில்: கடவுளரையும், மதங்களையும் ஏற்பதில்லை என்பது பெரியார் தொண்டர்கள் பின்பற்றும் பொது விதி, கொள்கை. இதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லு கிறார்கள். நடைமுறை என வரும்பொழுது எந்த மதத்தை மிகுதியாக எதிர்க்க வேண்டும், எந்தக் கடவுள்களை மிகுதியாக விமர்சிக்க வேண்டும் என்பதைச் சூழ்நிலைக்கும் வாழ் நிலைக்கும் தக முடிவு செய்ய வேண்டி யிருக்கிறது.

இந்தியாவில் மிகப் பெரும்பான்மை யோரின் மதம் இந்து மதம். இதில் நாத்திகர்களும் அடங்குகிறார்கள். ஏன் என்றால், அப்படித்தான் இந்துச் சட்டம் சொல்கிறது. கிறிஸ்துவர்கள் இசுலாமியர் அல்லாதவர்கள் அனைவரும் இந்துக்கள் ஆகிறார்கள். ஆக, தாங்கள் விரும்பாவிடினும் தங்களை இந்துக்கள் எனும் வட்டத்துக்குள் அடக்கும் பொழுது, அந்த மதத்தைப் பற்றி அதிக நாட்டம் செலுத்துவது பெரியார் வழியினர் கடமையாகிறது.

அவர்கள் விரும்பினும் விரும்பாவிட்டாலும், அவர்களுடைய வாழ்முறையும், சமூக நிலையும் இந்துமதக் கோட்பாடுகளால் கட்டுபடுத்தப்படுவதால், அந்த மதத்தால் விளையும் கேடுகளைச் சுட்டிக்காட்டி களைய வேண்டியது முதற்கடமையாகிறது. இசுலாம், கிறித்துவம், சீக்கியம் முதலிய மதங்களுக்குத் தனிக் கோட்பாடுகள் இருப்பினும் அவர்கள் சிறுபான்மையர். ஆகையால் அவர் களுடைய சமூகப் பழக்கங்களும், அமைப்புகளும், பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்தாரின் நடத்தையின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. ஆகையால், இந்துமதக்கேடுகள் களையப்படின், பிற மதத்தார் முறைகளும் சீர்ப்படும்.

இசுலாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களின் இறைக்கோட்பாட்டில் மூடநம்பிக்கை காணப் படுகிறது. ஆனால், வருணதரும அடிப் படையில் சாதி ஏற்பாட்டை நியாயப்படுத்தும் தெய்வீக நூல்கள் எனப்படும். வேதம், இதிகாசம் முதலியன இந்து மதத்தில் மட்டுமே உண்டு. இசுலாம், கிறிஸ்துவம் ஆகிய மதக் கொள் கைகள் பகுத்தறிவுக்கு முரண்படு கின்றன; ஆனால் தன்மானத்தை மதிக்கின்றன.

யாரையும் இழிசாதியாக தீண்டாத வராக அவர்களின் புனித நூல்கள் சொல்லுவ தில்லை; பிறப்பின் அடிப்படையில் வேற்றுமை, ஏற்றத்தாழ்வு கற்பிப்பது இல்லை. ஆனால், இந்து மதத்தின் புனித நூல்கள் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கின்றன; உயர்வு தாழ்வு கற்பிக்கின்றன. மானிட நெறிபோற்றிய பெரியாரும் அவர் தொண்டர்களும் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.

- ஆசான் (சனவரி 83 இதழ்)

தமிழ் ஓவியா said...


புரட்சிக் கவிஞரின் சிந்தனைகள்!


கண்ணபிரானைப் பற்றிய சொற்பொழிவு (உபந்நியாசம்) நடக்கிறது. கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரேழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து ஒருவர் கேள்வி கேட்கிறார்.

ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா? திருத்தமாகவா?

உபந்நியாசர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.

மற்றொரு வேண்டுகோள் அய்யா! உபந்நியாசகரே! இந்த கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை பாரிஸ் வெங்கடாசல அய்யர் வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டுவிடச் சொன்னால் போதும். அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்க காசில்லை.

சிறுவன் வாயில் முழுமையும் தெரியுமா? எவ்வளவு அறியாமை! மக்களின் அறியாமையைக் கிண்டல் செய்யும் துணுக்குகளில் ஒன்று இது.

தமிழ் ஓவியா said...


அண்ணாவும் - காமராசரும்!

தி.மு.க. பெரிய வெற்றியடையும் செய்தி மகிழ்ச்சியுடன் வந்து கொண்டுள்ளது. பெருந் தலைவர் காமராசர் தோற்று விட்டார் என்று தி.மு.கவினர் மகிழ்ச்சியுடன் கூறுகின் றனர். அறிஞர் அண்ணா அனைவரையும் அமைதி காக்கச் சொல்லி மிகவும் வருத்தப் பட்டாராம். காமராசர் வெற்றி பெற்று புது டில்லி சென்றால் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்வார்.நம்மால் அவ்வளவு செய்ய முடியுமா என்றாராம். உலகத் தமிழ் மாநாடு மிகச் சிறப்பாகச் சென்னையில் நடக்கின்றது. முதல்வர் அறிஞர் அண்ணா காமராசரை அழைத்துச் சிறப்பிக்கின்றார். சிலர் கிண்டல் செய்கின்றார்கள். காமராசர் என்ன தமிழறிஞரா என்று அறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டுச் சென்னை அரசு மருத்துவமனையிலே இருக்கின்றார். பார்க்க வந்த காம ராசர் மருத்துவர்களிடம் கேட்கின்றார். சரியான பதிலை அளிக்காமல் திணறுகின்றனர். உடனே காமராசர் அமெரிக்கா கொண்டு சென்று மருத்துவம் பார்க்க உடனே ஆவன செய்யுங்கள் ஆம்! என்று ஆணையிடுகின்றார் !

மும்பை விமான நிலையத்திலே நள்ளிரவு நேரத்திலே மாநில ஆளுநர் வந்திருக்கின்றார். அண்ணா அவர்கள் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அவர் பெருந்தலைவர் காமராசரின் ஆணை! உங்களை இங்கு பார்த்து அனுப்பிவைக்கச் சொன்னார் என்றாராம் .

அது தமிழகம்! இன்று நீங்களே சொல்லுங்கள்!

- சோம. இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


கமல்ஹாசன் மீது பார்ப்பனர் சங்கம் திடீர் பாய்ச்சல்!


சென்னை, பிப். 3- இஸ்லாமியர்கள் பிரச்சினையை முடித்து விட்ட கமல்ஹாசன் அடுத்து பார்ப்பனர்களிட மிருந்து புது எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார். விஸ்வரூபம் படத்தில் பார்ப்பனர்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக பார்ப்பனர் சங்கம் ஒன்று கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் அந்த சங்கம் புகார் மனுவைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக புகார் மனுவைக் கொடுத்த அதன் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் பார்த்த என் உறவினர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, தொடர்பு கொண்டார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது. இது எங்களின் உணர்வை புண்படுத்து கிறது. கமல் முற்போக்குவாதி, அறிவுஜீவி என்று சொல்லிக்கொண்டு மடத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுவார். அவரை நாங்கள் ஒருபோதும் பார்ப்பனராக அங்கீ கரித்தது கிடையாது. பூணூல் என்பது சொறிந்துகொள் வதற்கு வசதியாக இருக்கிறது என்று ஒருமுறை கமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பார்ப்பனராக இருக்க முடியும். விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அங்கே இங்கே சென்று முட்டு வதைவிட ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து தேங்காய் உடைத்திருந்தால் விஸ் வரூபத்தின் தடைகள் உடைபட்டு போயிருக்கும் என்றார். இன்னொரு பார்ப்பனர் சங்கம் தடை கூடாது என்கிறது இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத் தலைவர் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் படத்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தில் பார்ப்பனர்களை இழிவுபடுத்தியிருப்பதால் அப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேறு பார்ப்பன சங்கத்தினர் புகார் தெரிவித்திருகின்றனர். அப்படி படத்தை தடை செய்யக்கூடாது. ஒருவனை அழவிட்டு கண்ணீரை வேடிக்கை பார்ப்பவன் பார்ப்பனன் அல்ல. அதனால் படத்தை எதிர்க்கக்கூடாது. அவர் மிகுந்த பொருட் செலவில் படத்தை எடுத்திருப் பதால் தடை செய்யக்கூடாது. ஆனால், கமலஹாசனை நாங்கள் ஒரு மனிதனாகவே மதிப்பது கிடையாது. தாய்நாட்டையும், தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் குழிதோண்டி புதைக்கும் பணியை கமல் காலம் காலமாக செய்து வருகிறார். தன் வீட்டு பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் இருப்பதாக கமல் கருதுகிறார். அவர் வீட்டு பெண்கள் எப்படி இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும், அதே நிலைப்பாட்டுடன் தேசத்தில் உள்ள அனைவரையும் எண்ணுதல் கூடாது. கமல் எங்கள் இனத்தை கேவலப்படுத்தி காட்சி வைத்திருந்தால் அவர் அழிந்து போகவேண்டும் என்று நினைக்க மாட்டோம். அவராகவே தன் தவறை உணர வேண்டும் என்றார்.