Search This Blog

20.2.10

தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை கைவிட வேண்டும்!

உயர்கல்விக்கான தேசிய உயர்கல்வி ஆணைய மசோதா 2010
புதிய சட்டத்தைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு சகல முயற்சிகளையும் செய்யவேண்டும்

*கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மத்திய அரசின் பட்டியலுக்குக் கொண்டு செல்லும் மறைமுக ஏற்பாடு *துணைவேந்தர் பதவிகளை குமாஸ்தாக்களாகக் கருதும் போக்கு! சமூகநீதி, இட ஒதுக்கீடுக்குச் சாவு மணி *மீண்டும் நுழைவுத் தேர்வுமுறை அமல் மாணவர்கள், பெற்றோர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் தமிழ்நாடு அரசு எதிர்த்திருப்பது வரவேற்கத்தக்கது

உயர்கல்விக்கான தேசிய உயர்கல்வி ஆணையம் 2010 என்ற தலைப்பில் மத்திய அரசு கொண்டுவர முனைந்துள்ள திட்டத்தி னால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உயர்கல்விக்கான தேசிய உயர்கல்வி ஆணையம் ஏற்படுத்துவதற்கான 2010 மசோதாவை தயாரித்து, இந்த நாடாளுமன்றத் தொடர் முடிவடைவதற்கு முன்பே நிறைவேற்றிவிட துடியாய்த் துடிக்கிறது மத்திய மனிதவள அமைச்சகம்; (இதற்கான ஒரு தனி பணிக் குழுவினர் (Task Force) இந்த மசோதாவைத் தயாரித்துள்ளனர்.)

தற்போது உள்ள (1) இந்திய தொழில் நுட்பக் கல்விக் கவுன்சில் (AITEC); (2) பல்கலைக் கழக மான்யக் குழு, (University Grants Commission) (3) தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (National Council for Teacher Education (NCTE) ஆகிய அமைப்பு-கள் இந்த புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறை-வேறி சட்டமாகி விட்டால், ஒழிக்கப்படுகின்றன.

புதிய தேசியக் கமிஷன்

இதற்குப் பதிலாக புதிதாக ஒரு தேசியக் கமிஷன் உருவாக்கப்படும். அதற்கு ஒரு தலைவரும், ஆறு உறுப்பினர்களும் தலைமை அமைப்பாக இருந்து எல்லா முடிவுகள், நடைமுறைகளை உருவாக்கி நடத்தும் ஒரே ஒரு அமைப்பாக செயல்படும்.

இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது மருத்துவக் கல்வி, விவசாயக் கல்வி (கால்நடைக் கல்வி உள்பட) இதன் கீழ் வராது. மற்ற அனைத்துப் பல்கலைக் கழகங்கள், அமைப்புகள் அத்துணையும் இந்த எழுவர் சபையின் நிருவாகத்தின் கீழ்தான் இயங்கும்.

இவர்களின் கீழே கொலிஜியம் என்ற இரண்டு வகை உறுப்பினர்கள் கொண்ட குழு செயல்படும்.

ஆயுட்கால பதவி

இந்த கொலிஜியத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருப்பார்கள்? இந்த இரண்டு வகை உறுப்பினரில் (1) Core Members (2) Co-opted Members என இருவகையினர் மொத்தம் எத்தனை பேர்கள் இருப்பார்கள் என்பது இம்மசோதாவில் தெளிவுபடுத்-தப்படவில்லை. 3. இதன்கீழ் ஒரு நிருவாகக் கவுன்சில் (Executive Council), அதன் கீழே நிருவாகத்தை நடத்தும் இயக்குநர்கள் (Directors).

இதில் முக்கிய உறுப்பினர் தகுதியில் (Core Members) உள்ளவர்களுக்கு பதவி ஆயுட் காலப் பதவியாகும்! அவர்கள் பார்த்து Co-opted Members உறுப்பினர்களை நியமிப்பார்கள்.

இதிலும் தெளிவு இல்லை. எத்தனை உறுப்பினர்கள் என்பது மட்டுமல்ல; Core Members என்ற முக்கிய உறுப்பினர்கள் எவ்வாறு, எந்த அமைப்பால் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் தெளிவாக்கப்படவில்லை.

இந்தியா முழுவதிலும் உள்ள பற்பல மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து உயர்கல்வி என்பது 22000 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும் (Affiliated Colleges) 240 மாநில பல்கலைக் கழகங்களையும் (நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் இதில் சேராது) கொண்டதாகும்.

மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது

மத்திய பல்கலைக் கழ-கங்களில் உள்ள எண்ணிக்கை மிகவும் சிறியதே!

இந்த மசோதா சட்டமானால் இவ்வளவு கல்லூரி, பல்கலைக் கழகங்களும் இந்த எழுவர் -ஏழு சப்த ரிஷிகள் கீழ்தான் இயங்கவேண்டும்! மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கோ, மாநில அரசுகளுக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. நிருவாகம் நிதி உதவி (உயர்கல்விக்கானது)கூட எல்லாம் இந்த எழுவர் குழுவின் முடிவின்படிதான்!

சுருக்கமாகச் சொன்னால், இந்த ஏழு பேர் குழுவேதான் சர்வமும்! எல்லா அதிகாரங்களும் இக்குழுவிற்கே!

ஒரு ஜனநாயகத்தில் எந்த அதிகாரியாவது ஆயுள் பூராவும் நம் நாட்டில் பதவியில் இருக்கும் உதாரணம் உண்டா?

ஜெயலலிதா அம்மையாரின் அதிமுக ஆட்சியில், ஒரு மாநில தேர்தல் ஆணையர் பதவி ஆயுள்வரை என்று போட்டது செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தது நினைவில் இல்லையா?

துணைவேந்தர்களையெல்லாம் தற்போது கவர்னர், மாநில அரசு பரிந்துரையை ஏற்று தேர்வு செய்யும் முறையே அடியோடு ரத்து செய்யப்படுகிறது.

துணைவேந்தர் பதவி என்பது ஒரு குமாஸ்தா பதவியா?

மாறாக, ஒரு பதிவு அதில் துணைவேந்தர்களுக்கு, தகுதி அடிப்படையில், பட்டியல் தயாராகிட அதற்குத் தகுதியானவர்கள் இந்தியா முழுவதிலுமிருந்தும் மனு போடவேண்டும். Registry ஒன்று அமைக்கப்படும், அதில் அய்வரைக் கொண்ட ஒரு றிணீஸீமீறீ பட்டியலை அனுப்பி மாநில அரசுகளைத் தேர்வு செய்யச் சொல்வார்களாம்!

வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்யும் (Employ ment Exchance) குமாஸ்தா நிலைக்கு துணைவேந்தர்பதவியின் தகுதி கீழ் இறக்கப்படுகிறது!

அதைவிடக் கொடுமை, சமூகநீதி அறவே இனி இடம் கிடைக்க வழி இந்த முறையின்மூலம் கிட்டவே கிட்டாது! இந்தியத் திருநாடு பன்மொழிகள், பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல பகுதிகளைக் கொண்ட பரந்துபட்ட ஒரு நாடு!

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களுக்கு அவர்களது சமூக நிலைக்-கேற்பவும் பிரதிநிதித்துவ அடிப்படையிலும் தற்போது தேர்வு செய்யப்படும் நிலை மாறி, மொழியே தெரியாத _ வேற்று மொழிக்காரர் இன்னொரு மாநிலத்திலிருந்து அனுப்பப்படுவார்; வடகிழக்கு அல்லது காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்றவற்றிற்கு துணைவேந்தர் அனுப்பப்-பட்டால் அதிசயமில்லை; அதற்கு வாய்ப்பு உண்டே!

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்குள்ள, இட ஒதுக்கீட்டு முறையை சமூகநீதியைக் கொல்லும் ஏற்பாடு இது. துணைவேந்தர் பதவிக்குள்ள மரியாதை அறவே துடைத்தெறியப்படும் அவல நிலை இதன்மூலம் ஏற்படுவது உறுதி!

எந்தப் பல்கலைக் கழகமும் அது எவ்வளவு வளர்ந்த பழைய பல்கலைக் கழகமானாலும் அதை ரத்து செய்து மூடும் அதிகாரம் இக்குழுவிற்கு உண்டு.

ஏன் சென்னைப் பல்கலைக் கழகம் போன்ற வரலாறு படைத்தவைகளைக்கூட இழுத்து மூடும் அதிகாரம் இந்த சப்த ரிஷிகள் குழுவிடம் தரப்பட்டுள்ளதே! சட்ட விதிகள் பற்றி நாம் ஆய்வு செய்வதால்தான் இப்படி ஓர் உதாரணத்தைக் கூறவேண்டியுள்ளது!

ஒரே மாதிரியான தகுதியை (Standard) பாட திட்டங்களை பாட நூல்களை உருவாக்கி, மதிப்பீடு செய்ய வசதி செய்கிறோம் என்ற சாக்கில் இந்தி, அல்லது சமஸ்கிருதம் கூட கட்டாயமாக வைக்கப்படவும் வாய்ப்பு உள்ளதே! தகுதி என்பதற்கு என்ன அளவுகோல்?

மாநிலங்களில் உள்ள மற்ற மொழிகள் கூட தவிர்க்கப்பட, தடுக்கப்படக் கூடிய நிலை இச்சட்டம் அமுலானால் ஏற்படாது என்று கூற இடமுண்டா? இல்லையே! இச்சட்டத்திற்கு மாறான எந்தச் சட்டமும் செல்லாது; இந்த ஒரு சட்டம் மட்டுமே நிற்கும் இரண்டுக்கும் போட்டி ஏற்பட்டால் என்ற நிலை, அதிகாரக் குவியலைத் தவிர வேறு என்ன?

நோயைவிட சிகிச்சை கொடுமையா?

உயர்கல்வியில் தவறுகள், கோளாறுகள் கண்டால் அவைகளைக் களையவேண்டும்; அதைத் தவறு என்று யாரும் கூற முடியாது. ஆனால், அதற்கு சிகிச்சை என்ன? அந்த அமைப்புகளை அறவே ஒழிப்பதா? நோயைவிட இந்த சிகிச்சை மோசமானதாகலாமா?

இதில் உள்ள பல்வேறு சட்டப் பிரிவுகளை ஆய்வு செய்யவேண்டிய (Inter State Council) பல மாநிலங்களின் மன்றத்தின் பணி அல்லவா? ஒப்புதல் பெறவேண்டாமா?

மாநிலத்திலிருந்து நெருக்கடி காலத்தில் கல்வியை, பொதுப் பட்டி யலுக்கு (concurrence list) ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தின்மூலம் நகர்த்தினார்கள். (42 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் 1976)

அதை மீண்டும் திரும்பவும் மாநிலப் பட்டிய லுக்கே (State list) கொண்டு வரவேண்டும் என்ற குரலை, தமிழ்நாடு அரசு போன்றவைகள் எழுப்பும் நேரத்தில், அதற்கு முற்றி-லும் நேர் விரோதமாக அரசியல் சட்டத் திருத்தம்கூட இல்லாது, இந்த ஒரு சட்டத்தின்மூலமே கல்வியை மத்திய அரசின் ஏகபோக உரிமை (Union List) உடைமையாக்கும் கொடுமை அல்லவா தெரிகிறது?

அதிகாரப் பரவலாக்குவதற்குப் பதிலாக, அதிகாரக் குவியலை மேலும் மேலும் அதிகப்படுத்தும் ஏகாதிகார முறையைத்தானே இச்சட்டம் புகுத்துவதாக உள்ளது? (Instead of decentralisation it wants to recentralise the powers).

இதைவிட மற்றொரு பெரிய குண்டைப்போட்டு மத்திய கல்வித் துறை அமைச்சர் கபில்சிபல் நேற்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்!

மருத்துவம், பொறியியல், வணிகவியல் உள்பட எல்லா தொழிற் படிப்புகளுக்கும் தேசிய அள-வில் நுழைவுத் தேர்வை நடத்தி, அதில் வெற்றி பெறுகிறவர்களைத்தான் தொழிற் நுட்பப் பொறியியல் பல்கலைக் கழகங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டுமாம்! இத்திட்டம் 2013 இல் வருமாம்!

அதற்காக இந்தியா முழுவதிலும் ஒரே சீரான வகையில் மதிப்பீடு ஏற்-படுத்த பாடப் புத்தகங்களை ஒரே மாதிரி ஏற்படுத்த திட்டம் தயாராகிறதாம்!

இதைவிட கேலிக் கூத்து வேறு உண்டா? எத்தனை எத்தனை மாநிலங்கள், எத்தனை எத்தனை மொழிகள், கலாச்சாரங்கள் இவைகளையெல்லாம் ஓர் நொடியில் ஒழித்துவிட முடியுமா? நியாயமா? சீர்மை வேறு; ஒற்றுமை வேறு என்று அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசும்போது குறிப்பிட்டார்.

‘‘Uniformity is different from Unity’’

தமிழ்நாட்டில் இவ்வாண்டு பொறியியல் படிப்பில் ஏராளமான மாணவர்கள் சேர்ந்தனர்; (அதிலும் கிராமப்புற மாணவர்கள்) காரணம் நுழைவுத் தேர்வை தி.மு.க. அரசு ரத்து செய்ததால்-தான். இந்நிலையில், அமைச்சர் கபில்சிபல் வேதாளத்தை மீண்டும் முருங்கை மரம் ஏறச் செய்கிறார்!

மாணவர்கள், பெற்றோர்கள் சும்மா இருப்பார்களா?

பிளஸ் டூ மாணவர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களது எதிர்காலம்பற்றி அவர்களது பெற்றோர்கள் கவலைப்படமாட்டார்களா? 22 ஆண்டுகள் போராடி நுழைவுத் தேர்வுக் கொடுமையை ஒழித்த திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மற்ற அமைப்புகளும் வேடிக்கை பார்க்குமா?

தமிழ்நாடு (தி.மு.க.) கலைஞர் அரசின் நிலை இந்த மசோதாவைப் பொறுத்து உடனடியாக எதிர்க்கிறோம் என்று கூறியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. வருமுன்னர் காக்கும் வகையான நல்ல தடுப்பு முயற்சி ஆகும். இதனைக் கைவிடச் செய்ய சகல முயற்சிகளும் செய்யவேண்டும்.

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
17.2.2010 -----------------------"விடுதலை” 17-9-2010

2 comments:

J.P Josephine Baba said...

Dear ovia
the education must be under central. so all state student treat equally in nationally. You know the Tamilnadu graduate standard not consider as same to Kerala. In nationally our Tamil students neglected by standard. So you not consider Veeramani cry. think nationally, globally it is a time to globalization if we accept or not.

J.P Josephine Baba said...

Dear ovia
the education must be under central. so all state student treat equally in nationally. You know the Tamilnadu graduate standard not consider as same to Kerala. In nationally our Tamil students neglected by standard. So you not consider Veeramani cry. think nationally, globally it is a time to globalization if we accept or not.