Search This Blog

4.2.10

தந்தை பெரியார் - ஜி.டி. நாயுடு

ஜி.டி. நாயுடு

இன்று தொழில் மேதை கோவை ஜி.டி. நாயுடு அவர்களின் நினைவு நாள் (1974).

தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பர். உரிமையோடு தந்தை பெரியார் அவர்களுடன் நகைச்சுவையோடு உரையாடக் கூடியவர்.

பள்ளிப் படிப்பு அதிகம் இல்லை. தனது தந்தையார் உருவாக்கிய தோட்டத்தில் ஒரு காவலர் போலிருந்து பணியாற்றினார். மோட்டார் தொழிலில் கிளீனர், நடத்துநர், ஓட்டுநர் என்று அனைத்துப் பணிகளையும் செய்து கடைசியில் மோட்டார் மன்னர் என்ற பட்டப் பெயரும் பெற்றார். உழைப்பால் உயர்ந்து 230 பேருந்துகளுக்கு உரிமையாளர் ஆனார். படிப்பறிவில்லாத இந்த அதிசய மனிதர் நூற்றுக்கும் மேற்பட்ட புதியவைகளைக் கண்டுபிடித்தார்.

ஒரே வாழைத் தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர்.

தன்னிடம் பணியாற்றும் ஓட்டுநருக்கு ஒரு பேருந்தையே பரிசாகக் கொடுத்தவர். உலகம் சுற்றியவர். ஹிட்லரையும், முசோலினியையும் நேரில் சந்தித்து தமது கேமிராமூலம் படம் பிடித்தவர்.

திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளிலும் பங்குகொண்டவர். தனித் தமிழ்நாடு கோரிக்கையில் நம்பிக்கை உள்ளவர்.

தமது கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஆதரவு காட்டாததைக் கண்டித்தும், அதிகமான அளவில் வரி போட்டதை ஏற்காமலும் இருந்த நிலையில், ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. திடலில் ஏற்பாடு செய்தார் (13.1.1954).

வேலையில்லாத் திண்டாட்டம் என்று கூட்டத்திற்குப் பொருள் கொடுக்கப்பட்டு இருந்தது.

உண்மையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு, தம்மால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை பொது மக்கள் மத்தியில் உடைப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது.

தந்தை பெரியார், டாக்டர் வரதராசுலு நாயுடு, ஆர்.வி. சாமிநாதன், ஏ.கோவிந்தசாமி, முன்னாள் அமைச்சர் எஸ். இராமநாதன், சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சின்னதுரை, முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன், மோகன் குமாரமங்கலம், வி.கே.கே. ஜான் எம்.எல்.சி., கே.டி. கோசல் ராம், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி முதலியோர் பங்கு கொண்டனர்.

பேசியவர்கள் அனைவரும் மத்திய அரசை எதிர்த்து அந்தப் பொருள்களை உடைக்க வேண்டும் என்று பேசினார்கள்.

தந்தை பெரியார் பேசுவதற்கு முன்பே பொருள்களை உடைக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டார் ஜி.டி. நாயுடு.

இறுதியாகப் பேசிய தந்தை பெரியார் நீங்கள் செய்த காரியம் பைத்தியக்காரத்தனமான காரியம் முட்டாள்தனமானது என்று கடுமையாகப் பேசினார்.

முட்டாள்தனம் என்ற சொல்லை வாபஸ் வாங்குமாறு கூட்டத்தினர் கூச்சல் போட்டனர். ஆனால், தந்தை பெரியார் அவர்களோ அதற்கு மேலும் சென்று மாபெரும் மடத்தனம் முட்டாள்தனம் என்று ஓங்கியடித்தார்.

எதை உடைக்கவேண்டும்? இதற்குக் காரணமான டில்லி ஆட்சியையல்லவா உடைக்கவேண்டும் என்று கர்ச்சித்தார் தந்தை பெரியார். ஜி.டி. நாயுடுவை நட்பு முறையில் கிராக் என்பேன், இன்று மெய்யாகவே அவர் ஒரு கிராக் என்று தந்தை பெரியார் கூறினாரே பார்க்கலாம்!

----------------- மயிலாடன் அவர்கள் 4-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

மதுரை சரவணன் said...

nalla thakaval . inru utaikka yaar varuvarkal . periyar thondu valambera ungkal ponror innum pala idukaikal itavendum.