Search This Blog

10.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! -6


மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!


தன்னை ஏற்காதவர்களைத் தண்டிப்பதற்காகவும், தன்னை நம்புபவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் உலகமே அழிந்து போகக்கூடிய அளவுக்குப் பெரும் மழையையும், பிரளயத்தையும் கடவுள் ஏற்பாடு செய்ததாகக் கதை ஒன்று பைபிளில் உள்ளது. அதையே குர்ஆனும் கூறுகிறது.

உலகின் பல நாடுகளிலும் பரவிப் பாய்ந்த பிரளயம் பற்றிய நிலவியல் தடயங்கள் ஏதும் கிடையாது. சிலச்சில நாடுகளில் மட்டும், சில பகுதிகளில் மட்டும் நிகழ்ந்த வெள்ளப் பெருக்குகளுக்கான தடயங்கள் இருக்கின்றன. உலகம் முழுமைக்குமாகவோ, அல்லது குறைந்த அளவு மத்திய கிழக்குப் பகுதிகளுக்குமாகவோ அழிவு ஏற்படுத்திய வெள்ளம் வந்ததில்லை.

மெசபடோமியாப் பகுதியில் வழங்கப்பட்ட கட்டுக்கதை ஒன்றில் பிரளயம் பற்றி வரும். இதற்கு வரலாற்று ஆதாரம் ஏதும் கிடையாது. ஆனால் இதை பைபிளில் எழுதி வைத்து அதையே குர்ஆனிலும் திரும்பவும் கூறி நம்பச் சொல்கிறார்கள்.

பைபிளில் நோவா என்பதை குர்ஆன் நூஹ் என்கிறது. உலகின் உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண், பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும். (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டு விட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும் ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக் கொள்ளும் என்று கடவுள் கூறியதாம்.

உயிரியல் அறிஞர்களின் கருத்துப்படி உலகில் ஏறத்தாழ 100 லட்சம் உயிர்கள் உள்ளன. இவை அத்தனையையும் அந்தக் கப்பலில் ஏற்றிக் கொள்ள முடியுமா? பெரிய விலங்குகளும் ஊர்வன வகைகளும் சேர்ந்து சுமார் 45 ஆயிரம் உயிரிகள் என்றாலும் ஆணும் பெண்ணுமாக 90 ஆயிரம் விலங்குகள் கொள்ளக்கூடுமா? மலைப் பாம்புகள், யானைகள், நீர் யானைகள், காண்டா மிருகங்கள், ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி, காட்டெருமை, வரிக்குதிரை எனப் பெரிய விலங்குகள் உள்ளனவே, அவற்றை அடைக்க முடியுமா? அமேசானில் உள்ள (அனகோன்டா) பாம்பு, ஆஸ்திரேலியாவின் கங்காரு, இவையெல்லாம் எப்படித் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து அடைக்க முடியும் நூஹ் என்னும் மனிதனால்? இங்கர்சால் கேட்டாரே, பித்துக்குளித்தனம் இதற்கும் மேலும் இருக்குமா?

கடவுள்தான் வானங்களையும் பூமியையும், அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாள்களில், படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை என்று பீற்றிக் கொள்கிறது (சூரா 50.38).

அதுவே சூரா 41.9 இல் பூமியை மட்டுமே இரண்டு நாள்களில் படைத்ததாகக் கூறுகிறது. அவனே அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான். அதன் மீது (சகலவிதமான) பாக்கியங்களையும் பொழிந்தான். இன்னும் அவற்றின் உணவுகளை நான்கு நாள்களில் சீராக நிர்ணயித்தான் என்று சூரா 41.10 கூறுகிறது.

பிறகு வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்... இரண்டு நாள்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான். ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் என்று சூரா 41, 11, 12 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.

2+4+2 என்று எட்டு நாள்களில் படைத்ததாக சூரா 41ம் ஆறுநாள்களில் படைத்ததாக சூரா 50ம் கூறுகின்றன. இவற்றில் எதை ஏற்பது? எதை நம்புவது?

உண்டாகட்டும் (ஙிமீ) என்கிற கட்டளை கடவுளிடமிருந்து பிறந்ததும் ஒவ்வொன்றும் உண்டாயின என்கிறது. (இதில் களைப்பு வருவதற்கு எங்கே வழி? ஆறு நாள்கள் பாடுபட்டும் எனக்குக் களைப்பு கிடையாது என்று தம்பட்டம் அடிக்கும் கடவுள், எதைக் கோடரியால் வெட்டி முறித்தது?)

இப்படிப் படைப்பதற்கு முன்பு கடவுள் அமர்ந்திருந்த நாற்காலி (சிம்மாசனம்) நீரில் மிதந்து கொண்டிருந்ததாம். அந்த நீரை இரண்டாக்கி வானத்தையும் பூமியையும் படைத்ததாம். அந்த நீரைப் படைத்தது யாராம்? விளக்கம் இல்லை.

கடவுள் பலப்பல அற்புதங்களைச் செய்ததாகவும் குர் ஆன் கூறுகிறது. பாமர மக்களைக் கவரும் மலிவான வித்தை காட்டும் வேலையைச் செய்தால்தான் பத்துப் பேரைக் கவர முடியும் என்று கடவுள்களே சொல்லாமல் சொல்கின்றன போலும்!

...உங்களுக்காக நாம் கடலைப் பிளந்து உங்களை நாம் காப்பாற்றி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபில்அல்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம். (என்பதையும் நினைவு கூருங்கள்.) சூரா 2.50. உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம். (சூரா 2.57)

மூசா (மோசே) தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது உமது கைத்தடியால் அடிப்பாறையில் அடிப்பீராக என நாம் கூறினோம். அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுகள் பொங்கியெழுந்தன... (சூரா 2. 60)

நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய நூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்... (சூரா 2.63)

உங்க(முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக்கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி, சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள் என்று கூறினோம். (சூரா 2.65)

அறுக்கப்பட்ட பசுவின் ஒரு துண்டால் கொலையுண்டவனின் சடலத்தை அடியுங்கள் என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லா இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்... (சூரா 2.73)

இவற்றில் சில கிறித்துவர்களின் பழைய ஏற்பாட்டில் வந்தவைதாம். யேசுவை ஈசா எனக் கூறியும், மோசேவை மூசா எனக் கூறியும் முசுலிம்கள் ஏற்றுக் கொள்ளும் காரணத்தினால் அதே அற்புதங்களை இவர்களும் வரித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் மலையைக் குடையாகப் பிடித்த கதை, இந்து மதக் கண்ணன் எனும் கடவுளின் அற்புதம் அல்லவா?

சூரா 54.1, 2 ஆகியவற்றில் ஓர் அற்புதம் பற்றி அளந்து விட்டிருக்கிறார்கள். சந்திரனை இரண்டு துண்டுகளாக்கி ஒட்டவைத்ததாக ஓர் அற்புதம் எழுதப்பட்டுள்ளது. சந்திரனைக் கடவுள்தானே படைத்தது? எனவே அதனை வெட்டவும், ஒட்டவும் உரிமை உண்டு என்கிறார்கள் போலும்!

ஒரு கன்றுக்குட்டியை வெட்டிக் கறி சமைத்து ஆயிரம் பேர் கொண்ட பந்திக்குப் பரிமாறிய கதையும் உண்டு. (இம்மாதிரிக் கதை கிறித்துவ யேசு செய்ததாகவும் இந்து மதக் கண்ணன் செய்ததாகவும் கதைகள் உண்டே!)

இந்த மாதிரியான அற்புதங்கள் எல்லாம், சர்வ சக்தியுள்ளது எனப்படும் கடவுளுக்குச் சாதாரணமானவை. எங்கோ ஒரு மூலையில் ஒருவரின் நோயைக் குணமாக்கிக் காட்டுவதற்குப் பதில் ஏன் நோய்களே வராமல் தடுத்து விடக்கூடாது? அல்லது மருத்துவ மனைகளில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான நோயாளிகளைக் காப்பாற்றிக் குணப்படுத்தக்கூடாது?


----------------சு. அறிவுக்கரசு அவர்கள் 10-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: