Search This Blog

16.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! -10


மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!


மனிதனையும் உயிர்களையும் தாவரங்களையும் படைத்ததாகக் கடவுள் உரிமை கொண்டாடுகிறது. படைக்கப்பட்டபோது, புவியில் செடி கொடிகளே முளைக்கவில்லை; காரணம் கடவுள் மழையைப் பொழிவிக்கவில்லை, நிலத்தில் பாடுபட மனிதன் இல்லை, எனக் கூறிவிட்டு, ஓடை நீர் பாய்ந்து நிலப் பகுதி முழுதையும் நனைத்து வைத்தது எனக் கூறப்பட்டுள்ளது முதல் நூலில் (பைபிளில்). இந்த ஓடையை, அல்லது ஓடைகளை யார் படைத்தது? விடை இல்லை.

பின்னர் மனிதனை மண்ணிலிருந்து கடவுள் படைத்ததாம். படைத்த உருவத்தின் மூக்குத் துளைகளில் உயிரை ஊதியவுடன், மனிதன் உயிருள்ளதாக மாறினான் என்று படைப்பைக் கூறுகிறது ஆதி ஆகமம். அதற்குப் பிறகு, எல்லா விலங்குகளையும் நிலத்திலும் எல்லாப் பறவைகளையும் வானத்திலும் படைத்தாராம். அவற்றை மனிதனிடம் கொண்டு வந்து நிறுத்திப் பெயர் சொல்லுமாறு கடவுள் கேட்டதாம். மனிதன் என்ன என்ன சொன்னானோ அவையெல்லாம் அவற்றின் பெயர்கள் ஆகின. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதனே பெயர் வைத்தான்.

முதல் மனிதனான ஆதாமுக்கு உதவி செய்ய யாரும் இல்லையாதலால் அவனை ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திய கடவுள் அவனது விலா எலும்பு ஒன்றினை முறித்து எடுத்து அந்தக் காயத்தைச் சதையால் மூடியதாம்; அந்த விலா எலும்பிலிருந்து பெண்ணைப் படைத்து மனிதனிடம் அழைத்து வந்ததாம். அப்போது மனிதன் கூறினானாம். இது என் எலும்பின் எலும்பு; சதையின் சதை,மனிதனிடம் (Man) இருந்து படைக்கப்பட்டதால் மனுஷி (Woman) என அழைக்கலாம் என்றானாம். அவர்கள் அப்போது அம்மணமாகத்தான் இருந்தனர். இதுதான் முதல் நூலில் கூறப்பட்டுள்ள மனிதப் படைப்பு.

வழி நலான குர்ஆன் கூறுவது இப்படிப் போகிறது: (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம் (சூரா 23-12) என்று தொடங்கி அந்தப் படைப்புப் பணியின் ஒவ்வொரு கட்டமாக விவரிக்கிறது. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.(சூரா 23-13). பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம். பின்னர் அத்திசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாக)ச் செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லா பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன் என்று சூரா 23-14 கூறுகிறது.

இது அல்லாவே கூறியது என்கிறார்கள். அல்லா தனக்குத் தானே பாக்கியம் உடையவன் என்றும் அழகானவன் என்றும் கூறித் தன் முதுகைத் தானே தட்டிக் கொள்கிறது. இதைத்தான் சிக்மண்ட் ஃபிராய்டு நார்சிசம் என்று வகைப்படுத்தியுள்ளார்.

அடுத்தது ஒன்று, படைப்பாளர்களில் எல்லாம் மிக அழகான... என்றால் எத்தனை படைப்பாளர்கள்? பிரம்மா, கர்த்தர் என்று பிற மதப் படைப்பாளர்களைக் கணக்கில் எடுத்துத் தனக்குத்தானே வழங்கப்பட்ட சான்றிதழா?

இது இப்படியிருக்க சூரா 77-20 முதல் 23 வரை என்ன கூறுகிறது? அற்ப நீர்த் துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா? பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கி வைத்தோம். ஒரு குறிப்பிட்ட (கால) அளவு வரை எனக் கூறுகிறது.

சூரா 21-30 இல்... உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம்... என்றும், சூரா 25-54 இல்... அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும் சம்பந்தங்களையும் ஏற்டுத்துகிறான் என்றும், சூரா 24-45 இல்... எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லா நீரிலிருந்து படைத்துள்ளான் எனக் கூறப்பட்டுள்ளது.

படைத்தது என்பதையே ஏற்றுக் கொள்ள அறிவும் அறிவியலும் இடம் கொடுக்காதபோது, எதைக் கொண்டு படைத்தது என்றால் என்ன? அது ஒரு பிரச்சினையே அல்ல, கற்றவர்களுக்கு!

450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவி உருவானது என்றால் அதில் உயிர்கள் உருவான காலம் 100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் என்கிறது அறிவியல். The Origin of Life எனும் தலைப்பில் 1938 இல் ரஷிய உயிர் வேதியியல் அறிஞர் ஓபரின் என்பார் எழுதிய நூலில் உயிர்கள் உருவான விதம் பற்றி விவரித்துள்ளார். தொடக்கக் காலத்தில் புவியில் வேதிப் பொருள்கள் நிறைந்திருந்தன. தொடர்ந்து நடைபெற்ற பெட்ரோ கெமிகல் நடவடிக்கைகளின் விளைவாக அமினோ அமிலங்கள் உருவாகின. இவற்றின் மூலம் புரொட்டீன் மூலக் கூறுகள் உற்பத்தியாகிடும் வாய்ப்பு உருவானது. இலட்சக் கணக்கான ஆண்டுக்காலம் செல்லச் செல்ல, வேதியியல் தேர்வுக் கேற்ப இவை சிக்கலும் உறுதியும் நிறைந்தனவாகி, உயிர்களின் தோற்றத்திற்கான முன்னோடிகளாகின. அவரைத் தொடர்ந்து மில்லை ஃபாக்ஸ், பொன்னம்பெருமா போன்ற அறிவியலாளர்கள் பலரும் ஆய்வுக் கூடத்தில் அமினோ அமிலம் அடங்கிய ஆர்கனிக் கலவையைத் தயாரித்து வெற்றி கண்டு இதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதே அடிப்படையில், சார்லஸ் டார்வின் 1859 இல் தம் கண்டுபிடிப்பை வெளியிட்டார். உயிர்கள்அனைத்தும் தனித்தனியே படைக்கப்பட்டன அல்ல. அவை உருமலர்ச்சி பெற்றவை (தோன்றின) எனத் தெளிவாக்கினார்.

டார்வினின் பரிணாமக் கொள்கையை ஆய்வு செய்து, ஏற்றுக் கொண்டு, அறிவியல் தொடர்பான விவாதங்களில் கலந்து கொண்டு பரிணாம வாதத்தை நிலை நிறுத்திய அறிவியலாளர், ட்டி.எச். ஹக்ஸ்லி (T.H.Huxley) கீழ்நிலை விலங்குகளுடன் மனிதனுக்குள்ள தொடர்பு (Man’s relations to Lower animals) எனும் நூலை எழுதியுள்ளார். நாய்களின் கருமுட்டையைக் கணக்கில் எடுக்கத் தொடங்கி, பல உயிர்களுடன் மனித உயிருக்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி ஆய்ந்து, பிறகு முடிவாகத் தம் கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனிதனின் ஆதித் தோற்றமும் படிப்படியாக நடைபெற்ற அவனுடைய வளர்ச்சியும் நிச்சயமாக மனிதனுக்கும் கீழான நிலையிலுள்ள விலங்குகளைப் போலவே உள்ளன; மனிதன் கிட்டத் தட்ட வாலில்லாக் குரங்கை (Apes) ஒத்திருக்கிறான். முதுகெலும்புள்ள பிராணிகளின் (பல்லி, பாம்பு, தவளை, மீன் போன்றவை) சினை முட்டையைப் போலவே, மனிதக் கருமுட்டையும் (Ovum) இருக்கிறது. ஆனால் நாயிலிருந்து மனிதன் மாறுபட்டு இருக்கிறான். வாலில்லாக் குரங்கை ஒத்திருக்கிறான். மனிதர்களைப் போலவே வாலில்லாக் குரங்குகளின் கருமுட்டை மஞ்சள் குழம்புப் பகுதி உருண்டை வடிவிலேயே அமைந்துள்ளது; மேலும் இரண்டின் தொப்புள் கொடிகளும் ஒரே மாதிரியானவை. எனவே மனிதனும் வாலில்லாக் குரங்கும் ஒத்ததாக அமைந்துள்ளன என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

எனவே, மனிதனும் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம்தான். குரங்குகள், லெமூர்கள், மரத்தில் வாழும் ஷ்ரூ (Shrew) க்கள் வாலில்லாக் குரங்குகள் ஆகியவை மனிதனுடன் நெருக்கமான தொடர்பு உடையவை. இதனை அறிவியலின் அனைத்து அங்கங்களான Geopaleontlology, Biogeography, Biochemistry, Serology, Immunology, Genetics, Embryology, Parasitology, Morphology, Psychology, Ethology போன்ற அனைத்தும் ஆதரித்து சாட்சி அளிக்கின்றன.

எதுவுமே இல்லாமல், கடவுள் தூதனுக்குச் சொன்னது, தூதன் எனக்குச் சொன்னான், நான் உங்களுக்குச் சொன்னேன், இதை நம்புங்கள், நம்பாவிட்டால் நடப்பதே வேறு என்று அச்சுறுத்துகின்ற மத நூல்களாகவே உள்ளன.

மனிதன் பிறப்பில் இத்தனை என்றால் கடவுளுக்கு ஒரு மகன் பிறந்த கதையிலும் ஏகப்பட்ட முரண்கள். அது ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளது. இது போன்ற கதைகள் அந்தக் காலத்தில் நிறைய உலவி வந்தன. பெர்சியுஸ் எனும் கன்னியைத் தங்கத்தால் அபிஷேகம் செய்தபோது அவள் கருவுற்றாள் எனும் கதை இருந்தது. அட்டிஸ் என்பானின் தாய் நாநா, மாதுளம்பழம் சாப்பிட்டதால் கருவுற்றாள் என்ற கதையும் வழங்கியது. (பாயசம் சாப்பிட்டதால் கருவுற்ற ராமன் கதை இந்து மதத்தில் பிரசித்தம் பெற்றது.) இப்படிப் பிறந்ததாகக் கூறப்படுபவர்கள் பலர் பெரிய மனிதர்களாகவே இருந்தனர். கணிதமேதை பிதாகரஸ், பிளேட்டோ, அகஸ்டஸ் (ரோமப் பேரரசன்) போன்ற சிலர் இப்படிப் பிறந்தவர்கள் (இவர்களைக் குறிக்கும் வகையில் கிரேக்க மொழியில் Parthenogenesis என்கிற சொல்லே உருவாகியுள்ளது என்றால் உடலுறவு இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வது சகஜமாக இருந்திருக்கிறது. அந்த வகையில் யேசுவின் பிறப்பையும் சேர்க்க வேண்டுமே தவிர, அற்புதம் என்று எதுவும் கிடையாது. யேசுவுக்குத் தெய்வீகத் தன்மையைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் இதைச் செய்திருக்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். இப்படிச் சொன்னால் மக்கள் எளிதாக நம்பிவிடுவார்கள் என்கிற எண்ணமும் காரணம்.

யேசு பிறப்பதற்கு 132 ஆண்டுகளுக்கு முன்பே மொழி பெயர்க்கப்பட்ட கிரேக்க நாட்டின் பழைய ஏற்பாடு நூலில் கன்னி கருவுறும் செய்தி குறிக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்து இவர்களின் பைபிளில் செருகிக் கொண்டு விட்டனர். ஹீப்ரு மொழியில் கன்னி என்பதற்கு Bethulah என்ற சொல், இந்தச் சொல் அவர்களின் பைபிளில் இல்லை; மாறாக இளம் பெண் எனப் பொருள்படும் Haalmah என்ற சொல்தான் ஆளப்பட்டு உள்ளது. மதவாதிகள் மிகவும் முயற்சி செய்து இளம் பெண் என்றாலே,கன்னிப் பெண் என்றுதான் பொருள் என வாதாடிப் பார்த்தனர். முடியவில்லை. கிறித்துவர்களை எதிர்க்கும் நிலையில் யூதர்கள் இதைச் சுட்டிக்காட்டி கிறித்துவர்கள் செய்த அபத்தத்தைப் பற்றிப் பேசினர்.

உடனே, கிறித்துவர்கள் கதையைக் கொஞ்சம் திருத்தி, பரிசுத்த ஆவிக்குப் பிறந்தார் யேசு என்று ஆக்கிக் கொண்டனர்.

யேசு கடவுளின் மகன் எனும் கதையை யூதர்கள் ஏற்பதில்லை. அவர்களுடைய மறை நூலான பழைய ஏற்பாட்டில் ஒரு காப்பாற்றுபவர்(Messiah) வருவார் என எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பிறந்து வந்தது கடவுளின் மகன் அல்ல, கடவுளின் பணியாளர் (Ebel Yahweh) தான் என்கிறார்கள்.

அத்தோடு மட்டுமல்ல, கிறித்துவர்களின் மறை நூலான பைபிளை (அய்ந்துபேர் எழுதியிருப்பதில்) பால், ஜான், மார்க் ஆகிய மூவரும் கன்னிமேரிக்கு யேசு பிறந்தார் என்ற கதையை நம்பவில்லை. மற்ற இருவரான மாத்யூவும், லூக்கும் மட்டுமே நம்பி எழுதி உள்ளனர்.

இப்படிக் குழப்பமான பிறப்புக்கு ஆளான யேசு, தொட்டில் குழந்தையாக இருந்த போதே பேசியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (சூரா 19-30 முதல் 33). நிச்சயமாக நான் அல்லாவுடைய அடியேனாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கிறான். இன்னும் என்னை நபியாக ஆக்கியிருக்கிறான். இன்னும் நான் எங்கிருந்தாலும் அவன் என்னை முபாரக் ஆனவனாக (நற்பாக்கியம் உடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும் ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸிய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கிறான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கிறான்). நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என்மீது சாந்தி நிலைத்திருக்கும் என்று (அக்குழந்தை) கூறியது என இருக்கிறது.

மூன்று வயதிலேயே பதிகம் பாடியது என்று ஞானசம்பந்தனைப் பற்றி எழுதி வைத்திருக்கும் இந்து மதக் கதையைத் தோற்கடிக்கும் கிறித்துவ மதக் கதை.

ஆனால், அப்படி ஒரு யேசு உண்மையில் இருந்தாரா?

-------------------- தொடரும்.....


------------------- சு. அறிவுக்கரசு அவர்கள் 14-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: