Search This Blog

24.2.10

யார் இந்த கசாப்? பயங்கரவாதியா? பலிகடாவா?

உளவுத்துறையை ஆட்டி வைக்கும் இந்துத்துவா சக்திகள்!


உங்களைப்பற்றி?

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது அனைத்தும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் தாலுகாவில். நான் முதலாவதாக 1976 இல் மகாராஷ்டிரா மாநிலக் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக

பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து 1981 இல் அய்.பி.எஸ். ஆகப் பதவி உயர்வு பெற்றேன். பிறகு எஸ்.பி.,யாக, ஏ.டி.ஜி.பி.யாக, மாநில கமிஷனராக, சி.அய்.டி.யாக, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக எனப் பல மாவட்டங்களில் பணியாற்றி 2005 இல் ஓய்வு பெற்றேன். ஓய்வு என்றால் நானே முன்வந்து என்னுடைய பதவியை ராஜினாமா செய்து (வி.ஆர்.எஸ்.) விருப்ப ஓய்வு பெற்றேன். அதற்குக் காரணம் என்னால் முடிந்த அளவிற்கு உண்மையாக இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சேவை ஆற்றவேண்டும் என்பதற்காகவே. அதன்முதல்படிதான் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற இந்தப் புத்தகம்.

26/11 தாக்குதல் பற்றி?

நவம்பர் 26 தாக்குதல் நடைபெற்றபொழுது பத்திரிகைகளும், அரசும் வெளியிட்டுக்கொண்டிருந்த அறிக்கைகளில் பல முன்னுக்குபின் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இதனை ஒரு காவல்துறை அதிகாரி என்ற வகையில் நான் பார்க்கும்போது பல குளறுபடிகளைக் காண முடிந்தது. தாஜ் ஓபராய் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபட்ட விதத்தில் காணப்பட்டன. குறிப்பாக தாஜ் ஓட்டலில் மட்டும் தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் 84 முறை துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றன. இதில் ஒருமுறைகூட ஓட்டலுக்குள்ளிருந்து யாரும் சுடவில்லை. மாறாக, அனைத்துத் துப்பாக்கிச் சூடும் காவல்துறையால் நடத்தப்பட்டவை. அதேபோன்று ரயில் நிலையத்திலும், மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தியவர்கள் மராத்தி மொழியில் பேசினார்கள் என்பதும் சி.சி. கேமராக்கள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கவை. ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மொபைல், சிம்கார்டுகள் ஆகிய அத்தனையும் மகாராஷ்டிரா மாநில சதாரா மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்டவை எனத் தெரிய வந்தன. அதேபோன்று இந்தத் தாக்குதல் நடைபெறும் என்பதை உளவுத் துறை முழுமையாக முன்-கூட்டியே அறிந்திருந்தது. ஆனால், உளவுத் துறையோ, காவல்துறைக்கோ அரசாங்கத்திற்கோ தெரியப்படுத்தாமல் தாக்குதல் நடைபெற்றபொழுது நிமிடத்திற்கு நிமிடம் யாருக்கோ தகவல் பரிமாற்றம் செய்திருக்கின்றது. இந்தத் தாக்குதல் நடைபெறப் போகின்றது என அறிந்திருந்த உளவுத் துறை காவல் துறைக்கோ, ராணுவத்திற்கோ தெரியப்படுத்தியிருந்தால், இந்தக் கலவரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்க முடியும். ஆனால், உளவுத் துறை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் காவிமயம் ஆக்கப்பட்டிருப்பதனால், இந்தத் தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன.

அதேபோன்று மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோகித், தயானந்த பாண்டே, பிரதிக்யா சிங் உள்ளிட்டோரை காப்பாற்றுவதும் இந்தத் தாக்குதலின் ஒரு அம்சமாக இருந்தது. அதற்கு இடையூறாக இருந்த கர்கரேயைக் கொல்வதும் இவர்களுடைய திட்டமாக இருந்திருக்கின்றது. தாக்குதல் தொடங்கி ஒன்றரை மணிக்குள்ளாக கர்கரே கொல்லப்பட்ட பிறகும், இவர்களுடைய இந்த நாடகம் முழுமை பெற இவர்கள் ஏழு மணிநேரத்தை எடுத்துக்கொண்டார்கள். இந்தப் பாசிச கும்பல் இத்தகையத் தாக்குதலை நடத்தி இந்தியாவில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும் எனப் பல ஆண்டுகளாகத் திட்டம் தீட்டியதும் நேபாளம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டதும், கர்கரே அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட இந்துத்துவா பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிகணினியில் (லேப்டாப்) பல அதிர்ச்சித் தகவல்கள் இருந்தன. இதை மூடி மறைப்பதற்காகத் தன்னுடைய அரசியல் அதிகார ஆணவ முகங்களைக் கண்டுகொள்ளாத கர்கரேயைக் கொல்ல திட்டமிட்டு இத்தகையத் தாக்குதல் நடைபெற்று இருக்கின்றது. இந்தச் செய்திகள் எதுவும் என்னுடைய சொந்தக் கருத்துகள் அல்ல. அனைத்தும் உளவுத் துறையும், பத்திரிகைகளும் வெளியிட்ட அறிக்கைகளும், செய்திகளும் மட்டுமே.

எதற்காக இந்திய உளவுத் துறையை ஆர்.எஸ்.எஸ். தன்னு டைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது?

ஆர்.எஸ்.எஸ். கொள்கையே இந்தியாவையும், இந்திய மக்களையும், அரசாங்கத்தையும் தங்கள் அடிமைகளாகத் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதே. அதற்கான திட்டங்களை ஆரம்ப காலத்திலிருந்தே அவர்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இடையில் தோன்றிய காந்திஜி, அம்பேத்கர், பெரியார் போன்றவர்களால் ஆர்.எஸ்.எஸ். இன் பிடி மக்கள் மீதிருந்து குறைய ஆரம்பித்தது. இதன் எதிரொலியாக ஆர்.எஸ்.எஸ்., இந்து _ முஸ்லிம் கலவரங்களை நடத்திக் கொண்டிருந்தது. இந்தக் கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய பிராமணக் குலத்தைத் தக்க வைத்துக் கொள்ள அப்பாவி இந்துக்களைத் தங்களுடைய பகடைக் காய்களாகப் பயன்படுத்தின. அதன் விளைவாக ஆர்.எஸ்.எஸ். இன் கட்டுப்பாடு இந்தியாவின் ஒவ்வொரு துறையின்மீதும் இருக்கின்றது. முதலில் கல்வித் துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதன் விளைவாக அவர்களால் ஊடகங்களிலும், உளவுத் துறையிலும் மிகவும் சுலபமாக ஊடுருவ முடிந்தது. அரசாங்கம் எதுவாக இருந்தாலும், ஊடகம் யாருடையதாக இருந்தாலும் மக்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். அனைத்துத் துறையிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில்தான் உளவுத் துறையிலும், அதனுடைய அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

26 / 11 தாக்குதலில் அமெரிக்கா வின் சதி உண்டா?

தாக்குதலில் அமெரிக்காவின் சதி உண்டா, உண்டு என்றால் எந்த அளவிற்கு என்ற கோணத்தில் நான் என்னுடைய ஆய்வை மேற்காள்ளவில்லை. ஆனால், அமெரிக்காவும், அமெரிக்க உளவுத் துறையும்,(எஃப்.பி.அய்.) இதில் எடுத்துக் கொண்டிருக்கின்ற ஆர்வத்தைப் பார்த்தால் நிச்சயமாக எஃப்.பி.அய்.யினுடைய கை இருக்க வாய்ப்புண்டு. குறிப்பாக நரிமன் ஹவுஸ் தாக்குதலில் அதனுடைய சதி இருக்க வாய்ப்பு உண்டு.

யார் இந்த கசாப்? பயங்கர வாதியா? பலிகடாவா?

இதனையெல்லாம் நான் இன்னும் ஆய்விற்கு உட்படுத்தவில்லை. கசாப் என்பவன் பயங்கரவாதியாகவும் இருக்கலாம் அல்லது உளவுத் துறையால் பலிகடாவாகவும் ஆக்கப்பட்டிருக்கலாம். இதை முழுமையாக அறியவேண்டும் என்றால், அனைத்து வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க வேண்டும். அதைச் செய்தால் மட்டுமே உண்மை வெளிப்படும்.

மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் இன்றைய நிலை என்ன?

இந்த வழக்கைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக மூடி மறைத்திட முடியாது. ஏனென்றால், கர்கரே விசாரணையைச் சிறந்த முறையில் பதிவு செய்து வைத்திருக்கிறார். பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். அதனடிப்படையில் இந்த வழக்கையும் கைது செய்யப்பட்ட புரோகித் போன்றவர்களையும் அவ்வளவு எளிதாக மூடி மறைத்திட முடியாது. ஆனால், அத்தகைய முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்திட வாய்ப்பு உண்டு. அதைத் தடுக்க அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் உடனடியாக மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.

கர்கரேயின் மரணத்தில் உள்ள மர்மங்கள் என்ன?


கர்கரேயின் மரணத்திலும், மும்பை தாக்குதலிலும் பல மர்மங்கள் மறைந்திருக்கின்றன. இதை அனைத்தையும் வெளிக்கொணரவேண்டும் என்றால், உடனடியாக நான் ஆரம்பத்திலிருந்தே கூறுவதுபோல் அனைத்து வழக்குகளையும் மீண்டும் விசாரிக்கவேண்டும். விசாரித்தால் தாக்குதலில் கிடைத்த சிம் கார்டுகள், கர்கரேயின் மொபைல் போன் உரையாடல்கள் போன்ற ஆதாரங்கள் கிடைக்கும். ஆகவே, சுதந்திரமான, பாகுபாடு இல்லாத உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதி-மன்ற நீதிபதிகளை வைத்து விசாரணை நடத்தினால் மர்மங்கள் வெளிவரும்.

பொதுவாக பயங்கரவாதம் வளராமலிருக்க என்ன செய்யவேண்டும்?

உண்மையான பயங்கரவாதிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தாக்குதல் நடைபெற்ற உடன் எந்த ஒரு பாகுபாடுமில்லாமல் உடனுக்குடன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

நூல் வெளியான பிறகு எத்த கைய ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின?

ஆதரவை நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மகாராஷ்டிராவில் இருந்து என்னை தமிழகத்திற்கு வரவழைத்து கண்ணியப்படுத்தியிருக்கிறீர்கள். என்னுடைய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். என்னிடம் பேட்டி வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

இப்படி நாடு முழுவதும் உண்மை விரும்பிகளால் முழுமையான ஆதரவு எனக்குக் கிடைத்திருக்கிறது. எதிர்ப்பு என்று எதுவும் இதுவரை கிளம்பவில்லை. என்னை எதிர்க்காதவரை ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு நல்ல காலம். என்னை எதிர்த்தால் அவர்களுக்கே அது அழிவை உண்டாக்கும்.

உங்கள் புத்தகத்தில் இதுவரை நடந்த பயங்கரவாதத் தாக்குதல் அனைத்திலும் இந்துத்துவாவாதிகளே குற்றவாளிகள் என சொல்கிறீர்கள்? அப்படியானால், முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் இல்லையா?

நிச்சயமாக முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் இல்லை. இதுவரை நடந்த குண்டுவெடிப்புகளிலும், தீவிரவாதத் தாக்குதல் மூன்றில் மட்டுமே முஸ்லிம்களுடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது.

1. 1993 மும்பை குண்டுவெடிப்பு

2. 1998 கோவை குண்டுவெடிப்பு

3. கந்தகார் விமானக் கடத்தல்

இவற்றில் முதல் இரண்டையும் (மும்பை, கோவை குண்டுவெடிப்புகள்) தீவிரவாதத் தாக்குதல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவற்றில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்களே தவிர, அவர்கள் தீவிரவாதிகள் கிடையாது. ஆனால், மாலேகான், ஒரிசா, கோவா என நாட்டில் நடந்த அனைத்துக் குண்டு வெடிப்புகளிலும் இந்துத்துவா பாசிஸ்டுகளின் சதி இருந்திருக்கிறது. ஆகவேதான் என்னுடைய புத்தகத்தில் இந்துத்துவாவாதிகளைக் குற்றவாளிகள் எனச் சொல்கிறேன்.

முஸ்லிம்களில் தீவிரவாதி இல்லை என்றால், அவர்களை பயங்கரவாதி களாகச் சித்திரிக்க அரசும் ஊடகங் களும் முயல்வது ஏன்?

இதுவும் ஆர்.எஸ்.எஸ். திட்டம்தான். ஏனென்றால், உளவுத் துறையும், ஊடகமும் முஸ்லிம்களைத் திட்டமிட்டு தீவிரவாதிகளாகச் சித்தரிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். உடைய சதித் திட்டங்கள் வெளியில் தெரியாமல் இருக்கவும், அவர்களைக் காப்பாற்றவும் ஊடகங்கள் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கின்றன.

இத்தகைய பிரச்சினைகளை சமாளிக்க மக்கள் என்ன செய்யவேண்டும்?

மக்கள் இன்றைய ஊடகங்கள்மீது அழுத்தம் தரவேண்டும். ஊடகங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து அவர்களைக் கேள்வி கேட்கவேண்டும். அதேபோல், அரசும், உளவுத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். உளவுத் துறையினர் தன்னிச்சையாகச் செயல்படாமல், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் உளவுத் துறையை மாற்றி அமைக்க அரசாங்கத்திற்கும், மக்கள் அழுத்தம் தரவேண்டும்.

இந்தியாவும், பாகிஸ்தானும் நட்பு நாடாக மாற என்ன செய்யவேண்டும்?

இது ஒன்றும் கடினமான காரியமல்ல. இரண்டு நாடுகளும் அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய பிரிவினைவாத சக்திகளைக் கட்டுப்படுத்தினால், இரண்டு நாடுகளும் நட்பு நாடாக மாற இலகுவாக இருக்கும். எப்படி இந்தியாவில், இந்-துத்துவா பாசிச அமைப்புகள் செயல்படுகின்றனவோ அதேபோன்று பாகிஸ்தானிலும், சில அமைப்புகள் செயல்படுகின்றன. இவர்களை இரு நாட்டு அரசுகளும் இரும்புக் கரம் கொண்டு தடுக்கவேண்டும்.

-------------------எஸ்.எம். முஷ்ரீப் அவர்களின் நேர்காணல் - நன்றி: சமரசம்,
16-28, பிப்ரவரி, 2010

4 comments:

Unknown said...

நீங்கள் ஒரு நல்ல கதையாசிரியர்

KANTHANAAR said...

ஒரு முசுலிம அடிப்படை வாதிக்கிட்ட பேட்டி வாங்கினா அப்படித்தான் சொல்வாரு... அதான் கசாப், மக்கள கசாப்புக்கடை ஆக்கினத ஒன் டே மாட்ச்ச மாதிரி லைவ்வா காட்னாங்களே.. போதாதா... இதே ஒரு இந்து அடிப்படை வாதி கிட்டே பேட்டி வாங்கி போடுங்க.. அவரு வண்டிவண்டியா ஆதாரத்த தருவாரு.. ஓஓ நீங்க முற்போக்கு இல்லையா.. மறந்துட்டேன்...அப்ப முசுலீம் அடிப்படைவாதிகளை ஆதரிக்கணும்.. அதான் சரி...

சீனு said...

ஏதும், சிறந்த காமெடி பட விருதுக்கு ட்ரை பன்றீங்களா? கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா நடத்திடுங்க. உடனே கொடுத்திடுவார்.

tamil said...

மத்திய அரசின் உளவுத்துறையை ஆர்.எஸ்.எஸ் ஆட்டிவைக்கிறது என்றால் அந்த அரசில் திமுக ஏன் பங்கேற்றுள்ளது.ஏன் வீரமணி இதை எதிர்த்து ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை.தமிழரான ப.சிதம்பரம் அப்படி எங்காவது கூறியிருக்கிறாரா.’தமிழர் தலைவர்’
இது உண்மை என்றால் ஏன் மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ் பிடியிலிருந்து உளவுத்துறையை விடுவிக்க கோரி என்ன செய்திருக்கிறார். கோவையிலும்,மும்பையில் அப்பாவிகள் குண்டு வெடிப்பில் இறந்தார்கள்.அதை ஒருவர் தீவிரவாதம் இல்லை என்கிறார்.
நீங்களும் வெளியிடுகிறீர்கள்.
இதிலிருந்து தெரிகிறது நீங்கள் இந்த மக்களின் விரோதிகளுடன் சேர்ந்து தீவீரவாதத்தினை ஆதரிப்பவர் என்று.
இதுதான் தி.கவின் கருத்தா.