Search This Blog

8.2.10

பெரியார் பல பரிமாணங்களிலும் ஒளிர்கிறார்

(தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற இரண்டாவது நாள் இசை விழாவில், மரண கானா புகழ் விஜி குழுவினரால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி (சென்னை, 7.2.2010))


பெரியார் ஒளிர்கிறார்

தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும், தமிழர்களுக்கு அறிவு ஊட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ, நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால் என்ன?

---------------------------------(குடிஅரசு, 22.1.1944)

என்று வினா எழுப்பினார் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்.

இந்த உணர்வு ஊட்டப்பட்டதற்குப் பிறகு, இந்த எழுச்சி தமிழர்கள் மத்தியில் உண்டாக்கப்பட்டதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் ஓரளவிற்குக் கலைத் துறையில் மறுமலர்ச்சி மொட்டு வைக்க ஆரம்பித்தது.

தமிழ்நாட்டு மேடைகளில் சமஸ்கிருதம், தெலுங்கு கீர்த்தனைகள்தான் இடம்பெற்றன. தப்பித் தவறிப் பாடப்படும் பாடல்களுக்கு துக்கடா என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு இவைகளுக்கு எதிராக ஒரு கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தின் ஆதிக்கத்தில்தான் அனைத்துத் துறைகளும் மண்டியிட்டுக் கிடந்தன.

நாயும் வயிற்றை வளர்க்கும்

வாய்ச் சோற்றைப் பெரிதென்று

நாடலாமோ!

போய் உங்கள் செந்தமிழின்

பெருமையினைப் புதைப்பீரோ

பாடகர்காள்!

என்று தமிழியக்கத்தில் பாடினார் - சாடினார் புரட்சிக்கவிஞர்.

சுயமரியாதை இயக்க மாநாடுகளில் எல்லாம் தமிழிசை வற்புறுத்தப்பட்டது. பாடு பொருள் பகுத்தறிவு அடிப்படையிலும் மக்கள் முற்போக்குத் திசையில் அமைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அப்படியெல்லாம் கருத்துகள் வலியுறுத்தப்பட்டு மக்கள் மத்தியில் எழுச்சி வெடித்துக் கிளம்பிய நேரத்தில்தான் இசைக்கு மொழியில்லை என்று பார்ப்பனர்கள் பம்மாத்துப் பாடினார்கள். அப்படி சொன்னவர்கள்தான் பாடல்களில் எல்லாம் மறந்தும்கூட தமிழில் இடம்பெறாதவாறு அதாவது மொழி வெறிக் கண்ணோட்டத்தோடு நடந்துகொண்டார்கள் - நடந்துகொண்டும் வருகிறார்கள்.

அதேபோல, தமிழர்களையும் இந்தத் துறையில் தலையெடுக்கவொட்டாமல் செய்துவந்தனர். தமிழர்.களைப் பாடகர்களாகக் கூட அவர்கள் அங்கீகரிப்பதில்லை.

யேசுதாஸ் போன்றவர்கள் மனங்குமுறிச் சொல்லும் அளவுக்கு, மியூசிக் அகடாமி போன்ற இடங்களில் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டதில்லை. இதற்குமேல் தடுக்க முடியாது என்று வந்த நிலையில்தான் அவர்களுக்கெல்லாம் அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியார் இந்து சமய கலை விழா என்று சென்னையிலே 1983 மே மாதத்தில் நடத்தினார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் புரட்சிக்கவிஞர் விழாவை தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவாக திராவிடர் கழகம் அறிவித்தது. அவ்வாண்டுமுதல் தொடர்ந்து தலைநகரிலே அவ்விழாவை நடத்திக் கொண்டும் வருகிறோம். திராவிடர் கழகத்தின் எதிர் நடவடிக்கையின் காரணமாக இந்து சமயக் கலை விழா என்பதை இந்திய சமயக் கலை விழா என்று பெயர் மாற்றினார்; பெயர் மாற்றிக் கொண்டாலும் அவர்களின் உள்ளடக்கம் பார்ப்பனர்களின் கலாச்சாரத்தைக் கலையின் பெயரால் நிமிர்த்துவதே!

புரட்சிக்கவிஞர் விழா, தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழா ஆகியவை கலைத் துறையிலே ஆரிய எதிர்ப்பு - தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தில் செயலாற்றிக் கொண்டு வருகிறது.

இவ்விழாக்களில் தமிழ் அறிஞர்கள், கலைத் துறையினர் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்தோங்கும் தமிழர்களை அடையாளம் கண்டு, விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

இவ்வாண்டு (நேற்று 7.2.2010) சென்னை பிலிம் சேம்பரில் மரண கானா விஜி குழுவினரின் எழுச்சியிசை நடத்தப்பட்டது.

எடுத்த எடுப்பிலேயே ஜெய ஜெய சங்கரர் என்று ஆரம்பித்து, ஜெயேந்திர சரஸ்வதியின் காமக் களியாட்டத்தை, கொலைக் குற்றத்தை விளித்துப் பாடியது புதுமையானதாக இருந்தது. தெய்வத்தைத் துறந்து மரணத்தைப் பாடுகிறேன்! என்ற தலைப்பில், கம்பீரமான குரலில் பாடினார். தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அவ்விழாவில் பேசியபோது இசையில் ஒரு புரட்சிக் குரல் கிளம்பியிருக்கிறது என்றார்.

மரபுகளை உடைக்கும் கோடரியாக அவர் காணப்பட்டார். அரவாணிகள் என்று ஒதுக்கப்பட்ட திருநங்கைகளையும் தம் இசைக் குழுவில் இணைத்தது உள்ளபடியே புரட்சியே!

கடவுளைப் பாட மாட்டேன்; இரு பொருளில் பாடமாட்டேன்; வேற்று மொழி சொற்களைப் பயன்படுத்த-மாட்டேன்; போதை அருந்திப் பாடமாட்டேன் என்று சொன்னதும், கருப்புச் சட்டையே தன் அடையாளம் என்று கூறியதும், அவரைத் தனித்த முறையில் அடையாளம் காட்டுகிறது.

உடல் ஊனமுற்றவர் என்றாலும், அவர் வாயிலாகவும் தந்தை பெரியார் உயிர்த் துடிப்புடன் ஒலிக்கிறார்- தந்தை பெரியார் பல பரிமாணங்களிலும் ஜொலிக்கிறார் என்பதில் அய்யம் ஏது?

-------------------------" விடுதலை” தலையங்கம் 8-2-2010

0 comments: