Search This Blog

6.2.10

கும்பமேளா என்றால் என்ன?


கும்பமேளா

கும்பமேளாபற்றி ஏடுகளில் அடிபடுகிறது. அப்படியென்றால் என்ன? அலகாபாத் என்று வழங்கப்படும் பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் புண்ணிய முழுக்குதான் இது. பொதுவாக புராணீர்கள் கூற்றுப்படி மாசி மாதத்தில் புண்ணிய நதிகளில் முழுக்குப் போட்டால் புண்ணியம் கிடைக்குமாம்.

கும்பமேளா மாசியில் குருவும், மேஷத்தில் சூரியனும் இருக்கும் சேர்க்கை நேரும்போது ஏற்படும் புண்ணிய காலமாம். (எந்த விஞ்ஞானத்தில் இது நிரூபணம்?)

ஹரித்துவாரம், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிகை என்ற நான்கு தீர்த்தங்களில் இந்த வேளையில் திரள்வார்கள்.

கும்பத்தில் ஏற்படும் கிரக ராசிச் சேர்க்கை (மேளம்) காரணமாக இந்தப் பெயர் ஏற்பட்டதாம். தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் நடக்கிறதே அது போன்றதுதான்.

என்ன வேறுபாடு? தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிந்தனை திராவிடர் கழகப் பிரச்சாரம் இருக்கிறது அதனால் நிர்வாண சாமியார்கள் நடமாட முடிவதில்லை. ஆனால், வடக்கே கும்பமேளாவில் பிறந்த மேனியான சாமியார்கள்தான் பெரும் விசேஷம். கையில் சூலாயுதத்துடன் காட்டு விலங்காண்டிகளாகத் திரிவார்கள்.

இந்தக் கங்கை நதியின் அசுத்தம் பேர் பெற்றது.

கங்கையில் இறக்க முக்தியாம் பிணங்களைத் தூக்கி எறிவார்கள். பக்கத்தில் பிணங்கள் மிதந்து கொண்டிருக்க, புண்ணிய முழுக்குப் போடுவார்கள். பக்தி என்பது போதையாயிற்றே! இந்த அசுத்தம், அநாகரிகங்கள் எல்லாம் ஒரு பொருட்டா என்ன!

இந்தப் புண்ணிய தண்ணீரை எடுத்து சோதித்தால் உலகத்தில் உள்ள அத்தனைக் கொடிய நோய்க் கிருமிகளின் இன்பச் சுற்றுலாவைக் காணலாமே!

நீர் புனித ஸ்நானம் கங்கையில் செய்தீரா? என்று பிரதமர் நேருவைப் பார்த்து ஒருவர் கேட்க, அதற்கு நேரு அவர்கள் சொன்ன பதில்:

‘‘No bodily dip, but other dips. I am very much fond of bathing in the Ganga, but I have to behave myself with more restraint’’என்றாராம்.

கங்கையில் குளிக்க எனக்கு ஆசைதான். ஆனால், அந்த ஆசையை அடக்கிக் கொண்டேன் என்றாராம் பிரதமர் நேரு.

இதுபற்றி அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் (14.2.1954) கும்பமேளாவும், நேருவும் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார்.

அய்ம்பது லட்சம் மக்கள் செய்யும் ஒரு புனித காரியத்தை அவர்களின் தலைவர் என்று கூறிக்கொள்ளும் நேரு ஏன் செய்யவில்லை என்று யார்தான் எண்ணாமல் இருக்க முடியும்? ஒருவேளை, கங்கை என்றால் என்ன? அதில் குளிப்பதால் கிடைக்கும் பயன் யாது என்பதை உள்ளபடியே அறிந்த பகுத்தறிவாளர்கள் வேண்டுமானால் அவர் குளிக்காததற்குக் காரணத்தை அறிந்திருக்க முடியும்.

ஆனால், பக்தி மார்க்கத்தில் புரள்வோர் ஏன் கங்கையில் புரண்டு தம்மைப் புனிதமாக்கிக் கொள்ளவில்லை நேரு என்று எண்ணாமல் இருக்க முடியுமா? என்ற வினாவை அறிஞர் அண்ணா எழுப்புகிறார்.

புரியவில்லையா? 50 லட்சம் மக்கள் குளிக்கும் கங்கை மாசு அடைந்து சாக்கடையாகிக் கிடக்கிறது. அதில் குளித்தால் புண்ணியம் வராது. நோய்தான் வரும் என்று அறிந்ததாலே கொஞ்சம் பகுத்தறிவாளரான நேரு அப்படி நடந்துகொண்டார் என்று அண்ணாவுக்கு மட்டும் அல்ல, புத்தியைப் பயன்படுத்தும் யாருக்குமே எளிதாகப் புரிந்துவிடாதா என்ன!

-------------------- மயிலாடன் அவர்கள் 6-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Bala said...

தோழரே தங்கள் பதிவில் கங்கை நதியில் குளிப்பதால் புனிதம் வராது நோய் தான் வரும் என்று கூறி இருக்கிறீர்கள். இது முற்றிலும் உண்மை. ஆனால் கங்கை மாசு அடைவது ஐம்பது லட்சம் மக்கள் குளிப்பதனால் தான் என்பது போல தங்கள் பதிவு உள்ளது. கங்கை கரையில் சுமார் 29 மாநகரங்கள், 70 நகரங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 1.3 பில்லியன் லிட்டர் சாக்கடை இதில் கலக்கிறது. மொத்தம் 146 பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட விதிமுறை அனைத்தையும் மீறி கழிவுகளை கங்கையில் கலக்கின்றன. இரண்டு வகையான மாசு உண்டு. இயற்கையான மாசு மற்றும் செயற்கையான மாசு. இதில் முதல் வகை அவ்வளவாக ஆபத்தை உண்டாக்குவதில்லை. ஐம்பது லட்சம் மக்கள் குளிப்பதனால் தான் ஒரு நதி மாசு அடைகின்றது என்றால்
Citarum River in Indonesia
The Great Lakes (US/Canada)
Yellow River in China
Riachuela River of Buenos Aires
Lake Karachay (Russia)
The King River (Australia)
The Mississippi River (US)

மற்றும் நம் சிங்கார சென்னையில் ஓடும் புண்ணிய நதியாம் கூவம் ஆகியவை எந்த கும்பமேளாவில் அசுத்தப்படுத்த படுகின்றன?

இவை அனைத்தும் ஆத்திக நாத்திக பேதமில்லாமல் களங்கம் அடைகின்றன.