Search This Blog

4.2.10

வன்முறையின் மறு பெயரே சங்பரிவார்க் கும்பல்

அறிவுப்பூர்வமான ஒரு வெடிகுண்டு!

தொகுப்பு: மின்சாரம்

‘Who Killed Karkare’ நூல் வெளியிடப்பட்டது

இந்தியாவை இந்துராஷ்டிரமாக உருவாக்கவேண்டும் என்று நினைப்பது இந்துக்கள்கூட அல்ல இந்து மதப் போர்வையில் மதங் கொண்டு திரியும் மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே!

பார்ப்பனர்கள் வெளிப்படையாக நாங்கள் தான் அரசாளத் தகுந்தவர்கள் என்று மார்தட்டினால், மார்பும் இருக்காது, மண்டையும் இருக்காது.

அதற்காக அவர்கள் திசை திருப்பும் யுக்திதான் முஸ்லிம்கள் எதிர்ப்பு - முஸ்லிம் தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!

தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் என்று முத்திரை குத்த இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அதனைப் பெருக்கிட, பதாகை பிடித்துக் காட்ட பார்ப்பன ஊடகங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் புலனாய்வுத் துறை இருக்கிறது _ நிருவாக வர்க்கம் இருக்கிறது.

இவற்றை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு நூல்தான் ho Killed Karkare?.

நூலின் ஆசிரியர் மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் அய்.ஜி. காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் , அய்.பி.எஸ்.

ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருந்தும், இதற்குமேல் பெரும் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு (VRS) கொடுத்துவிட்டு, பார்ப்பனப் பாசிசக் கும்பலால் திட்டமிட்ட வகையில் பலியாக்கப்படும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வீர சாகச பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த ஒரு சதிகார கும்பலின் சிண்டைப் பிடித்து இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்தியவர் கர்கரே என்னும் காவல்துறை அதிகாரியாவார்.

மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாலேகான் என்னும் இடத்தில் சிமி அலுவலகத்தின்முன் குண்டுவெடிப்பு 29.9.2008 அன்று நிகழ்ந்தது. 5 பேர் பலி; 90 பேர் படுகாயம்.

மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.

அந்த மோட்டர் காருக்கு உரிமையானவர் ஒரு பெண் சந்நியாசி. அவர் பெயர் சாத்வி பிரக்யா தாக்கூர். மாணவர் பருவந்தொட்டு பல்வேறு இந்துத்துவா அமைப்பில் இருந்தவர்.

குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஆதரவும் உண்டு.

இந்தக் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளி இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் பணி-யாற்றிய சிறீகாந்த் புரோகித் என்பவர்; மகாராட்டிர மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருபவர்.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாளுவது எவ்வாறு? என்பன போன்ற பயிற்சிகளை இந்துத்துவாவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி இவர்.

இவர்கள் பயன்படுத்திய வெடிகுண்டு தயாரிப்புக்கான வெடிமருந்தோ இராணுவத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்க முடியாதது. மேலும் பல இராணுவத்தினர் இந்த வெடிகுண்டு குற்றத்தில் தொடர்புடையவர்கள்.

பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்தை இந்து மயமாக்கும் ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

விமானப்படைத் தளபதியாக இருந்து விடுபட்ட விஷ்ணுபகவத் இந்த உண்மையைப் பட்டாங்கமாய்ப் போட்டு உடைத்தார்; ஊடகங்களிலும் வெளிவந்தது.

நாசிக் இராணுவத்தில் பயிற்சி பெற்ற இந்துத்துவாவாதிகள் இந்திய இராணுவத் துறையில் ஆயிரக்கணக்கானோர் ஊடுருவியுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய, அதிரும் தகவலாகும்.

இந்தியாவை இந்து மயமாக்கு!, இந்திய இராணுவத்தையும் இந்து மயமாக்கு! என்பது இந்துத்துவாவாதிகளின் ஏற்றப் பாட்டாகும்.

அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், அதனைத் திட்டமிட்டுச் செய்துவிட்டனர். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 96 உயர்மட்ட அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவ அதிகாரிகள் அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும்.

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

மாலேகானில் மட்டுமல்ல; பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் இதே கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.

இராணுவ அதிகாரி புரோகித் தயாரித்து வைத்திருந்த திட்டமோ வெகு பயங்கரமானது. இசுரேலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இந்தியாவில் ஒரு போட்டி அரசை, இந்துத்துவா அரசை நடத்திடவெல்லாம் திட்டமிட்டு இருந்தனர். வரைபடம், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை முதற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

மடிக் கணினி (லேப்டாப்)யில் இருந்த பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன.

இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவர், விரிவாகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கக் காரணமாக இருந்தவர்தான் கார்கரே என்னும் காவல்துறை அதிகாரி.

4000 பக்கங்களைக் கொண்ட தகவல் அறிக்கையாக அது உருவாக்கப்பட்டு இருந்தது.

அவை வெளியில் வந்தால் ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பூர்வோத்திரமான அத்தனை அங்க மச்ச அடையாளங்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று மக்கள் மத்தியிலே அம்பலமாகியிருக்கும்.

இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை ஆரியம் விட்டு வைக்குமா? இதற்குமுன் விட்டு வைத்ததுதான் உண்டா?

ராமராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சொன்னவரை மகாத்மாவாக்கியவர்களும் அவர்களே. நான் சொல்லும் ராமன் வேறு; இராமாயண இராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்பித்ததும், அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்த கும்பலாயிற்றே!

திட்டமிட்டார்கள், தீர்த்துக் கட்டிவிட்டார்கள் காவல்துறை அதிகாரி கர்கரேயை.

அதைப்பற்றிய நூல்தான் மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட ‘‘Who Killed Karkare?’’ என்ற நூலாகும். 2009 இல் முதல் பதிப்பாக வெளிவந்து, 2010 இல் மூன்றாவது பதிப்பாகவும் வெளிவந்துவிட்டது.

அந்த நூலைப் பற்றிய அறிமுக விழாதான் திராவிடர் கழகத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் நேற்று (2.2.2010) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றதாகும்.

336 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 300. நேற்றைய விழாவில் ரூபாய் 250 க்கு அளிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் பேராசிரியர் பி.ஆர். அரங்கசாமி, தணிக்கையாளர் ஆர். இராமச்சந்திரன், அப்துல் காதர், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன், புதுச்சேரி மு.ந. நடராசன் முதலியோர் பெற்றுக்கொண்டனர்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

வேர்கள் பதிப்பக உரிமையாளர் எம். குலாம் முகம்மது அவர்கள் தன் உரையில் பார்ப்பனியத்தின் பயங்கரத் தன்மையை எடுத்துக் கூறினார்.

பார்ப்பனர்களால் இந்தியாவுக்கே பேராபத்து சூழ்ந்துவிட்டது.

இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்கவேண்டும்.

பெரியார் தமிழ்நாட்டிலிருந்து மகாராட்டிரத்திற்குச் சென்றுள்ளார். இந்நூலில் பெரியார்பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைமுறையினருக்குப் பெரியார் பற்றி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரப்போகும் தலைமுறையில் நடக்க இருக்கும் புரட்சிக்கு பெரியார்தான் கட்டியம் கூறுவார் என்று அவர் சொன்னபோது கலகலப்பான கைதட்டல்.

பார்ப்பனர்களின் கைக்குள் இருக்கும் உளவுத் துறையை விமர்சிப்பது என்பது சாதாரணமானதல்ல. முஷ்ரிஃப் அவர்கள் மிகவும் விரிவாகவே உளவுத் துறையை விமர்சித்திருக்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் அமீர் அன்சாரி அவர்கள் கூட அண்மையில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார். உளவுத் துறை என்பது யார் ஒருவருக்காவது பதில் சொல்லக் கடமைப்பட்டதாக (Accountability) இருக்கவேண்டும் என்று கூறியிருப்பது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நூலுக்குப் பிறகுதான் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த பாலக்காட்டுப் பார்ப்பனரான எம்.கே. நாராயணனும் அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளார்.

திராவிட இயக்கப் பாரம்பரியம் உள்ள பெரியார் அவர்களுக்குப் பிறகு அந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் வீரமணியார் தலைமை வகித்து நடத்தும் இந்த நிகழ்ச்சி புதிய தொடக்கத்தின் வீச்சு என்று குறிப்பிட்டார் குலாம் முகம்மது அவர்கள்.

வி.டி. ராஜஷேகர் ஷெட்டி

தலித் வாய்ஸ் ஆசிரியரும், சமூகநீதித் தளத்தில் தடம் பதித்து வருபவருமான பெங்களூரு வி.டி. ராஜஷேகர் அவர்கள் தம் உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது:

இந்நாட்டில் பார்ப்பனர்களின் முதல் பலி முசுலிம்களே; ஆனால், இந்த உண்மையை எந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமது ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார்.

இந்தியா முழுமையும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். முஸ்லிம்கள் முஷ்ரிஃப் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபோதே 1925 ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைநோக்கோடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடே, தான் வெளியிட்ட மலரில் பெரியார் அவர்களின் கருத்தை வெளியிட்டுள்ளது.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருக்கும்போதே பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர்களின் வல்லாண்மைக் கொடுமையின்கீழ் துன்பப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.

அதுதான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது.

முஷ்ரிப் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல் அறிவுப்பூர்வமான வெடிகுண்டாகும். இந்த நூல் வெளிவந்த பின் இந்தியாவின் ரா, அய்.பி. போன்ற அமைப்புகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

நூலினை அறிமுகப்படுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரும் அளவு ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடையிடையே தமிழிலும் விளக்கினார்.

இங்குள்ள முசுலிம்கள் கைபர் கணவாய் வழியாக இந்த நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர். இங்குள்ளவர்கள் இங்கே பிறந்தவர்கள்தாம். அவர்களை அந்நியர்கள் என்று கூறக் கூடியவர்கள் தான் உண்மையிலே அந்நியர்கள்.

முஸ்லிம் தீவிரவாதி என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதிகளில் என்ன முஸ்லிம் தீவிரவாதிகள் இந்து தீவிரவாதிகள்? முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்பவர்கள் இந்து தீவிரவாதி என்று சொல்கிறார்களா?

இங்கு இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இருந்தவர் கரண் சிங். ஏன் அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார்? அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே.

அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்று சொல்லித்தானே கரண்சிங் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார் என்ற ஓர் அரிய தகவலை மன்றத்தில் தெரிவித்தார் ஆசிரியர்.

கர்கரேயை அவர்கள் கொல்லவில்லை, உண்மையை, நீதியைக் கொன்று இருக்கிறார்கள். அந்த உண்மைகளையும், மறைக்கப்பட்ட நீதிகளையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்லர். என் உயிருக்கே மூன்று முறை குறி வைத்தனர். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். (உரை முதல் பக்கம் காண்க).

எஸ்.எம்.முஷ்ரிஃப்

நூலாசிரியர் எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்கள் ஏற்புரையாகக் கூறியதாவது.

நான் இந்த அளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. இந்தப் பிரச்சினைக்காக இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே கூடியிருக்கிறது என்றால், அதற்குக் காரணமான பெரியார் ராமசாமி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன் (கைதட்டல்).

இதனை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மும்பையில் தீவிரவாதிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. முன்கூட்டியே அய்.பி.க்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை மாநில அரசுக்கு அய்.பி. தெரிவிக்காதது ஏன்?

மராட்டியத்தில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்துப் பயங்கரவாதிகள். அவர்களின் சதித் திட்டம் அவர்களிடம் இருந்த லேப்டாப் மூலம் கண்டு-பிடிக்கப்பட்டது. அவற்றையெல்லாம் வெளியில் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி தான் கார்க்கரே.

அவரைத்தான் திட்டமிட்ட வகையில் படு கொலை செய்துள்ளார்கள். வேறு வகையில் இதனைச் செய்திருந்தால் அது வெளிச்சத்துக்கு வந்துவிடும். இது போன்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்வது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

அபிநவ் பாரத் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.தான். பார்ப்பனர்கள் அதிக ஆதிக்கம் கொண்ட அமைப்பு இது. இஸ்ரேல் நாடுவரை தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.

நாக்பூர், புனே போன்ற இடங்களில் 53 இடங்களில் கூட்டங்கள் நடத்தியிருக்கின்றனர்.

காமா மருத்துவமனைக்கு இராணுவத்தினரை அனுப்புமாறு கர்க்கரே கேட்டுக் கொண்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியுள்ளனர். இந்த நிலையில் கர்க்கரே அங்கே சென்றபோது சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன். இந்த நூலை வெளியிட்டபோது பார்ப்பனர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். புனே மிரர் என்னும் ஓர்ஏடு மட்டும் விமர்சித்திருந்தது.

எனக்குக் கொஞ்சம் சோர்வுகூட இருந்தது. ஆனால் இந்தப் பெரியார் மண்ணுக்கு நான் வந்த பிறகு அந்தக் சோர்வு எல்லாம் ஓடோடிவிட்டது. எனக்குப் புதுத்தெம்பே ஏற்பட்டு விட்டது!

பார்ப்பனர் அல்லாதார் விழிப்புணர்வு பெற வேண்டும்.

பார்ப்பனர் அல்லாதாரின் எழுச்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இசுலாமியர்களை பயங்கரவாதிகள் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.

தென்சென்னை பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.செங்குட்டுவன் நன்றி கூறினார்.

இரவு 9.30 மணிக்கு விழா நிறைவுற்றது. மன்றம் நிரம்பி வழியும் அளவிற்குப் பலதரப்பட்ட மக்களும் கூடியிருந்தனர்.


வன்முறையின் மறு பெயரே சங்பரிவார்க் கும்பல்

இவ்விழாவில் மேற்காணும் பெயருடைய நூல் வெளியிடப்பட்டது. தொகுப்பாசிரியர் கி.வீரமணி அவர்கள். 96 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், ஒரிசா கலவரம், மாலேகான் குண்டுவெடிப்பு, தென்காசி குண்டு வெடிப்பு உள்பட சங்பரிவார்க் கும்பல் நடத்திய வன்முறைகள் விரிவாக தக்க ஆதாரங்களுடன் இடம் பெற்றுள்ளன. நூலின் நன்கொடை ரூ.35.

இந்நூலினை வி.டி. ராஜசேகர் வெளியிட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், திராவிடர் கழக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் வீரமர்த்தினி, தலைமை செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள், காயல் இளவரசன் முதலியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் பங்கு கொண்டவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசினையும், இயக்க நூல்களையும் வழங்கினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

-------------------------நன்றி:-”விடுதலை” 3-2-2010

0 comments: