Search This Blog
5.8.09
நோயாளிக்கு உடல் பலகீனம், பக்தனுக்குப் புத்தி பலகீனம்
சுரண்டல்
நெற்றி நிறைய பட்டை குங்குமம் இவருக்கு ராஜ வைத்தியர் என்று பட்டமும் விளம்பரமும் வேறு!
தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம் என்று திருப்பதியில் ஒரு கல்லைக் காட்டுகின்றனர் என்றால், தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பார் இந்த விஜயகுமார் என்ற திருவனந்தபுர ஆசாமியைக் காட்டினார்கள்.திருவிதாங்கூர் ராஜ வைத்திய சாலை மயிலாப்பூரில் ஜாம் ஜாமென நடந்தது.
பிறவியிலேயே மூளைக் கோளாறா? வைத்தியம் கறாராக இருக்கிறது. விபத்தில் முதுகுத் தண்டு உடைந்துவிட்டதா கவலைப்படாதீர்கள் கண்டிப்பாகக் குணப்படுத்துகிறேன்.
மூளை வளர்ச்சி இல்லாதவருக்கு வைத்தியம் எப்படியாம்? கோழி ஒன்றின் விலை 200 ரூபாயாம். பத்துக்கோழி வேண்டுமாம் ரூபாய் 2000 கறந்து விடுவார்.
கோழி ரத்தத்தைத் தலையில் தடவி பேண்டேஜ் போட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார். குணம் ஏற்படாது என்பதுதான் தெரிந்த விஷமாயிற்றே!
அதோடு விட்டுவிடுவாரா? அடுத்து எண்ணெய் வைத்தியம் என்பார். அதற்கொரு ரேட்_ இப்படி மாற்றி மாற்றி வைத்தியம் என்று கூறி, காசையெல்லாம் கறக்கும் வைத்தியம் மட்டும் அவருக்கு மிக நன்றாகவே தெரியும்.
இப்படி ஏமாந்தவர்கள் ஒருவரா, இருவரா? கணக்கற்றவர்கள். இந்த வழியாக சம்பாதித்தது கொஞ்சம்தான் ஆமாம் ஒண்ணே கால் கோடி ரூபாய்தானாம்.
கோழி ரத்தம், மான்கறி வைத்தியம், தங்க பஸ்பம், வைர பஸ்பம் என்று நோயாளிகளிடம் அள்ளி விடுவார்.
நோயாளிகளையும், பக்தர்களையும் ஏமாற்றுவதற்கு நாட்டில் பல வழிகள் இருக்கின்றன. நோயாளிக்கு உடல் பலகீனம், பக்தனுக்குப் புத்தி பலகீனம். இந்தப் பலகீனம்தானே ஏமாற்றுபவனுக்கு முதலீடு! ஜாம் ஜாமென்று காரியங்கள் நடக்கின்றன.
வைர பஸ்பம் தருகிறேன் என்று சொல்கிறாரே, வைரத்தை பஸ்பம் ஆக்க முடியுமா? எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களிடத்திலே தானே இந்தச் சித்து விளையாட்டுகள் எல்லாம்!
உள்நாட்டில் மட்டுமல்ல; சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு மருத்துவம் செய்வதாகச் சொல்லி 28 லட்சம் ரூபாயைச் சுரண்டியிருக்கிறார்.
எத்தனை நாள்கள்தான் ஏமாற்ற முடியும்?
16 வழக்குகள் இந்த ஆள்மீது பதிவு செய்யப்பட்டு, இப்பொழுது புழல் சிறைச்சாலைக்குள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
நோயைக் குணப்படுத்தாவிட்டால் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று சாமி படத்தின்மீது கைவைத்து சத்தியம் செய்வாராம். கேட்கவேண்டுமா நமது பாமர மக்களுக்கு? கடன் வாங்கியும், சொத்தை விற்றும் பணத்தைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
பக்திக்கோலம் சாமி சத்தியம் பாமரத்தனமும் இந்த மும்மூர்த்திகளும் மக்களிடம் இருக்கும்வரை சுரண்டல் மூர்த்திகளுக்கு ராஜபாட்டைதான்!
--------- மயிலாடன் அவர்கள் 5-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment