Search This Blog
6.8.09
ஜோதிடம் என்பது அர்த்தமற்ற மூடத்தனமே (நான்சென்ஸ்)
ஆறு நிமிட காலத்திற்கு நீடித்த முழுமையான சூரிய கிரகணம் என்னும் அரிய நிகழ்ச்சி இந்தியாவில் பத்து நாள்களுக்கு முன் நடந்தது. சென்னையில் இந்த கிரகணம் ழுமையாகத் தெரியாமல் இருந்தபோதிலும், சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கான ஒளிக்கதிரை வடிகட்டித் தரும் 50,000 கண்ணாடிகளை தமிழ்நாடு அறிவியல் அமைப்பு விரைவில் விற்றுத் தீர்த்தது. எங்கள் குடும்பத்தில் மட்டும் அய்ந்து கண்ணாடிகள் வாங்கினோம். நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்கும் வரை இது உங்களுக்குப் பெரியதாகத் தெரியலாம்; சென்னையின் மக்கள் தொகை 80 லட்சம் என்னும்போது இந்த 50,000 என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. இந்தப் புள்ளிவிவரத்தின் பாதிப்பு அன்று காலை கிரகணத்துக்குப் பின் எலியட்ஸ் கடற்கரைக்குச் சென்றபோது நன்றாகவே தெரிந்தது. காலை நேரங்களில் முதியோர்களும், காதல் இணையர்களும், இளநீர்-காய்கறி விற்பவர்களும், பிச்சைக்காரர்கள் அங்குமிங்கும் ஓடித் திரியும் நாய்கள் சிலவும் இந்தக் கடற்கரையில் நிரம்பி வழிவது வழக்கம். அன்று காலை நாங்கள் சென்றபோது நாய்கள் மட்டும்தான் இருந்தன. மனிதர்கள் எவருமே இல்லை. வழக்கத்தை விட அலைகள் மட்டும்தான் வேகமாக அடித்துக் கொண்டிருந்தன. சந்திரனால் மறைக்கப் பட்ட சூரியனைக் காண பயந்து மனிதர்கள் அனைவரும் ஒளிந்து கொண்டிருந்தனர்.சூரிய கிரகணம் சொல்லொணாத் துயரங் களைக் கொண்டு வரும் என்று கூறி வெட்கங்கெட்ட ஜோதிடர்கள் மக்களை அச்சுறுத்தி வைத்திருந்ததே இதன் காரணம்.
இந்த காலகட்டத்தில், சில இந்தியர்களும் விரும்பக்கூடிய பாகிஸ்தானுடனான கூட்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அணு சோதனைகளைச் செய்யாமல் இருப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால், இந்தியாவுடன் அணு ஆற்றல் வர்த்தகத்தை மற்ற நாடுகள் மேற்கொள்வதற்கு எதிராக ஜி_8 நாடுகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்து சென்ற போதும், மனநிறைவளிக்கும் செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லை. அணுஎரிசக்தியைப் பயன்படுத்து வதற்கான ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதால் மட்டுமே, நமது அணு தொழிற்சாலைகளில் முன்னறிவிப்பின்றி ஆய்விற்காக அமெரிக்கர்கள் வந்து செல்கின்றனர் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் இவற்றில் எதுவும் உலக அளவிலோ, நமது நாட்டு அளவிலோ பெரிய அழிவு எதனையும் ஏற்படுத்தி விடவில்லை. எரிச்சலூட்டும் வகையில் பேசாமல் அனைத்து விஷயங்களை-யும் தன்னிடம் விட்டு விடுமாறும் நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்திக் கூறியுள்ளார். இதனால் சூரிய கிரகணம் தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இல்லாவிட்டால் கிரகணம் அச்சம் தரும் ஒரு நிகழ்ச்சியாகவே இருந்திருக்கும். எப்படியிருந்தாலும், எனது தூங்கு மூஞ்சி மகனைத் தவிர மற்ற எனது குடும்பத்தினர் கிரகணத்தைக் கண்டு மகிழ்ந்தோம். அதனை நல்ல அறிகுறி என்று கூட நீங்கள் கூறலாம்.
ஒவ்வொரு நாளும் பத்திரிகையில் ஜோதிடப் பகுதி வந்து கொண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முழு பக்கமே ஜோதிடத்திற்கு ஒதுக்கப்பட்டுக் கொண்டு வரும் நிலையில்,-பத்திரிகையாளனான நான் ஜோதிடத்தை சாடுவதால் என்னை வேடதாரி என்றுகூட சிலர் நினைக்கலாம். ஜோதிடப் பகுதி மட்டும் இல்லாவிட்டால் பத்திரிகையே விற்பனை ஆகாது என்று விற்பனைப் பிரிவில் உள்ள புத்திசாலிகள் கூறாமல் இருந்தால், அப்பகுதியை வெளியிடுவதை உடனே நாங்கள் நிறுத்திவிடுவோம். கலைஞரைப் போல பகுத்தறிவாளர் என்பதால் நான் ஜோதிடத் திற்கு எதிராக உரத்துப் பேசவில்லை. ஜோதிடத்திற்கும் கடவுள், மத நம்பிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூட வாதிடலாம். ஜோதிடத்தை நம்பாவிட்டால், நீங்கள் ஒரு அய்.எஸ்.அய். ஏஜென்ட் என்று கூட ஜோதிடத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் கூறக்கூடும். மதம் என்பது நன்னெறிக் கோட்பாடுகள், வேதாந்தம், கடவுள் நம்பிக்கை ஆகியவை பற்றியது. ஆனால், ஜோதிடத்தைப் போல எதிர்-காலத்தைக் கூறுவது என்று மதம் நடிக்கவில்லை.
தங்கள் நாட்டு குழந்தைகளை இன்னும் அதிக அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றி படிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், நம் குழந்தைகளில் பெரும்பாலோர் இன்னமும் இந்த போலி அறிவியலான ஜோதிடத்திற்கு அடிமைகளாக இருக்கின்றனர். இன்று அதிக அளவில் மக்கள் வந்து சூரிய கிரகணத்தைக் காண்கிறார்கள் என்றால், நமது அறிவியலாளர்களுக்கு அது பெருமை சேர்ப்பதுதான். ஆனால், தங்கள் குடும்பத் திருமணங்களை ஏற்பாடு செய்யும்போது பல அறிவியலாளர்களும் ஜாதகங்களை நம்பியிருக்கின்றனர் என்பதும் உண்மை. ஜோதிடம் என்பது நமது பாரம்பரியமோ கலாசாரமோ அல்ல. பல ஆயிரம் ஆண்டு காலமாக அது நமது சமூக வாழ்வில் இடம் பெற்றிருக்கிறது என்றால், முன்னர் நம் நாட்டில் நிலவி வந்த சதி என்னும் கணவனுடன் உடன் கட்டையேறுதல், குழந்தைத் திருமணம், வரதட்சணை அளித்தல், ஜாதி வேற்றுமை பாராட்டுதல் போன்றவைகளைத் தூக்கி எறிந்தது போல் இந்த ஜோதி டம், ஜாதகத்தையும் தூக்கி எறிய வேண்டும்.
பிமன் பாசு எழுதிய ஜோதிடம் அர்த்த முள்ளதா? அர்த்தமற்றதா? என்ற நூலில் ஜோதிடம் எவ்வாறு மக்களின் அறியாமையையும், அச்சத்தையும் பயன்படுத்தி ஏமாற்றுகிறது என்-பதை நன்கு எடுத்துக் காட்டியிருக்கிறார். வானவியலுக்கு முன்பிருந்தே ஜோதிடவியல் இருக்கிறது என்றாலும், தோற்று விக்கப்பட்ட காலம் தொட்டு அதன் நடைமுறையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாததாகவே அது இருந்து வருகிறது என்று சயின்ஸ் ரிபோர்ட்டர் இதழின் முன்னாள் ஆசி-ரியர் கூறுகிறார். வெறும் கண்களால் மட்டுமே கண்டு வானில் இருக்கும் கோள்களின் இயக்கத்தைக் கண்டு ஆய்வு செய்ததில் இருந்து பிறந்தது ஜோதிடம். ஆனால், இன்றோ தொழில்நுட்பம், அதிலும் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின், கோள்களின் இயக்கம் பற்றிய நமது அறிவையும், அளவுகளையும் மிகவும் துல்லியமானவையாக ஆக்கிவிட்டது.
இத்தகைய தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவர் கலீலியோ கலீலி என்பவர். நமது சூரிய மண்டலத்தின் மய்யமாக இருப்பது பூமி அல்ல என்றும், பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்றும், முன்பு எண்ணியது போல சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்றும் கூறி நிகோலஸ் கோபர்நிகசின் கொள்கைளை கலீலியோ மெய்ப்பித்தார். இவ்வாறு கூறுவது மததுவேஷணை எனப்பட்டதால், தான் இறக்கும் வரை கோபர்நிகஸ் தனது கண்டுபிடிப்பை வெளியிடவில்லை. கலிலியோவைப் பொறுத்தவரை, கத்தோலிக்க தேவாலயம் அவரைக் கொடுமைப் படுத்தியது. என்றாலும், அது மேற்கத்திய சிந்தனை மீது ஒரு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அறிவியலையும் தத்துவத்தையும் அது நவீனப் படுத்தியது. அனுபவம் மற்றும் சோதனைகளின் வாயிலாக அறிவது, அறிவு பெறுவதில் முன்னின்றது. பிரபஞ்சத்தின் மய்யக் கருத்தாக மனிதன் இன்று இருக்கவில்லை. என்-றாலும், ஜோதிடம் ஒரு சிறிது அளவு கூடமாறாமல் இருப்பது வியப்பாகவே இருக்கிறது. இதனால்தான் மேற்கத்திய நாடுகள் முன்னேற்றம் பெற்றுச் செல்லும்போது, நாம் பின் தங்கியிருந்து அந்நியருக்கு அடிமையானோம் போலும்.
சோதித்துப் பார்ப்பதையோ அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் தவறான மாற்றங்கள் செய்யாமல் இருப்பதையோ ஜோதிடம் சவுகரியமாக ஏற்றுக் கொள்ளவில்லை. 20 ஆம் நூற்றாண்டு அறிவியல் தத்துவஞானி கார்ல் போப்பர் உண்மையான அறிவியலையும் போலி அறிவியலையும் பிரித்துக் காண்-பதற்கு இவைதான் அளவுகோல்கள் என்று கூறுகிறார். மெய்ப்பிக்கப்பட்டால், கொள்கையையே தவறானது எனக் கூறும் அறிக்கைகள் ஒரு அறிவியலுக்குத் தேவை என்பதுதான் அவரது கருத்து. ஜோதிடர் ஒருவரின் கணிப்பு தவறானது என்று உங்களால் காண-முடியாது என்பது சாதகமான ஒன்றல்ல. இயல்பாக பொதுவான கணிப்புகளையே, தெளிவின்றி ஜோதிடர்கள் கூறுகின்ற-னர். அவர்கள் கூறியது போல ஏதாவது நடந்துவிட்டால், தங்களின் விளம்பரத்-துக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். குறிப்பிட்ட தவறான ஒரு கணிப்பை ஒரு ஜோதிடர் கூறிவிட்டால், அவரைக் காப்பாற்ற மற்ற ஜோதிடர்கள் முன்-வரமாட்டார்கள். ஜோதிடத்தை சரியான முறையில் கையாளத் தெரியாத அறி-யாமை நிறைந்தவன் என்று அவனை அவனது சக தொழிலாளிகளே மட்டம் தட்டிவிடுவர்.
கருத்தளவில் மட்டும் அல்லாமல் ஜோதிடத்தின் மீது ஒரு கடுமையான தாக்குதலை மேற்கொள்ள பாசு விரும்புகிறார். இன்று பழைய கோட்பாடுகளைக் கொண்டுள்ள ஜோதிடத்தின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்ட குறிப்பிட்ட ஜோதிடச் சொற்களை அவர் தனது நூலில் பயன்படுத்தியுள்ளார். எடுத்துக் காட்டாக பின்னோக்கிய இயக்கங்கள் என்பவை பூமியின் குறிப்-பிடத்தக்க ஒரு முனையில் ஏற்படுவதே அல்லாமல், கோளின் பின்னோக்கிய இயக்கம் என்பதற்கான எடுத்துக் காட்டு அல்ல. பூமியை விட ஒரு பெரிய அகண்ட வட்டப் பாதையில் செவ்வாய் சூரியனைச் சுற்றி வருகிறது; அவ்வாறு சுற்றும் அதன் வேகமும் அதிகம். சூரி-யனுக்கும் செவ்வாய்க்கும் இடையே உள்ள பூமி சூரியனைச் சுற்றி வரும்-நிலையில் செவ்வாயைக் கடந்து செல்-லும்போது, மாறுபட்ட திசையில் அது இயங்குவதாக எப்போதாவது தோன்றும். இவ்வாறு பின்னோக்கிய இயக்கம் எனக் கூறுவது வெறும் சொல்லாட்சி மட்டுமல்ல; அறியாமையினால் கூறு வதுமாகும். அதுபோலவே கிரகநிலை மாற்றம் என்ற கருத்தும் தவறானதே-யாகும்.
நமது அறிவியலார்கள் அல்லது தொழில் நுட்ப வல்லுநர்கள் சிலர் ஜோதி-டத்தைக் கொண்டாடுவது வருந்தத்-தக்கது. ஜோதிடம் ஓர் உண்மையான அறிவியல் கல்வி என்று காட்டுவதற்கு இதைப் பயன்படுத்துகின்றனர். இதனால் தெரிவதெல்லாம் என்னவென்றால், அந்த தனிப்பட்டவர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலை கொண்டுள்ளார்கள் என்பது மட்டும்-தான். ஜாதகங்களைத் தயாரிப்பதும், தசா, மகாதசா காலங்களைக் கணினியைப் பயன் படுத்தி குறிப்பிடுவதும், ஜோதிடத்தை அறிவியல் என்று மெய்ப்பிக்காது. இது எப்படி இருக்கிறது என்றால், ஒரு விதவையை மின் பிண எரியூட்டி அடுப்பில் தள்ளிவிட்டு, இதுதான் சதியின் நவீன நடைமுறை என்று கூறுவதற்கு ஒப்பாகும்.
எங்கள் வீட்டைச் சுற்றியிருந்த வீடுகளின் மாடிகள் காலியாக இருந்ததே, இந்த மூடநம்பிக்கை எந்த அளவிற்கு வேர் கொண்டு பரவியிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். இது மிகுந்த மனச் சோர்வை அளிப்பதாக இருந்தது. ஒரு மூடநம்பிக்கை யின் காரணமாக மக்கள் ஒரு வியக்கத்தக்க இயற்கை நிகழ்வு ஒன்றைக் காண்பதைத் தவறவிடுகின்றனர். ஜோதிடத்தைத் தூக்கிப் பிடிக்கும் செயல்பாடுகளினால் ஒரு போதும் நமது நாடு வல்லரசு நாடாக ஆகிவிட முடியாது. நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறி-யது போல, அறிவார்ந்த ஒரு சமூ-கத்தை உருவாக்குவது என்ற உறுதிப்-பாட்டின் மூலம் மட்டும்தான் நமது நாடு வல்லரசு நாடாக ஆக முடியும். அறி-வார்ந்த சமூகம் என்பது அறி-வினை அடிப்படையாகக் கொண்டு அமைவதாகும். எந்த விதத்திலும் ஜோதிடத்தை அறிவார்ந்தது என்று கூறவே முடியாது.
-------------------ஆதித்திய சின்ஹா ஆசிரியர், இண்டியன் எக்ஸ்பிரஸ் நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்,
1.8.2009மொழியாக்கம்: த.க.பாலகிருட்டிணன்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
jothidam thanai igal enru bharathiye solli vittar.
nam mooda makkal thiruntha???
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி
தலைப்புக்காகவே ஒரு பூங்கொத்து!
//கணவனுடன் உடன் கட்டையேறுதல், குழந்தைத் திருமணம், வரதட்சணை அளித்தல், ஜாதி வேற்றுமை பாராட்டுதல் போன்றவைகளைத் தூக்கி எறிந்தது போல் இந்த ஜோதி டம், !ஜாதகத்தையும் தூக்கி எறிய வேண்டும்.//
கண்டிப்பாக. முழுப் பதிவையும் நிதானமாகப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.
உங்கள் பதிவிற்கு நன்றி . எனக்கு ஜோதிடம் நம்பிக்கை இல்லை . அது உளவியல் நிகழ்வு. I got married before 1 year 6 months without seeing astrology. it's a arrange marriage , my marriage life is happier and we got one boy child 8 months old, l will explain more about astrology and god in my coming days, due to lack of time i replied in english, in future i will try to write in tamil.
thanks with regards.
rajan.
Post a Comment