Search This Blog
10.8.09
உலக நாடுகள் -தூரப்பார்வை - உக்ரைன்-அய்க்கிய அரபு எமிரேட்கள்
உக்ரைன்
9ஆம் நூற்றாண்டில் பெரிய நாடாக இருந்த உக்ரைன் நாடு கீவ் ரஷியா என அழைக்கப்பட்டதும் உண்டு. 10ஆம் நூற்றாண்டில் கீவ் மிகப் பெரிய அரசியல் கலாச்சார மய்யமாகத் திகழ்ந்தது. 1240இல் நடந்த மங்கோலியர்களின் படைபெயடுப்பு இப்புகழையும் பெருமைகளையும் அழித்து விட்டது.
சண்டைக் குணம் உள்ள கொசாக் இனத்தவர் உக்ரைனின் தென்பகுதியில தலையெடுத்தனர். இவர்களின் போரிடும் ஆற்றலை போலந்துக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஆனாலும் கொசாக் இனத்தவர் புரட்சி செய்ததை போலந்தியர் மிகவும் சிரமப்பட்டு ஒடுக்கினர்.
1645இல் போலந்தியர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி உக்ரேனியர்கள் (ரஷியா) மாஸ்கோவிடம் கேட்டுக் கொண்டனர். இதற்காகச் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரஷியாவுடன் கீவ் இணைத்துக் கொள்ளப்பட்டது. உக்ரைன் நாடு ரஷியாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1917இல் ரஷ்யப் புரட்சி நடைபெற்றபோது இருந்த குழப்பநிலையைப் பயன்படுத்திக் கொண்டு உக்ரைன் தனது விடுதலையை அறிவித்துக் கொண்டது. 1920இல் சோவியத் நாடு உக்ரைனைக் கைப்பற்றிக் கொண்டது. ஜெர்மனியின் நாஜிப் படைகள் படையெடுப்பின் காரணமாக ஏராளமான உக்ரேனியர்கள் அழிந்துபட்டனர். நாஜிகளுடன் சேர்ந்து செயல்பட்ட காரணத்திற்காக 2 லட்சம் கிரிமிய டாட்டர்களைச் சைபீரியாவுக்கு நாடு கடத்தினார் ஸ்டாலின்.
அணுஉலை விபத்து பெருமளவில் 1986இல் செர்னோபிலில் நடந்தது. அதன் விளைவாக 50 லட்சம் பேர் கதிர் வீச்சுத் தாக்குதலுக்கு உக்ரைன், பெலாரஸ் மற்றும் ரஷியாவில் ஆளாகிப் பாதிக்கப்பட்டது. உலகின் பெரும் விபத்து ஆகும்.
1991இல் சோவியத் யூனியன் உடைந்தபோது, உக்ரைன் விடுதலை அடைந்தது.
கருங்கடல் கரையில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின் பரப்பளவு 6 லட்சத்து 3 ஆயிரத்து 700 சதுர கி.மீ. மக்கள் தொகை 4 கோடி 68 லட்சம். மக்கள் அனைவரும் பல்வேறு கிறித்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். உக்ரேனிய, ரஷ்ய, ரொமானிய, போலிஷ், ஹங்கேரிய மொழி பேசும் மக்கள். அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள்.
குடியரசுத் தலைவரும் ஆட்சித் தலைவருமான பிரதமரும் உள்ளனர். 29 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 3 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதவர்கள். உலகத் தொழிலாளர் நிறுவனத்தின் அறிக்கையின்படி 9 முதல் 10 விழுக்காடு பேர் வேலை கிட்டாதோர்.
அய்க்கிய அரபு எமிரேட்கள்
இந்நாட்டில், ஆரம்ப காலத்தில் கடல் பயணம் செய்வோர் குடியேறி வாழ்ந்தனர். கார்மத்தியர் எனும் இனத்தவர் இங்கே ஓர் அரசை நிறுவினர். இந்த அரசு குலைந்த நிலையில் மக்கள் கடற்கொள்ளையில் இறங்கினர். மஸ்கட், ஓமன் பகுதிகளை இவர்கள் தாக்கத் தொடங்கியபோது பிரிட்டன் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியது.
1853ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டன் இப்பகுதியை ஆண்டபோதிலும் உறுப்பு நாடுகள் தத்தம் எல்லைக்குள் கட்டுப்பாடு செலுத்தின. 1960இல் இவை தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டுக் குழுவை அமைத்துக் கொண்டன. அதுவே பின்னர் கூட்டரசாக ஆகியது. பஹ்ரைனும் ஓமனும் பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்தன. பதிலாக ரஸ்அல்கயாமா நாடு 1972இல் கூட்டரசில் இணைந்தது.
ஓமன் வளைகுடா, பாரசீக வளைகுடா ஆகியவற்றுக்கிடையில் சவூதி அரேபியாவுக்கும் ஓமன் நாட்டுக்கும் இடைப்பட்ட இந்நாட்டின் பரப்பளவு 82 ஆயிரத்து 880 சதுர கி.மீ. ஆகும். 26 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் வெளிநாட்டவர் 16 லட்சத்திற்கும் அதிகமானோர். சன்னி முசுலிம்கள் 80 விழுக்காடு. ஷியா முசுலிம்கள் 16 விழுக்காடு. மீதிப் பேர் கிறித்துவர், இந்துக்கள்.
அரபி மொழி ஆட்சி மொழி. பாரசீகம், இங்கிலீஷ், இந்தி பேசப்படுகின்றன. 78 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்கள்.
தலைநகர் அபுதாபி. 2.-12.-1971 விடுதலை நாள். அதிபரும் பிரதமரும் உள்ளனர். திர்ஹாம் என்பது நாணயத்தின் பெயர். 2 விழுக்காட்டினர் வேலை கிட்டாது உள்ளனர். நாட்டில் இருப்புப் பாதையே கிடையாது.
---------------------நன்றி:-"விடுதலை" 9-8-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//நாட்டில் இருப்புப் பாதையே கிடையாது.//
செப்டம்பர் மாதம் முதல் உலகிலேயே மிக நீளமான, மிக நவீனமான தானியங்கி (ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் ) ரயில் போக்குவரத்து துபாயில் துவங்க உள்ளது.
//ஓமன் வளைகுடா, பாரசீக வளைகுடா ஆகியவற்றுக்கிடையில் சவூதி அரேபியாவுக்கும் ஓமன் நாட்டுக்கும் இடைப்பட்ட இந்நாட்டின் பரப்பளவு 82 ஆயிரத்து 880 சதுர கி.மீ. ஆகும். 26 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் வெளிநாட்டவர் 16 லட்சத்திற்கும் அதிகமானோர். சன்னி முசுலிம்கள் 80 விழுக்காடு. ஷியா முசுலிம்கள் 16 விழுக்காடு. மீதிப் பேர் கிறித்துவர், இந்துக்கள்.//
மேலும் அதிக புள்ளி விவரங்களுக்கு
http://en.wikipedia.org/wiki/United_Arab_Emirates
Post a Comment