Search This Blog

9.8.09

பிள்ளையார் - கடவுளே அல்ல!






விநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத் தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்:

திருக்கையிலாயத்தில் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண் பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையைப் புணர வேண்டும் என்னும் காம விருப்பம் இறைவனுக்கும் உண்டாயிற்றாம். அக்குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவெடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தானாம். அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தானாம். இவ்வாறு கந்தபுராணத்தின் கதை சொல்லப்பட்டது.
பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் இக்கதை அருவருப்பினையும் மானக்குறைவினையும் விளைவியாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடாததாயிருக்கிறது? தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தைவிட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ? அத்ததைகய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும், பேரின்ப உருவாயே நிற்கும் கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு மாறுபட்டதாய். எவ்வளவு தகாததாய் எவ்வளவு பழிக்கத் தக்கதாய் இருக்கின்றது உணர்ந்து பார்மின!

இக்கதை விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்பு கடந்து காமங்கொண்ட ஓர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழியில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்துவிட்டது.

பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய், கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறு கொண்டனவாய் நிற்கின்றன.


ஒரு காலத்தில் உமாதேவி அம்மையாருக்கு மூத்த பிள்ளையார் ஒருவர் பிறந்தனராம். அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர்கள் எல்லாரும் அங்கு வந்தனராம். வந்த வருட சனியனெனும் தேவனும் ஒருவனாம். இச்சனியன் தான் அப்பிள்ளையைப் பார்த்தால் அதற்குத் தீது உண்டாகுமென்று நினைத்து, தலை குனிந்து அதனைப் பாராதிருக்க அவன் கருத்தறியாது. அம்மை அவன் தம்மகனைப் பாராது இகழ்ந்தனனென்று சினங்கொள்ள அதற்கஞ்சி அவன் அப்பிள்ளையைப் பார்த்தனனாம். பார்த்த உடனே அப்பிள்ளையின் தலை எரிந்து சாம்பராய்ப் போயிற்றாம் அய்யோ! அதனைக் கண்டதும் ஆற்றாமை மிகப் பெற்ற உமையம்மையார்அச்சனியன்மேல் சினங்கொள்ளல் ஆயிளனாம். அது கண்ட கான்முகன் முதலான தேவர்கள் எல்லாரும் அம்மையை வேண்டி அவனை மன்னிக்கும்படி அவனுக்காகப் பரிந்து பேசினாராம். அதன்மேற் சிவபிரானும் அம்மையின் சினத்தைத் தணிவித்து வடக்கு நோக்கிப் படுத்திருக்கும் ஒரு யானையின் தலையை வெட்டிக்கொணரும்படித் தேவர்களுக்குக் கட்டளையிட அவர்களும் அவ்வாறே சென்று ஒரு யானையின் தலையைக் கொண்டு வர அத்தலையை அப்பிள்ளையின் முண்டத்திற்பொருத்தி அதனை உயிர் பெற்றெழச்செய்தனராம். அது முதற்றான் பிள்ளையார்க்கு யானைமுகம் உண்டாயிற்று என்பது ஒரு கதை.

இங்ஙனமாக இக்கதை பிரமவைவர்த்த புராணத்தின் கட்சொல்லப்பட்டது. இக்கதையின் கண் உள்ள மாறுபாடுகளையும் இழிவுகளையும் ஒரு சிறிது உற்று நோக்குமின்கள்! அன்பர்களே, எல்லாம் வல்ல சிவபிரானுக்கும்அம்மைக்கும் ஒரு பிள்ளை பிறந்ததென்றால் அஃது எவ்வளவு தெய்வத்தன்மையும் எவ்வளவு பேராற்றலும் உள்ளதாயிருக்க வேண்டும். அத்துணைச்சிறந்த தெய்வப்பிள்ளையைச்சனியன் என்னும் ஓர் இழிந்த தேவன் நோக்கின உடனே அதன் தலை எரிந்து சாம்பராய்ப் போயிற்றென்றால் அப்பிள்ளை தெய்வத்தன்மை உடையதாகுமா? கூர்ந்து பாருங்கள்! மேலும், அத்தெய்வப் பிள்ளையைவிடச் சனியன்றோ வல்லமையிற் சிறந்த பெருந்தெய்வமாய் விடுகிறான்? அதுவுமேயன்றி, முழுமுதற் கடவுளான அம்மையார்தம் பிள்ளையைப் பார்த்த சனியனின் பார்வைக் கொடுமையைத் தடைசெய்ய மாட்டாமற் போயினரென்றால் அச்சனியனல்லனோ அவர்களினும் மேலான தெய்வம் ஆகி விடுகிறான்?

அல்லாமலும், சனியனின் பார்வையால் எரிந்து போன தம் பிள்ளையின் தலையை மீண்டும் உண்டாக்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மையப்பர்க்கு இல்லாது போயிற்றேன்றோ சொல்லல் வேண்டும். அது வல்லாமலும் அழகிற் சிறந்த தேவ வடிவங்களின் தலைகள் எல்லாம் இருக்க, அவை தம்மை எல்லாம் விட்டு அழகற்ற ஓர் யானையின் தலையை வெட்டிக் கொணர்ந்து பொருத்தினானென்பது கடவுளின் இறைமைத் தன்மைக்கு இழுக்கன்றோ? இத்துணை மாறுபாடுகளும் இத்துணை இழிவுகளும், இத்துணை பொல்லாங்குகளும் நிறைந்த இப்பொல்லாத கதையை நம்புவோனெவனும் உண்மைச் சைவன் ஆவனோ? சொல்மின்கள்! ஆழ்ந்து பார்க்குங்கால் எல்லாத்தேவர்களிலும் மேலாகச் சனியனைக் கொண்டாடி அவனை உயர்த்துவதற்கு விரும்பிய ஓர், ஆரியப் பார்ப்பனனே இக்கதையைக் கட்டிவிட்டு எல்லாம் வல்ல சிவபெருமானையும், உண்மையிற் சிறந்த சைவ சமயத்தையும் இழிவுபடுத்தி விட்டானென்பது உங்களுககுப் புலப்படவில்லையா? இவ்வாறு சைவத்துக்கும் சிவபிரான் தன் முழு முதற்றன்மைக்கும் முழுமாறான பொல்லாக் கதைகளை நம்ப வேண்டாமென்னும் எமது அறிவுரையினைக் கண்டு குறைகூறும் குருட்டுச் சைவர்களே உண்மைச் சைவத்திற்குப் பெரும் பகைவர்கள் என்று தெரிந்து கொள்மின்கள்!

பிள்ளையார் பிறப்பு சிவமகாபுராணத்தின்கண் வேறொரு வகையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனையும் அதன் மாறுகோளினையும் இங்கு ஒரு சிறிது எடுத்துக்காட்டுதும்;

ஒரு கால் உமையம்மையார் குளிக்கப் போயினராம். போகுமுன் தமது உடம்பிலுள்ள அழுக்கையெல்லாந் திரட்டி எடுத்து அதனைத் தமது கையாற் பிடித்து தமது குளிப்பறையின் முன் வாயிலில் வைத்து சிவபிரான் வந்தனராயின் தடைசெய்க என்று கட்டளையிட்டுத் தாம் உள்ளே குளிக்கச் சென்றனராம்.

அங்ஙனம் பிடித்து வைக்கப்பட்ட அவ்வழுக்குத் திரள் உடனே உயிருள்ள பிள்ளையாராகி அக்குளியலறையின் வாயிலிற் காவலாய் இருந்ததாம். சிவபிரான் அம்மையைத் தேடிக்கொண்டு அங்கு வந்தனராம்.அவரைக் கண்டதும் அவ்வழுக்குப் பிள்ளையார்அவரை உள்ளே போக வேண்டாமெனத்தடை செய்ய இருவர்க்கும் போர் மூண்டதாம்.

நெடுநேரம் போராடிக் கடைசியாகச் சிவபிரான்அப்பிள்ளையாரின் தலையை வெட்டினாராம். அப்போது உள்ளிருந்து வந்த உமையம்மையார் அய்யோ! என் பிள்ளையை வெட்டிவிட்டீரே என்று கரைந்து ஆற்றாமல் அழுதனராம்.அது கண்ட சிவபிரான் தாமும் ஆற்றாதவராகி நம் பிள்ளை என்று அறியாமல் இவனை வெட்டி விட்டேன். ஆயினும் நீ வருந்தாதே! இப்போது இதனை உயிர் பெற்றெழச் செய்வம் என ஆறுதல் மொழிந்து வடக்கு நோக்கிப் படுத்திருக்கும் ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்து அதனை அப்பிள்ளையின் உடம்பிற் பொருத்தி உயிர்பெற்றெழச் செய்தனராம்.

அடிகளாரின் ஆராய்ச்சி

அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவருக்கற்பாலனவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவியான உமைப்பிராட்டியார் வினை வயத்தால் பிறக்கும் நம் போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல்லொணா அருள் ஒளி வீசித் துலங்குதென்று தேனோப நிடதம் நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும் கடவுளிலக்கணத்துக்கும் முற்றும் மாறாத அம்மையார் திருமேனியின் அழுக்கு நிரம்பி இருந்ததென்றும்அவ்வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளையாரைச் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப் புராணம் சிவமகாபுராணமெனப் பெயர் பெறுதற்குத் தகுதியுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்! ஊனுடம்பு படைத்த மக்களுள்ளும் அழகும் நாகரிகமும் தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினுமினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட்பேரொளியின் வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதாயிருக்குமோ சொன்மின்கள்!

மேலும் தன் மனைவியாரைத் தேடிக்கொண்டு வந்த சிவபிரான் தமக்குப் பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை,வெட்டிவிட்டனரென்பது கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு முரண்பட்டதாய் இருக்கின்றது. எல்லா உயிர்க்கும் உயிராய் அறிவுக்கு மறிவாய் எல்லா உலகங்களிலும் எல்லா காலங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒருங்கே உணரும் பெருமான் தன் பிள்ளையைத் தாமே அறி-யாமல் வெட்டினரென்றால் அஃது அறிவுடையோரால் ஒப்பத் தகுந்ததாமோ? இன்னும் பாருங்கள்! வெட்டுண்ட பிள்ளையைத் தலையும் உடம்பும் பொருத்தி உயிரோடு எழுப்பி விடலாகாதா? வெட்டுண்ட தலையை விடுத்து வேறொரு யானைத் தலையை வருவித்துப் பொருத்தினனென்பது எவ்வளவு தகாத செயலாய் இருக்கின்றது. இத்துணைத் தகாதனென்பது கடவுளிலக்கணத்துக்கு அடுக்குமா? உண்மையாய் நோக்குங்கால் சிவபிரானையும், அருள் வடிவான பிராட்டியையும், ஓங்கார, ஒலி வடிவில் விளங்கும் இறைவனையும் இழித்துப் பேச விரும்பின எவனோ ஓர் ஆரியப் பார்ப்பனன் இக்கதையைச் சிவமகா புராணமென்னும் பெயராற் கட்டி விட்டனன் என்பது வெள்ளிடைமலை போல் விளங்கா நிற்கும். இப்பொல்லாத பார்ப்பன சூழ்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குருட்டுச் சைவர்கள் இவ்வழுக்குப் புராணத்தைச் சிவமகாபுராணமெனக் கொண்டாடிச் சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது பெரிதும் வருந்தற்பாலதாயிருக்கின்றது.

----------------------மறைமலை அடிகள் எழுதிய - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் நூல்

4 comments:

Ganesh said...

Why are you against only the hindu and hindu god and bramin . if you don't believe the god then express your comment decently don't make the unwanted word .

தமிழ் ஓவியா said...

தமிழ் ஓவியா வலைப் பதிவுகள் முழுவதையும் படியுங்கள். உண்மை புரியும். தெளிவு பிறக்கும் கணேஸ்

ஆ.ஞானசேகரன் said...

பிள்ளையார் கடவுளே அல்ல என்றால் வேறு கடவுள் இருக்க என்ன? உண்மையில் கடவுள் என்ற வார்த்தைக்கு விளக்கம்தான் என்ன? இந்த வார்த்தையிம் பயன்பாடுதான் என்ன? விளக்கம் இருந்தால் சொல்லுங்களேன்..

நம்பி said...

//கடவுள் என்ற வார்த்தைக்கு விளக்கம்தான் என்ன? இந்த வார்த்தையிம் பயன்பாடுதான் என்ன? விளக்கம் இருந்தால் சொல்லுங்களேன்..

August 10, 2009 8:20 AM//

"கடவுள்" ஆங்கிலத்தில் "God" என்ற சொல் ஜெர்மனியில் "க்குடன்" "gudan" என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. ஜெர்மனியில் இது பொதுவான வார்த்தை இருபாலருக்கும் சேர்த்து வழங்கப்பட்ட வார்த்தை..."குகா"...என்று வந்து பலமொழிகளைத் தாண்டி (எட்டிமாலஜி) தமிழில் "கடவுள்" என்று மருவி வந்திருக்கலாம்.

இதன் ஆணிவேர் சொல் இந்தோ ஐரோப்பிய சொல்லான "குட்டோம்" "ghu-to-m" "காவ்" என்ற சொல்லில் இருந்து "ghau(e)" வந்தது. இதன் பொருள் "அழை" "to call", to "invoke"-"வேண்டிக்கேள்"

தமிழில்...
'கட'=..."அழி".."கடந்து செல்"

'கடவு'=...."செலுத்து"..."உந்து", "ஊக்கு", "விசாரி"...

'உள்'=...."பொருளின் உள்ளடங்கியப்பகுதி"...

"கடவுள்" என்ற சொல்லுக்கு...தமிழில் பொருள் கூறப்பட்டவைகளில் சில....

தமிழ் லெக்சிகன்..பல்கலைக்கழக அகராதி

இயற்கை..இயல்பான...பகுத்தறிவு...
எல்லையற்ற..எல்லையற்ற
பெருவெளி...நீதிபதி...அரிதியிடமுடியாத
...நன்மை...தலைவன்...பற்றுறுதி..
நம்பிக்கை...உண்மை..
ஆணையிடக்கூடிய...
ஆட்சிஅதிகார..அதிகாரம்...
குரு...
வானவன்...முனிவன்...
முடிவில்லாத...
=================================

இந்த (கீழே வழிமாற்று) இடத்திலும் கடவுள் என்ற சொல்லுக்கு...வரும் 425 வார்த்தைகளுக்கான பொருள்களில்...முதலில் ஊத்தை அக்கராகாரம் வரும்...அப்புறம் அகந்தை, அகங்காரம் எல்லாம் வரும்....

தென் இந்திய தமிழ், ஆங்கில ஆசிய அகராதி

ஹி ஹி...ஆனால் எந்த இடத்திலும் கல்லு, களிமண் புள்ளாருக்கு இந்த பெயரைக் கொடுக்கவில்லை...இந்த பொருள்கள் பொருந்தியும் வரவில்லை.