Search This Blog

1.8.09

பெரியார் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ய வீரமணி முட்டுக்கட்டை போடுகிறாரா?


எப்படி சந்திக்கவேண்டுமோ அப்படியே சந்திப்போம்!

தந்தை பெரியார் எழுத்துகளை வெளியிடுவது குறித்து வழக்கு ஒன்றில் கடந்த ஜூலை 27 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சந்துரு அவர்கள், பெரியார் எழுத்துகளை யாரும் வெளியிடலாம். அதற்குத் தடையில்லை என்று தீர்ப்பு ஒன்றினை வழங்கினார்.

அவ்வளவுதான். எட்டுப் பத்தி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது ஒரு மாலை ஏடு. சில அவசரக் குடுக்கைகளோ தயாராக அடித்து வைத்திருந்த சுவரொட்டிகளை ஒட்டி அர்த்தராத்திரியில் குடைபிடித்து ஆடித் தீர்த்தன.

ஒரு நாள் இடைவெளியில் ஜூலை 29 ஆம் தேதி அதே உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நீதிபதி திரு. சந்துரு அளித்த தீர்ப்புக்கு மாறான தீர்ப்பினை வழங்கியது.

நாணயமான பத்திரிகையாளர்களாக இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்?

27 ஆம் தேதி தீர்ப்புக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை இதற்கும் கொடுத்திருக்கவேண்டும் அல்லவா?

அதுதான் இல்லை. தலைப்பு செய்தி வெளியிட்ட மாலை ஏடோ உள்பக்கத்தில் ஒப்புக்குச் செய்தியை வெளியிட்டது. அதாவது உண்மையான செய்தியா என்றால், தலைகீழான புரட்டல் செய்தி. வீரமணியும் பெரியார் எழுத்துகளை வெளியிட முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இதன்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கேகூடத் தொடுக்க முடியும். திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் பெருந்தன்மை அவர்களை மன்னித்துவிட்டிருக்கிறது.

புர்ரட்சி பேசும் மக்களுக்கும், தங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒரு களை கழகமோ பார்ப்பனியத்தனமாக செய்தியை வெளியிட்டது_

டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அளித்த தீர்ப்பைப் புரிந்துகொள்ளும் சாதாரண அறிவுகூட இல்லாமல், வழக்கில் வீரமணி தோற்றுவிட்டதாகவும், இனி அவர் உச்சநீதிமன்றம்தான் செல்லவேண்டும் என்றும் இணைய தளத்தில் சில்லுக்கோடு விளையாடிக் கொண்டிருக்கிறது.


தீர்ப்பு ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டதால், புரிந்துகொள்ள முடியாத முட்டாள்தனத்தில் அவ்வாறு எழுதி இருக்கவேண்டும். அல்லது ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்ற ரீதியில் செயல்பட்டு இருக்கவேண்டும்.

பொய்யைச் சொல்லி பொழுதைக் கழிப்பதும் சீ ஒரு பிழைப்பா?

தினமணி அய்யர்வாள் ஒரு கார்ட்டூன் போட்டார் என்றால், பார்ப்பனர்களின் தொங்கு சதையாக இருக்கும் குமுதத்தால் சும்மா இருக்க முடியுமா?

சாலையில் நிர்வாணமாக ஒரு பெண் நடந்து சென்றால் அது சட்டப்படி குற்றம். ஆனால், அதே வகையில் குமுதம் ஒவ்வொரு வாரமும் வெளிவருகிறதே அது குற்றமாக சட்டத்தின்முன் தெரியாமல் போனது ஏனோ?

பெரியாரை வீரமணி சங்கிலியால் தளைப்படுத்தியிருந்தாராம், நீதிமன்றத் தீர்ப்பு வீரமணியிடமிருந்து பெரியாரை விடுவித்துவிட்டதாம்.

சரி, இப்பொழுது வேறு வகையாக தீர்ப்பு வெளிவந்துவிட்டதே பெரியாரை வீரமணி மீண்டும் சிறைப்படுத்தி விட்டார் என்று கார்ட்டூன் போடப் போகிறதோ!

தந்தை பெரியாரை யாரும் சிறைப்படுத்த முடியாது என்கிற பாலபாடம் கூட தெரியாத பைத்தியக்காரர்கள் எல்லாம் பத்திரிகை நடத்தினால் இப்படித்தான்!

திட்டமிட்டு ஒரு விஷமப் பிரச்சாரம் நாட்டில் கிளப்பி விடப்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யக்கூடாது, அப்படிப் பிரச்சாரம் செய்ய வீரமணி முட்டுக்கட்டை போடுகிறார் என்பது போன்ற ஒரு திட்டமிட்ட பாமரத்தனமான பிரச்சாரத்தை கிளப்பிவிட்டுள்ளனர்.

அது உண்மையா? பெரியார் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்த யாரை, அல்லது எந்த அமைப்பை வீரமணி தடுத்தார்? எங்கே போய் குறுக்கே நின்றார்?

பெரியாரைப்பற்றி எத்தனையோ கூட்டங்கள் போடலாம்; நூல்களை எழுதலாம் செய்யவேண்டியதுதானே! அதனை விட்டுவிட்டு தந்தை பெரியார் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முறையில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்குச் சொந்தமான வெளியீடுகளை நாங்கள் வெளியிடுவோம் என்று வீண் வம்புக்கு வருவதுதான் பெரியார் கொள்கையைப் பரப்பும் முறையா?

மோதல் போக்கை மேற்கொண்டு விளம்பரம் தேடுவதுதான் பெரியார் கொள்கைப் பிரச்சாரமா? வீண் வம்புக்கு வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதுதான் பெரியார் பணி முடிக்கும் பணியா?

இதற்கு முன்பேகூட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட சில நூல்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. இது அறிவு நாணயம்தானா? இதுதான் தந்தை பெரியார் கற்றுத் தந்த பொது ஒழுக்கமா?

கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால், நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக்கூடாது. அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கியமான பலம் (விடுதலை, 11.10.1964) என்று சொன்னவர் தந்தை பெரியார். இந்த அடிப்படை ஒழுக்கம் இல்லாதவர்கள் எல்லாம் பெரியார் பெயரில் கழகம் நடத்த முயலலாமா?

தந்தை பெரியார் கொள்கைகள் பரவவேண்டும் என்ற உண்மையான அக்கறையிலா தினமணிகள் இந்தப் பிரச்சினையை ஊதிப் பறக்கவிட முயற்சிக்கின்றன?


அல்ல... அல்ல... பெரியாருக்குப் பிறகு அவரின் கொள்கையும், அவரது இயக்கமும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று எண்ணி மனப்பால் குடித்துக் கிடந்தவர்களுக்கு, அதிர்ச்சியாக, இந்த வீரமணி பலமான கட்டுமானத்துடன், திட்டவட்டமான முறையில் அறிவியல் சாதனங்களை எல்லாம் பயன்படுத்தி, தமிழ்நாடு அளவில் மட்டுமல்ல, உலகளவில் கொண்டு சென்று கொண்டிருக்கிறாரே என்ற ஆத்திரம்தான் இதற்கெல்லாம் காரணம்.

பெரியார் கொள்கை தாங்கும் நூல்களை தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் எல்லாம் வெளியிட்டுக் கொண்டுள்ளாரே... என்ற கோபம் அவர்களின் குரல் வளையை அவர்களே நெரித்துக்கொள்ளும் ஒரு நிலைக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டது.

விடுதலை எட்டுப் பக்கம் ஆனதும், இரு இடங்களில் பதிப்பு என்று ஆக்கப்பட்டதும்,

பெரியாருக்குப் பின் உண்மை மாதம் இருமுறை ஆனதும்,

தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில இதழ் மீண்டும் கொண்டு வரப்பட்டதும்,

குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு இதழ் ஆரம்பிக்கப்பட்டதும்,

பாமர மக்களும் தந்தை பெரியார்பற்றி அறிந்துகொள்வதற்குப் பெரியார் திரைப்படம் எடுக்கப்பட்டதும்,

பெரியார் வலைக்காட்சி தொடங்கப்பட்டதும்,

முந்நூறுக்கும்மேல் பகுத்தறிவு நூல்களை மலிவு விலையில் வெளியிட்டதும்,

அதனைப் பரப்பிட பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை ஏற்பாடும்,

புத்தகக் கண்காட்சிகள் நடப்பும், பெரியார் நூலகம், ஆய்வகம் நவீன முறையில் ஓங்கி வளர்க்கப்பட்டு இருப்பதும்,

தமது சொந்த 10,277 நூல்களை பெரியார் நூலகம் ஆய்வகத்துக்கு தமிழர் தலைவர் வழங்கியதும்,

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் இயக்கம்பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பதும்,

இந்தியாவின் தலைநகரிலேயே பெரியார் மய்யம் எழுப்பப்பட்டு இருப்பதும்,

உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரியார் பன்னாட்டு மய்யம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதும்,

உலக மனிதநேய அமைப்பில் திராவிடர் கழகத்தை அங்கம் வகிக்கச் செய்திருப்பதும்,

பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, அதில் பெரியார் சிந்தனைகள் என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு சான்றிதழ் முதல் முனைவர் பட்டப் படிப்புவரை பெறுவதற்கு வகை செய்யப்பட்டு இருப்பதும் எல்லாம் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரவாமல் தடுப்பதற்காகத்தான் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஏற்பாடு செய்து வைத்துள்ளாரா?

கொஞ்சமாவது மனச்சான்றோடு சிந்தித்துப் பார்க்கட்டும்!


தினவெடுக்கும் தினமணியும், கோணல் புத்தி குமுதமும், சாலையோர மதகடியில் உட்கார்ந்து கொண்டு வருவோர், போவோரையெல்லாம் சீண்டி வெட்டி வம்பு வளர்ப்போர்போல் செயல்படும், களை வளர்க்கும் காலிகளும் இவற்றை மறுக்கப் போகின்றனவா? அப்படியே மறுத்தாலும் மக்கள் மன்றம் தம் கண்ணுக்கெதிரே பார்த்துக் கொண்டு இருக்கும் நடப்புகளுக்கு மாறாகப் பேசுபவர்களுக்கு, அரட்டைக் கச்சேரி நடத்துபவர்களுக்கு நல்ல பாடத்தையும் கற்பிக்கும் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

ஒரு அடிப்படை தெரியுமா? தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகளைத் தொகுக்க திருச்சி சிந்தனையாளர் கழகத்திற்கு அனுமதி கொடுத்த தந்தை பெரியார் மிக முக்கியமான கருத்தினை வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தகவலைப் பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் முதல் தொகுதி முன்னுரையில் (பக்கம் iv) அதன் பதிப்பாசிரியர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1. என்னால் ஒரு தடவை பேசப்பட்டவை, எழுதப்பட்டவை திரும்பத் திரும்ப வந்திருக்கும் இடங்களை கவனமாகப் பார்த்து Repetition னைத் தவிர்க்கவேண்டும்.

2. கருத்து முரண்பாடுகள் உள்ளதுபோல் தோன்றும் இடங்களைக் கண்டு அவற்றுக்குத் தெளிவான விளக்கம் அமையும்படி தொகுப்பு அமையவேண்டும்.

மேற்கண்டவாறு அன்னார் (பெரியார்) தொடுத்த வினாவும், விடுத்த எச்சரிக்கைக் கட்டளைகளும் தொகுப்புப் பணி மேலும் விரிவானதாக ஆகுமாறு செய்தன. அத்துடன் தொகுப்புப் பணியில் நேரக்கூடிய குறைபாடுகளைத் தவிர்த்துக் கொள்ளவும் இவை வழிகாட்டிகளாக அமைந்தன
என்று தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் அந்நூல் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

தந்தை பெரியார் சொன்ன இந்த எச்சரிக்கைகள் பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதில் பின்பற்றப்படுகிறதா?

அப்படியே முழுமையாக வெளியிடும்போது கொள்கைக் குழப்பத்துக்கு இடம் அளிக்கும் என்று ஆனந்தவிகடன் இதழ் பேட்டியில் வீரமணி கூறிவிட்டாரே என்று ஆகாயத்துக்கும், பூமிக்குமாகக் குதிக்கும், கொதி தாங்காத இந்த நொய்யரிசிகளுக்கு தந்தை பெரியார் விடுத்த எச்சரிக்கையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இருந்திருந்தால், மானமிகு வீரமணி அவர்கள் கூறிய கருத்தின் நுட்பத்தை, ஆழத்தைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

பரிதாபம், அவர்களிடமெல்லாம் இத்தகைய பெரிய விஷயங்களை, நுட்பங்களையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

போதும் போதாததற்கு இதில் மார்க்சிஸ்டுகள் வேறு கூட்டத்தில் கோவிந்தா போடக் கிளம்பிவிட்டனர்.

ஒரே ஒரு கேள்வி அவர்களுக்கு. தீக்கதிரில் வெளிவந்த ஒரு கட்டுரையை பிறர் வெளியிடுவார்களானால், அதனைப் புரிந்துகொள்ளலாம். ஒரு வருட தீக்கதிர் தொகுப்பை நாங்கள் அச்சிட்டு விற்கப் போகிறோம் என்று யாராவது சொன்னால், அதனை தீக்கதிர் நிருவாகம் ஏற்றுக்கொள்ளுமா? அதுபோன்றதுதானே குடிஅரசை வெளியிடுவோம் என்று _ கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் விலக்கப்பட்டவர்கள் கூறுவதும்?

பெரியார் நூல்களை யார் வெளியிட்டால் என்ன என்று கார்ட்டூன் போடும் பார்ப்பனர்களைப் பார்த்து ஒரு கேள்வி.

சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் நூல்களை அவருடைய ஆன்மிகச் சிந்தனைகளைப் பரப்புவதற்காக யாரும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற ஓர் அறிவிப்பினை தினமணி வைத்திகள் வெளியிடச் செய்வார்களா?

அப்படியானால் பெரியார் திடல் சங்கர மடமா? ஆனைக்கு அர்ரம், குதிரைக்குக் குர்ரம் என்று பேச ஆரம்பிக்கக் கூடாது; அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்டது இது.

தொலைநோக்காளர் பெரியார் அதனால் தான் நூல்களை வெளியிட ஓர் அமைப்பை நிறுவிச் சென்றார். அதற்கு உரியவரையும் அடையாளம் காட்டிச் சென்றுள்ளார். அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே அதன்படி அந்த நிறுவனத்தின் பேரால் நூல்கள் வெளியிடப்பட்டன; அவர் மறைவிற்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்களால் அந்த நிறுவனத்தின் பெயராலேயே நூல்கள் வெளியிடப்பட்டன. அன்னை மணியம்மையார் அவர்களின் மறைவிற்குப் பிறகு அதே அடிப்படையில், அந்த நிறுவனத்தின் பெயரால் அந்நிறுவனத்தின் செயலாளர் வீரமணி அவர்களால் நூல்கள் போர்க்கால அடிப்படையில் காலத்திற்கேற்ற பொலிவுடன் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் குற்றம் கூற ஒன்றும் இல்லை. இது ஒரு கல்வெட்டு சிலாசாசனம்!

அவரவர்கள் வேலையை அவரவர்கள் பார்க்கட்டும்! வீண் வம்பு வளர்த்துதான் தீருவோம் என்று வரிந்து கட்டி வந்தால், அதனை எப்படி சந்திக்கவேண்டுமோ அப்படி சந்திக்கவும் தயார்தான்!

************************************************************************************************************************************************

பொறுப்பேற்பார்களா?

பெரியார் நூல்களை, எழுத்துகளை யாரும் வெளியிடலாம் என்று அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிட்டால் என்ன ஆகும்? அத்தகைய நிலை இல்லாதபோதே திருட்டுத்தனமாக சிலர் வெளியிடுகிறார்கள். தமிழர் தலைவர் நூலை சிப்பி புக்ஸ் வெளியிட்டுள்ளது. எப்படி வெளியிட்டுள்ளார்கள் தெரியுமா?

ஈ.வி. இராமசாமி நாய்க்கர் வரலாற்று நூலாம். 1927 ஆம் ஆண்டிலேயே அந்த ஜாதி அசிங்கத்தை தம் பெயரிலிருந்து தூக்கி எறிந்த தந்தை பெரியாரை இதைவிட எப்படி கொச்சைப்படுத்த முடியும்?

பெரியார் நூல்களை யாரும் வெளியிடலாம்; திறந்து விடுங்கள்; விடுதலை செய்யுங்கள் என்று வக்கணையாக வாய்க்கிழியப் பேசும் அக்கப்போர் பேர்வழிகள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்களா?

பெரியார் திராவிடர் கழகம் கோவையில் வெளியிட்ட ஒரு நூலில் தந்தை பெரியார் சுயப்புத்தி இல்லாதவர் என்றும், அன்னை மணியம்மையார் பாண்டிய மன்னனை மதம் மாறச் செய்த பாண்டிமாதேவி என்றும் கொச்சைப்படுத்தியுள்ளார்களே இவர்கள்தான் தந்தை பெரியார் அவர்களை மதிப்பவர்களா? அய்யா அவர்களின் கொள்கைகளை உண்மையாகப் பரப்புபவர்களா? இத்தகையவர்களை நம்பித்தான் அனுமதிக்க முடியுமா? சிந்திப்பீர்!


------------------------கலி. பூங்குன்றன் பொதுச்செயலாளர்,திராவிடர் கழகம் -"விடுதலை" 01-08-2009

************************************************************************************
இது தொடர்பான மேலும் கருத்துக்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளைப் படிக்க வேண்டுகிறேன்.

1.http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_2339.html

2.http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post.html

நன்றி
*************************************************************************************

6 comments:

bandhu said...

you have a serious case of Verbal Diahorrea.. take care..

தமிழ் ஓவியா said...

தாங்கள் தவறாக diagnosis செய்வதற்கு வருந்துகிறேன். உங்களின் இந்த தவறு நீங்க ஈரோட்டு பாடத்தை நன்கு படிக்க வேண்டுகிறேன்.

அசுரன் திராவிடன் said...

migavum sirappana atharamaana katurai .intha kaathurai veli itta thamizh oviay avarkalukku nanri arumaiyaana karuthugal.migavum sirappaan inayathalam http://www.thamizhoviya.blogspot.com

Thamizhan said...

பெரியார் கொள்கையைப் பரப்புபவர்கள் ஆரவாரமின்றி அவர்களது செலவில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியாரால் ஆதாயம் தேடி அலைபவர்கள்
ஆரவாரத்துடன் நடித்துக் கொண்டுள்ளார்கள்.
அரசியல் பிழைப்பவர்களுக்குப் பெரியார் ஒரு பெயர், பெரியார் தொண்டர்களுக்கு அவர் அவர்கள் உயிர்.
உண்மையானப் பெரியார் தொண்டர்கள் விளம்பரம் தேடி அலைய மாட்டார்கள்.பெரியார் தொண்டு செய்பவர்களை வம்புக்கு இழுக்க மாட்டார்கள்.
இதுவரை வம்புக்கு வந்தவர்கள் அவர்கள் ஆட்சியாளர்களாக இருந்த போதும் வாங்கிக் கொண்டதுதான் சரித்திரம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளஞ்சேரன்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா